புதியதோர் அரசியல் கலாசாரமே இன்றைய அவசரத் தேவை | தினகரன் வாரமஞ்சரி

புதியதோர் அரசியல் கலாசாரமே இன்றைய அவசரத் தேவை

'உலக பயங்கரவாதத்தை இலங்கையில் வளர்த்தெடுக்க உதவுபவர் யார் என்பதை முதலில் கண்டறிவது அவசியம்'

'மதத்த​ைலவர்கள் என்ற ரீதியில் நாம் அரசியலில் ஈடுபடுவதற்குத் தடை'

கிறிஸ்தவர்களின் மிகவும் முக்கியமான தினமான ஈஸ்டர் திருநாள் அன்று கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் ஆலயம், நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய புனித செபஸ்தியார் ஆலயம், மட்டக்களப்பு புனித சீயோன் கிறிஸ்தவ தேவாலயம் ஆகியவை உள்ளிட்ட தேவாலயங்கள் மற்றும் கொழும்பின் பிரதான ஹோட்டல்கள் என்பனவற்றில் மேற்கொள்ளபட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களில், நூற்றுக்கணக்கான அப்பாவி பொதுமக்களும் உல்லாசப் பயணிகளாக நாட்டுக்கு வந்திருந்த 40க்கு மேற்பட்ட வெளிநாட்டவர்களும் கொடூரமாக படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவங்கள் முழு நாட்டையும் அமைதி இழக்கச் செய்துள்ளதுடன் உலக நாடுகளை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அத்தகைய துயரமான சம்பவத்தி லிருந்து நாடு இன்னும் முழுமையாக மீளாத நிலையில், நாட்டின் தலைவர்களும் அரசியல்வாதிகளும் இது தொடர்பில் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவதுடன் நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருவதையும் காண முடிகின்றது. ஈஸ்டர் தினத்தில் கிறிஸ்தவ ஆலயங்களில் வழிபாடுகளில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கொடூரமாக மேற்கொள்ளப்பட்ட இந்த குண்டுத் தாக்குதல் தொடர்பில் இலங்கையில் கத்தோலிக்க திருச்சபைக்குப் பொறுப்பான பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை தமது துயரத்தையும் அத்தோடு இத்தகைய தாக்குதல் சம்பவம் தவிர்க்கப்பட்டிருக்கலாம் அல்லது தடுக்கப்பட்டிருக்கலாம் என்பது தொடர்பிலும் உறுதியான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார். அப்பாவி மக்கள் மீதான இந்த கொடூர தாக்குதலை இறைவன் ஒருபோதும் மன்னிக்க மாட்டார் என்றும் நாட்டின் தலைவர்கள் இது தொடர்பில்பொறுப்பற்ற விதத்தில் நடந்து கொண்டுள்ளதாகவும் இப்போதும் நாட்டின் பாதுகாப்பு திருப்தி தரும் வகையில் இல்லை என்றும் கருத்துக்களை முன்வைத்து வருகின்றார். எனினும் இந்தக் குண்டுத் தாக்குதல்களை அடுத்து, மூன்று தசாப்தகால யுத்தத்துக்குப் பின்னர் நாட்டில் மிகவும் கஷ்டப்பட்டு கட்டியெழுப்பப்பட்டுள்ள இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் சீர்குலைந்து விடாத வகையில், கிறிஸ்தவ மக்களுக்கு அவ்வப்போது பொறுமையாகவும் அறிவுபூர்வமாகவும் சிந்தித்து செயலாற்றுமாறு அறிவுரைகளையும் அவர் வழங்கி வருகின்றார்.

