முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் | தினகரன் வாரமஞ்சரி

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்

அம்மா காமென்ருக்கு வேலைக்குப்போகிறாள். புள்ளைகள் இருவரும்  தாமே சமைத்து தாமே குளித்து, தாமே வீடுவாசல்களை சுத்தம்பண்ணி தாமாகவே  புறப்பட்டு பாடசாலைக்கும் போய்விட்டு, வந்து தாய் வருவதற்குள் வீட்டுக்கு  தேவையான விறகுபொறுக்கி, தண்ணீர் அள்ளி வைத்து, தயாராக இருக்கிறார்கள்.  மூத்தவனுக்கு வயது பதின்மூன்று மற்றவன் எட்டுவயது. இருவருமே ஆண்பிள்ளைகள்.  தாய் காலையில் ஆறுமணிக்கு வீட்டைவிட்டு புறப்பட்டால் இரவு ஏழு மணிக்கே வர  முடியும். ஞாயிறு விடுமுறை, ஏனைய அரச விடுமுறைகளும் உண்டு. எனினும் சில  விடுமுறைகளில் அவள் மேலதிக நேர வேலை செய்து அதிகமாக சம்பாதிக்கிறாள்.  அவளுடைய கணவனுக்கு என்ன நடந்தது. அவன் இறந்து போகவில்லை.  

மனைவி கண்ணிவெடியகற்றும் வேலை செய்கிறாள். அதிகாலை நான்கு  மணிக்கே வீட்டைவிட்டு கிளம்பி ஐந்துமணிக்கு அணிவகுப்பில் நின்றாக வேண்டும்.  எனவே மூன்றுமணிக்கு முன்பே அவளுடைய கணவன் அவளுக்கான உணவை சமைத்து கட்டிக்  கொடுத்து அனுப்புகிறான். அதன்பின் அவன் படுத்து உறங்கிவிட்டு பகல்  பத்துமணிக்குப் பின்பே எழுந்திருக்கிறான். அதன்பின் அவனை யாரும் வேலைக்கு  சேரத்துக் கொள்ள மாட்டார்கள் அதனால் அவன் மீதமுள்ள பகலையும் அங்குமிங்கும்  சுற்றுவதில் செலவழிக்கிறான். ஆனாலுமென்ன அவன் மனைவியை அடித்து நொருக்கி  அவளிடமிருந்து பணத்தை பிடுங்குவதில் வல்லவனாக இருக்கிறான். அடிதடி  நடக்கும்போது அவளுடைய அலறல் நாலாபுறமுமுள்ள வீடுகளை உலுப்பும். ஆனாலும்  நாங்கள் யாரும் எட்டியும் பார்க்கமாட்டோம். அது சரிதான் என்பதை நீங்கள்  உணர வேண்டும். ஏனெனில் சுமார் ஒருமணித்தியாலத்தின் பின் பார்த்தால் அந்த  கணவனும் மனைவியும் மிக ஜாலியாகப் பேசிக்கொண்டு தெருவில்  உலவுவதைக்காணலாம்.(செம காண்டாக இருக்கும்)  

பிள்ளைகள் இருவர் கவனிப்பாரின்றி விரும்பினால் பாடசாலை  இல்லாவிட்டால் இல்லை என்றும். அயல் வீடுகளில் மாங்காய் ஜம்புக்காய்  பொறுக்கித் தின்றும் காலம் போக்கிவருகிறார்கள். இதில் ஒன்று பன்னிரண்டு  வயதுப் பெண்பிள்ளை.

இந்த கணவன் அடிக்கடி தனக்குப்பிறந்த ஆண்பிள்ளையையும்  தூக்கிக் கொண்டு தேச சஞ்சாரமும் போய்விடுவான். இவள் அந்த பெண் பிள்ளையை  தனியே விட்டுவிட்டு வேலைக்கு அதே நள்ளிரவில் எழுந்து போய்விடுவாள்.  அந்தப்பெண்பிள்ளை தனக்குத் தெரிந்த பெடியன்களை துணைக்கு அழைத்துக்  கொள்கிறாள். கேட்டால் பெரியம்மாவின் மகன் அத்தையின் பிள்ளை என்று ஏதாவது  உறவை சொல்கிறாள்.  

எங்களுடைய கிராமங்கள். மன்னிக்கவும் நான் சொன்ன இரு  சம்பவங்களும் நகரத்தில்தான் நடக்கிறது. என்றாலும் எங்களது கிராமங்களில்  இன்னமும் விறகு பொறுக்கவும், கறிவேப்பிலை ஆயவும், குளத்தில் குளிக்கவும்  ஆண்பெண் வேறுபாடின்று மக்கள் கூட்டம் கூட்டமாக செல்கிறார்கள். ஆச்சா பாலை  மரங்கள் பழுத்துச் சொரியத் தொடங்கியுள்ளன. வீரை மரங்களும் உலுவிந்தை  மரங்களும் கூட சிவக்கத் தொடங்கிவிட்டன. முன்னர் போல காடுகளுக்குள் போய்  இவற்றை சேகரிக்க மக்களுக்கு முடியாதுள்ளது காரணம் காடுகளுக்குள் இராணுவம்  நிலைகொண்டுள்ளதால் அந்த வளங்கள் வீணாகிவிடும் எங்காவது கரையோர மரங்களே  கிடைக்கும்.  

