தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய முடிவுகள் | தினகரன் வாரமஞ்சரி

தமிழரசுக் கட்சி மாநாட்டுக்கு பின்னர் அரசியல் தீர்வு தொடர்பில் முக்கிய முடிவுகள்

தமிழரசுக் கட்சியின் மாநாட்டுக்குப் பின்னர் அரசியல் தீர்வு மற்றும் ஜெனீவா தீர்மானத்தை நடைமுறைப்படுத்தாமை உள்ளிட்ட விடயங்களுக்குத் தமிழரசுக் கட்சி முக்கிய முடிவு எடுக்கும் என அக்கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.  

வவுனியாவில் நேற்று நடைபெற்ற தமிழரசுக் கட்சியின் இளைஞர் அணி மாநாடு மற்றும் நிர்வாகத் தெரிவு என்பவற்றின் பின் நடைபெற்ற ஊடகச் சந்திப்பிலேயே இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

எதிர்வரும் 28ஆம் திகதி தமிழரசுக் கட்சியின் மாநாடு யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது.

அதனையொட்டி தமிழரசுக் கட்சியின் இளைஞர் மாநாடும் அதன் நிர்வாகத் தெரிவும் நேற்று நடைபெற்றது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் இருந்து இளைஞர், யுவதிகள் உள்வாங்கப்பட்டு அதன் நிர்வாக கட்டமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

அவர்கள் நடைபெறவுள்ள எமது மாநாடு தொடர்பாக கவனம் செலுத்தி தமது கருத்துக்களையும் மாநாட்டில் சமர்ப்பிப்பர்.

ஜெனீவா தீர்மானத்தில் அரசாங்கம் இணை அனுசரணை வழங்கி ஏற்றுக் கொண்ட விடயங்களை ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் கூட நடைமுறைப்படுத்துவதில் சிக்கல்கள் உள்ளதாகக் கூறி அதனை நடைமுறைப்படுத்தவில்லை.

இந்நிலையில், அதில் இணக்கம் காணப்பட்ட விடயங்களை நடைமுறைப்படுத்தாமை குறித்து மாநாட்டில் கவனம் செலுத்தப்படும்.  

அத்துடன், தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, புதிய அரசியலமைப்பு மற்றும் தற்போதைய அரசியல் நிலை தொடர்பாக ஆராயப்பட்டு முக்கிய தீர்மானங்கள் எடுக்கப்படும்.

அந்த தீர்மானத்திற்கு அமைவாக சர்வதேச இராஜதந்திரிகளுடன் இலங்கை தமிழரசுக் கட்சி பேசுவதுடன், ஏனைய தமிழ் கட்சிகளுடனும் பேசி அடுத்த கட்ட நகர்வுகளை முன்னெடுக்கும் எனத் தெரிவித்தார்.

தலைகீழாக ஏற்றப்பட்ட கட்சிக்கொடி

இதேவேளை இலங்கை தமிழரசுக் கட்சியின்  இளைஞரணி மாநாட்டின் போது கட்சியின் கொடி தலைகீழாக ஏற்றப்பட்டமையால் அங்கு சிறு குழப்பம் ஏற்பட்டது. 

நிர்வாகத்தெரிவு இடம்பெறுவதற்கு முன்னர் கட்சியின் கொடி ஏற்றுவதற்காக அனைவரும் நிகழ்வு நடைபெற்ற வவுனியா நகரசபையின் மண்டபத்திற்கு முன்பாக கூடியிருந்தனர். கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா கட்சியின் கொடியை ஏற்றினார்.

கட்சியின் கொடி தலைகீழாக காணப்பட்டமையை கட்சியின் செயலாளர் துரைராஜசிங்கம் கண்டு பிடித்து மீண்டும் கொடி இறக்கப்பட்டது.

இதனையடுத்து அங்கிருந்த இளைஞர்கள் சிலர் அவ்விடத்திற்கு வந்து கொடியை சீர்செய்து கொடுத்தனர். அதன் பின்னர் மீண்டும் கொடி ஏற்றப்பட்டு நிகழ்வுகள் ஆரம்பமாகியது.

வவுனியா விசேட நிருபர்  

Comments