குளவிக் கொட்டு,சிறுத்தைத் தாக்குதல்: | தினகரன் வாரமஞ்சரி

குளவிக் கொட்டு,சிறுத்தைத் தாக்குதல்:

மௌனம் கலைய வேண்டியது கம்பனிகள் மட்டுமல்ல சங்கங்களும்தான்!

பெருந்தோட்டங்கள் யாவும் பெருங்காடுகளாக மாறிவிட்டன. தேயிலை மலைகள்  புதருக்கு புகலிடம் அளிக்கின்றன. தேயிலைச் செடிகளுக்கு அடியில் புல்  பூண்டுகளைக் கண்ட காலம் போய் புல் பூண்டுகளுக்கிடையே தேயிலைச் செடிகளைத்  தேட வேண்டிய அவலம் ஏற்பட்டிருக்கிறது. 

வேலைச் செய்வதற்கேற்ற தொழில் பாதுகாப்பு இல்லை. அனர்த்தம் விளையும்  பட்சத்தில் அனைத்துப் பொறுப்பினையும் தோட்ட நிர்வாகமே ஏற்கும் என்னும்  உத்தரவாதம் கிடையாது. வேலையைச் செய். வரும் விளைவுகளை நீயே தாங்கிக்கொள்  என்ற ரீதியிலான தறிகெட்ட தோட்ட நிர்வாகம். காலையில் எழும்பி மலைக்குக்  கிளம்பும்போதே உயிருக்கு உலைவைக்கப்படலாம் என்னும் உறுத்தல். உயிராபத்தோடு  ஊடாட்டம். வன விலங்குகள் வசதியாக உலாவருவதால் கொஞ்சம் அசதியாக  இருந்துவிட்டால் ஆபத்து தான். 

பெருந்தோட்டப் பகுதிகள் சிறுத்தைகளின் சரணாலயம் போல ஆகிவிட்டது.  சிறுத்தைகள் தாராளமாக நடமாடுகின்றன. தோட்டத் தொழிலாளர்களைத் தாக்கிப் பதம்  பார்க்கின்றன. மரணத்தையும் விளைவிக்கின்றன. வீடுவரை வந்து வீட்டுப்  பிராணிகளையும் விட்டு வைக்காமல் காவிச்செல்கின்றன. சிறுத்தைகளின்  தாக்குதல்களில் தப்பிப் பிழைப்பது என்பது இங்கு தினசரி போராட்டம். தோட்ட  நிர்வாகங்கள் தேயிலை மலைகள் காடுமண்டி போவதற்கு ஆளணிப் பற்றாக்குறையே  அடிப்படைக் காரணம் என்று கூறியபடி ஓய்ந்து விடுகின்றது. 

தமது சுய பாதுகாப்புக் கருதி தோட்டத் தொழிலாளர்கள் சிறுத்தைகளைச் சிக்கவைக்க எதையா வது செய்து விட்டால் வாரிச் சுருட்டிக் கொண்டு வாசலுக்கு வந்து  குற்றப் பத்திரிகை நீட்டும் அகில இலங்கை வன பாதுகாப்புச் சங்கம்.  சிறுத்தைகளின் தாக்குதலால் காயம் அடைந்தாலோ, உயிரிழந்தாலோ கரிசனை  காட்டுவதில்லை. சிறுத்தைகள் உயிரிழக்கக் காரணமாக இருப்பது பாரிய குற்றம்  என்ற ரீதியில் நடவடிக்கை எடுக்கச் சொல்கின்றது இச்சங்கம். அழிந்துவரும்  இனம் என்ற வகையில் சிறுத்தைகளைக் கொல்வதோ துன்புறுத்துவதோ தகாது என்பது  சரியானது தான். ஆனால் பெறுமதி வாய்ந்த மனித உயிர்களுக்குப் பாதுகாப்பு  அளிக்க வேண்டாமா?. 

சிறுத்தை ஒன்றும் ஆபத்தான மிருகமல்ல என்பது வனவிலங்குத் திணைக்களத்து  வாதம். அவை மனிதர்களை கடிப்பது இல்லையாம். யாராவது தம்மை தாக்க முற்பட்டால்  பயத்தினால் தற்பாதுகாப்புக்காக தமது நகங்களினால் பருவி விடுவது அதன்  பழக்கமாம். சிறுத்தைகள் தேயிலைச் செடிகளின் அடியில் வாழ்வதை பெரிதும்  விரும்புவதே பெருந்தோட்டப் பகுதிகளுக்குப் படையெடுப்பதற்கு காரணம் என்று  கூறுகின்றது. வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம். தவிர சிறுத்தைகள் தாமே  முன்வந்து தாக்குதல் தொடுப்பது கிடையாதாம். எல்லாம் சரிதான். பார்ப்பதற்கே  பயங்கரமாக தென்படும் சிறுத்தைகளை தோட்ட மக்கள் தாமே வலியச் சென்று பல்லைப்  பிடித்துப் பார்ப்பதில்லையே. தொழில் செய்யும் நிர்ப்பந்தத்தில் எந்தத்  தேயிலைச் செடிக்கு அடியில் சிறுத்தை இருக்கும் என்னும் அச்சத்தோடு  கால்வைக்கும் இக்கட்டு நிலையை அனுபவித்துப் பார்த்தால்தான் புரியும். 

