யேசுநாதரின் மானிட அன்பை மேம்படுத்தும் உயிர்த்த ஞாயிறு | தினகரன் வாரமஞ்சரி

யேசுநாதரின் மானிட அன்பை மேம்படுத்தும் உயிர்த்த ஞாயிறு

மரணத்தின் விளிம்பில் சிலுவையில் அறையப்பட்ட நிலையிலும் மக்களுக்காக இறைவனிடம் பிரார்த்தித்த இயேசு நாதரின் மானிட அன்பை மேம்படுத்திக்காட்டும் உன்னதத்தை உயிர்த்தெழுந்த ஞாயிறு போதிப்பதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க விடுத்திருக்கும் உயிர்த்தெழுந்த ஞாயிறு செய்தியில் தெரிவித்திருக்கின்றார்.  

அன்பு, இரக்கம், இரண்டும் கலந்த வாழ்க்கையின் அர்த்தத்தை போதிப்பதாகவே உயிர்த்தெழுந்த ஞாயிறு வெளிப்படுத்துவதாகவும் பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார். 

தமது செய்தியில் பிரதமர் மேலும் தெரிவித்திருப்பதாவது: இன்று இயேசு நாதரின் நாற்பது நாள் தவக்காலத்தின் பின்னர் மரணத்தை வென்று உயிர்த்தெழுந்த நாளாகவே காணப்படுகின்றது. எமது அனைத்து வாழ்க்கை சவால்களினதும் போராட்டங்களினதும் இறுதி எதிர்பார்ப்பு என்னவென்பதை இந்த உயிர்த்தெழுந்த ஞாயிறு பாடம் புகட்டிக் கொண்டிருக்கின்றது.

தனிநபர்களாகவும் நாடு என்ற அடிப்படையிலும் சவால்களை எதிர்கொள்ளும்போது இருண்ட வானில் வெள்ளித்தாரகை மின்னுவது போன்று இயேசுநாதரின் வாழ்க்கை எமக்கு காட்டிநிற்கின்றது. சவால்களை வெற்றிகொண்டு பொது நலன்களுக்காக எம்மை பாத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். 

இருளிலிருந்து வெளிச்சத்தை நோக்கிப் பயணிப்பது எப்படியென்பதை இயேசு பிரானின் வழிகாட்டல்கள் காட்டிநிற்கின்றது.  

அவர் காட்டிய பாதை புதிய வாழ்க்கைப் பயணத்துக்கான வழித்தடங்களாகும். அதனைப் புரிந்து கொள்ளமுடியாத அன்றைய மக்கள் சமூகம் அவர் மீது தொடுத்த அட்டூழியங்கள் அன்னாரை சிலுவையில் அறையும் வரை நீண்டு சென்றது. அத்தருணத்தில் கூட அந்த மக்களுக்காக பாவமன்னிப்பையே கோரி நின்றார். மானுட சமூகத்தின் மீதான அன்பு நேசம் என்பவற்றையே இது காட்டிநிற்கின்றது.  

இத்தகைய பெறுமதி மிக்க வழிகாட்டல்கள் மூலம் சமூக ஒருமைப்பாட்டுக்காகவும், நல்லிணக்கத்துக்காவும், விமோசனத்துக்காகவும் எம்மை இணைத்துக் கொள்வோம். எமது பிரார்த்தனை கூட அதுவாகவே அமையட்டும் என்றும் பிரதமர் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.   

Comments