மண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே | தினகரன் வாரமஞ்சரி

மண்டைதீவு காணி சுவீகரிப்பை நிறுத்தியது நாங்களே

கொழும்பிலும் போட்டியிடுவதாவென தேர்தல்களின்போது முடிவெடுப்போம்

நாட்டில் தற்போது காணப்படுகின்ற நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை தாமும் ஜே.வி.பி யும், பல சிவில் சமூகப் பிரதிநிதிகளும் இணைந்து நாடு பூராகவும் மேற்கொள்ளவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.

அதிகார பகிர்வு குறித்த மாற்று வரைபொன்றை தயாரித்து தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்திடம் சமர்ப்பித்திருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

தினகரன் வாரமஞ்சரிக்கு அவர் வழங்கிய விஷேட பேட்டியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி: பாராளுமன்றத்தில் வரவு செலவுத் திட்டமானது நிறைவேற்றப்படுவதுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பு தனது ஆதரவினை வழங்கியிருந்தது. இந் நிலையில் கூட்டமைப்பு ஆதரவளிப்பது தொடர்பாக அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை ஏதேனும் மேற்கொள்ளப்பட்டு இணக்கப்பாடு எட்டப்பட்டிருந்ததா?

பதில்: நாட்டில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடிகளின் பின்னர் அரசாங்கம் மீள அமைக்கப்பட்டுவதற்கு சில பேச்சுவார்த்தைகளை நடத்தியிருந்தோம். அதனடிப்டையிலேயே  ஐக்கிய தேசிய கட்சி தனித்து ஆட்சியமைக்க நாம் ஆதரவளித்திருந்தோம். அந்த இணக்கம் அல்லது உடன்பாடு தொடர்ச்சியாக இருக்கிறது. அதாவது ஐக்கிய தேசிய கட்சி ஆட்சியமைக்காவிடில் அதற்கு மாறாக வரப்போவது மகிந்த ராஜபக்‌ஷவேயாகும். எனவே அதனை தவிர்க்க வேண்டும் என்பதும் நாம் ஆதரவளித்தமைக்கு பிரதான காரணமாகும்.

இதேநேரம் நாட்டில் அரசியல் சூழ்ச்சி இடம்பெறுவதற்கு முன்பாக நிதியமைச்சுடன் சில விடயங்களை பேசி அதில் இணக்கம் காணப்பட்டிருந்தது. அந்தவகையில் முன்னர் இணக்கிய விடயங்கள் இதில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்பட்டால் அரசாங்கம் உடனடியாக பதவியிழக்கும் என அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே இந்த அரசாங்கம் பதவியிழந்தால் மகிந்த ராஜபக்ஷவே பதவியில் வருவார். அதற்கு இடமளிக்க முடியாது. போன்ற காரணங்களினாலேயே ஆதரவாக வாக்களித்தோம்.

கேள்வி: தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரமானது தற்போது என்ன நிலையில் உள்ளது?

பதில்: அந்த விடயத்தில் ஜனாதிபதி மாத்திரமே பணிப்புரை வழங்கலாம். சட்டமா அதிபருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் வழக்குகள் நடைபெற்றுக்கொண்டிருப்பவர்களை விடுவிப்பதற்கு ஒரு முறையை கையாண்டு பலர் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். மிகுதியாக இருப்பவர்கள் சொற்ப அளவினரேயாகும். அண்மைக் கால கைதுகளைத் தவிர சுமார் 30பேருக்கு வழக்கு நடந்துகொண்டிருக்கிறது. மிகுதியானவர்களுக்கு ஏற்கனவே தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

தண்டனை வழங்கப்பட்டவர்கள் விடுவிக்கப்பட வேண்டுமெனில் அது ஜனாதிபதியினால் மாத்திரமே முடியும். அது தொடர்பாக நாம் ஜனாதிபதியுடன் பேசிய போதெல்லாம் தான் விடுவிப்பதாக உறுதிமொழி, தருகின்றாரே தவிர இது வரையில் ஒருவரைத் தவிர மற்றொருவரையும் விடுவிக்கவில்லை. இது தொடர்பாக தொடர்ச்சியாக பேசிக்கொண்டிருக்கின்றோம். ஆனால் ஜனாதிபதி எவ்விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

கேள்வி : நாட்டில் போர் ஓய்ந்து பத்தாண்டுகள் கடந்துவிட்ட நிலையில், தற்போதும் காணாமல் போனோர், நில விடுவிப்பு போன்றன தொடர்பாக மக்கள்   போராடிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து இயங்குவது போன்றதான தோற்றப்பாடு உள்ள நிலையில் மக்களின் பிரச்சினைகள், போராட்டங்களுக்கு தீர்வு காண முடியவில்லை என்ற அதிருப்தி மக்கள் மத்தியில் உள்ளதே?

