தமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம் | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்ப் பத்திரிகைத்துறையில் சாதனை படைத்த எஸ்.டி. சிவநாயகம்

இலங்கை தமிழ் பத்திரிகைத் துறையில் தமக்கு ஒப்பாரும் மிக்காரு மற்றவராக இருந்து, 50ஆண்டுகள் பணியாற்றிய இதழியல் கலாமேதை, எஸ்.டி. சிவநாயகம் அமர்த்துவம் எய்தி தற்போது 19ஆண்டுகள் நிறைவுறுகின்றன. அன்னாரின் சிரார்த்த தினம் நாளை 22ல் இடம்பெறுகிறது.  

முதுபெரும் பத்திரிகையாளரான சிவநாயகம் 1948ஆம் ஆண்டின் முற்பகுதியில், தினகரன் பத்திரிகை மூலம் தனது பத்திரிகை பணியை தேசிய ரீதியில் ஆரம்பிக்கும் வாய்ப்பைப் பெற்றார். பின்னர் ‘சுதந்திரன்’ வார இதழிலும் ‘வீரகேசரி’ தேசியத் தினசரியிலும் இதழாசிரியராகப் பணியாற்றியிருந்தார்.  

பிற்காலத்தில் தினபதி எனும் நாளிதழையும் சிந்தாமணி எனும் வார இதழையும் புதிதாக உருவாக்கி. அவற்றின் பிரதம இதழாசிரியராக இறுதி வரை (அதாவது, அந்தப் பத்திரிகை ஸ்தாபனம் மூடப்பட்ட காலம் வரை) பணியாற்றினார்.  

‘தினபதி’ மற்றும் ‘சிந்தாமணி’ பத்திரிகைகளை வெற்றிகரமாக நடாத்தி சாதனை படைத்தமைக்காக பிரதம இதழாசிரியராக விளங்கிய சிவநாயகத்தை, அந்தப் பத்திரிகை நிறுவனம் (சுயாதீன பத்திரிகை சமாஜம்) தனது பணிப்பாளர்களில் ஒருவராக நியமித்து கௌரவப்படுத்தியது.  

இலங்கையில் தமிழ்ப் பத்திரிகைத் துறையைப் பொறுத்த வரையில், இதழாசிரியர் ஒருவருக்கு கிடைக்கப்பெற்ற இக்கௌரவம், வரலாற்றில் பதிவு செய்யப்படவேண்டிய ஓர் அம்சமாகும்.  

ஆசிரியர் சிவநாயகம் ஆற்றொழுக்கான வசனநடையில் கட்டுரைகளை எழுதியவர். எவருக்கும் புரிகின்ற மாதிரி எளிமையாகவும், நகைச்சுவை மிக்கதாகவும் கட்டுரைகளை எழுதிப் புகழ் பெற்றவர். அதே வேளையில், எடுத்துக்கொண்ட விடயத்தை ஆணித்தரமாகச் சொல்லுகின்ற நேர்த்தியும் அவரது கட்டுரைகளில் காணப்பட்டன.  

1976ஆம் ஆண்டில் ஆசிரியர் சிவநாயகம் ‘மாணிக்கம்’ எனும் வார இதழில் நிர்வாக இதழாசிரியராகப் பணியாற்றிய வேளை, அவரின் தலைமையில் ஒரு செய்தி நிருபராகக் கடமையாற்றும் வாய்ப்பு, இந்தக் கட்டுரையாளனாகிய எனக்கு முதன்முதலில் கிடைத்தது.  

அத்துடன், ஆசிரியர் சிவநாயகத்தின் பொறுப்பில் வெளிவந்த தினபதி, சிந்தாமணி முதலான பத்திரிகைகளிலும் மற்றும் ‘சூடாமணி’ பத்திரிகையிலுமாக ஏறத்தாழ 14ஆண்டுகள் பணிபுரியும் சந்தர்ப்பமும் அதிஷ்டவசமாக எனக்குக் கிடைத்தது.   இதன் பின்னணியில், ஆசிரியர் சிவநாயகத்தின் அறிவாற்றலையும், ஆளுமையினையும் நேரடியாக அனுபவ ரீதியாக அறிந்து கொள்ளும் வாய்ப்பைப் பெற்ற அநேகமானவர்களில் நானும் ஒருவன்.  

பத்திரிகைத்துறையில் ஜாம்பவானாகத் திகழ்ந்த எஸ்.டி சிவநாயகம், சத்யசாயி பாபாவின் ஆன்மிக ஸ்தாபனத்தின் ஊடாக, சமய சமூகப் பணிகளிலும் தன்னை முழுமையாக ஈடுபடுத்தி வந்தவராவார். கொழும்பு சாயி பாபா மத்திய நிலையம் உருவாக்கப்பட்ட போது, அதன் முதலாவது தலைவராக ஏகமனதாகத் தெரிவாகிய திரு. சிவநாயகம், தொடர்ந்து 25ஆண்டுகள் அதே சாயி ஸ்தாபனத்தின் தலைவராக ஏகமானதாக தெரிவாகி வந்தார்.  

1979ஆம் ஆண்டில் அப்போதைய நீதி அமைச்சராகவும், மட்டக்களப்பு மாவட்ட – கல்குடா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் விளங்கிய கே. டப்ளியூ. தேவநாயகத்தின் உதவியுடன் நாடாளுமன்ற சட்ட முறைமைகளுக்கமைவாக, சத்ய சாயி பாபா (இலங்கை) நம்பிக்கையகம் எனும் சாயி அறக்கட்டளையகத்தையும் ஆசிரியர் சிவநாயகம் உருவாக்கினார். இதுவே, இலங்கையில் முதலாவதாக ஸ்தாபிக்கப்பட்ட ‘சாயி அறக்கட்டளையகம்’ என்பது குறிப்பிடத்தக்கது.  

சிவா இராஜஜோதி  

Comments