வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு வாகன சந்தையில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது | தினகரன் வாரமஞ்சரி

வாகன இறக்குமதி வரி அதிகரிப்பு வாகன சந்தையில் மந்த நிலையை ஏற்படுத்தியுள்ளது

இறக்குமதி செய்யப்படும் வாகனங்களின் பேரில் வரி அதிகரிப்பும் ஆடம்பர வரி விதிப்பும் இலங்கை வாகன சந்தையில் ஒரு மந்த நிலையை தோற்றுவித்திருப்பதோடு சொந்தமாக வாகனமொன்றை வைத்திக்க விரும்புவோரின் எதிர்பார்ப்பை நிராசையாக்கி இருப்பதாக வாகன இறக்குமதியாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

2019ம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் வாகன இறக்குமதி வரியும் விசேட ஆடம்பர வரியும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதையடுத்தே, இவ்வரி விதிப்பை மறுபரிசீலனை செய்யும்படி இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்திருக்கிறது.

"வாகன இறக்குமதி வரி அதிகரிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு எம்மிடம் இருந்ததுதான். ஆனால் ஆடம்பர வாகன வரி விதிப்பு என்ற மற்றொரு வரியும் விதிக்கப்படும் என்று நாங்கள் நினைத்திருக்கவில்லை. 35 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வாகனங்கள் மீது விதிக்கப்பட்டிருக்கும் ஆடம்பர வரி விதிப்பில் அதிகாரிகள் கணிப்பீடுகள் ரீதியான தவறுகள் இழைத்திருக்கலாம் என நாங்கள் கருதுகிறோம். இந்த வரி அறவீட்டு முறையை மீளவும் ஆராய்ந்து திருத்தங்கள் செய்யாவிட்டால் இலங்கை வாகன சந்தையில் ஏற்படக்கூடிய மந்த நிலை தவிர்க்க முடியாததாகிவிடும்" என்று இலங்கை வாகன இறக்குமதியாளர்கள் சங்கத் தலைவர் ரஞ்சன் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கொழும்பில் இச்சங்கம் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளர்களிடம் இது தொடர்பாக விளக்கமளித்தார். ஹொண்டா சிவிக் வாகனத்தின் பேரிலான இறக்குமதி வரி 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்ட நிலையில் மேலும் 12 லட்சம் ரூபா சொகுசு வரியும் விதிக்கப்பட்டுள்ளது. ஆக இவ்வாகனத்தின் மீதான வரி விதிப்பு 14 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவாக உள்ளது. மேர்சிடஸ் பென்ஸ் சி 200 வாகனத்தின் வரி 6 லட்சத்து 75 ஆயிரம் ரூபாவாக அதிகரிக்கப்பட்டு மேலும் சொகுசு வரி 40 லட்சமாக அறவிடப்பட்டுள்ளது. எனவே மேர்சிடஸ் பென்ஸ் மீதான மொத்த வரி அதிகரிப்பு 46 லட்சத்து 75 ஆயிரம் ரூபா! லேன்ட் ரோவர் மற்றும் ரேஞ்ரோவர் வாகனத்தின் மீதான வரி 14 லட்சத்தால் அதிகரித்து சொகுசு வரி ஒரு கோடியே 75 லட்ச ரூபாவாக விதிக்கப்பட்டுள்ளதால் மொத்த வரி அதிகரிப்பு ஒரு கோடியே 19 லட்சமாகியுள்ளது. மேலும் இந்த வரி அதிபரிப்பு உடனடியாக அமுலுக்கு வரவிருப்பதால், ஏற்கனவே முற்பணம் செலுத்தி வெளிநாடுகளில் ஓடர் செய்யப்பட்டுள்ள வாகனங்களின் அசல் பெறுமதி தற்போது அதிகரித்துள்ளது. இது அந்த வாகன கொள்வனவாளர்களுக்கு அதிக சுமையை ஏற்படுத்தியுள்ளது என்றும் இச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இரண்டாயிரம் கிலோவுக்கும் குறைவான சுமையை ஏற்றக்கூடிய சிறிய “படி”டிரக் வண்டி மீதான வரி ஒரு லட்சத்தால் குறைக்கப்பட்டிருந்தாலும் இன்றைய அந்நிய செலாவணியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள், பொருளாதார சூழல் என்பனவற்றை கவனத்தில் எடுத்துக் கொள்ளும்போது இந்த வாகனங்களை வாங்குவோருக்கு இந்த வரி குறைப்பு எந்தக் குறிப்பிடத்தக்க விளைவையும் ஏற்படுத்தப்போவதில்லை.

ஒரு வாகன பெறுமதியின் மீது 50 சதவீதமான கடன் வழங்கும் எல்டிவி முறை தற்போது நடைமுறையில் உள்ளது. இதை 75 சதவீதமாக மாற்றப்பட்டால்தான் வாகனத்தை கொள்வனவு செய்ய அது உண்மையாகவே உதவியாக இருக்கும். எனவே அரசு இந்த மாற்றத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் இச்சங்கம் யோசனைகளை முன்வைத்துள்ளது.

