"தோட்ட சமூகத்துக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கட்சி மாறினேன்!" | தினகரன் வாரமஞ்சரி

"தோட்ட சமூகத்துக்கு சேவையாற்ற வாய்ப்பு கிடைக்கவில்லை என்பதால் கட்சி மாறினேன்!"

எமது வாக்குறுதியை ஏற்று வாக்களித்த தோட்ட மக்களுக்கு கட்சியினூடாக சேவையைப் பெற்றுக் கொடுக்க முடியாத துரதிர்ஷ்ட நிலை ஏற்பட்டமையால் ஸ்ரீ.ல.சு. கட்சியிலிருந்து விலகி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜ.ம.முன்னணியில் இணைந்து கொண்டுள்ளதாக கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் களுத்துறை மாவட்டத்தின் பாலிந்தநுவர பிரதேசசபைத் தேர்தலில் ஸ்ரீ.ல.சு.கட்சியின் சார்பில் போட்டியிட்ட அஷ்க்வெளி தோட்டத்தைச் சேர்ந்த எஸ்.எம். ஜெமினி கணேசன் தெரிவித்துள்ளார்.

கலஹிட்டியாவ, மாரகஹதெனிய ஆகிய இரண்டுவட்டாரங்களை உள்ளடக்கிய பாலிந்தநுவர பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிட்ட இரு தமிழர்களில் நானும் ஒருவன். அஷ்க்வெளி மற்றும் மொகமதியா தோட்ட மக்கள் கூடுதலான ஆதரவை வழங்கியிருந்தனர். இரு தமிழர்கள் போட்டியிட்ட போதிலும் இருவரில் ஒருவராவது வெற்றியீட்டவில்லை. இருந்த போதிலும் தேர்தலில் போட்டியிட தோல்வியுற்ற வேட்பாளர்களும் மக்கள் பிரதிநிதிகள் அல்லவா?

ஸ்ரீ.ல.சு கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன கடிதமூலம் அறியத் தந்திருந்தமைக் கிணங்க மக்களுக்கு சேவை செய்ய முடியும் என்று கட்சியில் நம்பிக்கை வைத்து உழைத்து வந்தேன். ஆனால் எதிர்பார்ப்பு கைகூடவில்லை.

சேவை வழங்கப்படும்போது தோட்ட மக்கள் புறக்கணிக்கப்பட்டு பாரபட்சமாய் நடத்தப்பட்டனர். மலசல கூடங்களுக்கான உபகரணங்கள் பெற்றுக் கொடுக்கப்பட்ட போது தோட்ட லயன்களில் இருப்பவர்கள் புறந்தள்ளப்பட்டனர். இது என்னை மட்டுமல்ல, கட்சிக்கு வாக்களித்த அனைத்து தமிழ் மக்களின் மனதையும் புண்படுத்தியதுடன் வெறுப்படையவும் செய்தது.

லயன்களில் இருப்பவர்களுக்கு வழங்க முடியாது என்றால் லயன்களில் இருந்து வருபவர்களின் வாக்குகளை மட்டும் வாங்கிக் கொள்ளலாமா? தோட்ட மக்களை இவ்வாறு கொச்சைப்படுத்தி வேதனையடையச் செய்தமை மிகவும் கவலைக்குரியதாகும். வாக்குகளைக் கொடுக்கவும் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ள மட்டுத்தான் எமது ஆதரவு தேவைப்படுகின்றது. ஆனால் சேவையைப் பெற்றுக் கொடுக்கப்படும் போது தமிழ் மக்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

எனவே கட்சியில் இருப்பதால் பயனில்லை என முடிவு செய்து ஸ்ரீ.ல.சு. கட்சியிலிருந்து விலகி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜ.ம.முன்னணியில் இணைந்து கொண்டேன் என இவர் கட்சி மாறியதற்கு காரணம் கூறுகிறார்.

"காலமெல்லாம் இப்படியே மற்றவர்களுக்கு எமது வாக்குகளை வாரி வழங்கிவிட்டு ஏமாந்து போகும் நிலையே இருந்து வந்துள்ளது. இனியும் இந்த நிலை நீடிக்கக் கூடாது. எமக்கென நாம் ஒரு வழியைத் தெரிவு செய்து கொண்டு அந்த பாதையினூடாகப் பயணிக்க வேண்டும்.

அந்த ஒரேவழி அமைச்சர் மனோ கணேசன் தலைமையிலான ஜ.ம.முன்னணியே ஆகும். இதன் ஊடாக சேவையைப் பெற்றுக் கொள்ளமுடியும், பெற்றுக் கொடுக்க முடியும் என நம்பிக்கையுண்டு இதன் காரணமாகவே ஜ.ம.முன்னணியில் இணைந்து கொண்டுள்ளேன்.

ஜ.ம.முன்னணியில் இணைந்து கொண்டதையடுத்து அமைச்சர் மனோகணேசனால் அகலவத்த பிரதேசத்துக்கான அமைப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள இவர், மாவட்டத்தின் ஏனைய பிரதேச அமைப்பாளர்களுடன் இணைந்து களுத்துறை மாவட்டத்தில் ஜ.ம.முன்னணியை பலமுள்ள ஒரு அமைப்பாக கட்டியெழுப்பி அதன் ஊடாக மாவட்டம் முழுவதும் பரந்து வாழும் தமிழ் மக்களுக்கான சேவையைப் பெற்றுக் கொடுக்க முன்னின்று பாடுபடுவோம் என மேலும் தெரிவித்துள்ளார்.

Comments