சோழியன் குடுமி சும்மா ஆடுமா? | தினகரன் வாரமஞ்சரி

சோழியன் குடுமி சும்மா ஆடுமா?

ரணில் விக்கிரமசிங்கவையும் அவருடைய ஐ.தே.க அரசாங்கத்தையும் பாதுகாக்கிறது மேற்குலகம் என்பது வெளிப்படையான உண்மை. உள்நாட்டு அரசியல் நெருக்கடிகளின்போதும் சரி, யுத்தக்குற்றம் தொடர்பான சிக்கல்களில் முக்கியத்துவப்பட்டிருக்கும் ஜெனிவா போன்ற வெளிப்பரப்பிலும் சரி மேற்குலகத்தின் அணுகுமுறைகளும் முயற்சிகளும் ஐ.தே.க அரசாங்கத்தைப் பாதுகாக்கும் விதமாகவே உள்ளன. 

இதனால்தான் கடந்த ஒக்ரோபரில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட ஆட்சிக்கவிழ்ப்பை “ஜனநாயகத்தைப் பாதுகாக்க வேண்டும்” என்ற பேரில் மேற்குலகம் முன்னின்று முறியடித்தது. இதுவே பிறகு ஜெனிவாவில் யுத்த விவகாரங்கள் குறித்த விடயத்திலும் இலங்கைக்கு (ஐ.தே.க அரசாங்கத்துக்கு) மேலும் இரண்டாண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கக் காரணமானது. இதுபோல இன்னும் பல பாதுகாப்பு ஏற்பாடுகளும் கவசங்களும் ரணிலுக்கும் ஐ.தே.கவுக்கும் உண்டு. 

ரணில் விக்கிரமசிங்கவையும் ஐ.தே.க அரசாங்கத்தையும் பாதுகாக்க வேண்டிய அவசியம் மேற்குலகத்துக்கு ஏன் உள்ளது? என்று அப்பாவித்தனமாக யாரும் கேட்கலாம். 

ஐ.தே.கவினுடைய பொருளாதாரக் கொள்கைகளும் உபாயங்களும் நிலைப்பாடும் அரசியல் தொடர்புகளும் மேற்குச் சாய்வாக இருப்பதே இதற்குக் காரணம். அதாவது மேற்கின் அரசியல், பொருளாதார, பாதுகாப்பு ஏற்பாடுகள், நலன்களுக்கு இசைவாக, இணக்கமாக இருப்பதேயாகும். சுருக்கமாகச் சொன்னால் நாட்டுக்கும் மக்களுக்கும் விசுவாசமாக இருப்பதை விடவும் மேற்கின் நலன்களுக்கு விசுவாசமாக இருப்பதாகும். மேற்கின் நலன்களுக்காக எதையும் எவ்வளவு தூரத்துக்கும் விட்டுக்கொடுக்கும் இயல்பு இது. ஐ.தே.கவினுடைய நீண்ட அரசியற்பாரம்பரியம் இதுவாகும். 

இதனால் உள்நாட்டில் ஏற்படும் அரசியல் நெருக்கடிகளைத் தணித்துக் கொள்ளவும் தனது நலன்களைப் பேணிக் கொள்வதற்கும் ஐ.தே.கவுக்கு வசதி. இதற்கு அண்மைய உதாரணங்கள் இரண்டைக் கூறலாம். 

முன்பே கூறியிருப்பதைப்போல, 2018ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பிலிருந்து தப்பிப்பிழைப்பதற்கு கிடைத்த அனுகூலம். 2019மார்ச்சில் யுத்தக்குற்றங்கள், பொறுப்புக் கூறுதல்கள் தொடர்பான நெருக்கடியிலிருந்து தப்பித்துக் கொள்வதற்கு மேலும் இரண்டாண்டுகள் கால அவகாசத்தை ஜெனிவா வழங்கியமை.  இவற்றைக் குறித்து மேலோட்டமாக நோக்குவோர் மேற்குலகத்துடன் ஐ.தே.கவுக்கிருக்கும் உறவுகளினால்தான் இலங்கை பாதுகாக்கப்பட்டது என்று கூறுவர். அப்படித்தான் கூறியும் வருகிறார்கள். இதையிட்டு அவர்களுக்கு மகிழ்ச்சி. போதாக்குறைக்கு மேற்கைத் தமது நெருங்கிய சகாவாக, ஆபத்பாந்தராக உணர்கிறார்கள். 

