முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைதாகி பிணையில் விடுதலை | தினகரன் வாரமஞ்சரி

முல்லைத்தீவு ஊடகவியலாளர் கைதாகி பிணையில் விடுதலை

முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் சண்முகம் தவசீலன் முல்லைத்தீவு பொலிஸாரால் கைது செய்யப்பட்ட நிலையில் நீதிமன்ற உத்தரவுக்கமைய பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். முல்லைத்தீவு கோத்தபாய கடற்படை முகாமை சேர்ந்த கடற்படை அதிகாரி ஒருவர் மேற்கொண்ட முறைப்பாட்டுக்கமையவே இந்த ஊடகவியலாளர் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். 

கடந்த 07.04.2019அன்று வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திலிருந்து வட்டுவாகல் பாலம் வரை கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை நடத்தினர். இதன்போது செல்வபுரம் பஸ் தரிப்பு நிலையத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களையும் ஊடகவியலாளர்களையும் இனம் தெரியாத நபர் ஒருவர் அச்சுறுத்தல் விடுத்ததோடு தனது கைபேசியில் படம்பிடித்துள்ளார். 

இதன்போது அந்நபரை ஆர்ப்பாட்டகாரர்கள் அடையாளப்படுத்த முற்பட்டபோது ஊடகவியலாளாரான சண்முகம் தவசீலன் தலையிட்டு அந்நபர் யார்? என்று வினவியபோது, அதற்கு அவர் யாரெனக் கூற மறுத்து அந்த இடத்தை விட்டுத் தப்பி ஓடினார்.

இதன் போது ஆர்ப்பாட்டகாரர்களால் பிடிக்கப்பட்டு மீண்டும் விசாரித்த போது தான் கடற்படை அதிகாரி எனத் தெரிவித்தார். 

இதனைத் தொடர்ந்து முல்லைத்தீவு பொலிஸாரை சம்பவ இடத்திற்கு வருமாறு அழைத்தபோது அந்த இடத்திற்கு வர தாமதமான நிலையில், அந் நபரை வட்டுவாகல் பகுதியிலமைந்துள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு அழைத்துச் சென்று அவர் கடற்படையைச் சேர்ந்தவரா? என அடையாளப்படுத்தியபோது கடற்படையினர் அவர் தங்களுடைய நபர் எனத் தெரிவித்தனர். 

தொடர்ந்து அந்நபரை அங்கு வருகை தந்த பொலிஸாரிடம் ஊடகவியலாளர் ஒப்படைத்திருந்தார். இந்நிலையிலேயே கடற்படை அதிகாரி முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் இந்த ஊடகவியலாளருக்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்திருந்தார். 

தம்மை ஊடகவியலாளர் தாக்கி காயம் ஏற்படுத்தியதாக கடற்படை அதிகாரி தனது முறைப்பாட்டில் குறிப்பிட்டிருந்தார். இதற்கமைய இச் சம்பவம் தொடர்பில் 18.04.2019பொலிஸ் நிலையத்திற்கு ஊடகவியலாளர் விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார். எனினும், நேற்றைய தினம் (20) ஊடகவியலாளர் பொலிஸ் நிலையத்திற்குச் சென்றிருந்தார். 

சுமார் மூன்று மணி நேரம் விசாரணைகளுக்குப் பின்னர் ஊடகவியலாளரை பொலிஸார் கைது செய்து முல்லைத்தீவு மாவட்ட பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியிருந்தனர். 

இதன்போது ஊடகவியலாளரை ஒரு இலட்சம் ரூபா சரீரப் பிணையில் செல்லவும், இவ் வழக்கை இம் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கவும் முல்லைத்தீவு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிவான் ரி.பரஞ்சோதி உத்தரவிட்டார்.

தேவராசா விரூஷன் 

Comments