பெருந்தோட்ட பிராந்திய அபிவிருத்தி சபை | தினகரன் வாரமஞ்சரி

பெருந்தோட்ட பிராந்திய அபிவிருத்தி சபை

தேசத்தைக் கட்டியெழுப்பும் தேசிய பொறுப்புக் கூறல் பெரும்பான்மையினருக்கு மட்டுமே உரித்தான ஒன்று என்ற கருதுகோள் பரவலாகவே இருந்து வருகின்றது. 1920களில் இருந்து இவ்வாறான கொள்கை அரசியல்வாதிகளால் முதன்மைப்படுத்தப்பட்டு வந்திருப்பதாகவே அரசியல் ஆய்வாளர்கள் பதிவிடுகின்றார்கள். இதனால் நிலத்தொடர்பற்றதும் பெரும்பான்மை சமூகமாக வாழும் இனப்பிரிவினரை அடிப்படையாக கொண்ட அதிகாரப் பகிர்வு குறித்தும் கூட எவருமே அக்கறை காட்டவில்லை.

இதன் பின்னணியில் மலையக சமூக அபிவிருத்தி என்பது சகல வழிகளிலும் தேசிய நீரோட்டத்தோடு இணைக்கப்பட முடியாதவாறு தடைகளை எதிர்நோக்கியிருந்தது. தற்போதுதான் அந்தத் தடைகள் சட்டபூர்வமாக நீக்கும் நிலைமை தோன்றியுள்ளது. பெருந்தோட்ட பிராந்திய அபிவிருத்தி அதிகாரசபை சட்டம் பாராளுமன்றத்தில் 2018 செப்டம்பர் மாதம் 19ஆம் திகதி ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு வரலாற்று தடம்பதித்தது. இது மலையக அரசியல் வரலாற்றில் வரலாற்றுப் பதிவுக்கான ஓர் நிகழ்வு.

இதேபோல கடந்த மாதம் (பெப்ரவரி 3) புதிய கிராமங்கள் அபிவிருத்தி அதிகாரசபையின் உத்தியோகபூர்வ அங்குரார்ப்பண நிகழ்வும் சபையின் தலைவர் உள்ளிட்ட பணிப்பாளர் சபையின் நியமனம் வழங்கலும் இடம் பெற்றமையானது புதிய மாற்றத்துக்கான தோற்றமாகவே பேசப்படுகின்றது. இதன் தலைவராக தொழிலதிபர் சந்ரா ஷாப்டர் நியமிக்கப்பட்டுள்ளார். புதிய பரிமாணத்துக்கான உரியவழி திறக்கப்பட்டுள்ளது

அத்துடன் 1987 ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபை திருத்தச் சட்டத்தின் 33வது ஷரத்தும் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்துடன் மீள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது. இத்திருத்தம் மலையக மக்களின் நீண்ட நாளைய எதிர்பார்ப்பு. இதன் மூலம் இதுவரை காலமும் ஓரங்கட்டப்பட்டு வந்த பெருந்தோட்ட மக்களுக்கான பிரதேச சபைகளுக்கூடான வரப்பிரசாதங்கள் இனி பெருந்தோட்ட மக்களையும் உள்வாங்கிக் கொள்ளும். உண்மையில் இந்த இரண்டு அம்சங்களும் வெறும் நல்லெண்ண அடிப்படையிலும் கையேந்தும் நிலையிலும் இருந்து வந்த பெருந்தோட்ட அபிவிருத்திப் பணிகளை சட்டச்சிக்கல் ஏதுமின்றி சுயமாகவும் சுதந்திரமாகவும் திட்டமிட அதற்கான நிதி ஒதுக்கீட்டினை நியாயமாகப் பெறவும் உரித்தாளிகளாக்குகின்றது.

பெருந்தோட்டத்துறைக்கு இவ்வாறான அதிகார சபை அவசியம் தேவை என்ற கோரிக்கையானது ஒரு நீண்டகால கனவு. இந்நாளது வரை பொதுநிர்வாக முறைமைக்குள் நுழைய முடியாதிருந்த ஒரு சமூகத்தின் தார்மீக உரிமைகளை இந்த அதிகாரசபை அங்கீகரித்து நிற்கின்றது.

