இஸ்ரேல் - ஹமாஸ் மோதலும் மேற்காசிய அரசியலும் | தினகரன் வாரமஞ்சரி

இஸ்ரேல் - ஹமாஸ் மோதலும் மேற்காசிய அரசியலும்

இஸ்ரேல்-_ ஹமாஸ் மோதல் மீண்டும் மேற்காசிய அரசியலில் அதிக தாக்கத்தினை ஏற்படுத்த விளைகிறது. நான்கு பலஸ்தீனர்களை இஸ்ரேல் கொன்றதை அடுத்து தொடங்கிய தாக்குதல் பதிலுக்கு பதில் என பரவிவருகிறது. உலக அரசியல் பரப்பில் புதிய போர் முறைமை ஒன்று அரங்கேறி வருகிறது. இதுவரை நிகழ்ந்த யுத்தங்களில் அனேகமானவை துப்பாக்கிக்கு துப்பாக்கி என்ற நியமத்தில் காணப்பட்டது. தற்போது துப்பாக்கியும் நிராயுத பாணிகளான மக்களும் என்ற நிலை அதிகரித்து வருகிறது. அரசுகளும் அரசற்ற அமைப்புக்களும் அத்தகைய யுத்தம் ஒன்றையே முதன்மைப்படுத்தி வருகின்றன. இக்கட்டுரையும் இஸ்ரேல்- - ஹமாஸ் தாக்குதலின் பிரதிபலிப்புக்களையும் விளைவுகளையும் தேடுவதாக அமைந்துள்ளது.  

கடந்த இரு வாரங்களாக காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல் நீடிக்கின்றது. ஆரம்பத்தில் இரு பாலஸ்தீனர்கள், யூதர்களால் கொல்லப்பட்டதை அடுத்து பதிலுக்கு ஹமாஸ் இஸ்ரேல் மீது ரெக்கட் தாக்குதலை நிகழ்த்தியது. அதில் யூதர்கள் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகாத போதும் பலர் படுகாயமடைந்ததாக தகவல்கள் யூத ஊடகங்களால் உறுதி செய்யப்பட்டன. இத்தகைய தாக்குதல்கள் அடிக்கடி நிகழ்வது வழமையானாலும் தற்போதைய தாக்குதல் பல பரிமாணங்களை எடுத்து வருகிறது. குறிப்பாக ஏவுகணைத் தாக்குதல் குறித்த இலக்கை நோக்கியதாக அமைந்ததுடன் இஸ்ரேலிய தொழில் நுட்ப வல்லமையை தாண்டி தாக்குதலில் அதிக பாதிப்பினை ஏற்படுத்தியுள்ளது. இது இஸ்ரேலிய அரசாங்கத்தின் பாதுகாப்பு இருப்பில் பிரதான குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான பதிலடியை யூதர்கள் ஈவிரக்கமின்றி நிகழ்த்தினர் இதில் பாலஸ்தீனர்கள் பலர் கொல்லப்பட்டனர். அதிக சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதன் பின்னர் நீடித்த வன்முறைக்கு முடிவுகட்டும் விதத்தில் போர் நிறுத்த உடன்படிக்கை எட்டுவதற்கான முயற்சியில் ஐ.நா. மற்றும் ஐரோப்பிய நாடுகள் முயன்றுள்ளன. ஐ.நா.வின் பொதுச் சபையில் அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டு இரு தரப்பினருக்கும் அறிவிப்பு முன்வைக்கப்பட்டுள்ளது. ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக தகவல்கள் உறுதிப்படுத்திய போதும் பலஸ்தீன ஜீகாத் அமைப்பு இப்போரில் அதிக கவனம் செலுத்துவதுடன் போர் நிறுத்தை மறுதலித்து வருகிறது. அது மட்டுமன்றி திறந்த மற்றும் நெருக்கமான போருக்கு இஸ்ரேல் தயாராக இருப்பதாக அதன் செய்தி தொடர்புகள் தெரிவிக்கின்றன. இதற்கு பதிலளிக்க முயலும் ஜீகாத் அமைப்பானது எகிப்தில் நடைபெறும் போர்நிறுத்த உடன்பாட்டுக்கான பேச்சுக்களில் கலந்து கொண்டுள்ளமையும் கவனத்திற்குரியதாகும்.  