இதற்கு ஒக்ரோபர் ஆட்சிக்கவிழ்ப்பை அவர்கள் “இலங்கையின் மிக மோசமான ஜனநாயக நெருக்கடிக்காலம் என்றும் அதை மேற்கே முறியடிப்புச் செய்தது” என்றும் வியாக்கியானம் செய்கின்றனர். இதில் ஓரளவுக்கு ஏற்றுக்கொள்ளத்தக்க நியாயமுண்டு. ஆனால், இதனுடைய மறுபக்கத்தை யாரும் ஆராய முற்படுவதில்லை. 

நீதிமன்றத்தீர்ப்புச் சொல்வதைப்போல இது ஜனாதிபதி தரப்பின் தவறான அணுகுமுறையினால் உருவாகிய பிழையான நடவடிக்கையே. ஆனால், அதற்காக ஒரு தவறைச் சொல்லி இன்னொரு தவறை நியாயப்படுத்திவிட முடியாது. 

அது நாட்டின் இறைமை தொடக்கம் உள்நாட்டின் பொருளாதாரம், மக்களுடைய எதிர்காலம் அனைத்தையும் பாதிப்பதாக அமைந்து விடும். ஜனநாயகத்தைப் பாதுகாப்பது என்பது நாட்டில் உள்ள மக்கள் ஒவ்வொருவருக்குமுரிய கடமை. கட்சிகள், அரசியல் தலைவர்கள், அமைப்புகள், ஊடகங்கள், ஊடகவியலாளர்கள், புத்திஜீவிகள், செயற்பாட்டு நிறுவனங்கள் என அனைவருக்குமான பொறுப்பு. அதை அவர்கள் முன்வந்து செய்ய வேண்டும். 

இதற்கு வெளிச்சக்திகளின் தலையீடுதான் வேண்டும் என்றில்லை. அப்படி வெளிச்சக்திகளின் தலையீடுதான் வேணும் எனவும் அதை அனுமதிப்பதுமாக இருந்தால், அந்த வெளிச்சக்திகள் ஒன்றும் புண்ணியத்துக்காக வந்து சேவையாற்றாது.

அவை இந்த வாய்ப்பைத் தமக்கு, தமது நலன்களுக்குச் சாதமாகவே பயன்படுத்தும். வேறொன்றுக்குமாக அல்ல, தமது வல்லாதிக்கத்துக்காகவே. 

ஏறக்குறைய இது வானத்தில் பறக்கிற பிசாசுகளை ஏணி வைத்து இறக்குவதைப்போலிருக்கும்.  ஏனெனில் இந்த வெளிச்சக்திகள் என்பவை ஒன்றும் லேசுப்பட்ட சக்திகளோ நாடுகளோ அல்ல. வறிய, நேர்மையான நாடுகளுமல்ல. அவை உலகை ஆளவும் பங்கீடு செய்யவும் முற்படும் வல்லாதிக்கச் சக்திகள், வல்லரசுகள்.  அவற்றுக்கு பலவீனப்படும் நாடுகள் தேவைப்படுகின்றன. அவற்றைச் சுரண்டுவதற்கும் அவற்றைத் தமது அரசியல், பொருளாதார, பிராந்தியப் பாதுகாப்பு போன்ற காரணங்களுக்குமாக.

எல்லாவற்றுக்கும் மேலாக அவற்றை அடிமைப்படுத்தி வைத்திருப்பதற்காக. இந்த அடிமைப்படுத்தல் என்பது அரசியல் மேலாதிக்கத்துக்கும் வல்லாதிக்க உளவியலுக்கும் அவசியமானது. 

இதில் உள்ள வேடிக்கை என்னவென்றால், இவையே ஜனநாயகத்தைப் பற்றியும் உரிமைகளைப் பற்றியும் ஏகமாகப்பிரலாபிக்கின்றன. ஆனால், உலகத்தைத் தமது கண்காணிப்பின் கீழும் கட்டுப்பாட்டின் கீழும் வைத்திருப்பதற்கும் ஜனநாயகத்துக்கும் உள்ள தொடர்பு என்ன என்று இவை விளக்குவதில்லை.