1994ஆம் ஆண்டு ஜனாதிபதியாக பொறுப்பேற்றார் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க. இவர் ​ெபருந்தோட்ட மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் 1997ஆம் ஆண்டு ஓர் தனியான அமைச்சையே உருவாக்கினார். இந்த அமைச்சு 2010 வரைக்கும் நீடித்தது. இவ் அமைச்சின் தோட்டப்புற பிரதி அமைச்சராக அப்போது அமரர் பெ. சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார். அக்காலகட்டத்தில் இந்த அமைச்சு பல்வேறு அமைச்சு திணைக்களங்களின் கீழ் சகல வளங்களையும் கொண்ட ஒரு பலமிக்க அமைச்சாக விளங்கியது. 2006இல் இந்த அமைச்சில் மாற்றம் கொண்டு வரப்பட்டது. தேசிய நிர்மாண அமைச்சோடு இணைக்கப்பட்டு அதனின் ஓர் அங்கமாக செயற்பட்டது. பின்னர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ஆட்சி இந்த அமைச்சை இல்லாமலாக்கியது. அதுவரைக்கும் இவ்வமைச்சின் அமைச்சராக ஆறுமுகன் தொண்டமான் இருந்து வந்தார்.

2015இல் இந்த நல்லாட்சி அரசாங்கம் பதவிக்கு வந்தது. மீண்டும் மஹிந்த ஆட்சியினால் நீக்கப்பட்ட தோட்ட உட்கட்டமைப்பு உருவாக்கம் பெற்றது. பின்னர் அது விரிவுப்படுத்தப்பட்டு மலைநாட்டு புதிய கிராமங்கள் உட்கட்டமைப்பு மற்றும் சமூதாய அபிவிருத்தி அமைச்சாக மாற்றம் பெற்றது. அமைச்சைப் பொறுப்பேற்ற காலகட்டத்தில் இருந்தே அமைச்சர் பழனி திகாம்பரம் அமைச்சின் நடவடிக்கைகளை ஆக்கபூர்வமாக முன்னெடுப்பதற்கு போதுமான வளங்கள் இல்லாமை குறித்து ஆதங்கப்பட்டு வந்தார். வளங்கள் சேர்க்கப்பட்டு வலுவான நிர்வாக கட்டமைப்பு ஒன்றை ஏற்படுத்த வேண்டியதன் அவசியம் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஆலோசனைகள் பெறப்பட்டன. இதனடிப்படையில் மலையகத்துக்கென தனியான ஓர் அதிகாரசபை வேண்டும் என்ற கோரிக்கை பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. அத்துடன் 1987ஆம் ஆண்டு 15ஆம் இலக்க பிரதேச சபை திருத்தச் சட்டத்தின் 33வது ஷரத்து நீக்கப்பட வேண்டும் என்ற வேண்டுகோளும் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்று கனவு நனவாகிப் போயுள்ளது. இதன் பின்னணியில் த.மு.கூட்டணி பிரமுகர்களான அமைச்சர்கள் பழனி திகாம்பரம், மனோ கணேசன், இராஜாங்க அமைச்சர் வே. இராதாகிருஷ்ணன் பாராளுமன்ற உறுப்பினர் ம. திலகராஜ் ஆகியோர் அர்ப்பணிப்புடன் செயற்பட்டார்கள். இதன் மூலம் இரண்டு முக்கிய அமசங்களை உள்வாங்கிக்கொள்ள வேண்டியுள்ளது.

முதலாவது பெருந்தோட்ட மக்களை சமூக, பொருளாதார, கலாசாார, உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் அரச கட்டமைப்புக்குள் சேர்ப்பதனை உறுதிப்படுத்துவது. இதன் மூலம் மலையக சமூகம் தேசிய நீரோட்டத்தில் கலக்க ஏதுவாகும். அடுத்தது தேசிய அபிவிருத்தி செயன்முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தலாகும். இந்த அதிகாரசபை மூலம் பின்வரும் கருமங்கள் ஆற்றப்படும். பல்வேறு அமைச்சுகளோடு தொடர்பினை ஏற்படுத்தி அரச சேவைகளை மலையக சமூகமும் முழுமையாகப் பெறுவதை உறுதிப்படுத்தல், தேசிய மட்டும் மாகாண, மாவட்ட மட்டங்களிலான நிறுவனங்களோடு சேர்ந்தியங்கும், சமுதாயம் சார்ந்த அமைப்புகளின் பங்குபற்றுதல்களை உள்வாங்கல் என்பன இவற்றுள் அடங்கும். மலையக மக்களின் வீட்டுரிமை, காணியுறுதி, கல்வி மேம்பாடு, பெண்கள், சிறுவர்கள், முதியவர்கள், மாற்றுத் திறனாளிகளை நெறிப்படுத்தி வாழ்வாதார மேம்பாட்டுக்கு வழிகாணல் போன்றவைகள் முதன்மை பெறும்.

குறித்த அதிகாரசபை 13 பணிப்பாளர்களை கொண்டு இயங்குமென தெரியவருகின்றது. இதில் நிதி, பெருந்தோட்டக் கைத்தொழில், தொழில் முயற்சி, மாகாண சபைகள், உள்ளூராட்சி அமைச்சு, காணி மற்றும் புதிய கிராமங்கள் அமைச்சுகளின் பிரதிநிதிகள் (12 பேர்) பெருந்தோட்ட கம்பனிகள் சார்பில் ஒருவரென தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அத்துடன் தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அனர்த்த முகாமைத்துவ சேவை நிலையம் என்பனவும் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளன.

