உழைத்து வாழ்ந்த சமூகம் இன்று உதவி எதிர்பார்த்திருக்கும் அவலம்... | தினகரன் வாரமஞ்சரி

உழைத்து வாழ்ந்த சமூகம் இன்று உதவி எதிர்பார்த்திருக்கும் அவலம்...

முள்ளிவாய்க்கால் பத்தாண்டுகளின் பின்னர்... 

இலங்கையில் இடம்பெற்ற மூன்று தசாப்த கால யுத்தம் நிறைவுபெற்று பத்து வருடங்கள் கடந்துள்ளன.  

இந்தப் போரினால் சின்னா பின்னமாகிப்போன சமூகம் இந்தப்போருக்குப் பின்னர் மீட்சி பெறுவது என்பது ஒருபோதுமே இலகுவாக அமைந்துவிடப்போவதில்லை.  

அதாவது, போர் காரணமாக ஏற்பட்ட உயிரிழப்புக்கள். காணாமல் போதல், சொத்து இழப்புக்கள், வாழ்வாதாரம் இன்மை வாழ்விட வசதியினமை, தொழில் வாய்ப்பின்மை, என்பன இன்றைக்கு பாரிய தாக்கத்தைச் செலுத்துகின்றன.  

இறுதி யுத்தம் இடம்பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தின் கரையோரக் கிராமமான முள்ளிவாய்க்கால் பகுதி பத்து ஆண்டுகள் கடந்துள்ள போதும் இன்றும் போரின் வடுக்களைச் சுமந்த பிரதேசமாகவே காணப்படுகின்றது. அதாவது இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் முற்பது ஆண்டு காலம் நீடித்து 2009ம் ஆண்டு மே மாதம் 18ம் திகதி இந்தப் பிரதேசத்தில் நிறைவுக்கு வந்தது.  

போர்நிறைவு பெற்று பத்து ஆண்டுகள் கடந்துள்ள, இந்தப்பிரதேசத்தில் இருக்கின்ற போரினால் பாதிக்கப்பட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண் தலைமைத்துவக் குடும்பங்கள் தொழில்வாய்ப்புக்களை இழந்த நிலையில் பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றன.  

இதேபோல ஏனையவர்களும் தமது வாழ்வாதாரத்தொழிலான கடற்தொழிலை செய்யமுடியாத நிலையில் பலர் இருந்து வருகின்றனர்.  

இந்தப்பிரதேசத்தின் உட்கட்டுமான வசதிகள் கூட இன்னும் முழுமைபெறவில்லை. முப்பதாண்டுகளின் அழிவுகள் அடையாளங்களாகவே காணப்படுகின்றன.  

குறிப்பாக. பல இலட்சக்கணக்கான மக்கள் பயன்பாட்டில் இருந்த கரையோரக் கிராமங்களுக்கான வீதிகள் இன்றும் கிரவல் வீதிகளாகவே குன்றும் குழியுமாகக் காணப்படுகின்றன.  

சீரான போக்குவரத்து இன்றைய முக்கியத்தை தேவையாக உள்ளது. மக்களின் தேவைகள் நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கின்றன.  

இறுதி யுத்தம் நிறைவுபெற்று பத்து வருடங்கள் கடந்துள்ளபோதும், அவர்களது வாழ்வில் எந்த மாற்றங்களையும் காணமுடியவில்லை.  

முற்பது வருடகால யுத்தத்தில் முழுமையாகவே பாதிக்கப்பட்ட ஒரு சமூகம் யுத்தத்தின் பின்னரான பத்தாண்டுகள் கடந்துள்ள போதும் அவர்களினுடைய தேவைகள் எதிர்பார்ப்புக்கள் ஏராளமாகவே இருக்கின்றன.  

குறிப்பாக சொந்த நிலங்களில் மீள்குடியேறி வாழ்பவர்கள் தொடக்கம் இந்தப் பிரச்சினை காணப்படுகின்றது.  

யுத்தத்தில் பாதிக்கப்பட்டு தனது சொந்த நிலத்தில் மீள்குடியேறி அன்றாடம் விறகு விற்பனை செய்யும் மாற்றுத் திறனாளியான ஒருவர் கருத்துத் தெரிவிக்கையில், நாங்கள் எங்கள் வாழ்க்கையில் அரைவாசிக்காலத்தை போருக்குள் தொலைத்து விட்டோம்.  

இப்போது பிள்ளைகளின் எதிர்காலத்தை வறுமைக்குள் தொலைத்துக் கொண்டிருக்கின்றோம் என்றார் கவலை தோய்ந்த முகத்துடன்.  

“எனக்கு மிகவும் கஸ்டம் நிரந்தரமான ஒரு வீடு இல்லை.  