சர்வ மதத் தலைவர்களை ஒன்று கூட்டி இனங்கள் மதங்கள் ஒற்றுமையாக வாழ வேண்டியதன் அவசியத்தை அவர் வலியுறுத்தி வருகின்றார். இத்தகைய நிலையில் கத்தோலிக்க திருச்சபைக்கு அடுத்தபடியாக இலங்கையில் உள்ள பெரிய திருச்சபையான இலங்கைத் திருச்சபை, இச் சம்பவங்கள் தொடர்பிலும் நாட்டில் நல்லிணக்கம் தொடர்பில் எத்தகைய கருத்துக்களை முன்வைக்கின்றது என்பதை அறிவதற்காக அந்த திருச்சபையின் பேராயர் அதிவண கனகசபையை நாம் தினகரன் வாரமஞ்சரி சார்பில் சந்தித்தோம்.

கேள்வி – உலக பயங்கரவாதம் இலங்கையில் காலூன்றி உள்ளது தொடர்பில், இலங்கைத் திருச்சபை யின் பேராயர் என்ற வகையில் தங்கள் கருத்து என்ன?

உலக பயங்கரவாதம் இலங்கையிலுமா? என்பது மிக மோசமான விடயம் என்பதுடன், அது இலங்கையில் துளிர்விட வழி சமைத்துக் கொடுப்பவர்கள் யார் என்பது முதலில் இனங்காணப்பட வேண்டும். இலங்கை சிறியதொரு நாடு இதற்கு உரிய பாதுகாப்பு வழங்குவது என்பது முடியாத காரியமல்ல. அத்துடன் மூன்று தசாப்த யுத்தத்தை எதிர்கொண்டு சிறந்த பல அனுபவங்களைப் பெற்றுக் கொண்டுள்ள நாடுஎம்முடையது.

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கிடையில் நிலவும் கருத்து முரண்பாடுகள் மற்றும் பரஸ்பர மற்ற நிலையும் இதற்கு ஒரு காரணம். அவர்கள் தங்களது இருப்பைத் தக்கவைப்பதில் கவனம் செலுத்தி வருகின்றார்களேயொழிய நாட்டு மக்கள் தொடர்பில் சிந்திப்பதாகத் தெரியவில்லை.

பாராளுமன்றத்திலும் ஆளும் கட்சி தமது பொறுப்பை நிறைவேற்றத் தவறும்போது எதிர்க்கட்சி அதனைச் சுட்டிக்காட்டவேண்டியது அவசியம். இவ்வாறான மோசமான சம்பவங்கள் தொடர்பில் அரசாங்கம் மேற்கொண்டுள்ள நடவடிக்கை தொடர்பில் ஆராயும் அல்லது கேள்வியெழுப்பும் நிலையைக் காணமுடியவில்லை.

கேள்வி – எதிர்க்கட்சியும் அதன் பொறுப்பைத் தவறவிட்டுள்ளதாகக் கூறமுடியுமா?

பதில் – ஆம். அவர்களும் நாட்டைப் பற்றியோ மக்களை பற்றியோ சிந்திக்காமல் எதிர்வரும் தேர்தல்களிலேயே தமது கவனத்தைச் செலுத்துவதாகத் தெரிகிறது. தேர்தலில் அதிகாரத்தைப் பிடிப்பது எவ்வாறு? என்பது பற்றி சிந்தித்துவருகின்றனரே தவிர மக்களின் நலனுக்காக எதைச் செய்யவேண்டும் என்பதைச் சிந்திப்பதில்லை. இதனால் பயங்கரவாதத் தாக்குதலுக்கும் நாட்டின் இன்றைய நிலைக்கும் இவர்கள் அனைவருமே பொறுப்புக் கூறவேண்டும். உயிர்த்த ஞாயிறன்று ஓடிய இரத்தம் இவர்களது கைகளில் தோய்ந்துள்ளது. அதிலிருந்து எவரும் தப்பித்துக் கொள்ள முடியாது.