இலங்கை வாகன இறக்குமதியாளர் சங்கம் 1980இல் ஆரம்பிக்கப்பட்டது. இந்நாட்டின் முக்கியமான இறக்குமதியாளர்களையும் உள்ளடக்கிய 140 உறுப்பினர்களை இச்சங்கம் கொண்டுள்ளது. வாகன விலை அதிகரிப்பு தொடர் விளைவுகளைக் கொண்டிருக்கும் என்றும் உபயோகித்த இரண்டாம் நிலை வாகனங்களின் விலையும் அதிகரிக்கும் என்றும் இச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

இது வாகன வரி அதிகரிப்பு தொடர்பாக கொழும்பில் வாகனங்களை வாங்கி விற்கும் தரகர் ஒருவரைச் சந்தித்து கேட்டபோது,

கடந்த இரண்டு மாதங்களாகவே வாகன சந்தையில் ஒரு மந்தநிலை காணப்படுவதாகவும் இந்த இறக்குமதி வரி அதிகரிப்பு இம் மந்த நிலையை மேலும் அதிகரிக்கவே உதவும் என்று கூறினார். "நான் 12 ஸ்ரீ கார் ஒன்றை வைத்துக்கொண்டு அதை விற்க முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறேன். முச்சக்கர வண்டியின் விலை 60 ஆயிரத்தால் அதிகரித்துள்ளது. வாகனம் வைத்திருப்பவர்கள் அடிக்கடி தமது வாகனங்களை மாற்றிக் கொண்டிருப்பார்கள். இது இயற்கை. அதுவும் இப்போது குறைந்துள்ளது. கையிருப்பு காசு மக்கள் மத்தியில் குறைந்திருப்பதால்தான் வாகனங்களை விற்பதும் வாங்குவதும் ஒருவகையான ஸ்தம்பித நிலைக்கு வந்திருப்பதாகக் கருதுகிறேன்" என்று விரிவாகப் பேசினார் இவர். வாகனம் என்பது பணக்காரர்களின் சொத்து. சாதாரண மனிதனை இந்த வரி விதிப்பு பாதிக்காது என்று அவரிடம் கூறியபோதே அதை அவர் மறுத்தார்.

இது தவறான அபிப்பிராயம். வாகனம் அனைவருக்கும் அவசியமானது. விலை அதிகரிப்பு என்பதற்கு ஒரு எல்லை உள்ளது. மது மீதான வரி அதிகரிப்பும் இப்படித்தான் அளவு கடந்ததாக உள்ளது. மது அருந்துவது இந்நாட்டில் சட்டபூர்வமானது. பல நிறுவனங்கள் சட்டபூர்வமாக மது தயாரித்து அவை சட்டபூர்வமாக விற்பனை செய்யப்படுகிறது. இதே சமயம் கள்ளச் சாராயம் இங்கு ஒரு பிரச்சினையாக உள்ளது. மதுவரி வருடா வருடம் கண்டபடி அதிகரிக்கப்படுவதால் வீட்டுக்கு எடுத்துச் செல்லப்படும் குடும்பத்துக்கான வருமானத்தில் பாதிப்பு ஏற்படுகிறது. அடுத்த பக்கம் கள்ளச் சாராயம் (கசிப்பு) அருந்துவதற்கு பலர் தூண்டப்பட்டு ஆரோக்கிய பாதிப்பும் ஏற்படுகிறது. சரியாகச் சொல்வதானால் மதுவின் விலை குறிப்பாக பியரின் விலை குறைக்கப்பட வேண்டும்.

வாகனமும் இப்படித்தான். ஒரு குடும்பம் பொருளாதார ரீதியாக ஸ்திரம் பெறும்போது தமக்கென ஒரு வாகனத்தை வைத்துக்கொள்ள விரும்புவார்கள். முன்னர் பிரிட்ஜை ஆடம்பரப் பொருளாகக் கருதினார்கள்.

வாகனம் ஒரு ஆடம்பரப் பொருள் அல்ல. ஆடம்பரக் கார்களை நான் குறிப்பிடவில்லை. ஆட்டோ, ஸ்கூட்டர், மோட்டார் சைக்கிள், சிறியரக கார்கள் என்பன ஆடம்பரப் பொருளும் அல்ல. அவற்றின் மீது அதிக வரி விதிக்கவும் கூடாது. இலங்கை வாகன சந்தை பல்லாயிரம் கோடி ரூபா பெறுமதி வாய்ந்தது. அது பரபரப்பாகவும் சுமுகமாகவும் இயங்குவது பொருளாதார செழிப்பின் அடையாளம்!" என்று கூறி முடித்துக்கொண்டார் இந்த அனுபவம் வாய்ந்த வாகன தரகர்.

Comments