இலங்கை - தென்னாபிரிக்க ஒருநாள் தொடர்: 3ஆவது போட்டி இன்று டர்பனில் | தினகரன் வாரமஞ்சரி

இலங்கை - தென்னாபிரிக்க ஒருநாள் தொடர்: 3ஆவது போட்டி இன்று டர்பனில்

உலகக் கிண்ணத் தொடருக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் கடந்த வருடங்களைப் போலவே இவ்வருடமும் இலங்கை அணி ஒருநாள் போட்டிகளில் தற்போது வரை பின்னடைவையே சந்தித்து வருகின்றது. இவ்வருடம் இதுவரை நடைபெற்ற 5 ஒருநாள் போட்டிகளிலும் இலங்கை அணி தோல்வியுற்றுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.

2--0 என்ற ரீதியில் ஒரு நாள் தொடரில் பின்னிலையிலுள்ள இலங்கை அணி இன்று டர்பனில் நடைபெறவுள்ள 3வது போட்டியில் மோதவுள்ளது.

முதல் இரு போட்டிகளின் தோல்வி குறித்து கிரிக்கெட் நிர்வாகம், மற்றும் முன்னாள் வீரர்கள், தேர்வாளர்கள் மத்தியில் அதிருப்பதி ஏற்பட்டுள்ளது. இத் தோல்விகள் குறித்து தலைவர் லசித் மாலிங்க துடுப்பாட்ட வீரர்களைச் சாடியுள்ளார்.

இலங்கை கிரிக்கெட் தலைவர், செயலாளர்கள், நிர்வாகிகள் அவசரமாக தென்னாபிரிக்க சென்று வீரர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்ந்து உலகக் கிண்ணத்துக்கு முன்பு அணியைக் கட்டியெழுப்ப நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் சம்மி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தென்னாபிரிக்காவுடன் பெற்ற டெஸ்ட் வெற்றிக் களிப்புடன் சிறு சிறு மாற்றங்களுடன் இலங்கை அணி ஜோகன்னஸ்பேக்கில் நடைபெற்ற முதலாவது ஒருநாள் போட்டிக்கு முகம் கொடுத்தது. நாணயச் சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி இலங்கையை துடுப்பெடுத்தாடப் பணித்தது.

திக்வெல்லவுடன் மீண்டும் அணிக்கு அழைக்கப்பட்ட உபுல் தரங்க இலங்கையின் ஆரம்பத் துடுப்பாட்ட வீரர்களாகக் களமிறங்கினாலும், இருவரும் நிலைத்து நின்று ஆடவில்லை. வழமை போல் பதற்றத்துடன் ஆடிய டிக்வெல்ல நிகினி வீசிய போட்டியின் இரண்டாவது ஓவரில் ஒரு பவுண்டரி விளாச அடுத்த பந்தையும் அடித்தாட முற்பட்டபோது பந்து அவ்விடத்திலேயே மேலெழுந்ததால் பிடி எடுக்கப்பட்டு ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரிலேயே உபுல் தரங்கவும் 9 ஓட்டங்களுக்கு அட்டமிழந்தார். இப்போட்டியில் ஆரம்பம் மோசமாக அமைந்தாலும் மத்திய வரிசையில் வந்த வீரர்கள் சிறப்பாக ஆடினர். 37 ஓவர் முடிய 4 விக்கெட் இழப்புக்கு 190 ஓட்டங்கள் பெற்று 300 ஓட்டங்களைக் கடந்து பெறும் என்ற நிலையில் இருந்த இலங்கை அணி மெண்டிஸ் 60 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்ததும் பின் வரிசையில் வந்த வீரர்கள் விரைவாக ஆட்டமிழந்தனர்.

முக்கியமாக பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திஸர பெரேரா 7 ஓட்டங்களுக்கு ஆட்டமிழிந்து ஏமாற்றமளித்தார். இறுதியாக இலங்கை 231 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தது. தனது முதல் போட்டியில் களமிறங்கிய ஓஷத பெர்னாண்டோ சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இல்லாத ஓட்டமொன்றை பெற்றுக்கொள்ள முயன்ற போது 49 ஓட்டங்களுக்கு துரதிஷ்டவசமாக ஆட்டமிழந்து தனது முதல் போட்டியிலேயே அரைசதம் பெறும் வாய்ப்பை இழந்தார். வழமைபோல் இப்போட்டியிலும் சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாஹிர் சிறப்பாகப் பந்து வீசி மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி இலங்கை அணிக்கு சவாலாக இருந்தார்.

இலகுவான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய தென்னாபிரிக்க அணி விஷ்வ பெர்னாண்டோவின் முதல் ஓவரிலேயே ரீஸா ஹென்ரிக்ஸை இழந்தாலும் குயின்டன் டி கொக்கின் அரைச்சதமும், டூ பிளஸியின் சதமும் கைகொடுக்க அவ்வணி இலகுவாக வெற்றி பெற்றது. பிளஸியின் இலகுவான பிடியொன்றை லக்ஷான் தவறவிட்டமை அவ்வணியின் இலகு வெற்றிக்கு சாதகமாய் அமைந்தது.