கேள்வி – நாட்டில் யுத்தம் இடம்பெற்ற போது விடுதலைப்புலிகள் தற்கொலைக் குண்டுதாரிகளாக உருவாவதற்கு நீண்ட காலம் எடுத்தது. எனினும் முஸ்லிம் அடிப்படைவாதிகள் தம்மை தற்கொலைக் குண்டுதாரிகளாக மாற்றிக் கொள்வதற்கு அந்தளவு காலம் எடுத்துக்கொள்ளவில்லையே?

பதில் – முஸ்லிம் மக்கள் சம்பாதிப்பதிலேயே குறிக்கோளாக செயற்படுபவர்கள். அவர்களின் ஒருவரின் வியாபாரம் வீழ்ச்சியடைந்தாலும் 10பேர் சேர்ந்து நஷ்டப்பட்டவரை தூக்கி விடுவார்கள். பின்னர் அவர் இலாபம் பெற்றதும் அவரிடம் பணத்தை மீள பெற்றுக்கொள்வார்கள். அவ்வாறு செயற்படுபவர்களே முஸ்லிம்கள்.

எப்போதும் வியாபாரம், வருமானம் என்ற நோக்கோடு செயற்படும் அவர்களுக்கு தமது பிள்ளைகள், மீது கவனம் செலுத்துவதற்கு நேரம் கிடையாது. இதனால் அவர்களது பிள்ளைகள் எங்கு போகிறார்கள்? என்ன செய்கின்றார்கள் என பார்ப்பதில்லை. இதனால் அவர்கள் மோசமான வழிகளில் சென்று தற்கொலைக் குண்டுதாரிகளாக தம்மை உருவாக்கிக்கொள்ளும் அளவுக்குச் செல்கின்றனர்.

பெற்றோர் பிள்ளைகளுக்கிடையில் தொடர்புகள் இல்லாமை, அவர்கள் தற்கொலைக் குண்டுதாரிகளாக மாறியதைக் கூட பெற்றோர் அறிய மாட்டார்கள். இது தான் அவர்களின் குடும்பங்களின் நிலை. சமூகமாக அவர்கள் சேர்ந்திருந்தாலும் குடும்ப தொடர்புகள் பல வீனமானது என்றே கூற முடியும். தமிழர்கள், சிங்களவர்கள் அவ்வாறல்ல. அவர்கள் ஒன்றாக அமர்ந்து கருத்துக்களை பரிமாறிக் கொண்டு உணவு உண்பார்கள். பிள்ளைகள் எங்கே போகிறார்கள்? என்ன செய்கிறார்கள் என தேடிப்பார்க்கின்றார்கள். இந்த நிலைமையை மாற்ற அந்த சமூகம் கவனம் செலுத்த வேண்டியது அவசியம்.

கேள்வி – முஸ்லிம் அடிப்படை பயங்கரவாதிகள் குண்டுத் தாக்குதலுக்கு கிறிஸ்தவ மதஆலயங்களைத் தேர்ந்தெடுத்ததற்கான காரணம் என்ன? அது பற்றி நீங்கள் என்ன நினைக்கின்றீர்கள்?

பதில் – அண்மையில் நான் ஒரு வீடியோ காட்சியைப் பார்த்தேன். அதில் சஹ்ரான் என்ற பயங்கரவாதி கிறிஸ்தவர்களை அவமானப்படுத்துகின்றார். கிறிஸ்தவர்கள் அவர்களது மதத்திற்கு எதிரானவர்கள். அவர்கள் அவமதிப்புக்குள்ளாக்கப்பட்ட வேண்டியவர்கள் என்பதே அவர்களின் கருத்து. ஈசா நபி என அவர்களால் கூறப்படும் இயேசு சிலுவையில் அறையப்படவில்லை. அவரை இறைவன் தம்மிடம் அழைத்துக்கொண்டார் என்பது அவர்களின் மத வாதம். கிறிஸ்தவர்களை அச்சுறுத்துவது தாக்குவது அவமதிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

