இவ்வருடத்துக்கான Moto GP -2019 கடந்த வாரம் கட்டாரில் ஆரம்பம் | தினகரன் வாரமஞ்சரி

இவ்வருடத்துக்கான Moto GP -2019 கடந்த வாரம் கட்டாரில் ஆரம்பம்

வழமைபோன்று இவ்வருடத்துக்கான 2019 கிராண்ட் பிரி மோட்டார் சைக்கிள் சி. சி. 500 (மோடோ ஜி. பி.) போட்டித் தொடர் 71வது தடவையாக கடந்த வாரம் கட்டாரில் ஆரம்பமானது.

கட்டாரின் டோஹா நகரில் கடந்த வாரம் ஆரம்பமான முதற் சுற்றிலேயே நடப்புச் சம்பியனான ஸ்பையின் வீரர் மார்க் மார்கஸ் தோல்வியைச் சந்தித்துள்ளார். இந்த ஆரம்பச் சுற்றில் இத்தாலிய வீரரான ஆன்ரே டிவிஸியொசோ முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

இப்போட்டித் தொடரில் தொழில் ரீதியிலாக பங்குகொள்ளும் உலகப் பிரசித்தி பெற்ற மோட்டார் சைக்கிள் வீரர்கள் அனைவரும் கலந்து கொள்கின்றனர். இத் தொடர் இவ்வாண்டு நவம்பர் மாதம் வரை 19 சுற்றுக்களாக ஒவ்வொரு நாட்டிலும் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நடைபெறும் ஒவ்வொரு சுற்றிலும் அவர்கள் பெறும் இடங்களைப் பொறுத்து புள்ளிகள் வழங்கப்பட்டு, வருடக் கடைசியில் புள்ளிகள் அடிப்படையில் முதலிடம் பெறுபவர் இவ்வாண்டுக்கான 2019ம் ஆண்டு கிராண்ட்பிரி மோட்டார் ஜி. பி. (சி. சி. 500) சம்பியனாகத் தெரிவு செய்யப்படுவார்.

இவ்வருடம் நடைபெறும் 19 சுற்றுக்களும் கடார், ஆர்ஜென்டீனா, அமெரிக்கா, ஸ்பெயின், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஜெர்மனி, செக் குடியரசு, ஆஸ்ட்ரியா, இங்கிலாந்து, சென். மெரினோ, தாய்லாந்து ஜப்பான், அவுஸ்திரேலியா, மலேசியா ஆகிய 16 நாடுகளில் நடைபெறவுள்ளது. முதலாவது சுற்று கடந்தவாரம் கட்டாரில் நடைபெற்றதுடன் ஸ்பையின் நாட்டில் நான்கு சுற்றுகள் நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இம்முறை கலந்துகொள்ளும் வீரர்களில் ஸ்பெயின் வீரர்களான 26 வயது மார்க் மார்கேஸ் மற்றும் 31 வயதான ஜோர்கே லோரென்ஸோ இம்முறையும் சம்பியன் பட்டம் வெல்லும் வீரர்களில் முன்னிலையில் திகழ்பவர்களாவர். மார்கேஸ் கடந்த 6 வருடங்களில் 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளதால் இம்முறையும் இவரின் கையே ஓங்கியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கிராண்ட் பிரி மோட்டார் சைக்கிள் வரலாற்றில் கூடிய சம்பியன் பட்டங்களை வென்றோர் வரிசையில் மார்கேஸ் 2வது இடத்திலுள்ளார். முதலிடத்தில் உள்ள இத்தாலியின் கியாகோமோ கோஸ்தினி இதுவரை 15 தடவைகள் சம்பியன் பட்டம் வென்று முதலிடத்திலுள்ளார். இவர்களைத் தவிர அவுஸ்திரேலியாவின் மிக் டுஹென், இத்தாலியின் மற்றொரு வீரரான விலென்டினா ரோஸ் ஆகியோர் 5 முறை சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

ஸ்பையின் நாட்டின் கடலோனியா பிரதேசத்திலுள்ள செர்விரா நகரில் 1993ம் ஆண்டு பிறந்த மார்க் மார்க்கஸ் சிறுவயது முதல் மோட்டார் பந்தயங்களில் ஈடுபடுவார். இவரின் மூத்த சகோதரரும் மூன்று முறை இச்சம்பியன் பட்டத்தை வென்றுள்ளதால் மார்கஸும் சிறு வயது முதல் மோட்டார் சைக்கிள் போட்டிகளில் ஈடுபடலானார். ஒவ்வொரு படியாக முன்னிலை பெற்ற மார்கஸ் 2010ஆம் ஆண்டு 125 சி. சி. வகையிலான மோட்டார் சைக்கிள் சம்பியன் போட்டியில் கலந்து கொண்டு முதன் முதலாக சர்வதேச போட்டியில் சம்பியன் பட்டம் வென்றார். அதே பிரிவில் 2012ம் ஆண்டும் சம்பியன் பட்டம் பெற்றார்.

அதன் பின் 2013ம் ஆண்டு முதல் அவர் கிராண்ட் பிரி மோட்டார் சைக்கிள் (ஹொண்டா குழு) சி. சி. 500 போட்டிகளில் பங்கு பற்றி முதல் தொடரிலேயே பட்டம் வென்றார். தொடர்ந்து 14, 16, 17, 18 என இது வரை அவர் பங்கு பற்றிய ஆறு தொடர்களில் 5 முறை சம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்துள்ளார்.

அவர் 2013ஆம் ஆண்டு நடைபெற்ற 18 சுற்றுக்களில் 6 முதலிடங்களும் 6 இரண்டாம் இடங்களும் 04 மூன்றாம் இடங்களையும் அடைந்து மொத்தம் 334 புள்ளிகளைப்பெற்று சம்பியன் பட்டம் வென்றார். இவரின் சிறந்த போட்டியாளராக கருதப்படும் ஜப்பான் யமஹா குழுவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஜோர்ஹே லோரன்ஸோ 330 புள்ளிகளைப் பெற்று அவ்வருடம் இரண்டாமிடததைப் பெற்றுக்கொண்டார்.

Comments