நானும் எனது மனைவி நான்கு பிள்ளைகள் இந்த தற்காலிக வீட்டிலேயே வாழ்ந்து வருகின்றோம், மலசலகூடவசதி, கிணறு வசதி, எதுவுமே இல்லை நானும் ஒரு காலில்லாத நிலையில் புனர்வாழ்வு பெற்று குடும்பத்துடன் இணைக்கப்படடிருக்கின்றேன்.  

என்னுடைய இயலாத காலுடன் போய் விறகுவெட்டித்தான் எனது சீவியம் போகின்றது.  

அன்றாடம் விறகு வெட்டி விற்றால்தான் சாப்பிடமுடியும்.  

இதைவிட வேறு தொழில் எதுவும் இல்லை.  

அரசாங்க உதவிகள் சமுர்த்தியோ அல்லது  மாதாந்த கொடுப்பனவு எதுவும் இல்லை” என்கிறார் இவர்.  

இப்படி அவர் தன்னுடைய தேவைகளை அடுக்கிச்சென்றதுடன், எங்களை வைத்து எத்தனையோ பேர் அரசியல் செய்து வாக்குகளைப்பெற்று வாழ்கின்றார்கள். ஆனால் நாங்களோ போரில் ஈடுபட்டு போரினால் பாதிக்கப்பட்டு இன்று வாழ்வதற்கு கூட நிரந்தரமான ஒரு வீடு இல்லாது பத்து வருடங்களாக இப்படி வாழ்கின்றோம்” என்கின்றார்.  

இதேபோல் முல்லைத்தீவு கேப்பாப்புலவு பகுதியில் தமது சொந்த நிலத்தை விடுவிக்கக்கோரி மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  

“நாங்கள் முப்பது வருடகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு முழுமையான வாழ்வாதாரத்தையும் எங்கள் பொருளாதாரத்தையும் இழந்து நிர்க்கதி நிலைக்குத் தள்ளப்பட்டோம்.  

யுத்தம் நிறைவடைந்து பத்து வருடங்கள் கடந்துள்ள போதும், சகல பகுதிகளிலும் மக்கள் மீள்குடியேற்றப்பட்டுள்ள போதும் நாங்கள் எங்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற முடியாதநிலையே உள்ளது.  

இதனால் நாங்கள் இன்று வாழ்வாதாரம் இன்றி சொந்தக்காலில் வாழமுடியாது இன்னொருவரை சார்ந்து வாழவேண்டிய அவலச் சூழலுக்கு தள்ளப்பட்டிருக்கின்றோம்” என்று கேப்பாப்புலவு மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.  

இதேபோல் காணாமல் போனவர்களுடைய உறவினர்கள் தாங்கள் கையளித்த உறவுகளின் வரவுக்காக, விடுதலைக்காக போராடி வருகின்றனர்.   இவர்களுடைய எதிர்பார்ப்புக்களும் இன்றுவரை நிறைவேறாத ஒன்றாகவே இருந்து வருகின்றது.  

இவையெல்லாவற்றுக்கும் மேலாக தேவைகளின் அதிகரிப்பு கடன் சுமை, தொழில், வாய்ப்பின்மை வறுமை என்பன மேலும் இவர்களை மனஅழுத்தத்திற்கு உள்ளாக்கியுள்ளது. அதன் விளைவாக தற்கொலைகள் குடும்பப் பிணக்குகள் எனப் பல்வேறு பிரச்சினைகள் தோற்றம் பெறுகின்றன.  

போருக்குப் பின்னான இன்றைய காலத்தில் மன அழுத்தங்களில் இருந்து மக்களை விடுவிக்கவேண்டிய தேவை காணப்படுகின்றது.  

அதாவது, சுயமாக உழைத்து வாழ்ந்த மக்கள் சமூகம் இன்று உதவிகளை எதிர்பார்த்து வாழ்கின்ற சமூகமாக மாறியுள்ளது.  

அதாவது, அவர்களுக்கான வாழ்வாதாரத்தை மேம்படுத்துல் தொழில் வாய்ப்புக்களை ஏற்படுத்துதல், குடும்ப வருமானத்தைப் பெருக்குதல். என்பவற்றால் மட்டுமே பாதிக்கப்பட்ட மக்களை இந்தக் கடன் சுமைக்குள் இருந்து மீட்க முடியும்.  

முள்ளிவாய்க்கால் அரசியலின் பேசு பொருளாக பத்து வருடங்கள் கடத்தப்பட்டுள்ளதுடன் வருடம்தோறும் உயிரிழந்த மக்களுக்கு அஞ்சலி செலுத்தி அதன் மூலம் பலர் அரசியல் இலாபம் தேடுகின்றனர்  

ஆனால் இந்தப் பாதிக்கப்பட்ட சமூகத்தை பத்து வருடங்களில் பாதிப்புகளிலிருந்து மீட்பதற்கு எந்தவித ஆக்கபூர்வமான நடவடிக்கைகளையும் எடுக்கமுன்வந்ததாகத் தெரியவில்லை என்பது தான் வேதனைக்குரியது.  

 

Comments