ஈஸா நபி என்பவர் இறுதியில் இந்த உலகத்தை அழிக்க வருபவர் என்பது அவர்களின் கருத்து என்பதை இரண்டாவது காரணமாக என்னால் கூற முடியும். நியூசிலாந்தில் இடம்பெற்றுள்ள தாக்குதலுக்கு பழி வாங்க இந்த தாக்குதலை அவர்கள் நடத்தியுள்ளனர் எனக் கூற முடியும். ஏனென்றால் அந்தத் தாக்குதலை நடத்தியவரும் ஒரு கத்தோலிக்கர். இந்த தாக்குதலுக்கு பின்னர் பயங்கரவாதிகள் ஒரு அறிவித்தலை விடுத்திருந்தனர். அதில் உனது சமயத்தவர்கள் உலகத்தில் எங்கிருந்தாலும் அவர்கள் இதற்கு பதில் கொடுத்தே தீர வேண்டும். என்று அவர்கள் கூறியுள்ளனர்.

அதற்கிணங்கவே அவர்கள் இலங்கை போன்ற சிறிய பாதுகாப்பற்ற நாட்டை தேர்ந்தெடுத்துள்ளனர். ஏனென்றால் எமது நாட்டில் பாதுகாப்பு கிடையாது. எந்த வழியாகவும் எவரும் நாட்டிற்குள் பிரவேசிக்கலாம். நாட்டில் எந்தப் பகுதிக்கும் எவரும் தடையின்றி சென்று வர முடியும். எங்கிருந்து வந்தீர்கள் எதற்காக வந்தீர்கள் என்று எவரும் எவரையும் கேட்கப்போவதில்லை. அதனை தெரிந்து கொண்டே அவர்கள் இலங்கையை தேர்ந்தெடுத்துள்ளனர்.

துருக்கி சென்று பயிற்சி எடுத்தவர்களை வைத்து இங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

கேள்வி: மேற்கத்திய நாடுகளில் தமது ஆதிக்கத்தை வைத்துக் கொண்டுள்ள ஐஎஸ் ஐஎஸ் பயங்கரவாதிகள் இந்தத் தாக்குதலின் மூலம் ஆசியாவில் தமது ஏகாதிபத்தியத்தை தக்கவைத்துக் கொள்ளலாம் என்று எண்ணி இந்த தாக்குதலை மேற்கொண்டு இருக்கலாம் அல்லவா?

 பதில்: ஆம் நீங்கள் சொல்வது சரியாக இருக்கலாம். அவர்கள் உலகத்தில் சகல பகுதிகளிலும் தனது அடித்தளத்தை இட்டுள்ளனர் பிரான்ஸ் நாட்டில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்றில் தாக்குதல் நடத்தினர். தற்போது அவர்கள் ஆசியாவின் பக்கம் தனது பார்வையைத் திருப்பி உள்ளனர். இதனை நாம் சாதாரணமாகப் பார்க்க முடியாது எமது நாட்டில் பாதுகாப்புத்துறை பலப்படுத்தப்பட வேண்டும்.

கேள்வி: இந்த நிலையில் சமூகம் என்ற ரீதியில் இதிலிருந்து நாம் வெளியே வருவது எப்படி? அது தொடர்பில் உங்கள் கருத்துக்களை முன்வைப்பீர்களா?

பதில்: இந்த நாட்டு மக்கள் பற்றி சிந்திக்க வேண்டும் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டுள்ள சிலரை வைத்து நாட்டின் எல்லா முஸ்லிம் மக்களையும் பார்க்க முடியாது. அவ்வாறு பார்ப்பது தவறு. அவ்வாறு நாம் பார்த்தால் அவர்களையும் அத்தகைய செயலுக்கு நாம் தூண்டுவது போல் ஆகிவிடும். தற்போது நிலையில் முஸ்லிம்களுக்கு எதிராக செயற்பட சிலர் முனையலாம். எனினும் பொறுமை காப்பது மிகவும் முக்கியம்.