நம்மிற் பலரும் இதைக் குறித்துச் சிந்திப்பதுமில்லை. 

இரண்டாவது உதாரணம், ஜெனீவாவில் இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டாண்டுகள் கால அவகாசம் என்பதாகும். 

இதை அரசாங்கம் மட்டுமல்ல, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு மற்றும் சிங்களத்தரப்பின் பெரும்பாலானவர்களும் வரவேற்கின்றனர். குறிப்பாக இலங்கை அரசின் மீதான நெருக்கடி தணிக்கப்பட்டுள்ளது. அழுத்தங்கள் விலக்கப்பட்டுள்ளன என்ற சிங்களப் புத்திஜீவிகள் எல்லாம் மகிழ்ச்சியடைகிறார்கள்.  இந்த விட்டுக்கொடுப்புக்குப் பின்னால் உள்ள மேற்குலகின் அபாயச் சுழிகளைப் பற்றி இவர்கள் அறிய முற்படுவதில்லை. நமக்கு மூக்குப்போனாலும் பரவாயில்லை. எதிராளிக்குச் சகுனம் பிழைக்க வேண்டும் என்ற அடிப்படையில் யுத்தக் குற்ற விசாரணைகள், பொறுப்புக்கூறுதல்கள் எல்லாம் தமிழர்களிடம் தோற்றுப்போதல், மன்னிப்புக் கோருதல் என்பதாகி விடும் என்ற தவறான சிந்தனையின் வெளிப்பாடே இதுவாகும். 

ஆனால், சோழியன் குடும்பி சும்மா ஆடாது என்பதை இவர்கள் கவனிப்பதில்லை. மேற்குலகம் இந்த விட்டுக்கொடுப்பைச் செய்து விட்டு தொண்டையில் கயிற்றைப்போட்டிறுக்கிக் காலடியில் விழுத்தப்போகிறது. இதுதான் அதனுடைய வரலாற்று ரீதியான உத்தி. இந்த உத்தியில் எத்தனையோ குதிரைகள் சறுக்கி விழுந்திருக்கின்றன என்பதை இவர்கள் அறியவில்லை.  

இங்கும் ஒரு தவறினை மறைப்பதற்காக அல்லது அதிலிருந்து தப்பித்துக் கொள்வதற்காக இன்னொரு மாபெரும் பொறிக்குள் – தவறுக்குள் – விழுந்து விடுகிறோம். 

ஆகவே இலங்கைத்தீவின் நிலைமை என்பது உள்நாட்டின் நெருக்கடிகளுக்கு விசுவாசமாகத்தீர்வு காண்பதற்குப் பதிலாக, உள்நாட்டில் கட்டிறுக்கத்தை உருவாக்குவதற்குப் பதிலாக வெளிச்சக்திகளுக்கு வாய்ப்பான அரசியலையே ஒவ்வொரு தரப்பும் முன்னெடுக்கின்றன. மக்களுக்கு நேர்மையாக இருப்பதற்குப் பதிலாக வெளி எஜமானன்களுக்கு விசுவாசமாக இருக்க விரும்புதல். 

இதற்கு இன்னொரு உதாரணத்தையும் சொல்ல வேண்டும். சிங்கள மக்களோடும் இலங்கை அரசோடும் பேசுவதையும் விட வெளிச்சக்திகளோடு பேசுவதையே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் விரும்புகின்றமை. 

இதுவும் ஒரு தவறுக்காக இன்னொரு தவறைச் செய்வதாகும். சிங்கள வெறுப்பும் சிங்களத்தரப்பின் மீதான நம்பிக்கையீனமும் வெளித்தரப்பிடம் சரணடைய வைக்கிறது. 

இதற்கு வரலாற்று ரீதியான கசப்பான அனுபவங்களை தமிழ்த்தரப்பு சொல்லலாம். ஆனால், இந்த வெளித்தரப்புகள் இப்போதும் சரி, பிறகும் சரி தமிழ் மக்களுக்கான நீதி, நியாயத்தை, தேவைகளை, உரிமைகளை என்றாவது பெற்றுத் தரும் என்பதற்கு என்ன உத்தரவாதம்? 

