அடிப்படைவாதத்தை ஒழிப்பது முஸ்லிம் மக்களின் பொறுப்பாகும் | தினகரன் வாரமஞ்சரி

அடிப்படைவாதத்தை ஒழிப்பது முஸ்லிம் மக்களின் பொறுப்பாகும்

பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று 21நாட்களுக்குப் பின்னர் காடைத்தனமான தாக்குதல்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது ஆச்சரியமாகவுள்ளது. இது சந்தேகத்துக்கு இடமானதாகும் என்கின்றார் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செஹான் சேமசிங். அவரது நேர்காணலின் முழு விபரம்... 

கேள்வி – அண்மையில் இடம்பெற்ற சம்பவங்களின் பின்னணியில் மொட்டு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலர் உள்ளதாக கூறப்படுகின்றது. நாடு பாதிப்படைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சி என்ற வகையில் இதைவிட பொறுப்புடன் செயற்பட்டிருக்க வேண்டுமல்லவா!  

பதில் – நான் தெளிவாக கூறுகின்றேன் அவ்வாறான  எந்தவொரு சம்பவத்துடனும் மொட்டுக் கட்சியினர் சம்பந்தப்படவில்லை. இந்த செயலுக்கு ஆதரவளித்த அரசாங்கத்தில் உள்ளவர்கள் மீதுதான் மக்கள் மிகுந்த கோபத்துடன் உள்ளார்கள். அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காததையிட்டு எதிர்க்கட்சியை குற்றம் சாட்டுவதற்கு முன்னர் இந்த அரசாங்கத்திலுள்ள, நேரடியாக தொடர்பு கொண்டவர்கள் மீது விசாரணை நடத்தி கைது செய்யுமாறு கேட்கின்றோம்.  

கேள்வி – நீங்கள் அவ்வாறு கூறினாலும் கடந்தவாரம் நடைபெற்ற மோதல் நிலைமை க்கு எதிர்க்கட்சி மீது குற்றம் சுமத்தப்படுகின்றதே?  

பதில் – பயங்கரவாதத் தாக்குதல் நடைபெற்று 21நாட்களுக்குப் பின்னர் இவ்வாறான மோதல் நிலைமை ஏற்பட்டது என எமக்கும் ஆச்சரியமாகவுள்ளது. இது சந்தேகத்துக்கு இடமானதாகும். எவ்விதத்திலாவது மொட்டுக்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இதில் தொடர்பு பட்டிருந்தால் அவர்களுக்கு எதிராக கட்சி என்ற ரீதியில் ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதோடு சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கவும் நாம் ஒத்துழைப்பு வழங்குவோம்.  

கேள்வி – ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலின் பின்னர் பொலிஸார் நேரடியாகவோ மறைமுகமாகவோ இச்சம்பவங்களுக்கு முகங்கொடுத்தவர்களுக்கு எதிராக செயல்பட்டார்கள் பெருமளவானோர் கைது செய்யப்பட்டார்கள். எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினராக இது தொடர்பில் திருப்தி அடைகின்றீர்களா?  

பதில் – பாராளுமன்ற உறுப்பினர் என்பதை ஒரு புறம் வைப்போம். நாட்டின் சாதாரண பிரஜையாக நான் கவலைப்படுகின்றேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கு நியாயத்தை வழங்க வேண்டுமென்றால் குறைந்தபட்சம் அரசாங்கத்தினுள்ளே உள்ள தீவிரவாதிகள் தொடர்பாக சட்டத்தை செயற்படுத்த வேண்டும். ஆனால் குறைந்த பட்சம் சாட்சியங்களையாவது பதிவு செய்யவில்லை.  

கேள்வி – தேசிய பாதுகாப்பு தொடர்பில் ஏற்பட்டுள்ள இந்த நிலைமைக்கு எதிர்க்கட்சிக்கும் பொறுப்பு உள்ளதல்லவா?  

பதில் – நிச்சயமாக பொறுப்புண்டு. ஆனால் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டதாக தோன்றும் இச்சம்பவம் மீண்டும் எமக்கு கருப்பு ஜூலையையே ஞாபகப்படுத்துகின்றது. அரசாங்கம் இலாபநோக்கில் அதனை செய்யுமானால் நாம் ஒருபோதும் அவ்வாறான செயலுக்கு ஒத்துழைப்பு வழங்கமாட்டோம்.  

கேள்வி – இந்த கலவரத்தின் பயம் இன்னும் நாட்டு மக்களிடையே உள்ளது. நாட்டின் பல துறைகள் பாதிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதில்லை. மக்களிடமுள்ள பயம் நீங்குவது எப்போது?  

பதில் – எமது நாட்டில் திறமையான பொலிசும், முப்படையினரும் உள்ளனர். பயங்கரவாதத்துடன் மோதி அதனை முற்றாக ஒழிக்க முடியுமானால். இது போன்ற பயங்கரவாத தாக்குதல்களையும் வேரோடு பிடுங்கி எறிய முடியும். சரியான அரசியல் தலைமை இல்லாமையே அதனை வேரோடு களைய முடியாதுள்ளது. மக்களுக்கு பாதுகாப்பு உண்டென்று நாட்டுக்கு உறுதி வழங்கமுடியாதுள்ளது. அதனால் இந்த அரசாங்கத்தின் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளார்.  

கேள்வி – அதேபோல் இன்று கிழக்கு மாகாணத்தை அரபிய நாடாக மாற்ற முஸ்லிம் தீவிரவாதிகள் நடவடிக்கை எடுத்து வருவதாக குற்றச்சாட்டு எழுகின்றதே?  

பதில் – இன்று பௌத்த விஹாரைகளுக்கு, கத்தோலிக்க தேவாலயங்களுக்கு, முஸ்லிம் பள்ளிவாயில்களுக்கு செல்ல முடியவில்லை. இந்த நாட்டை எரிய விட்டு அரசியல் இலாபம் பெற முயற்சிப்பவர்கள் உள்ளார்கள். யுத்தத்துக்கு முகம் கொடுத்து வேளையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு எதிர்க்கட்சியாக இவர்கள் உதவி செய்தார்களா? தீவிரவாத கருத்துடைய முஸ்லிம் தலைவர்களுக்கு தங்களுடைய மக்களுக்கு எது நடந்தாலும் பரவாயில்லை. அவர்களுக்கு தீவிரவாதிகளின் வரப்பிரசாதமே தேவை. ஆகவே முஸ்லிம் தீவிரவாதத்தை ஒழிப்பது முஸ்லிம் மக்களின் பொறுப்பாகும்.

சுபத்திரா தேசப்பிரிய 
தமிழில் - லீ.ஆர். வயலட்    

Comments