போரும் போருக்கான தயாரிப்புகளும் நிகழும் அதே வேளை மறுபக்கத்தில் இஸ்ரேல் ஹமாஸ் மீதும் ஜீகாத் அமைப்பின் மீதும் பாரிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது. குறிப்பாக ஹமாஸ் அமைப்பு பயங்கரவாத அமைப்பு என்றும் அது  ஐஎஸ் அமைப்பின் பிரிவு என்றும் அதன் நடவடிக்கைகள் அனைத்து பயங்கரவாதத்தை முன்னிறுத்துவதாக அமைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளது. அவ்வாறே அதன் தோற்றப்பாட்டையும் நடவடிக்கைகளையும் தகவல்களுக்குள்ளால் வெளிப்படுத்தும் இஸ்ரேல் அதனையும் அதன் தலைமையையும் சர்வதேச பயங்கரவாதத்திற்கு ஒப்பானதாக ஏற்படுத்த முயன்று வருகிறது. இதில் இஸ்ரேல் ஐ.நா.வரையும் இவ்வமைப்பின் மீதான குற்றச்சாட்டினை முன்வைத்து வருகிறது. ஐ.நா வின் ஆதரவை அமெரிக்கா இஸ்ரேலுக்காக கோரிவருகிறது.  

அத்துடன், ஹமாஸ் பல ஆயிரக்கணக்கான சிறுவர்களை போரில் ஈடுபடுத்தி வருவதுடன் அவர்களை கட்டாயப்படுத்தி பயிற்சி அளித்துவருவதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. ஏறக்குறைய 17ஆயிரம் சிறுவர்கள் இஸ்ரேலுக்கு எதிராக போர் புரிய தயாராகியிருப்பதாகவும் 23ஆயிரம் சிறுவர்கள் போர்பயிற்சி பெற்று வருவதாகவும் இஸ்ரேல் ஊடகங்களுக்கூடாக செய்தி வெளிப்படுத்தி வருகிறது. மேலும் ஹமாஸ் மீது சிறுவர்களை போரில் ஈடுபடுத்தும் அமைப்பு என்ற குற்றம் சாட்டை முன்வைத்து அதற்கு எதிராக போர்க்குற்றம் பற்றிய நடவடிக்கை எடுக்க முயலுகிறது. இதனையும் ஐ.நா சபையில் கொண்டு செல்வதற்கான ஆலோசனைகளை திரட்டி வருவதாக இஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.  

இன்றைய போர் இரு தரப்புக்குமானதாக அமைந்தாலும் இஸ்ரேலைப் பொறுத்தவரை ஹமாஸின் ஏவுகணைத் தாக்குதலை முறியடிப்பதற்கான உத்திகளாகவே தென்படுகின்றது. வெளிப்படையாக கூறுவதானால் இஸ்ரேல் எதிர்பராத தாக்குதல் ஒன்றினை ஹமாஸ் தொடுத்துள்ளது. அதன் விளைவாக 23யூதர்கள் காயமடைந்துள்ளனர். இஸ்ரேலைப் பொறுத்தவரை தனது மக்கள் கொல்லப்படுவதையோ காயப்படுவதையோ அனுமதியாத தேசமாகும். அந்தளவுக்கு அது தனது பிரஜைகள் மீது கவனம் கொண்டுள்ளது. பல நூற்றாண்டுகளாக கொல்லப்பட்ட யூதர்கள் இனியாவது கொல்லப்படக் கூடாது எனக் கருதுகிறது. வரலாறு முழுவதும் கொல்லப்பட்ட நிலையிலிருந்து யூதர்களை மீட்க வேண்டிய பொறுப்பாண்மை தனக்குரியதாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் கருதுகின்றன.    ஹமாஸ் அமைப்பு 2001ஆண்டிலிருந்து ஏவுகணைத் தாக்குதலை நிகழ்த்திவருகிறது. ஆரம்பத்தில் அதிகமான யூதர்கள் கொல்லப்பட்டனர்.

குறிப்பாக 2006மட்டும் ஒன்பது யூதர்கள் கொல்லப்பட 371பேர் காயமடைந்தனர். இத் தொகை 2007மற்றும் 2008இல் அதிகமாக காணப்பட்டது. முறையே 10பேர் கொல்லப்பட 578பேர் காயமடைய அடுத்த ஆண்டு 15பேர் கொல்லப்பட 611பேர்காயமடைந்தனர்.

இத்தொகை 2011களில் மூன்று பேர் மட்டுமே கொல்லப்பட 81பேர் காயப்படும் நிலை ஏற்பட்டது. தற்போது கொல்லப்படாத போதும் 23பேர் காயமடைந்தமை இஸ்ரேலிய அரசாங்கத்தால் ஏற்றுக் கொள்ள முடியாதுள்ளது. இதனையே பிரதமர் நெதன்யாகு குறிப்பிடும் போது பேர் முடிவடையவில்லை என்னுமே இலக்குகள் அடையப்படவில்லை என்றார்.