“அரசியல் என்பது நலன்களின் அடிப்படையிலானது. அரசியலில் லாபநட்டக்கணக்குகள்தான் பெறுமானங்களே தவிர, அறமும் நீதி, நியாயமும் கிடையாது. இது பூகோள நலன்கள் சம்மந்தப்பட்ட அரசியல் அணுகுமுறைகளின் காலம். அரசுடைய தரப்புகளின் நலன்களுக்கே வெளியுலகமும் ஆதிக்கச் சக்திகளும் முன்னுரிமை அளிக்கும்.

அரசற்ற தரப்புகளுக்கு அந்த அனுகூலங்கள் மிகக் குறைவு” என்றெல்லாம் சொல்வோர் கூட இந்த தருக்க நியாயங்களுக்கும் உண்மைக்கும் மாறாக, மறுவளமாக நின்று கொண்டு, மலையைக் குடைந்து மறுப்பக்கம் செல்லவே முற்படுகிறார்கள். 

ஆகவே இத்தகைய அரசியல் இடைவெளிகளும் பலவீனங்களும் வெளியில் உள்ள ஆதிக்கச்சக்திகளுக்குத் தாராளமாகக் கதவுகளைத் திறந்து விடுகின்றன. புவிசார் அரசியல் முக்கியத்துவத்தில் இலங்கைத்தீவின் அமைவிடம் பிராந்தியப் போட்டிகளையும் சர்வதேசப் போட்டிகளையும் தீவிரநிலைக்குள்ளாக்கியுள்ளன.

இந்தப் போட்டியில் தமக்கு வாய்ப்பான சூழலை இலங்கையின் உள் – வெளிச் சூழலில் உருவாக்குவதற்கு ஒவ்வொரு தரப்பும் முயற்சிக்கும். 

இதைச் சிங்களத் தரப்புப் புரிந்து கொண்டு குறிப்பிடத்தக்களவுக்கு வெற்றிகரமாகத் தமது ராஜதந்திர நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தன. ஆனால், அது ஒரு எல்லையுடன் வரையறுக்கப்பட்டுள்ளது என்பதையே அண்மைக்கால நிகழ்வுகள் காண்பிக்கின்றன.  முன்னர் இந்தியா, சீனா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் மேற்குலக நாடுகளை எல்லாம் ஒரு சமநிலையில் வைத்துக் கொண்டே இலங்கை செயற்பட்டது. சிலவேளை மெல்லிய சாய்வு கொண்டிருந்ததும் உண்டு. அப்படியான சந்தர்ப்பங்களில் இலங்கைக்கு நெருக்கடிகள், அழுத்தங்கள் உண்டாகியதும் உண்டு. 

1970களின் பிற்கூறில் (ஜே.ஆர் ஆட்சிக்காலத்தில்) மேற்கு மயப்பட்டிருந்த இலங்கையை வழிக்குக் கொண்டு வருவதற்காக இலங்கையின் உள்நாட்டுப்பிரச்சினையில் நேரடித்தலையீட்டைச் செய்து தனது பிடிக்குள் கொண்டு வர முயற்சித்தது இந்தியா. சீனாவின் எச்சரிக்கை நடவடிக்கைகளும் முன்னாயத்தங்களும் ஏறக்குறைய இதை ஒத்ததாகவே இருந்தன. 

ஆகவே இந்த வரலாற்று அனுபவங்கள் சொல்லும் உண்மை என்னவெனில் இலங்கையின் உள் விவகாரங்கள் அழகிய முறையில், ஜனநாயக மாண்புடன் தீர்த்து வைக்கப்படுவது அவசியம். அப்படியில்லை என்றால், அது வெளிச்சக்திகளுக்கான கதவு திறப்பாகவும் அவர்களுடைய காலடியில் மண்டியிடுவதுமாகவே இருக்கும். 

இதையிட்டுக் கட்சிகளும் தலைவர்களும் சிந்திக்க மாட்டாது என்பது நமக்கு நன்கு தெரியும். ஆகவே மக்களாகிய நாம்தான் இது குறித்துச் சிந்திக்க வேண்டும். மாற்று வழி முறைகளைக் கண்டறிய வேண்டும்.   

கருணாகரன்

Comments