வவுணதீவு சம்பவத்தில் சிறையிலிருந்த முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை | தினகரன் வாரமஞ்சரி

வவுணதீவு சம்பவத்தில் சிறையிலிருந்த முன்னாள் போராளி அஜந்தன் விடுதலை

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

மட்டு, வவுணதீவில் இரண்டு பொலிஸார் படுகொலைசெய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டிருந்த முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர் அஜந்தன் விடுவிக்கப்பட்டுள்ளார். வவுணதீவு கரையாக்கன்தீவைச் சேர்ந்த முன்னாள் போராளி அஜந்தன் என அழைக்கப்படும் ஐந்து பிள்ளைகளின் தந்தையான கதிர்காமத்தம்பி இராசகுமாரன், கைது செய்யப்பட்டு ஐந்து மாதங்களும் பதினொரு நாட்களும் கடந்த நிலையிலேயே நேற்று விடுதலை செய்யப்பட்டார். 

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி வவுணதீவு காவலரணில் கடமையிலிருந்த இரண்டு பொலிஸார் சுட்டும் வெட்டியும் கொலைசெய்யப்பட்டிருந்தனர்.  

இது தொடர்பில் முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர் அஜந்தன் உட்பட இருவர் கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், ஒருவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அஜந்தன் மட்டும் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுவந்தார்.  

இந் நிலையில் கடந்த 21ஆம் திகதி மட்டக்களப்பு, சீயோன் தேவாலயம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் நடைபெற்ற குண்டுத்தாக்குதலைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் பிரதான தாக்குதல்தாரியாக அடையாளப்படுத்தப்பட்டிருந்த சஹ்ரானின் வாகன சாரதி கைதுசெய்யப்பட்டு விசாரணை செய்யப்பட்டதன் அடிப்படையில், வவுணதீவில் தாங்களே பொலிஸாரை கொலைசெய்ததாக வாக்கு மூலம் வழங்கினர்.  

இதனடிப்படையில் அஜந்தனை விடுதலைசெய்யுமாறு பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்ததற்கு அமைவாக நேற்றுக் காலை மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி தியாகேஸ்வரன் முன்னிலையில் பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஆஜர்படுத்தப்பட்டார்.  

இதனைத்தொடர்ந்து விடுவித்த பதில் நீதிவான் நாளை 13ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் பணித்ததாக அஜந்தன் தினகரனுக்குத் தெரிவித்தார்.  

அதனைத் தொடர்ந்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் நேற்றுக்காலை 11மணியளவில் அஜந்தன் அவரது வீட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டு விடப்பட்டதாக அஜந்தனின் மனைவி தெரிவித்தார்.   இவரின் விடுதலைக்கு அமைச்சர் மனோ கணேசன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் தொடர்பு கொண்டு பேசியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விடுதலை செய்வதாக அமைச்சர் மனோ கணேசனிடம் இணக்கம் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. 

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிப்பு

இதேவேளை முன்னாள் போராளியான அஜந்தன் என்றழைக்கப்படும் கதிர்காமத் தம்பி ராஜகுமாரன் தான் விடுதலை செய்யப்பட்டமைக்கு ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.​ ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அஜந்தனை உடனடியாக விடுதலை செய்யும்படி பணித்தமைக்கு அமைவாக (11) நேற்று விடுதலை  செய்யப்படுள்ளார் .

கடந்த ஐந்தரை  மாதங்களாக தடுத்து வைக்கப் பட்டிருந்த அஜந்தன் மட்டக்களப்பு, வாழைச்சேனை மற்றும்  நான்காம் மாடி வரைக்கும் அழைத்து சென்று விசாரணை   செய்துள்ளதாகவும் அனால் இதுவரை காலமும் உண்மையான குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாமையினாலேயே தான் செய்யாத குற்றத்திற்காக சிறைவாசம் அனுபவித்ததாக அஜந்தன் தெரிவித்தார்.

அஜந்தன் மேலும் தெரிவிக்கையில்,

இன்று இலங்கையில் முஸ்லிம் பயங்கர வாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டு தாக்குதலின் பின்பு கைது செய்யப்பட்டவர்கள் வவுணதீவு கொலைகளை தாங்களே செய்ததாக ஒத்துகொண்டுள்ளமையினால் இன்று நான் விடுதலையாகியதாகவும் இல்லாவிட்டல் தான் தொடர்ந்தும் சிறைவாசம் அனுபவிக்க வேண்டியிருக்ககூடும் எனவும், நான் நிரபராதி என தெரிந்து கொண்ட ஜனாதிபதி உடனடியாக என்னை விடுதலை செய்யுமாறு பணித்தமைக்கு அமைவாகவே விடுதலை செய்யப்பட்டுள்ளேன் என மன வேதனையுடன் தெரிவித்ததுடன்  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனாவுக்கு தனதும் தனது குடும்பத்தாரதும்  நன்றியையும் தெரிவித்தார்.

கல்லடி குறூப், நாவற்குடா தினகரன் நிருபர்கள்  

 

Comments