பதில்: தற்போதைய அரசாங்கத்தை இரண்டாகப் பிரிக்கலாம். ஒன்று ஜனாதிபதியினுடையது. மற்றையது பாராளுமன்றத்தில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம். இங்கு ஐக்கிய தேசிய கட்சி ஜனாதிபதியோடு சேர்ந்து இயங்கிய போதும் சில முக்கியமான அதிகாரங்கள் ஜனாதிபதியின் கையிலேயே உள்ளன.

காணாமல் ஆக்கப்பட்டவர்களது விடயம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் ஒரு சட்டமூலத்தை கொண்டு வந்து நிறைவேற்றியது. ஆனால் ஒரு வருடத்துக்கு மேலாக அந்த சட்டத்தை ஜனாதிபதி நடமுறைக்கு கொண்டு வரவில்லை. அதற்கு அவர் மாத்திரமே பொறுப்பாகும்.

அதேபோன்று தான் அரசியல் கைதிகளின் விவகாரமும். ஜனாதிபதியின் கையில் தான் ஆதிக்கம் இருக்கின்றது. ஒக்டோபர் அரசியல் குழப்பத்திற்கு முன்னரே அவர் மகிந்த ராஜபக்‌ஷ தரப்போடு சேர்ந்து இயங்குவதற்கு விரும்புகிறார் என்பதும் 2015ஆம் ஆண்டு மக்கள் ஆணையை நிராகரித்து எதிர் திசையில் பயணிக்கிறார் என்பது அனைவருக்கும் தெரிந்துவிட்டது.

ஆகையினால் தமிழ் தேசிய கூட்டமைப்பு அரசாங்கத்துடன் சேர்ந்து பயணிப்பதாக கூறுகின்ற போது அது ஜனாதிபதியுடன் சேர்ந்து பயணிப்பதாக இருக்க முடியாது. அவ்வாறிருந்தும் நாம் ஜனாதிபதியோடு பகைத்துக்கொள்ளாது கூடிய விரைவில் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தவே தீர்மானித்துள்ளோம்.

கேள்வி: நீங்கள் கூறுவது போன்று ஜனாதிபதி தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்த்து வைப்பது தொடர்பாக கூட்டமைப்புடன் ஒத்துழைத்து செயற்படாத நிலையிலும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக பேசப்படுகின்ற நிலையிலும் இதனை கூட்டமைப்பு எவ்வாறு கையாளப் போகின்றது?

பதில்: நாங்கள் இது குறித்து ஜே.வி.பி யுடன் இரண்டு தடவைகள் பேசியிருக்கின்றோம். 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் போது ஒத்துழைத்த சிவில் சமூக பிரதிநிதிகளோடும் இது தொடர்பாக பேசியிருந்தோம். அதேபோல் இரு தரப்பினருடனும் சேர்ந்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கின்றோம். மைத்திரிபால சிறிசேனவுக்கு கொடுக்கப்பட்ட ஆணை நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை ஒழிக்க வேண்டும் என்பதாகும். அந்த ஆணையை தனது முதலாவது ஆணையாக செயற்படுத்துவேன் எனப் பல தடவைகள் அவர் கூறியிருக்கின்றார்.

இந்நிலையில் அவ்வாறு செய்யப்படாமல் இன்னொரு ஜனாதிபதித் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்துவது மக்கள் கொடுத்த ஆணையை மீறுவது என்பதே எங்களது நிலைப்பாடு. இவ்வாறான நிலையில் உடனடியாக நாடு பூராகவும் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான வேலைத்திட்டத்தை நாமும் ஜே.வி.பி யும், பல சிவில் சமுகப் பிரதிநிதிகளும் கையிலெடுக்க தீர்மானித்துள்ளோம்.