தொடரின் 2வது போட்டி கடந்த புதன்கிழமை செஞ்சூரியினில் நடைபெற்றது. நாணயச்சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.

ஆரம்பம் முதலே அதிரடியாக ஓட்டங்களைக் குவித்த தென்னாபிரிக்க அணி 10 ஓவர்கள் முடிவில் 80 ஓட்டங்களைப் பெற்றிருந்தது. அவ்வணியின் முதல் விக்கெட் 91 ஓட்டங்கள் இருக்கும் போது ரீஸா ஹென்ட்ரிக்ஸ் 29 ஓட்டங்களுககு ஆட்டமிழந்தார். இரண்டாவது விக்கெட்டுக்காக இணைந்த குயின்டன் டி கொக்கும் டூ பிளெஸியும் அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டனர். 70 பந்துகளில் 94 ஓட்டங்கள் எடுத்த வேளை கொக் ஆட்டமிழந்தார். இவரது ஆட்டமிழப்புடன் இலங்கை அணிப் பந்து வீச்சாளர்கள் துல்லியமாகப் பந்து வீச ஆரம்பித்தனர். இதன் காரணமாக மத்திய வரிசையில் வந்த வீரர்கள் நிலைத்தாட முயற்சிக்காமல் அடித்தாட முயற்சித்ததால் சீரான இடைவெளியில் அவ் அணியின் விக்கெட்டுகள் விழ ஓட்ட வேகமும் குறைந்தது. 57 ஓட்டங்கள் எடுத்த வேளையில் டு பிளெஸியும் ஆட்டமிந்து செல்ல அவ்வணி 45 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 252 ஓட்டங்களையே பெற முடிந்தது. சிறப்பாகப் பந்து விசிய திஸர பெரேரா 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

சற்று இலகுவான வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி முதல் போட்டியில் சோபிக்கத் தவறிய உபுல் தரங்கவுக்குப் பதிலாக (இன்னும் ஓரிரு சந்தர்ப்பம் வழங்கியிருக்கலாம்.) முதல்தரப் போட்டிகளில் பிரகாசித்த அவிஷ்க பெர்னாண்டோவை ஆரம்ப வீரராகக் டிக்வெல்லையுடன் களமிறக்கியது. டிக்வெல்ல எல்லாப்போட்டிகளில் ஆடும் பாணியிலேயே இப்போட்டியிலும் ஓரிரு பவுண்டரிகளை அடித்துவிட்டு ரபாடா வீசிய பென்சர் பந்தை அடிக்க ஒரே இடத்தில் மேலெழுந்த பந்தை குயின்டன் டி கொக் பிடி எடுக்க ஆட்டமிழ்ந்தார். இவர் இவ்விதமே ஆட்டமிழந்து செல்வது வழமையாகியுள்ளது. இவர் இத் தொடரின் 1வது போட்டியிலும் இவ்விதமே ஆட்டழந்தது குறிப்பிடத்தது. ஆனால் தேர்வாளர்கள் ஆரம்ப வீரராக இவர் மேல் இன்னும் நம்பிக்கை வைத்துள்ளனர்.

இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கை 52 ஆக இருக்கும் போது டெஸ்ட் தொடரின் நாயகன் குசல் பேரேராவும் ஆட்டமிழக்க இலங்கை அணி தடுமாறியது. ஆனால் 4வது ஜோடியாக இணைந்த ஓஷதவும் மெண்டிசும் நிதானமாக ஆடி ஓட்ட எண்ணிக்கையை அதிகரிக்கச் செய்தனர். ஆனால் முதல் போட்டியைப் போல இப்போட்டியில் 4வது விக்கெட் ரன் அவுட் முறையில் ஆட்டமிழக்க இலங்கை அணிக்கு சரிவு ஏற்பட்டது. பின் வரிசையில் வந்த வீரர்கள் இம்ரான் தாஹிரின் சுழலில் சிக்க 33 ஓவர்களில் 138 ஓட்டங்களுக்கு சக விக்கெட்டுகளையும் இழந்து 113 ஓட்டங்களால் தோல்வியுற்றது காகிஸோ ரபாடா சிறப்பாகப் பந்து வீசி 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இப்போட்டியில் இலங்கை அணியின் பந்து வீச்சும் களத்தடுப்பும் மிகவும் சிறப்பாக இருந்தது. ஆனால் துடுப்பாட்டத்தில் கோட்டைவிட்டது. ஒரு வீரர் கூட பொறுப்பாகச் செயற்பட்டிருக்கவில்லை.

இப்போட்டிகளில் இருந்து பாடம் கற்றுக்கொண்டு இன்று நடைபெறும் மூன்றவது போட்டியில் ஒரு அணியாக முயற்சித்தால் வெற்றிபெறலாம். தென்னாபிரிக்க அணியும் ஓரிரு வீரர்களே தொடர்ச்சியாகப் பிரகாசிக்கின்றனர். எனவே இவர்களை விரைவாக ஆட்டமிழக்க இலங்கை அணி வியூகங்களை வகுத்தால் தொடர் தோல்விக்கு முற்றுப்புள்ளி வைக்க வாய்ப்பு ஏற்படும்.

 

Comments