நாட்டை விட்டு நான் ஏன் தப்பியோடவேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

நாட்டை விட்டு நான் ஏன் தப்பியோடவேண்டும்

பயங்கரவாதத்துடன் தொடர்பில்லை

நாட்டைவிட்டு நான் தப்பியோடவில்லை. எந்தவித மான குற்றமும் செய்யாத நான் ஏன் தப்பியோட வேண்டும்? எனக் கேள்வி எழுப்பியிருக்கும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் சில தனி யார் ஊடகங்கள் தன்னை பயங்கரவாதப்பட்டியலுக்குள் தள்ளிவிட முயற்சிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.  இவ்வளவு காலமும் என்னை விமர்சித்து வந்த இந்த ஊடகங்கள் இப்போது எனது குடும்பத்தையும் வம்புக்கு இழுத்துள்ளன என்றும் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் குறிப்பிட்டிருக்கின்றார்.  

கைத்தொழில் வாணிபத்துறை, நீண்டகாலம் இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்ற, கூட்டுறவுத்துறை அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் நேற்று சனிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளார். இந்த அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:- 

எத்தகைய சவால்களுக்கும் முகம் கொடுக்கும் மனோபலம் தன்னிடமிருப்பதாகவும் தனது நற்பெயருக்கு களங்கமேற்படுத்தும் பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஊடகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைத் தீர்மானித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். 

அண்மையில் உத்தியோகபூர் விஜயமொன்றை மேற்கொண்டு ஓமான் நாட்டுக்குச் சென்றேன். நான் மட்டுமல்ல அமைச்சர்கள் மலிக் சமரவிக்கிரம, கபீர் ஹாஷிம் ஆகியோரும் இந்த விஜயத்தில் இணைத்துகொண்டனர். இந்த விஜயத்தின் மூலம் எமது நாட்டுக்கு பல பில்லியன் ரூபாய்கள் முதலீடுகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு கிட்டியுள்ளது. எனது இந்த வெளிநாட்டுப் பயணம் தொடர்பில் காரணங்களை தெரிவித்துக்கொள்ளாமல் சில தனிநபர்களும், தனியார் ஊடகங்களும் நான் நாட்டைவிட்டுத் தப்பியோடிவிட்டதாக தெரிவித்திருந்தனர்.  

சில தனியார் ஊடகங்களுக்கும் வேறு சில தனிப்பட்டவர்களுக்கும் ரிஷாத் பெரிய பிரச்சினையாக உள்ளது. என்னைப் பற்றி ஏதாவது சொல்லாது போனால் அவர்களுக்கு நித்திரைவராது. 

உத்தியோகபூர்வ ஓமான் விஜயத்தை முடித்துக் கொண்டு மூன்று நாட்களில் நாடு  திரும்பிவிட்டேன் இப்போது அவர்களது வாய்கள் அடைபட்டுப்போய் விட்டன. 

என்மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களை நோக்கும்போது அவர்களது நோக்கும், இலக்கும் என்னைப் பயங்கரவாதக் குவியலுக்குள் தள்ளிவிடுவதாகவே அவதானிக்க முடிகிறது. யாருக்காக இந்தப் பணியை தனியார் ஊடகங்கள் ஏற்றிருக்கின்றனர். எனக் கேட்க விரும்புகின்றேன். எனது செயலாளர் ஒருவர் டெடனேற்றருடன் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.  

இந்த விடயத்துடன் சம்பந்தப்பட்டவர் எனது செயலாளராக இருக்கவே இல்லை. ஆனால் கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது எமது கட்சி சார்பில் போட்டியிட்டவராவார். அவர் கைதானது உண்மைதான். ஆனால் சில தினங்களில் அவர் குற்றமற்றவராக நீதிமன்ற தீர்மானித்து அவரை விடுதலை செய்தது. 

