அமெரிக்காவில் சைவ சமயம் அறிமுகமாகுவதற்கு வித்திட்ட சிவயோக சுவாமிகள் | தினகரன் வாரமஞ்சரி

அமெரிக்காவில் சைவ சமயம் அறிமுகமாகுவதற்கு வித்திட்ட சிவயோக சுவாமிகள்

 ரி.ஷி. தொண்டுநாதன் சுவாமிகள்...

அமெரிக்கா ஹாவாய் சைவ ஆதீனம்.

யாழ்ப்பாணத்து மாமுனிவராகப் போற்றப்பட்ட தவத்திரு சிவயோக சுவாமிகளே, அறுபது வருடங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் சைவ சமயம் அறிமுகமாவதற்கு வித்திட்டார் என்பதுடன், இதற்கான பிள்ளையார் சுழி போடப்பட்டு எழுபது வருடங்கள் நிறைவுபெறுகின்றன என்பதும் சிலருக்குத் தெரிந்தாலும், பலர் இந்தச் செய்தியை அறியாமலிருக்கலாம்.

தவத்திரு சிவயோக சுவாமிகளால் ஆட்கொள்ளப்பட்டு துறவற நிலையடைந்த அமெரிக்க இளைஞர் ஒருவரின் ஆன்மீகப் பணியின் முதற்கட்டமாக யாழ். குடாநாட்டிலுள்ள அளவெட்டி கிராமத்தில் ஆச்சிரமம் ஒன்றையும், அதனைத் தொடர்ந்து அமெரிக்காவில் சைவ ஆதீனமொன்றையும் நிறுவியிருப்பது, ஒரு வரலாற்றுப் பதிவாகும். இதனூடாக அளவெட்டியிலிருந்து அமெரிக்காவுக்கு சைவசமயம் கொண்டுவரப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது.

சிவயோக சுவாமிகளின் பெருமையைக் கேள்வியுற்ற ஆன்மீகத் தாகம் கொண்ட 21 வயதுடைய அமெரிக்க இளைஞர் ஒருவர் 1949 ஆம் ஆண்டு இலங்கைக்கு வந்தார். கொழும்பில் தங்கியிருந்த இவரை, அளவெட்டியைச் சேர்ந்த கந்தையா செட்டியார் என்ற சைவப்பெரியார் சந்தித்தார். இவரிடம் அந்த அமெரிக்க இளைஞர் ஒரு குருவை தேடிவந்திருப்பதாகச் சொன்னார். கந்தையா செட்டியார் அந்த அமெரிக்க இளைஞரை, யாழ்ப்பாணம் அழைத்துவந்து, அளவெட்டியிலுள்ள தனது வீட்டில் தங்கவைத்து சைவத்தமிழ் கலாசாரத்தையும் சமய நெறிமுறைகளையும் கற்றுக்கொடுத்தார். தினமும் அளவெட்டி கும்பழாவளை பிள்ளையார் கோயிலுக்குச் சென்றும் வழிபடச்செய்தார். அந்த அமெரிக்க இளைஞர் சமய அனுட்டானங்களில் பக்குவநிலை அடைந்ததும் இவரை ஒருநாள் வைகாசி பூரணை தினத்தன்று கந்தையா செட்டியார் சிவயோக சுவாமிகளிடம் அழைத்துச் சென்றார்.

அந்த அமெரிக்க இளைஞரின் வருகையை எதிர்பார்த்திருந்த சிவயோக சுவாமிகள், அவரை தனது சீடர்களுள் ஒருவராக ஏற்று, சுப்பிரமுனி எனும் நாமாகரணம் சூட்டி, புனித சந்நியாச தீட்சையை வழங்கினார். சிவயோக சுவாமிகள் இவரது முதுகில் ஓங்கி அடித்து “இனி உலகெங்கும் சென்று சிங்கம்போல் கர்ச்சிப்பாய். நீ பல ஆலயங்களை அமைத்துப் பலருக்கு உணவளிப்பாய்” என்று ஆசி வழங்கினார்.இந்த அடியானது அந்த அமெரிக்க இளைஞரை நாதசித்தர் மரபில் சேர்க்கும் தீட்சையாக அமைந்தது.