இந்த காடுகள் திறந்து கிடந்த போர்க்காலத்தில் பல பாலியல்  துஸ்பிரயோகங்களும் கொலைகளும் பாலை மரக்காடுகளிலேயே நடந்தன. ‘பாலைப்பழம்  வெட்டித்தாறன் வாறியா?’ என்று கூட்டிச்சென்ற இளம் பெண்கள் கெடுக்கப்பட்டும்  கொல்லப்பட்டும் போன சம்பவங்கள் பத்திரிகைகளில் வராமல் பாா்த்துக்  கொண்டனர். என்றாலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டன.  மேற் குறித்தபடி பிள்ளைகளை பாதுகாப்பின்றி வீடுகளில் விட்டுச் செல்லுதல்  தடைசெய்யப்பட்டதுடன் அவர்களுக்கான கல்விக்கூடங்களில் விட்டுச் செல்ல  வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டிருந்தது.  

பெற்றார் இல்லாமல் தாமே தம்மை நடாத்தும் குழந்தைகளே  சமுதாயத்தின் பெரிய நோய்க் கிருமிகளாக மாறியுள்ளனர் என்பது பல்வேறு  ஆய்வுகளை செய்து சிறுவர்  பெண்கள் தொடர்பான குற்றச் செயல்களை தடுக்கும்  போலீஸ் தலைமையகத்தினரின் அறிக்கையொன்று கூறுகிறது. கல்வியில் குறைவற்ற  வைத்தியராக இருந்த ஒருவர்  தன்னிடம் சிகிச்சைக்காக வந்த பெண்ணை பாலியல்  தொந்தரவு செய்ததன் மூலம் அவள் தன்னைக்காத்துக்கொள்ள நாலாம் மாடியிலிருந்து  குதித்து தற்கொலை செய்தாள். அது கொலையாகவே கருதப்படும் இதைசெய்தவர் ஒரு  திறமையான டொக்டர். அவரது இளமைக்காலத்தில் தாயாரால் கைவிடப்பட்டிருந்தமையே  அவரது மனதில் இப்படியான கோரத்தை விதைத்தது என்பதை ஆய்விலிருந்து  கண்டுபிடித்தனர்.  

நெடுங்காலம் தந்தையைப் பிரிந்திருந்த ஒரு வாலிபனுக்கு தாயை  அறவே பிடிக்கவில்லை விளைவு வெளிநாட்டிலிருந்து தந்தை அனுப்பும் பணத்தில்  அவனை திருப்தி செய்ய தாய் பெருந்தொகைப்பணத்தை கொடுக்கிறாள் மோட்டார்  சைக்கிள் கணனி, புகைப்படக்கருவி, நண்பர்களுடன் மகிழ்ச்சியாக செலவழிக்க  பார்ட்டிகளுக்குப் பணம்.இப்படியே அவளுடைய மகனை அவன் போதைப் பழக்கத்திற்குள்  அழுத்திவிட்டாள். இன்று கண்ணீர் விட்டாலும் அவளுடைய ஒரே மகனின் வாழ்க்கையை  எப்படி மீட்கப்போகிறாள்.  

யாருக்காக உழைக்கிறோம் பிள்ளைகளை நன்றாக வாழவைக்கத்தானே  இந்தக்கஸ்டப்படுகிறோம் என்றுதான் எல்லோரும் சொல்கிறார்கள்.  அந்தப்பிள்ளைகளின் வாழ்க்கை நாசமாக போனதன் பின் என்னதான் உழைத்தும்  பயனில்லையே. முதலில் பணந்தான் வாழ்க்கை என்ற மனநிலை மாற வேண்டும்.  மழலைபேசும் தன் மகவின் முகத்தைக்காணாதவர் எவ்வளவு பெரிய இன்பத்தை  இழக்கிறார்.

பெற்றோரின் அன்பை சகோதரர்களின் அன்பை கூடி வாழும் இன்பத்தை  பணம் ஒருபோதும் நிரவல் செய்ய முடியாது. பெற்ற பிள்ளைகளை அருகிருந்து  பார்த்து வளர்க்காத எவரும் முதுமையில் தாமும் பிள்ளைகள் தம்மை அருகில்  வைத்துக் கொள்ளவில்லையே என வருந்துவதில் என்ன பயன்.  

முதியோர்  இல்லமொன்றில் ஒரு வயோதிபர் தன் சக வயோதிபரிடம்  பேசிக் கொண்டிருந்தாராம் . அவர் எப்பவும் தன் பிள்ளைகள் தன்னை இப்படி  வயோதிபர் இல்லத்தில் போட்டுவிட்டார்களே என்று வருந்துவாராம் அதைக்  கேட்டுக்கொண்டிருக்கும் நம்மவர்  தலையை மட்டும் ஆட்டிக் கொள்வாராம்.  தாங்காமல் ஒருநாள் அவரே கேட்டுவிட்டாராம் “ ஏனப்பா உன்மகன் பெரிய பணக்காரன்  எஞ்சினியர் என்றெல்லாம் சொல்கிறாயே உனக்கு அவர்களை விட்டுவிட்டிருப்பது  வருத்தமாயில்லையா?” என்று அவர் அதற்கு என்ன சொன்னார்  தெரியுமா?  

“இல்லவே இல்லை அவர்கள் சிறுவர்களாக இருந்தபோது நான் அவர்களை  கொஸ்டலில் விட்டுவிட்டு ஊரூராக சென்று பணம் தேடினேன். அவா்களை போய்  பாரக்கக்கூட நேரமில்லை. அவர்களுடைய தாயைக்கூட அவர்களுடன் விடாமல் என்னுடன்  கொண்டு சென்றேன். இப்ப அவர்கள் என்னை இங்கே விட்டுவிட்டு பணத்தை  அனுப்புகிறார்கள் 'முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் இதில் வருந்த  என்ன இருக்கிறது'?” 

Comments