எனெனில் யாராவது, தாம் ஆட்சிக்கு வந்தால் அதனை செய்வோம் என கூறுவார்களாயின் அதனை இப்போதே செய்யுங்கள் என மக்களின் அழுத்தத்தின் மூலமாக செய்யுமாறு கோருவோம். ஏனெனில் அதற்கான வரைபு தற்போது பாராளுமன்றத்தில் உள்ளது. எந்த நேரத்திலும் அதனை நிறைவேற்ற முடியும். எனவே அதனை உபயோகித்து இச் சட்டமூலத்தை சட்டமாக்குவதற்கும் பின்னர் மக்களிடத்திலே பொதுஜன வாக்கெடுப்பை நடத்துவதற்காகவும் இதனை பாராளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றுவதற்காக இந்த நடவடிக்கையை எடுக்கவுள்ளோம். அதனையே முதலாவது தெரிவாக நாம் செய்யவுள்ளோம்.

கேள்வி: மாகாண சபைகள் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டியமை தொடர்பாக கூட்டமைப்பு எத்தகைய அழுத்தத்தை கொடுக்கின்றது?

பதில்: மாகாண சபைகள் தேர்தல் உடனடியாக நடத்தப்பட வேண்டும். அதற்கு பல அழுத்தங்கள் கொடுத்திருக்கின்றோம். மாகாண சபைகள் தேர்தல்கள் நடத்தப்படுவது முக்கியமே தவிர அது எந்த விதத்தில் நடத்தப்பட வேண்டும் என்பது முக்கியமல்ல என்பதையும் பல தடவைகள் நாம் வலியுறுத்தியுள்ளோம். இப்போதிருக்கும் சட்டச் சிக்கல் காரணமாக உடனடியாக பழைய முறையில் தேர்தலை நடத்த முடியும். அதற்கான வழிகளையும் கூறியிருக்கின்றோம். ஆகவே அதனை நடமுறைப்படுத்த வேண்டியது அரசாங்கம். தேர்தலை பிற்போடுவதை நாம் எந்த காலத்திலும் அனுமதிக்க முடியாது.

கேள்வி: அமைச்சர் மனோகணேசன், புதிய அரசியலமைப்பையும் காணாமல் போனோர் அலுவலகம் ஊடாகவே தேட வேண்டும் என கூறியிருக்கிறார். புதிய அரசியலமைப்பின் நிலை என்ன?

பதில் : அது காணாமல் போகவில்லை. அதற்கான இரண்டாவது அறிக்கையோடு வரைபொன்று ஜனவரி 11ஆம் திகதி வெளிவந்திருக்கிறது. அது ஒரு பொதுவான வரைபாகவே வந்திருக்கிறது. நிபுணர்கள் அனைவரதும் கருத்தையும் உள்வாங்கி வெளி வந்திருக்கிறது. ஆகவே அதனை நிறைவேற்றுவதற்கு ஜனாதிபதி பிரதமருடன் கூட்டாக பேச்சுவார்த்தை நடத்தியிருந்தோம். அது தொடர்பாக சில முன்னேற்றங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

புதிய அரசியலமைப்பாக வராவிட்டாலும் கூட இனப் பிரச்சினைக்கு தீர்வாக அதிகார பகிர்வு தொடர்பான விடயத்தை செய்வோம் என்று இரு தரப்பினரும் உறுதியளித்திருக்கிறார்கள்.

அதற்கான மாற்று வரைபொன்றையும் செய்து சமர்ப்பித்திருக்கின்றோம். ஆகவே இந்த தேர்தல்கள் எதுவும் வருவதற்கு முன்பதாகவே அந்த மாற்றங்களை நாங்கள் செய்வதற்கு எத்தனிப்போம்.

கேள்வி: ஜனாதிபதி வடக்கில் 90வீதமான காணிகளை விடுவித்துவிட்டதாக கூறுகின்ற அதேநேரம் தற்போது யாழ்ப்பாணம், முல்லைத்தீவு உள்ளிட்ட இடங்களில் பொது மக்களின் காணிகள் படைத்தரப்புக்காக சுவீகரிக்கப்படுகின்றதே?

பதில்: மண்டைதீவில் காணி சுவீகரிப்பு இடம்பெற்ற போது பாதுகாப்பு செயலாளர், இரா.சம்மந்தனுடன் பேசியிருந்தார். இதன்போது அவை அனைத்தையும் உடனடியாக நிறுத்துமாறு ஜனாதிபதி செயலணியிலும் தாம் கூறியதாக சம்மந்தன் தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து பாதுகாப்பு செயலாளரின் உத்தரவினையடுத்து அனைத்து காணி சுவீகரிப்பு நடவடிக்கைகளும் நிறுத்தப்பட்டுள்ளது.

