நீலங்களுக்கிடையிலான 140 ஆவது சமர்; வெற்றிவாகை சூடியது சென்.தோமஸ் | தினகரன் வாரமஞ்சரி

நீலங்களுக்கிடையிலான 140 ஆவது சமர்; வெற்றிவாகை சூடியது சென்.தோமஸ்

இம்மாதம் 7 ஆம் திகதி ஆரம்பித்து நேற்றுவரை 3 தினங்கள் நீடித்த நீலங்களுக்கிடையிலான கிரிக்கெட் சமரில் சென்தோமஸ் கல்லூரி வெற்றிவாகை சூடியது. கொழும்பு ரோயல் கல்லூரிக்கும், கல்கிஸ்ஸை பரி. தோமாவின் கல்லூரிக்கும் (சென்தோமஸ்) இடையிலான 140 ஆவது கிரிக்கெட் சமரில் பரி. தோமாவின் கல்லூரி 12 வருடங்களின் பின்னர் வெற்றிபெற்றுள்ளது.

கொழும்பு எஸ்.எஸ்.ஸி மைதானத்தில் கடந்த 7 ஆம் திகதி ஆரம்பமான நீலங்களுக்கிடையிலான சமரில் நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற ரோயல் கல்லூரி அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. முதல் நாளன்று 158 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் அது இழந்தது. ரோயல் கல்லூரியின் முதலாவது இன்னிங்ஸில் அதிகூடிய ஓட்டமான 36 ஓட்டங்களை காமில் மிஸாரா பெற்றார். பரி. தோமாவின் கல்லூரியின் கலன பெரோ 54 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

ரோயல் கல்லூரியின் முதலாவது இன்னிங்ஸை 158 ஓட்டங்களாக மட்டுப்படுத்தியதில் பரி. தோமாவின் பந்து வீச்சாளர் கலன பெரேராவின் பங்கு அளப்பரியது.

அடுத்து துடுப்பெடுத்தாடிய பரி. தோமாவின் கல்லூரி அணி முதல்நாள் ஆட்ட நிறைவின்போது ஆறு விக்கெட் இழப்புக்கு 158 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. முதலாம் நாளன்று பரி. தோமாவின் முதலாம் இன்னிங்ஸை காமில் மிஸாரா 32 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தி மட்டுப்படுத்தினார்.

இரண்டாம் நாளான 8 ஆம் திகதியன்று ஆட்டத்தை ஆரம்பித்த பரி. தோமாவின் கல்லூரி , 296 ஓட்டங்களை எடுத்து தனது முதலாவது இன்னிங்ஸை ரோயல் கல்லூரியிலும் பார்க்க 138 ஓட்டங்கள் முன்னிலையில், சகல விக்கெட்டுக்களையும் இழந்து நிறைவுசெய்தது.

தனது முதலாவது இன்னிங்ஸில் எட்டு விக்கெட் இழப்புக்கு 169 ஓட்டங்களைப் பெற்ற பரி . தோமோவின் கல்லூரி அணியை 296 எனும் இலக்கு வரை இட்டுச் சென்றதில் உமயங்கன சுவாரிஸ் மற்றும் கலன பெரேரா ஆகியோரின் இணை ஆட்டப் பங்களிப்பு அளப்பரியது. உமயாங்கன சுவாரிஸ் ஆட்டமிழக்காமல் 62 ஓட்டங்களையும் கலன பெரேரா 62 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.

ஆட்டத்தின் இரண்டாம் நாளன்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த ரோயல் கல்லூரி இரண்டாம் நாளன்று ஆட்ட நேர முடிவின்போது நான்கு விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்களை எடுத்து பரி தோமாவின் கல்லூரியிலும் 10 ஓட்டங்கள் முன்னிலையில் திகழ்ந்தது.

ரோயல் கல்லூரியின் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களான காமில் மிஷாரா மற்றும் இசிவர திஸாநாயக்க ஆகியோர் சிறந்த ஆரம்பத்தை ரோயல் கல்லூரிக்குப் பெற்றுக் கொடுத்தனர்.

மூன்றாம் நாளான நேற்று மீண்டும் விளையாட ஆரம்பித்த ரோயல் கல்லூரி அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதற்கு பரி. தோமாவின் கல்லூரி அணி மிகுந்த சிரமப்பட்டது. ஆக்ரோஷத்துடன் விளையாடிய ரோயல் கல்லூரி அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 258 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்தது. ரோயல் கல்லூரியின் பசிந்து சூரிய பண்டார 160 பந்துகளுக்கு முகம் கொடுத்து 67 ஓட்டங்களைப் பெற்று தனது அணி, பரி. தோமாவின் கல்லூரி அணியிலும் பார்க்க 121 ஓட்டங்கள் முன்னணியில் திகழ வழிவகுத்தார்.

வெற்றிபெற 122 ஓட்டங்கள் தேவை என்கிற நிலையில் துடுப்பெடுத்தாட ஆரம்பித்த பரி. தோமாவின் கல்லூரி, ஆரம்பத்தில் விரைவாக விக்கெட்டுக்களை இழந்தாலும், 20 ஓவர்களில் 124 ஓட்டங்களைப் பெற்று வெற்றியைத் தனதாக்கிக் கொண்டது.

நீலங்களுக்கிடையிலான 140 ஆவது கிரிக்கெட் சமரில் ஆட்ட நாயகனாக கலன பெரேரா தெரிவானார். சிறந்த துடுப்பாட்ட வீரராக உமயாங்கன சுவாரிசும், சிறந்த பந்து வீச்சாளராக கலன பெரேராவும், சிறந்த களத் தடுப்பாளராக ஷாலின் டிமெல்லும் தெரிவு செய்யப்பட்டனர்.

இதுவரை நிகழ்ந்த நீலங்களுக்கிடையிலான 140 கிரிக்ெகட் சமர்களிலும் 56 சதங்கள் அடிக்கப்படுள்ளன. இவற்றில் பரி. தோமாவின் கல்லூரி 29 சதங்களையும் ரோயல் கல்லூரி 27 சதங்களையும் அடித்துள்ளன.

இத்தொடரின் முதலாவது சதம் 1917 ஆம் ஆண்டில் இத்ததொடரின் 38 ஆவது போட்டியில் அடிக்கப்பட்டது.

Comments