தமிழிழ விடுதலைப்புலிகளின் காலத்தில் நாம் இத்தகைய பல அனுபவங்களை பெற்றிருக்கின்றோம். தமிழர்கள் என்பதால் பல்வேறு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டோம். அது எமது அன்றாட செயற்பாடுகளில் பெரும் வதையாக அமைந்தது. என்றாலும் நாம் பொறுமை காத்தோம். அன்று படையினர் எம் மீது இருந்த கோபத்தினால் அவ்வாறு நடந்துகொள்ளவில்லை எமக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகவே அப்படி நடந்து கொண்டனர். நாட்டின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டுமானால் நாம் அதற்கு ஒத்துழைக்க வேண்டும். அதுபோன்ற நிலை இன்று முஸ்லிம் மக்களுக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் நாட்டில் உள்ள அரசியல் கட்சிகள் இதைவிட பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டியது அவசியம். ஆளும் கட்சி, எதிர்க்கட்சி என்றில்லாமல் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டிய காலகட்டம் இது.

எனினும் தற்போது எமது நாட்டில் அரசியல் நோக்கங்களுக்காக ஒவ்வொருவரும் பிரிந்து செயல்படுவதையே காணமுடிகின்றது.

ஒவ்வொருவரும், தங்கள் சுயநலத்திற்காக ஒவ்வொரு விதமாக செயற்பட்டால் நாட்டு மக்களின் நிலை இதைவிட மோசமாக அமைந்துவிடும். இந்த நிலையில் நாட்டு மக்களின் பாதுகாப்புக்கு முன்னிலை வழங்கப்பட வேண்டும்.அதற்கிணங்க நாட்டில் புதியதொரு அரசியல் கலாசாரத்தை ஏற்படுத்துவது முக்கியம்.

கேள்வி: சில மதத்தலைவர்களும் சில அரசியல் கட்சிகளோடு இணைந்து கொண்டு நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு செல்ல முயற்சிப்பது தெரியவருகிறது. இது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

பதில்: நாம் மதத் தலைவர்கள் என்ற வகையில் எந்த ஒரு அரசியல் கட்சியிலும் சேர்ந்து செயற்படுவதற்கு எமக்கு அனுமதி கிடையாது. அவ்வாறு செயற்படும்போது எமக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகள் பதவிகளிலிருந்து, நாம் நீக்கப்படுவோம். நாம் ஒரு மதத் தலைவராக செயற்பட முடியாது. அவ்வாறு அரசியலில் இணைந்து செயற்படும் மதத்தலைவர்கள் மிகச் சிலரே உள்ளனர். எனினும் பெரும்பாலானவர்கள் அவ்வாறு கிடையாது. சில சர்வமத கூட்டங்களுக்குச் சென்றாலும் அங்கு சில மதத் தலைவர்கள் அவர்கள் சார்ந்த கட்சியின் பக்கம் நின்று, கருத்துக்களை முன் வைப்பதை காணமுடிகின்றது. இதனால் அங்கு நாட்டின் தேசிய பிரச்சினைகள் தொடர்பில் கருத்துக்களை நேரடியாக முன்வைக்க முடியாத நிலையே ஏற்படும். இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு எவ்வாறு தீர்வைத் தேடுவது?

மதத் தலைவர்களான எங்களுக்கு கட்சிகளை பலப்படுத்துவது தொடர்பில் பேசுவதற்கு உரிமை கிடையாது. மக்களின் பாதுகாப்பு, மக்களுக்கு நல்ல போதனைகளை வழங்குவது போன்றவையே எங்களுக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புகளாகும். அதை நாம் சரியாக செய்ய வேண்டும். இலங்கைத் திருச்சபை என்ற வகையில் நாம் எமது பொறுப்புகளை மிகச் சரியாக மேற்கொண்டு வருகின்றோம் என என்னால் கூற முடியும்.

நேர்கண்டவர்

லோரன்ஸ்

செல்வநாயகம்

Comments