இக் காணி சுவீகரிப்புக்கள் தொடர்பாக பாதுகாப்பு செயலாளர் நேரடியாக யாழ்ப்பாணத்துக்கு எதிர்வரும் 29ஆம் திகதி சென்று அங்கு இரா.சம்மந்தனை சந்தித்து இவை தொடர்பாக கூட்டம் நடத்தி அதில் கலந்துரையாடவுள்ளார். அதன் பின்னரே மேற்கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்படவுள்ளன.

ஆனால் ஜனாதிபதியின் செயலணி நடைபெற்ற போது, இவை அனைத்தையும் நிறுத்தி எம்மோடு பேசுமாறு நாம் ஜனாதிபதிக்கு கூறியிருந்தோம். ஆனால் அதற்கு ஜனாதிபதி நேரடியாக பதில் எதுவும் கூறாமல் இப்படியான நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார்.

கேள்வி: ஜெனீவா தீர்மானம் தொடர்பில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குள்ளேயே குழப்பமான நிலைமை காணப்பட்டதே?

பதில் : சர்வதேச மேற்பார்வை நீடிக்கப்பட்டிருப்பதை சில தரப்புக்கள் வேண்டும் என்றே கால அவகாசம் வழங்கப்பட்டிருப்பதாக கூறிக்கொண்டிருக்கிறார்கள். கால அவகாசம் கொடுப்பதாக இருந்தால் இந்த இந்த விடயங்களை இந்த இந்த காலத்துக்குள் செய்ய வேண்டும் என கூறப்பட்டிருக்க வேண்டும். பொய்யான ஒரு கூற்றை வைத்துக்கொண்டு இலங்கை அரசாங்கத்துக்கு சார்பாக நடக்கின்றது எனக் கூறுபவர்கள் அரசாங்கத்துக்கு சார்பாகவே செயற்படுகின்றார்கள்.

இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்காவிட்டால் அதற்கு பின்னர் எந்தவொரு சர்வதேச மேற்பார்வையும் செய்வதற்கு மனிதவுரிமை ஆணையாளருக்கு அதிகாரம் இருந்திருக்காது. பேரவை அந்த ஆணையை கொடுத்தால் தான் அவர் அந்த மேற்பார்வையை செய்ய முடியும். ஆகவே அதனை செய்ய வேண்டாம் என்று கூறுபவர்களே இலங்கை அரசாங்கத்தை தப்பவைப்பதற்கான சூழ்ச்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

ஜெனீவா தீர்மானம் தொடர்பாக கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக் குழு கூடிய போது அதற்கு இணங்கினார்கள். இது கால அவகாசம் இல்லை. சர்வதேச மேற்பார்வை என கூறிய போது அதற்கு ரெலோ, புளட் ஆகியோர் இணங்கினார்கள். அவர்களோடு பேசி தான் தீர்மானம் எடுத்திருக்கின்றோம். எடுக்கின்ற தீர்மானத்துக்கு மாறாக ஒவ்வொருவரும் தம்மை மற்றவர்களை விட வீரர்களாக காண்பிப்பதற்கான கூற்றுக்களுக்கு பதிலளிக்க முடியாது.

கேள்வி: ஜெனீவா தீர்மானத்துக்கு இலங்கை அரசாங்கமும் கால அவகாசம் வழங்கி ஏற்றுக்கொண்ட நிலையில் தற்போது ஜனாதிபதி தமக்கு அது தொடர்பாக எதுவும் தெரியாது எனக் கூறுகின்றாரே?

பதில் : ஜனாதிபதி கூறுவது முழுமையான பொய்யாகும். 2015ஆம் ஆண்டு ஒக்டோபரில் ஜனாதிபதியின் இணக்கத்துடனேயே தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இப்போது ஜனாதிபதியுடன் இருந்துகொண்டு அவ்வாறு செய்தது தவறு என கூறுகின்ற வெளிவிவகார அமைச்சின் செயலாளரே 2015ஒக்டோபரில் ஜெனிவாவில் இலங்கையின் தூதுவராக இருந்தார். அவரே அதில் கைச்சாத்திட்டார். கைச்சாத்திட்டவரே தெரியாது எனக் கூறுவது புதுமையான விடயமாகும்.