சிவயோக சுவாமிகளின் ஆசியைப் பெற்றுக்கொண்ட அந்த இளைஞர் சுப்பிரமுனிய சுவாமிகளாக இந்து மக்களால் போற்றித் துதிக்கப்பட்டார். அந்தக் காலப்பகுதியில்தான் அளவெட்டி கிராமத்தில், சிவயோக சுவாமிகளின் ஆசியுடன் ஆச்சிரமமொன்றையும், அங்கு பசுபதீஸ்வரர் ஆலயத்தையும் ஸ்தாபித்தார். இன்று உலகளாவிய ரீதியில் சேவையாற்றிவரும் சைவ சித்தாந்த தர்மசபை அளவெட்டி சுப்பிரமுனிய ஆச்சிரமத்தில்தான் ஆரம்பமாகியிருப்பது சிறப்புக்குரியது.

சிவயோக சுவாமிகளின் ஆணைப்படி அமெரிக்கா திரும்பிய சுப்பிரமுனிய சுவாமிகள், அங்கு செய்யவேண்டிய பணிகளுக்கு தன்னை ஆயத்தமாக்கும் வகையிலான செயற்பாடுகளில் ஈடுபட்டார். 1957ஆம் ஆண்டு தனது முப்பதாவது வயதில் சுவாமிகள் இமாலய கலாபீடத்தை நிறுவியதுடன், கலிபோர்னியாவில் அமெரிக்காவின் முதலாவது இந்துக் கோயிலையும் ஸ்தாபித்ததன் ஊடாக மேலை நாட்டில் அவரது ஆன்மீகப் பணி ஆரம்பமானது. அமெரிக்காவின் ஹாவாய் தீவுகளில் ஒன்றான குவை எனும் பகுதியிலுள்ள புனித வைலுவ நதிக்கரையிலுள்ள பெரும் நிலப்பரப்பில் 1970ஆம் ஆண்டு சைவ ஆதீனத்தை நிறுவினார். இங்கு ஆறு அடி உயரமான நடராஜப்பெருமானை மூல மூர்த்தியாகத் கொண்ட ஆலயத்தையும் அமைத்தார். இதுவே மேலைத் தேசத்தில் தோற்றம் பெற்ற முதலாவது சிவன் கோயிலாகவும் சிறப்புப் பெற்றுள்ளது.

1975ஆம் ஆண்டு மாசி மாதம் சுப்பிரமுனிய சுவாமிகளுக்கு சிவபெருமான் ஓர் அகக்காட்சியை அருளினார். இதன்படி புனித வைலுவ நதிக்கரையில் சுயம்புலிங்கமொன்றைக் கண்டார். இதனை மையமாகக்கொண்டே சன்மார்க்க இறைவன் கோயிலை முற்றிலும் கருங்கற்களைக் கொண்டு உருவாக்குவதற்கான ஏற்பாடுகளை சுவாமிகள் மேற்கொண்டார். அதற்கான பணிகள் இடம்பெற்றுவரும் வேளையில், 1987ஆம் ஆண்டு ஆவணி மாதத்தில் இங்கு பிரதிஷ்டை செய்வதற்காக ஆறுகோணங்களைக் கொண்டதும், 39அங்குல உயரமானதுமான ஸ்படிகலிங்கமொன்றும் சுவாமிகளுக்கு கிடைத்தது. ஆலயம் அமைக்கப்பட்டுவரும் வளாகத்தில், நுாற்றெட்டு வில்வமரங்களின் மத்தியில் கோயில்கொண்டு எழுந்தருளியிருக்கும் சுயம்புலிங்கேஸ்வரருக்கு நித்தியபூசைகள் இடம் பெற்றுவருகின்றன.

சுப்பிரமுனிய சுவாமிகள் 1979ஆம் ஆண்டு ஹின்ரூஷியம் ருடே எனும் பெயரிலான சஞ்சிகையொன்றை ஆரம்பித்து வைத்தார். ஹாவாய் சைவ ஆதீன வெளியீடான இச்சஞ்சிகை சர்வதேச ரீதியில் இந்துக்களின் குரலாக இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கிறது. இந்து சமயம் சார்ந்த பல நூல்களையும் சுவாமிகள் எழுதியிருக்கிறார்.