அதாவது இஸ்ரேல் ஒரு பக்கம் பேசிக் கொண்டு மறுபக்கம் போர் புரியும் தேசம் என்பதை கடந்த காலத்தில் பலதடவை உணர்த்தியுள்ளது.

 

எல்லாவகையான உத்திகளையும் கையாளும் திறனுடையது இஸ்ரேலிய அரசும் அதன் புலனாய்வு அமைப்புமாகும். மொசாட்டைப் பொறுத்தவரை இந்த யுத்தத்தை அடிப்படையில் முடித்துக் கொள்ள மறுக்கின்றது. காரணம் ஏவுகணைத் தாக்குதலை முற்றாக முடிவுக்கு கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். அதற்கான நடவடிக்கையாகவே சர்வதேச மட்டத்தில் இந்த யுத்தத்தை நகர்த்த விளைகிறது. இலகுவில் தீர்த்துக் கொள்ள முடியாத ஒன்றை சர்வதேச மயப்படுத்தியே தீர்த்துக் கொள்ள முடியும் என்ற எண்ணத்துடன் நகருகின்றது இஸ்ரேல்.  

எனவே இன்றைய போர்ச் சூழலை பலமுனைகளில் வெற்றி கொள்ள முனையும் இஸ்ரேல் ஐ.நா சபையிடம் போர் நிறுத்தத்திற்கான நடவடிக்கையை எடுக்குமாறு கோரி வருகிறது. தொடர்ந்து சர்வதேச சமூகத்திடம் இப்பிரச்சினைக்கு நடுநிலைமை வகுக்குமாறு அழைப்பு விடுத்துள்ளது. அதனை ஐ.நா.வுக்கான இஸ்ரேலிய நிரந்தர தூதுவர் முன்வைத்துள்ளார்.

இவ்வாறு எல்லாம் எல்லாக் கோணத்திலும் இத்தாக்குதல் அதிக அதிகவலையை இஸ்ரேலுக்கு ஏற்படுத்தியுள்ளது. இஸ்ரேலிய நகரத்தை ஹமாஸ் தாக்கிய பின்பதான இஸ்ரேலின் தாக்குதல் காஸாவின் தலைநகர் மீதானதாக அமைந்தது. அத்தாக்குதலின் உத்தி மிகப்பயங்கரமானதாக அமைந்ததாக, அங்கிருந்த செய்தியாளர்கள் விபரிக்கின்றனர். இந்த தாக்குதல் இஸ்ரேலை அதிகம் பாதித்ததாகவே உணர முடிகிறது என்கிறார் அல்யசீரா செய்தியாளர். 

 இஸ்ரேல்- - ஹமாஸ் தாக்குதல் பாலஸ்தீன அரசியலை மட்டுமல்ல உலக அரசியலுக்குள்ளும் பிராந்திய நகர்வுகளிலும் அதிக தாக்கத்தை வெளிப்படுத்த முயலுகிறது. ஆனாலும் இஸ்ரேல் தனது இருப்பினை பாதுகாக்கும் தீவிரத்தில் உலகத்தளத்திற்கு மாற்றி வருவது கவனிக்கத்தக்கது. இதன் பதிலீடு பலஸ்தீன அரசியலில் மாற்றங்களை ஏற்படுத்தி வருவதுடன் காஸா பகுதியின் ஆட்சியிலும் நெருக்கடியை ஏற்படுத்திழயிருகிறது. பலஸ்தீனர்களுக்கான காஸாப் பகுதியும் இஸ்ரேலியரது ஆக்கிரமிப்பினை நோக்கி நகர்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் ஏற்படத்த ஆரம்பித்துள்ளது. இதன் போக்கு பலஸ்தீனர்களுக்கு கிடைத்துள்ள வாய்ப்பினையும் தகர்ப்பதாக அமையவுள்ளது. ஆனால் ஹமாஸைப் பொறுத்தவரை இத்தாக்குதல் மீண்டும் ஆட்சிக்கு வந்துள்ள நெதன்யாகுவின் அணுகுமுறைகளை நோக்கியதாக அமையும் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.  

எனவே, இஸ்ரேலின் விஸ்தரிப்பை கையாளுவதற்கான தாக்குதலாக அமையும் என்பதே தற்போதைய ஹமாஸின் உத்தியாக இருந்தது. அதனை எதிர்கொள்ள இஸ்ரேல் தயாராகிவருகிறது.

கலாநிதி

கே.ரீ.கணேசலிங்கம்

 

Comments