ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

 “என்ன வேர்க்க விறுவிறுக்க ஓடிக்கொண்டு வாறணீ.”

“உங்கள பார்க்கத்தான் ஓடோடி வந்தனான்.”

“என்னைப் பார்க்க ஏன் ஓடிக்கொண்டு வாறனீ. மெதுவா வரலாமென்ன. நான் இங்கதான இருப்பனான்”

“நீங்கள் இருப்பியள். ஆனா உங்களிட்ட இருந்து விஷயத்தை தெரிஞ்சிகொண்டனான் என்டா நூறு ரூபா கிடைக்கும்.”

“யாரிட்டயோ பந்தயம் பிடிச்சனீ போலக் கிடக்கு.”

“பந்தயந்தான். மருமகளிட்ட 100 ரூபா பந்தயம் பிடிச்சனான். நீங்கள் சரியென்டியலென்டா அந்தியில பார்ட்டிதான்.”

“சரி என்ன பந்தயம் பிடிச்சனீ என்டதை சொல்லன்.”

“அண்ண பெண்களுக்கென்டு தனியா ஒரு தினத்தை ஒதுக்கிருக்கினம். மார்ச் 8 ஆம் திகதி வாற உந்த தினத்தை மகளிர் தினம் என்டு சொல்லுவினம் என்டு ஏன்ட மருமகள் சொன்னவை. அப்படி ஆம்பிள பொம்பிள பிள்ளை குட்டி என்டு ஆளாளுக்கு தினம் ஒதுக்க மாட்டினம் என்டு நான் சொன்னனான். வேணுமென்டா வல்லிபுரம் அங்கிளிட்ட கேளுங்கோ. 100 ரூபா பெட் என்டு சொன்னவை. சும்மா வாற காசை ஏன் வேணாம் என்டு சரி என்டு போட்டு உங்களிட்ட வந்தனான்.”

“இங்க பார் சின்னராசு உலகத்தில பல விஷயங்கள் கிடக்குது. ஒரு விஷயம் தெரியேல்லயென்டா பேசாமல் இருக்க வேணும் கண்டியோ.உதை விட்டுப் போட்டு தெரிஞ்சது போலக் காட்டிக் கொள்ளக்கூடாது. சரியே”

“விளங்கேல்லயே.”

“சரி விளக்கமாச் சொல்லுறனான். பந்தயத்தில நீ தோத்துப்போட்டனீ.”

“மெய்யே. அப்ப அப்பிடி ஒரு தினம் கிடக்குது என்ன.”

“மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம் என்டதையும் சொல்லிப் போட்டனென்டா சரியென்ன. ரஷ்யாவில செயின்ட் பீட்டர்ஸ் நகரில பெண்களின்ட போராட்டம் ஒன்டு நடந்தது. உதில கலந்து கொண்ட அலெக்சாணட்ரா கெலன்ராதான் ஒவ்வொரு வருஷமும் மார்ச் 8 ஆம் திகதி உலகம் முழுதும் மகளிர் தினத்தை கொண்டாட வேணுமென்டு பிரகடனம் செஞ்சவர்.”

“அப்பவே சொல்லிப்போட்டினமென்ன. எனக்குத்தான் தெரியேல்ல ஆனா என்னோட மருமகளுக்கு தெரிஞ்சிருக்குது.”

“பந்தயம் பிடிக்கிறதுக்கு முன்ன கேட்டிருந்தா நான் சொல்லியிருப்பனான். நீ பந்தயம் பிடிச்சுப் போட்டில்ல என்னிட்ட வந்து கேட்டனீ.”

“எதையும் சரியா தெரிஞ்சிகொண்டுதான் பந்தயம் பிடிக்கவேணுமென்ன?”

“நல்ல வேளை 100 ரூபாவோட போட்டுது என்டு சந்தோஷப்படு.”

“என்டபடியா சின்னராசு 1921ல இருந்து ஒவ்வொரு வருஷமும் மார்ச் 8ஆம் திகதி பெண்கள் தினம் கொண்டாடுகினம். உத மகளிர்தினம் என்டும் சொல்லுவினம். ரஷ்யா, உக்ரைன், உஸ்பெகிஸ்தான், ஆர்மேனியா, அஸர்பைஜான், பெலாரஸ், புர்கினோ பாஸோ, கம்போடியா, கியூபா, எரித்திரியா, கஜகஸ்தான், மோல்டோவா, மங்கோலியா,மொன்டிநெக்ரோ, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் என்ட நாடுகளில சர்வதேச மகளிர் தினத்துக்கு லீவு கொடுக்கினம்.”

“லீவு குடுக்கினமோ.உந்த தினத்தில.”

“இலங்கையில லீவு இல்ல வெறும் கொண்டாட்டம் மட்டும்தான்.”

“உந்த பெண்கள் தினம் உருவாகுறத்துக்கு என்ன காரணமண்ண?”

“டென்மார்க் என்டொரு நாடு கிடக்குது. உதின்ட தலைநகரம் கோபன்ஹேகன். 1910 ல உங்கதான் உலக சோஷலிஸ்ட் பெண்கள் மாநாடு நடந்துது. உந்த மாநாட்டிலதான் மகளிர் தினத்துக்கான தீர்மானம் முதன் முதலா நிறைவேற்றினம். உலக மகளிர் தினத்தின்ட தாய் என்டு சொல்லுகிற க்ளாரா செட்கின் (Clara Zekin) உந்த மாநாட்டுக்கு தலைமை வகிச்சதோட உந்த தீர்மானத்தை எழுத்து மூலம் வழிமொழிஞ்சவர். 1910ல நிறைவேற்றின உந்த தீர்மானம்தான் உலக மகளிர் தினம் உருவாக உண்மையான காரணம்.

“110 வருஷமா கொண்டாடுகினம் என்ன?”

“உலக மகளிர் தினம் 1911ல இருந்து பலநாடுகளில பல தினங்களில பல திகதிகளில கொண்டாடப்பட்டது. 1921 ல கம்யூனிஸ்ட் பெண்கள் மாநாடு மொஸ்கோ நகரில நடந்துது. 1917 மார்ச் 8 ஆம் திகதி ரஷ்யாவில பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டத்தை நினைவு கூருறவகையில இனிமேல எல்லா நாட்டிலயும் மார்ச் 8 ஆம் தேதிதான் மகளிர் தினத்தை கொண்டாட வேணுமென்டு முடிவுசெஞ்சவை. உதுக்குப்பிறகுதான் மார்ச் 8 ஆம் திகதி உலக மகளிர் தினம் நடைமுறையில வந்தது கண்டியே.”

“அண்ண பெண்கள் தினம் மாதிரி ஆண்கள் தினம் ஒன்டு கிடக்கே?”

“ஆண்கள் தினம் என்டு ஒரு தினம் கிடக்கு உது நவம்பர் 19 ஆம் திகதி. ஆனா ஒன்டு தெரியுமோ? இலங்கையில பெண்கள் தினத்தை கொண்டாடுறவை ஆனா மொத்த சனத்தொகையில 50 சத வீதம் பெணகள் இருக்கினம். ஆனா எங்கட நாடாளுமன்றத்தில 5.8 சத வீத பெண்கள்தான் எம்.பி க்களா இருக்கினம். உந்த அளவிலதான் கிடக்குது நாங்கள் பெண்களுக்கு கொடுக்கிற மரியாதை.”

“வெளியில சொன்னா வெக்கமென்ன?”

Comments