இவ்வாறான ஏற்பாடுகள் மூலம் மலையக சமூகம் பிறசமூகங்களுக்குச் சமதையான அபிவிருத்தி பயன்களை அனுபவிக்க வேண்டும் என்னும் நோக்கமே முதன்மைப்படுத்தப்படுகின்றது. இதனால் பெருந்தோட்ட மக்கள் முழுமையான குடிகளாக மாற்றம் அடையும் பின்புலம் உருவாகும். தவிர சுயாதீனமான செயற்பாடுகள் அபிவிருத்திப் பணிகள் துரிதமாக முன்னெடுக்கப்படுவதை உறுதிப்படுத்தவே செய்யும். நகர்வினையொட்டிய நடவடிக்கைகள் வேகம் பெறும். அந்த நகர்வுக்குக் குந்தகம் விளைவிக்கும் சட்டரீதியிலான நிர்வாக சிக்கல்கள் இப்புதிய அதிகார சபை முறைமையின் கீழ் இல்லாதொழிக்கப்பட்டுள்ளது சிறப்பான மாற்றம்.

இந்த அதிகார சபை மூலம் மத்திய மாகாணத்தின் நுவரெலியா, கண்டி, மாத்தளை, ஊவா மாகாணத்தின் பதுளை, மொனராகலை, சப்ரகமுவ, மாகாணத்தின் இரத்தினபுரி கேகாலை, தென் மாகாணத்தின் காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை மேல் மாகாணத்தின் கொழும்பு, களுத்துறை, கம்பஹா, வடமத்திய மாகாணத்தின் பொலனறுவை, வடமேல் மாகாணத்தின் புத்தளம், குருநாகல் ஆகிய 16 மாவட்டங்களை உள்ளடக்கிய வகையிலேயே பெருந்தோட்ட பிராந்தியங்கள் என்ற வரையறை காணப்படும் நிலையில் இங்கு பரந்துபட்டு வாழும் மக்கள் இந்த அதிகார சபையின் கீழ் பயன்பெற முடியும் என்று தகவல்கள் கூறுகின்றன.

மலையக மக்களின் நெடுநாளைய கனவுகள் நிறையவே இருக்கின்றன. தடையில்லாத மலையக அபிவிருத்தி, வாழ்வுரிமைக்கான அடையாளம், தேசிய ரீதியிலான சமூக அங்கீகாரம் என்று ஏராளம். ஏராளம். அவர்கள் சார்பில் கொண்டுவரப்பட்ட சட்டங்கள் 1820முதல் இற்றைவரை அநேகம். ஆனால் ஆனபலன்தான் ஏதுமில்லை.

மலைநாட்டு உட்கட்டமைப்பு அபிவிருத்திக்கான அமைச்சுக்கள் கடந்த காலங்களிலும் இருந்தன. ஆனால் நிர்வாக ரீதியாக அதனை வலுப்படுத்தி சேவையை வழங்க தனியாக ஒரு நிறுவனம் இருக்கவில்லை. அந்தக்குறை நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது.

அதிகார சபை, பிரதேச சபை சட்ட திருத்தம் பற்றிய போதிய விளக்கங்கள் மலையக மக்களிடம் எடுத்துச் செல்லப்படுவது முக்கியம். அப்பொழுதுதான் அதன் பலாபலன்களைப் பெறுவதில் அவர்களும் ஆர்வம் காட்டுவார்கள். அது அவர்கள் தேர்ந்தெடுக்கும் பிரதிநிதிகளை வேலை வாங்க உதவும். எது எப்படியோ ஒரு வரலாற்று சாதனையை தமிழ் முற்போக்குக் கூட்டணி தனதாக்கிக் கொண்டுள்ளது. வரவேற்க வேண்டிய விடயம். அது பழுதாகிப் போய்விடாமல் பக்குவமாய் பாவித்து அப்பாவி மக்களுக்கு உரிய அடையாளத்தை அர்ப்பணமாக்கி தரவேண்டும். இதுவே மலையக சமூக ஆர்வலர்களின் ஆசையும் எதிர்பார்ப்புமாகும். இதுவரை காலமும் பெருந்தோட்டக் கம்பனிகள், ட்ரஸ்ட் நிறுவனங்களின் கட்டுப்பாட்டுக்குள் வைக்கப்பட்டிருந்த ஒரு சமூகத்தின் விடுதலைக்கான சாசனமாகவும் கூட இதனை நோக்கலாம் என்பதே அவதானிகளின் பதிவு.

 

Comments