முக்கிய வீரர்களின் அசமந்த ஆட்டத்தால் சோபையிழப்பு | தினகரன் வாரமஞ்சரி

முக்கிய வீரர்களின் அசமந்த ஆட்டத்தால் சோபையிழப்பு

12வது ஐ. பி. எல். தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றாலும் கடந்த பருவகாலத்தைப் போல இத் தொடர் பெரிதாகக் களைகட்டவில்லை. அங்கு தேர்தல் நடைபெறுவதும் இதற்கு ஒரு காரணமாயிருக்கலாம். மேலும் இத் தொடரின் சில ஆட்டங்களில் துடுப்பாட்ட வீரர்கள் மந்த கதியில் துடுப்பெடுத்தாடுவதால் சில போட்டிகள் சோபையிழந்துள்ளது. குறிப்பாக அதிரடித் துடுப்பாட்ட வீரர்களான ஸ்மித், கோஹ்லி, ராகுல், பட்லர், வில்லியம்சன், கார்த்திக், ரோஹித் போன்ற வீரர்களின் மெதுவான ஆட்டத்தால் ஐ. பி. எல். ரசிகர்கள் எரிச்சலடைகின்றனர். இத்தொடரில் முக்கியமாக இந்திய தேசிய அணி வீரர்கள் இதுவரை பெரிதாகப் பிரகாசிக்கவில்லை. தலைவர் விராட் கோஹ்லி, ரோஹித் சர்மா, சிகர் தவான், அம்பதி ராய்டு, ரிசப் பண்ட், தினேஸ் கார்த்திக் போன்ற துடுப்பாட்ட வீரர்களும், பும்ரா, மொஹம்மட் சமி, புவனேஸ்குமார், குல்தீப் யாதவ் போன்ற பந்து வீச்சாளர்களும் இன்னும் வழமையான திறமைக்குத் திரும்பவில்லை. உலகக் கிண்ணத் தொடர் நெருங்கிவரும் இவ்வேளையில் இவ்வீரர்களின் இப் பின்னடைவு அவர்களின் மனவலிமையை இழக்கச் செய்யலாம் என கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.  

இத்தொடரில் சர்வதேச வீரர்கள் பந்து வீச்சிலும், துடுப்பாட்டத்திலும் திறமைகாட்டி வருகின்றனர். இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் அவர்களே முன்னிலையிலுள்ளனர். இந்த ஐ. பி. எல். தொடர் அவ்வீரர்களுக்கு அடுத்த மாத இறுதியில் ஆரம்பமாகும் உலகக் கிண்ணத் தொடருக்கான சிறந்த பயிற்சிக்களமாக அமைந்துள்ளது. 

தொடரில் ஒவ்வொரு அணியும் 8போட்டிகள் விளையாடியுள்ள நிலையில் இதுவரை நான்கு சதங்களே குவிக்கப்பட்டுள்ளன. இந்த ஐ. பி. எல். பருவத்தில் முதல் சதத்தை ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியொன்றில் ராஜஸ்தான் வீரர் சஞ்சு சாம்சன் பெற்றார். அதைத் தொடர்ந்து பெங்களூர் அணிக்கெதிரான போட்டியொன்றில் ஹைதராபாத் ஆரம்ப ஜோடியான டேவிட் வோனரும், ஜோனி பேர்ஸ்டோவும் சதம் பெற்றனர். கடந்த 10ம் திகதி மும்மை அணிக்கு எதிராக நடைபெற்ற தொடரின் 23வது போட்டியில் பஞ்சாப் வீரர் கே. எல். ராகுல் தொடரின் 4வது சதத்தைப் பெற்றார். 

இதுவரை நடைபெற்ற போட்டிகளின் அடிப்படையில் இந்திய அணித் தலைவர் விராட் கோஹ்லி தலைமையிலான பெங்களூர் ரோயல் செலஞ்சஸ் அணி எதிர்கொண்ட 8போட்டிகளிலும் 7இல் தோல்வியடைந்துள்ளன. சிறந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட அவ்வணி கொல்கொத்தாவுடனான ஒரு போட்டியில் 205ஓட்டங்களைப் பெற்றிருந்தும் தோல்வியுற்றமை இங்கு குறிப்பிடத்தக்கது. அவ்வணி இன்னும் 6போட்டிகளிலேயே ஆடவுள்ளன. எனவே அடுத்த சுற்றுக்கான வாய்ப்பு அவ்வணிக்கு கடினமாகவேயுள்ளது. இவ்வணி இப்பருவ காலத்தில் தொடர்ச்சியாக 6போட்டிகளில் தோல்வியுற்றது. ஐ. பி. எல். வரலாற்றில் ஒரு அணி தொடர்ச்சியாக ஆறு போட்டிகளில் தோல்வியுற்றது இது இரண்டாவது தடவையாகும். இதற்கு முன் 2013ம் ஆண்டு டில்லி அணி தொடர்ச்சியாக 6போட்டிகளில் தோல்வியுற்றது. டெக்கான் சார்ஜஸ் 2012ம் ஆண்டும் மும்மை அணி 2014ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக 5போட்டிகளில் தோல்வியுற்று இவ்வரிசையில் இரண்டாவது இடத்திலுள்ளது. மும்மை அணி 2015ஆம் ஆண்டும் தொடர்ச்சியாக 4போட்டிகளில் தோல்வியைத் தழுவியிருந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.  