அதேபோன்று எனது சகோதரர் கைதுசெய்யப்பட்டு விடுவிக்கப்பட்டதாகவும் பொய்யான செய்திகளை வெளியிட்டனர். பாதுகாப்புப் படையும் பொலிஸாரும் இணைந்து ஒருநாள் மன்னார் பிரதேசத்தில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் தம்பி தங்கியிருந்தார். விடுதி சோதனையிடப்பட்டதோடு தம்பியிடமும் தகவல்களைப் பெற்றுள்ளனர். அவ்விடத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனமும் சோதனையிடப்பட்டது. நடந்தது அவ்வளவு தான். 

அடுத்த குற்றச்சாட்டு எனது சகோதரியின் வீட்டை தீவிரவாதிகளுக்கு வாடைக்கு வழங்கப்பட்டிருப்ப தென்பதாகும். எனது சகோதரி அவரது கணவருடன் கடந்த ஐந்து வருடங்களாக கனடாவில் வாழ்கின்றார். எனது சகோதரியின் கணவரது தாய்வீட்டிலுள்ளவர்கள் தந்த வீட்டை வாடகைக்குக் கொடுத்தனர்.

கடந்த பெப்ரவரி மாதத்தில் வாடகைக்கு இருந்தவர்கள் வீட்டை விட்டதன் பின்னர் இணையத்தளத்தில் விளம்பரப்படுத்தி மற்றொருவருக்கு ஒருவருட காலத்துக்கு வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளது. இது பற்றி பின்னரே அறிய வந்தேன். அது எனக்குத் தேவைப்படாத விடயமாகும். என்னை அவமானப்படுத்துவது போதாதென்று இப்போது எனது குடும்பத்தவர்களை அவமானப்படுத்தத் தொடங்கிவிட்டனர்.  

தற்கொலைக் குண்டுதாரிகள் இருவரின் தந்தையான வர்த்தகர் இப்ராஹீமுடன் சகோதரருக்கு தொடர்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இக் குற்றச்சாட்டு அப்பட்டமான பொய்யாகும். எனது அமைச்சுடன் தொடர்புபட்ட விதத்தில் கைத்தொழில் அமைச்சின் கைத்தொழில் தொழில்நுட்ப அபிவிருத்தி அதிகார சபையுடன் இப்ராஹீமுக்கு தொடர்புண்டு. அவர்தான் வர்த்தக சங்கத்தலைராவார். எனது சகோதரருக்கு அவருடன் எந்தவிதமான தொடர்பும் கிடையாது.  

நான் அரசியலுக்கு வந்த காலம் முதல் சகல சந்தர்ப்பங்களிலும் எனது சொத்து விபரங்களை வெளியிட்டுவருகின்றேன். அடுத்து எந்தவிதமான குற்றச்சாட்டு முன்வைக்கப்போகிறார்கள் என எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றேன். எத்தகைய அழுத்தங்கள், நெருக்கடிகள், சவால்களை எதிர்கொள்ள நேரிட்டாலும் நான் சோர்ந்துவிட மாட்டேன். என்மீது எனக்கு நம்பிக்கை இருக்கின்றது. சத்தியத்துக்குத் தலைசாய்ப்பேன் பொய்க்குற்றச்சாட்டுக்களை முற்றாக நிராகரிக்கின்றேன். 

நான் எந்தவொரு பயங்கரவாத, அடிப்படைவாத அமைப்புடனும் தொடர்புபட்டவனல்ல. பயங்கரவாதம், அடிப்படைவாதம் இரண்டையும் நிராகரிப்பவன். தீவிரவாதத்துக்கு எதிரான அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கிவருகின்றேன். அடிப்படைவாதமோ, பயங்கரவாதமோ எந்தக் கோணத்திலிருந்து வந்தாலும் அதனை ஒழித்துக்கட்டுவதற்குப் படையினருக்கு பூரண ஒத்துழைப்பை வழங்குவதில் பின்னிற்கமாட்டேன். 

இலங்கை எனது நாடு, நாம் ஒரு தாய் மக்கள் போன்று இணைத்து வாழ வேண்டும். நாட்டின் பாதுகாப்பு எமது முதற்கடமையாகும் என்பதை உறுதிபடத் தெரிவித்துக் கொள்கின்றேன். 

எம்.ஏ.எம். நிலாம் 

 

Comments