கூட்டமைப்பின் சுயநலப் போக்ேக தள்ளாத வயதிலும் என்னை கட்சி ஆரம்பிக்க வைத்தது | தினகரன் வாரமஞ்சரி

கூட்டமைப்பின் சுயநலப் போக்ேக தள்ளாத வயதிலும் என்னை கட்சி ஆரம்பிக்க வைத்தது

சுமித்தி தங்கராசா (யாழ்ப்பாணம் குறூப் நிருபர்)

“தமிழ் மக்கள் ஒருமித்து நினைத்தால் போராட்டத்தைத் தமக்குச் சாதகமாக முடிவுக்குக் கொண்டு வரலாம். “எமது கொள்கை ரீதியான ஒற்றுமையே சாதகமான தீர்வைக் கொண்டு வரும்”.

அரசியல் தீர்வு எதுவும் கிடைக்காது எமக்குக் கிடைத்ததைச் சுருட்டிக் கொள்வோம்” என்ற மனோநிலை எம்மவரிடம் இருக்கும் வரை எமது கொள்கை ரீதியான போராட்டம் தொடரும். ஆனால் உடனே தீர்வு கிட்டாது என்கிறார் வட மாகாண முன்னாள் முதல்வர் சி.வி.விக்ேனஸ்வரன். தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய செவ்வியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சுயநலம் சார்ந்து செயற்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.

அவரது நேர்காணல் பின்வருமாறு:-

கேள்வி: தமிழ் மக்கள் கூட்டணியினால் இனப்படுகொலை தொடர்பான ஆவணம் ஜெனிவா கூட்டத்தொடரில் சமர்ப்பிக்கப்படவுள்ளமை மற்றும் நீதியரசரின் ஜெனிவா பயணம், தமிழ் மக்களுக்கு புதிய பாதையை உருவாக்குமா?

பதில்: தீர்மானம் எடுப்பது குழுவின் உறுப்பு நாடுகள். நாம் எம்மால் ஆனமட்டில் எமது கருத்துக்களை உரியவர்களுக்கு எடுத்தியம்பியுள்ளோம். மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை மற்றும் சர்வதேச நீதிபதிகள் ஆணைக் குழுவின் அறிக்கை ஆகியன எமது எதிர்பார்ப்புக்களைக் கூட்டியுள்ளன. இருந்து பார்ப்போம். நான் ஜெனிவா போவதாக உத்தேசமில்லை.

கேள்வி: ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை தொடர்பாக உங்களின் நிலைப்பாடு?

பதில்: முன்னைவிட முன்னேற்றகரமானதாகத் தோன்றுகின்றது. சர்வதேச நீதிபதிகள் ஆணைக்குழு ஒத்த கருத்துக்களைக் கூறியுள்ளமையும் ஒரு முன்னேற்றம் ஆகும்.

கேள்வி: புதிய பிரேரணையான 40/1வது பிரேரணை தமிழ் மக்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்தக் கூடியதா?

பதில்: இல்லை. கட்டுப்பாடுகள், காலவரையறைகள் அற்ற கால அவகாசம் ஒரு நன்மையும் கொடுக்காது. அத்துடன் அது ஒரு முதல் வரைவு என்றே நினைக்கின்றேன். எவ்வளவு தான் கால அவகாசம் கொடுத்தாலும், நாள், நேரக் கட்டுப்பாடுகள் விதித்தாலும் இலங்கை தனது கடப்பாடுகளை நிறைவேற்ற முன்வராது. ஆகவே சர்வதேச குற்றவியல் மன்றம் ஒன்றே தீர்வாகும்.

கேள்வி: ஜனாதிபதி அனுப்பும் குழு மீது நம்பிக்கை இல்லையா? ஏன் அந்தக் குழுவினரிடம் உங்களின் ஆவணங்களைச் சமர்ப்பிக்கவில்லை.

பதில்: தற்போது ஒரு குழுவே போகின்றது. இரண்டல்ல. அதுவும் பிரதமரின் அமைச்சரின் தலைமைத்துவத்தில். ஆனால் கலாநிதி அமுனுகமவும் கலாநிதி ராகவனும் அதில் இடம்பெற்றுள்ளார்கள். தமிழ் மக்கள் பேரவையின் தீர்மானப் பிரதி ஆளுநர் சுரேன் இராகவனிடம் இருக்கின்றது. எந்த ஒரு பெரும்பான்மையினக் குழுவும் தமது போர்வீரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காது. ஆகவே ஓரிரு தமிழர்களால் என்ன செய்ய முடியும் என்பதை யூகித்து அறிந்து கொள்ள வேண்டும்.