வழமை போல் இம்முறையும் அனுபவ வீரர்களை பெரிதும் நம்பி களமிறங்கிய சென்னை அணி ஆரம்பம் முதலே வெற்றிகளைக் குவித்து 14புள்ளிகளுடன் முதலிடத்தைப்பெற்று அடுத்த சுற்றுக்கான தனது எதிர்பார்ப்பை அதிகரித்துக்கொண்டுள்ளது. அவ்வணி இதுவரை இரண்டு போட்டிகளில் மட்டுமே தோல்வியடைந்துள்ளன. அதற்கு அடுத்த இடத்திலுள்ள மும்பை இந்தியன் 9போட்டிகளில் 6இல் வெற்றி பெற்று 12புள்ளிகளைப் பெற்றுள்ளது. டெல்லி கெபிட்டல், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் 10புள்ளிகளைப் பெற்று அடுத்தடுத்த இடங்களிலுமுள்ளன.  

இம்முறை கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி சகலதுறை வீரர் அன்ட்ரு ரஸலின் அதிரடியின் மூலம் மற்றைய அணிகளுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றது. அவ்வணி தோல்வியுறும் என்ற நிலையில் இருந்த பல போட்டிகளில் ரஸலின் அதிரடி மூலம் வெற்றி பெற்றுள்ளது. இதுவரை ரஸல் கடைநிலை ஆட்டக்காரராக வந்து அணியின் வெற்றிக்கு பெரிதும் பங்காற்றியுள்ளார். அவர் 31சிக்ஸர்களை விளாசி இதுவரை சிக்ஸர் விளாசியோர் பட்டியலில் முதலிடத்திலுள்ளார்.  

தொடரின் அதிக ஓட்டங்கள் பெறும் வீரர்களுக்கு அணிவிக்கப்படும் இளம் சிவப்பு நிறத் தொப்பி கடந்த ஒரு மாத காலமாக ஹைதராபத் அணி ஆரம்ப வீரர் டேவிட் வோனர் வசமேயுள்ளது. இவர் 9போட்டிகளில் ஒரு சதம் 5அரைச் சதங்கள் உட்பட 450ஓட்டங்களைப் பெற்றுள்ளார். பஞ்சாப் வீரர்களான கே. எல். ராகுல், கிறிஸ்கெயில், ராஜஸ்தான் வீரர் ஜோஸ் பட்லர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

பந்து வீச்சாளர்கள் வரிசையில் இதுவரை டெல்லி கெப்பிட்டல் அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் தென்னாபிரிக்க அணியின் வேகப்பந்து வீச்சாளர் காகிஸோ ரபாடா 19விக்கெட்டுகளைக் கைப்பற்றி முதலிடத்திலுள்ளார். பெங்களூர் அணியின் சுழற்பந்து வீச்சாளர் சகால், சென்னை அணியின் இம்ரான் தாஹிர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர். 

கடந்த 6ம் திகதி நடைபெற்ற மும்பை- ஹைதராபாத் அணிகளுக்கிடையிலான தொடரின் 19வது போட்டியில் ஐ. பி. எல். வரலாற்றில் சிறந்த பந்து வீச்சை தனது ஐ. பி. எல். தொடரின் கன்னிப் போட்டியிலேயே மேற்கிந்திய வேகப்பந்து வீச்சாளர் அல்சாரி ஜோசப் கைப்பற்றியுள்ளார். இவர் அப்போட்டியில் 12ஓட்டங்களுக்கு 6விக்கெட்டுகளைக் கைபற்றியிருந்தார். இதற்கு முன் பாகிஸ்தான் வீரர் சொஹைல் தன்வீர் 2008ஆம் ஆண்டு சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்கெதிராக 14ஓட்டங்களுக்கு 6விக்கெட்களைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது.  

12வது ஐ. பி. எல். தொடரில் பஞ்சாப் அணியை பிரதிநிதித்துவப்படுத்தும் இங்கிலாந்தின் இளம் வேகப்பந்து வீச்சாளரான சாம் கரன் டெல்லி அணிக்கு எதிரான போட்டியொன்றில் இந்த பருவகாலத்தில் முதல் ஹெட்ரிக் சாதனையைப் படைத்துள்ளார். இம்முறை ஐ. பி. எல். இல் விளையாடும் ஒரே இலங்கை வீரரான வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிக்க சிறப்பாகச் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

எம். எஸ். எம். ஹில்மி

Comments