 

சிறுத்தை, பாம்பு, பன்றிகள் பயம் மட்டுமல்ல இங்கு! குளவியும் தேனீயும்  கொட்டி விளையாட பெருந்தோட்ட (காடு) மலைகள்தான் அடைக்கலம் தருகின்றன.  குளவியினால் கொட்டப்பட்டு துள்ளத் துடிக்க மருத்துவமனைக்குக் கொண்டு  செல்லப்படும் பெண் தொழிலாளர்கள் படும்பாடு அந்தோ பரிதாபம்!. சில இடங்களில்  ஒரே வேளையில் 100பெண் தொழிலாளர்கள் குளவிக் கொட்டுக்கு ஆளாகி  அவஸ்தைப்பட்டதும் உண்டு. மரணித்த தொழிலாளர்கள் கதைகளும் ஏராளம். 

ஏழு குளவிகள் ஒரே நேரத்தில் கொட்டும்போது நல்லபாம்பு விஷத்தை  ஒத்துப்போகும் கொடும் நச்சுத்தன்மை ஏற்படும் என்று கிராமப் புறங்களில்  சொல்வார்கள். தோட்டப்புறங்களில் இது சர்வசாதாரணம். குளவி கொட்டுவதால்  ஏற்படும் பாதிப்புகள் குறித்து தகவல் இருக்கின்றன. தொண்டை, முகம், உதடுகள்  வீக்கம் அடையும். குளவி கொட்டிய பகுதிகளில் அரிப்பு உண்டாகும். மூச்சுத்  திணறல் ஏற்படும். சுவாசிப்பதில் சிரமம், தலைச்சுற்று, உணர்விழப்பு,  குமட்டல், வாந்தி என்று ஏகப்பட்ட உடல் உபாதைகள். தாக்கங்கள். உண்மையில்  குளவிகளின் தாக்குதல்களினால் மரணம் விளைய இடமுண்டு. இதுபோலவே தேனீக்கள்  கூட்டாகக் கொட்டுவதாலும் ஆபத்து வருகின்றது. 

ஒரு தகவலின்படி மூன்று குளவிகள் மூர்க்கமாக கொட்டினால் உடனடி மரணமோ  அல்லது ஓரிரு நாட்கள் கழித்து இறப்போ ஏற்பட இடமுண்டு என்று தெரிய  வருகின்றது. பெருந்தோட்ட மக்களைப் பொறுத்தவரை குளவி, தேனீ தாக்குதல் என்பது  தினசரி முகம்கொடுக்க வேண்டிய நெருக்கடி ஆகிவிட்டது. இதுபற்றி தோட்ட  நிர்வாகங்கள் கிஞ்சித்தேனும் கரிசனை காட்டுவது கிடையாது. இவ்வாறான  ஆபத்துக்கள் ஏற்படுவதைத் தவிர்க்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்வதாய் இல்லை.  இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி மலையகத்துக்கு விஜயம் செய்தபோது மட்டும்  அவரின் பாதுகாப்புக்காக தேனீ, குளவிக் கூடுகளை அப்புறப்படுத்த நடவடிக்கை  எடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. 

தொழில் செய்யும் இடத்தில் தொழிலாளர்களுக்கு எவ்வித பாதுகாப்பு  ஏற்பாடுகளும் இல்லை என்பதே உண்மை. குறிப்பாக குளவி, தேனீ, சிறுத்தை  தாக்குதல்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுமிடத்து  ஏற்படும் செலவுகள் அனைத்தையும் தொழிலாளர்களே பார்த்துக்கொள்ள வேண்டும்.  நட்டஈடும் கிட்டாது. நிவாரணமும் கிடையாது. தோட்ட மருத்துவ மனைகள் அநேகமாக  பெயரளவிலேயே இயங்குவதால் முதலுதவி சிகிச்சைக் கூட பெற வசதியிருக்காது.  தப்பித் தவறி அப்படி இருந்து விட்டால் வைத்தியரை தேடிப்பிடிப்பது பெரிய  காரியம்! 