அதனை விட்டாலும் 2017இல் மீண்டும் இலங்கை இணை அனுசரணை வழங்கியது. அப்போதும் தமக்கு தெரியாது எனக் கூற முடியாது. இந்த தடவையும் மிகத் தெட்டத் தெளிவாக ஜனாதிபதியும் தனது முகவர்களை இலங்கையினுடைய தூதுக்குழுவில் இணைத்துக் கொண்டு அவர்களும் போய் தான் வந்தார்கள். இந்நிலையில் தெரியாது என அவர்கள் எவ்வாறு கூற முடியும்?

2015ஆம் ஆண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜனாதிபதியே இத் தீர்மானத்தை எப்படி நடமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக ஆராய்வதற்காக சர்வகட்சி மாநாட்டை அழைத்திருந்தார். நானும் சென்றிருந்தேன். ஒரு தடவையல்ல இரண்டு தடவைகள் கூட்டப்பட்டிருந்தது. ஆகவே இவ்வாறெல்லாம் செய்துவிட்டு தற்போது இதனை தெரியாது எனக் கூறுவது அப்பட்டமான பொய்யாகும்.

கேள்வி: கூட்டமைப்பினர் மீது வடக்கு கிழக்கில் அதிருப்தி உள்ளது. அதேநேரம் தேசிய கட்சிகளின் ஆதிக்கமும் தற்போது அதிகரித்துள்ளது. இந்நிலையில் மாகாண சபைகள் தேர்தல்கள் இடம்பெறும் போது அதனை கூட்டமைப்பு எவ்வாறு எதிர்கொள்ளும்?

பதில் : உள்ளுராட்சி தேர்தலில் எமக்கு ஓர் பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது. அதற்குரிய காரணங்களை ஆராய்ந்திருக்கின்றோம். ஆனால் மாகாண சபைகள் தேர்தலிலோ அல்லது பாராளுமன்ற தேர்தலிலோ எமக்கான ஆதரவுத் தளம் குறையவில்லை என்பது தான் எமது அனுமானிப்பாகும். எனவே தேர்தலினை எதிர்கொள்வதில் எந்தவிதமான கஷ்டமும் இருக்காது.

கேள்வி: வடக்கு கிழக்கு அபிவிருத்தி தொடர்பாக நிதியமைச்சர் மங்கள சமரவீர பிரத்தியேக வரைபை தயாரித்துள்ளாரே ?

பதில் : இவ் வரைபு கூட்டமைப்புடன் கலந்தாலோசித்தே தயாரிக்கப்பட்டது. இதில் வாழ்வாதாரத்தை முன்னுரிமைப்படுத்தும் திட்டங்களையே நாம் கேட்டுள்ளோம். ஏனெனில் மக்கள் பலர் வாழ்வாதாரம் இல்லாத நிலையில் உள்ளனர். அவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த வேண்டியது அவசியமானது.

குறிப்பாக பாரிய அபிவிருத்திகள் வெவ்வேறு நீதி மூலம் நடைபெறலாம். ஆனால் இவ் விஷேட நீதி மூலம் செய்யப்படுகின்ற வேலைத் திட்டங்கள் மக்களுக்கு நேரடியாக பயன்பெறக் கூடியனவாகவே அமைய வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை கட்டியெழுப்பக் கூடியவாறாக அமைய வேண்டும் என நாம் கோரியுள்ளோம்.

இவற்றில் மக்களின் அடிப்படைத் தேவைகள் பல இருக்கின்றன. மலசலகூடம் இல்லாத வீடுகள் பலவுள்ளன. அவ்வாறான விடயங்களுக்கும் இப் பணம் செலவிடப்படும். பிரதானமாக மக்களுக்கு நேரடியாக வருவாயை பெற்றுக்கொடுக்க கூடிய திட்டங்களையே நாம் முதன்மைப்படுத்தக் கோரியுள்ளோம். மக்களுக்கு வேலைவாய்ப்பை பெற்றுக்கொடுக்கக் கூடியதான செயற்பாடுகளை முதன்மைப்படுத்தியுள்ளோம்.

கேள்வி: தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா  கொழும்பில் போட்டியிடுவது தொடர்பாக குறிப்பிட்டிருந்தாரே?

பதில்: அவர் அப்படிக் கூறவில்லை. கொழும்பிலும் போட்டியிடுமாறு பலர் கேட்கின்றார்கள் என்றே கூறியிருந்தார். பலர் அவ்வாறு கேட்டுக்கொண்டு தான் இருக்கின்றார்கள். தேர்தல் வரும் போது தான் அதுபற்றிச் சிந்திக்க முடியும்.

நேர்காணல் 

தேவராசா விரூஷன்

 

Comments