1982ஆம் ஆண்டில் இலங்கைக்கு வருகைதந்த சுவாமிகளால் யாழ் குடாநாட்டிலுள்ள கோப்பாய் கிராமத்தில் சுப்பிரமுனிய கோட்டம் ஸ்தாபிக்கப்பட்டதுடன் அங்கு சாந்திலிங்கேஸ்வரர் திருக்கோயிலும் தோற்றம் பெற்றது. 1983ஆம் ஆண்டில் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தின் பின் சுவாமிகள் இலங்கைத் தமிழ் அகதிகள் நிவாரண நிதியமொன்றை ஆரம்பித்து, அதனூடாக ஏராளமான பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிகள் வழங்கியிருப்பதையும் சிறப்பாகக் குறிப்பிடலாம்.

சுப்பிரமுனிய சுவாமிகளது சமய,சமூகநலப் பணிகளின் மற்றொரு செயற்பாடாக இந்து கலாசார அறக்கட்டளையை உருவாக்கி, அதனுாடாக உலகளாவியரீதியில் அநாதை இல்லங்கள், முதியோர் இல்லங்கள் மற்றும் சமய நிறுவனங்கள் போன்றவற்றுக்கும் உதவி வந்திருப்பதையும் சிறப்பாகச் சொல்லலாம். இந்த அறக்கட்டளை ஊடான உன்னத பணிகள் ஹாவாய் சைவ ஆதீனத்தால் இப்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. 1986ஆம் ஆண்டு புதுடில்லியில் நடைபெற்ற உலக சமய பாராளுமன்ற நிகழ்வின்போது, சுவாமிகள் அவரது உலகளாவிய சமய, சமூக சேவைகளுக்காக ‘ஜகதாச்சரியார்’ என்ற விருது வழங்கிக் கெளரவிக்கப்பட்டார். சுவாமிகளுக்கு 2000ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையினால் முன்னாள் செயலாளர் யூதாண்ட் ஞாபகார்த்த சமாதான விருதும் வழங்கப்பட்டதுடன், ஐக்கிய நாடுகள் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற உலக சமாதான மாநாட்டிலும் கலந்து கொண்டு உரையாற்றுவதற்கு சந்தர்ப்பம் கிடைத்தது.

சுப்பிரமுனிய சுவாமிகள் 2001 நவம்பர் 12ஆம் திகதியன்று நள்ளிரவு ஹாவாய் சைவ ஆதீனத்தில் மகா சமாதியடைந்தார். இவருக்குப்பின், இவரது பிரதம சீடராக விளங்கிய தவத்திரு போதிநாத வேலன் சுவாமிகள் ஹாவாய் சைவ ஆதீனத்தின் முதல்வராகப் பொறுப்பேற்றுக் கொண்டதுடன், சமய சமூகப் பணிகளையும் முன்னெடுத்து வருகிறார்.

சிவயோக சுவாமிகளின் 55ஆவது குருபூசை நிகழ்வில் கலந்துகொள்வதற்காக, போதிநாத வேலன் சுவாமிகள் உலகின் பல பாகங்களையும் சேர்ந்த 55 அடியவர்களுடன் இப்போது யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார்.

இவரது குருநாதரால் ஸ்தாபிக்கப்பட்ட கோப்பாய் ஸ்ரீ சுப்பிரமணிய கோட்டத்திலும், கோப்பாய் ஸ்ரீ சாந்திலிங்கேஸ்வரர் ஆலயத்திலும் இடம்பெறும் பூசை வழிபாட்டிலும், கொழும்புத்துறையிலுள்ள சிவயோக சுவாமிகள் ஆச்சிரமத்தில் இடம்பெறும் குருபூசை வைபவத்திலும் போதிநாத வேலன் சுவாமிகளும், அடியவர்களும் கலந்துகொள்ளவிருக்கிறார்கள்.

 

Comments