ஆனால் இவ்வாறான தாக்குதல்களினால் மரணம் நிகழ்ந்தால் மட்டும் தோட்ட  நிர்வாகம் மனம் வைத்து சவப்பெட்டிக்கான பணம், நட்ட ஈடு என்று நாகரீகமாக  நடந்து கொள்கின்றது. உயிராபத்தை விளைவிக்கும் குளவி, தேனீ, சிறுத்தைகளை  வேண்டுமென்றே தேடிப்போய் ஆபத்தை விலைக்கு வாங்க எந்தத் தொழிலாளியும்  விரும்புவதில்லை. ஆனால் இவ்வாறான ஆபத்தான விலங்குகள் உலாவரும், அல்லது  உறைவிடங்களைக் கொண்டிருக்கும் பிரதேசங்களே இவர்களின் தொழில் தலங்களாக  இருக்கின்றன. எனவே தொழிலாளர்களுக்கு ஆபத்தில்லாமல் தொழில் செய்ய வேண்டிய  சூழல் ஏற்படுத்தப்படுவது உறுதி செய்யப்படுவது அவசியம். குளவி, தேனீ  கூடுகளை உரிய முறையில் அப்புறப்படுத்த வழிவகைகள் இல்லாமலில்லை. இதற்கான  பயிற்சிகளைப் பெற்ற ஊழியர்களும் உள்ளார்கள். தவிர குளவி, தேனீ  தாக்குதல்களிலிருந்து. தப்பிக்கொள்ள, அல்லது தாக்குப்பிடிக்க கவச உடைகள்  வழங்கலாம், முதலுதவி முறைகளில் பயிற்சியளிக்கலாம். அனால் இவை எதனையுமே  தோட்ட நிர்வாகங்கள் இற்றைவரை செய்தபாடில்லை. இது குறித்து இம்மக்களையும்  பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கங்களோ அரசியல் கட்சிகளோ அக்கறை  காட்டுவதாக இல்லை என்று அங்கலாய்க்கின்றார்கள் அவதானிகள். 

பெருந்தோட்டத் துறை உரிய முறையில் கையாளப்படாத நிலைமையினாலேயே தேயிலை  மலைகள் காடுகளாக பரிணாமம் கண்டு வருகின்றன. இவை சுத்தப்படுத்தாமல்  விடப்படுவதால் உயிருக்கு அச்சுறுத்தல் தரும் உயிரினங்கள் ஊடுருவவும் உலா  வரவும் முடிகின்றது என்பதை மறுப்பதற்கு இல்லை. கூட்டு ஒப்பந்தக் காலங்களில்  தேயிலை மலைகளைத் துப்புரவு செய்வது பற்றிப் பேசுவது உண்டு.  அப்பொழுதெல்லாம் தோட்ட முதலாளிமாா் சம்மேளனம் உறுதி மொழிகளை வழங்கும்.  ஆனால் நடை முறையில் எதுவுமே கிடையாது. இதற்கான அழுத்தங்களைக் கொடுக்க மலையக  தொழிற்சங்கங்களுக்கு திராணியில்லை. இதனால் தோட்ட தோட்ட முதலாளிமார்  சம்மேளனம் ஆளணிப் பற்றாக்குறை என்னும் ஒரேயொரு அம்பை மட்டும் வைத்துக்  கொண்டு அனைவரையும் குறிவைத்து ஏமாற்றி வருகின்றது என்பதே யதார்த்தம். 

குளவிக் கொட்டி, தேனீ கொட்டி சிறுத்தை தாக்கி உயிரிழக்கும் தருணத்தில்  உடனடியாக சவப்பெட்டிக்கு நிதி, இழப்புக்கு ஈடு என்று காரியம் ஆற்றும்  கம்பனி தரப்பு இவ்வாறான திடீர் விளைவுகள் ஏற்படுவதை தவிர்ப்பதற்கு ஏதுவான  பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்வதில் அக்கறை காட்டினால் அநாவசிய மரணங்கள்  நிகழ்வதை அடியோடு களையலாம். தவிர ஐ.நா. அங்கீகரித்துள்ள தொழில் நியதிகளின்  அடிப்படையில் தொழில்சார் உரிமைகளைப் போல வேலைத்தள பாதுகாப்பும்  முக்கியத்துவம் பெறுகின்றது. ஆனால் இரும்புக்கரம் கொண்டு முதலாளித்துவ  சக்திகள் இதனையெல் லாம் புறக்கணித்து சுயலாபம் ஒன்றையே இலக்காக கொண்டு  பாராமுகமாக இருப்பது பாதகமான சங்கதி! தோழிலாளர்களைப் பாதுகாக்காமல்  அம்போவென அல்லாட விட்டுவிட்டு ஆளணிப் பற்றாக்குறை என்ற காரணத்தை வைத்துக்  கொண்டு தொழிலாளர்களை அவஸ்தை பட வைப்பதை முதலாளித்துவத்தின் கோர முகமாகவும்  கொள்ளலாம்.

பன். பாலா  

Comments