அறிவுக்குப் பணிவு | தினகரன் வாரமஞ்சரி

அறிவுக்குப் பணிவு

அக்பர் அரச சபையில் பல அறிஞர்களும், திறமையானவர்களும் இருந்தனர். இவர்கள் அனைவரையும் விட பீர்பாலிடம் தான் அரசர் அதிக அன்புடன் நடக்கிறார். அவருக்குத்தான் அதிக சலுகைகள் காட்டுகிறார் என்ற எண்ணம் அனைவருக்கும் இருந்தது.  

இந்தச் செய்தி அரசருக்குத் தெரியவந்தது. இந்த பொறாமை எண்ணத்திற்கு முடிவுகட்ட ஓர் சோதனையை நடத்தினார். ஒருநாள் அரசர் பஞ்சணையில் படுத்தபடி கால்நீட்டி படுத்திருந்தார். அவரது பக்கத்தில் அவரின் உடலை விட சிறிய சால்வையை வைத்துக்கொண்டு பீர்பாலின் மேல் கெட்ட எண்ணம் கொண்ட அனைவரையும் தன் அறைக்கு வரவழைத்தார். வந்தவர்களிடம் இந்த சால்வையை எடுத்து என் உடலை முழுவதும் போர்த்த வேண்டும் என்றார். பலரும் முயன்றனர் முடியவில்லை. தலையிலிருந்து போர்த்தினால் கால் தெரிந்தது. காலிலிருந்து போர்த்தினால் தலை தெரிந்தது. இப்படி யாவரும் முயற்சி செய்து பார்த்தனர்.  

அக்பர் சொன்னபடி யாராலும் செய்ய முடியவில்லை. அரசர் பீர்பாலை அழைத்துவரச் சொன்னார். பீர்பால் அரசவைக்கு வந்ததும் "பீர்பால்! இந்தச் சால்வையை எடுத்து என் உடலைப் போர்த்து என்று கூறினார். பீர்பால் சிறிது நேரம் யோசித்தார் என்ன செய்வது என்று சால்வையைப் பார்த்தார். சால்வை சின்னது. அரசர் உடல் சால்வையை விடப் பெரியது. ஆகையால் அரசரின் கால்களைக் கொஞ்சம் மடக்கும்படி கூறினார். அரசர் தன் கால்களை மடக்கிக் கொள்ளவே பீர்பால் அந்த சால்வையைக் கொண்டு அரசரின் உடலைப் போர்த்தினார். இதைக்கண்ட மற்றவர்கள் இந்தச் சிறிய விஷயம் கூட நமக்குத் தெரிய வில்லையே என்று தலைகுனிந்தனர்.  

ஆனாலும் அரசரைப் பார்த்து நாங்களும் கூட இதைச் செய்திருப்போம். ஆனால் தங்கள் கால்களை மடக்கும்படி நாங்கள் எப்படிக் கூறுவது என்று நினைத்தோம் என்றனர். இதற்கு அரசர் அறிவாளிகளும் பக்தர்களும் ஆண்டவனிடமும், அரசனிடமும் எதையும் தயங்காமல் கேட்பார்கள். ஆனால் நீங்கள் அதைச் செய்யவில்லை, கேட்கவும் இல்லை. பீர்பால் ஒருவர்தான் அதைச் செய்ய முடியும் ஆகையால் நான் மதிக்கிறேன் பாராட்டுகிறேன் என்று கூறி முடித்தார் அரசர்.  

நா. தேஜஸ்வி, 
தரம் 07, கொ/பிஸப்ஸ் கல்லூரி, 
கொழும்பு 03.

Comments