பாராளுமன்றில் 22 ஆம் திகதி சர்வகட்சி கூட்டம்; அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் அழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

பாராளுமன்றில் 22 ஆம் திகதி சர்வகட்சி கூட்டம்; அனைத்து கட்சிகளுக்கும் பிரதமர் அழைப்பு

முஸ்லிம் தலைவர்களுடன் 21 இல் மாநாடு

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்வரும் 22ஆம் திகதி சர்வக் கட்சி கூட்டமொன்றுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.  

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்துக் கட்சிகளுக்கும் பிரதமர் அழைப்பு விடுத்துள்ளார்.  

22ஆம் திகதி புதன்கிழமை மாலை 3மணிக்கு பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.  

கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலையடுத்து உள்நாட்டில் பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு பற்றாக்குறையாகவுள்ள சட்டங்கள் தொடர்பில் தீர்மானமிக்க விவாதமொன்று இதன்போது நடைபெறும் என்றும் புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டமூலம் தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என்றும் அறிய முடிகிறது.  

இதேவேளை, பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் அரசியல் கட்சிகளின் தலைவர்களை, சபாநாயகர் கரு ஜயசூரிய எதிர்வரும் 21ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.    இதன்போது அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணையை விவாதத்துக்குட்படுத்தும் திகதி தொடர்பாக முடிவெடுக்கக்கூடுமென எதிர்க்கட்சிகளின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது.  

அமைச்சர் ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் 64பாராளுமன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளதுடன், 10குற்றச்சாட்டுகள் அதில் முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை,  கடந்த இரண்டு வாரங்களுக்கிடையில் நாட்டில் உருவான நெருக்கடி நிலை  குறித்தும். பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆராயும் பொருட்டு  பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (21)  பாராளுமன்றத்தில் முக்கிய மாநாடொன்று இடம்பெறவுள்ளது.  

இந்த மாநாட்டில் முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற  உறுப்பினர்கள், சட்ட மாஅதிபர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ்  மாஅதிபர் ஆகியோருடன் பாதுகாப்பு உயர் மட்டத்தினர் கலந்து கொள்ளவுள்ளனர்.    இந்த மாநாட்டில் நீர்கொழும்பு, போருதொட்ட போன்ற இடங்களில்  இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், முன்னெடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத்  தெளிவுப்படுத்தவும், அங்குள்ள தற்போதைய நிலைமை குறித்தும் கவனம்  செலுத்தப்படவுள்ளது.  

அத்துடன் கடந்த சில தினங்களுக்கு முன்னர் சிலாபம், ஹெட்டிபொல,  மினுவாங்கொடை குளியாப்பிட்டி, நாத்தாண்டி, கொட்டராமுல்ல போன்ற இடங்களில்  இடம்பெற்ற தாக்குதல்கள், கலவரங்கள் தொடர்பிலும் முக்கிய கவனம்  செலுத்தப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

முஸ்லிம் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் விடுத்த  வேண்டுகோளுக்கிணங்கவே பிரதமர் ரணில் விக்கிரமசிங்க இந்த அவசர மாநாட்டுக்கு  அழைப்பு விடுத்துள்ளார்.  

எம்.ஏ.எம். நிலாம்,  சுப்பிரமணியம் நிஷாந்தன்  

Comments