கேள்வி: அரசியல் தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு மெளனம் சாதிப்பதுடன், கால அவகாசம் தொடர்பில் உறுதியான நிலைப்பாட்டை எடுக்கவில்லை. த.தே.கூ அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவது தொடர்பில் உங்களின் நிலைப்பாடு?

பதில்: சுயநலம் சார்ந்த நடவடிக்கைகள் தான் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நடவடிக்கைகள். தமிழ் தேசிய கூட்டமைப்பின் இவ்வாறான நடவடிக்கைகள் தான் இந்தத் தள்ளாத வயதிலும் விக்னேஸ்வரனைப் புதிய கட்சி ஒன்றைத் தொடக்க வைத்தது.

கேள்வி: தன்னாட்சித் தீரவையே தமிழ் மக்கள் கேட்கின்றார்கள் என சர்வதேசத்திற்கு வெளிப்படையாக அதாவது நேரடியாகச் சொல்ல முடியாதா?

பதில்: சர்வதேசத்திற்கு நேரடியாக சொல்ல முடியும். சொல்லியும் உள்ளோம். ஆனால் தீர்மானம் எடுப்பது யார்? சர்வதேசத்தின் அதிகாரங்கள் வரையறைக்குட்பட்டன. உறுப்பு நாடுகளின் நடவடிக்கைகள் அவற்றின் நல்உரித்துக்கள் அப்பாற்பட்டவை. இலங்கையின் மத்திய அரசாங்கம் கட்டுக்கதையான மகாவம்சம் அப்பாற்பட்டது. இது தான் சூழல்!

கேள்வி: தமிழ் மக்களின் உரிமைக்காகவும், நீதிக்காகவும் இவ்வாறு எத்தனை வருடங்கள் போராட்டங்களை முன்னெடுக்க முடியும்? தமிழ் மக்களின் போராட்டங்கள் எங்கு சென்று நிறைவடையும்.?

பதில்: தமிழ் மக்கள் ஒருமித்து நினைத்தால் போராட்டத்தைத் தமக்குச் சாதகமாக முடிவுக்குக் கொண்டு வரலாம். எமது கொள்கை ரீதியான ஒற்றுமையே அதைக்கொண்டு வரும். “அரசியல்த் தீர்வு எதுவும் கிடைக்காது எமக்குக் கிடைத்ததைச் சுருட்டிக் கொள்வோம்” என்ற மனோ நிலை எம்மவரிடம் இருக்கும் வரை எமது கொள்கை ரீதியான போராட்டம் தொடரும். ஆனால் உடனே தீர்வு கிட்டாது. போராட எமக்கு மக்கள் தேவை. வெளிநாடுகளை எம்மக்களில் கூடிய தொகையினர் நாடத் தொடங்கினால் உள்நாட்டில் யார் போராட்டங்களைக் கொண்டு நடத்துவார்கள்? சுயநல நோக்குடன் வெளிநாடு நாடி எம் இளைஞர்கள் செல்வதை நிறுத்த வேண்டும். தன் நிறைவு நாடி எம் மக்கள் பொருளாதார மேம்பாட்டை அடைய நாம் வழி வகுக்க வேண்டும்.

வெளிநாட்டு மலசலகூடங்களைக் கழுவுவதிலும் பார்க்க உள்நாட்டில் தலைநிமிர்ந்து தற்சார்புடன் வேலைகள் செய்ய எமது இளைஞர்கள் முன்வரவேண்டும். இன்று இங்கு வேலைகள் செய்ய ஆட்கள் இல்லை. எமது கொல்லன், கொத்தன், தச்சன் என்று பலர் வெளிநாடுகளில் நன்றாக வாழ்கின்றார்கள்.

போராட்டங்களை முன்னெடுக்க மக்கள் தயாராக இருக்க வேண்டும். ஒரு சில வருடங்களில் இவ்வுலக வாழ்வை நீக்கப் போகும் எமக்கா இந்தப் போராட்டம்.? ஆகவே எமது இளைஞர்கள் நினைத்தால் சாதிக்கலாம் என்பதை நாம் உணர வேண்டும். அதனால்த் தான் என் கட்சி இளைஞர் யுவதிகளையும் பிரபல்யம் அடையாத நேர்மையான பற்றுறுதி கொண்ட மக்களையும் எம்முடன் இணைத்து முன்னேறி வருகின்றோம். மக்கள் அவர்களையும் என்னையும் ஏற்றால் அரசியலில் ஒரு புதிய கலாசாரத்தை நாம் உட்புகுத்துவோம் என்றார்.

Comments