தேயிலை கொழுந்து மேயும் மாடுகள் அலட்சியம் காட்டும் நிர்வாகங்கள்! | தினகரன் வாரமஞ்சரி

தேயிலை கொழுந்து மேயும் மாடுகள் அலட்சியம் காட்டும் நிர்வாகங்கள்!

பெருந்தோட்டத் தேயிலைக் காணிகளில் கால்நடைகளை மேய்ச்சலுக்கு விடுவதால் உயர்தர தேயிலைச் செடிகள் பாதிப்புக்கு உள்ளாக்கப்படுவதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

எனினும் இதுகுறித்து தோட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கும் பட்சத்தில் நல்ல விளைச்சலை தரக்கூடிய தேயிலைச் செடிகளை காப்பாற்ற முடியும் என அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

நுவரெலியா கந்தப்பளை பிரதேச பெருந்தோட்டப்பகுதியில் இவ்வாறு தொடர்ந்தும் இடம்பெறுவதாக தெரிவிக்கப்படுகிறது. கந்தப்பளை பார்க் தோட்டம், சந்திரகாந்தி, தேயிலை மலை, நுவரெலியா ஸ்கிராப், நேஸ்பி, பீட்று ஆகிய தோட்டங்களுக்கு அண்டிய கிராமப் பகுதிகளில் வளர்க்கப்படும் கால்நடைகளே தேயிலைக் காணிகளில் மேய்ச்சலுக்கு விடப்படுகிறதாம்.

மேற்குறித்த தோட்டங்களில் காணப்படும் தேயிலை மலைகளில் அதிக விளைச்சல் தரக்கூடிய சைனா தேயிலை மரங்கள் வளர்க்கப்பட்டுள்ளன.

அதேநேரத்தில் இந்த தேயிலை மலைகளில் புற்களும் அதிகமாக காணப்படுகின்றது. எனினும் தோட்ட நிர்வாகம் தேயிலை மலைகளில் வளர்ந்துவரும் புற்களை அகற்றுவதில் அக்கறை செலுத்துவதில்லை. எனவே இந்தப் புற்களை மேயட்டும் என மாடுகளை தோட்டத்துப் பக்கமாக கால்நடை உரிமையாளர்கள் விரட்டி விடுகிறார்களாம். அவை சிறந்த விளைச்சலைத் தரக்கூடிய தேயிலை மலைகளுக்குச் சென்று அங்கு புற்களை மேய்வதோடு அடுத்த கட்டமாக தேயிலை கொழுந்தையும் மேயத் தொடங்கியிருப்பதுதான் பிரச்சினையாகி இருக்கிறது.

இது தொடர்பில் தேயிலை மலைகளின் காவலாளிகள், மேற்பார்வையாளர்கள், தொழிலாளர்கள் என பலரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படுகின்ற போதிலும் குறித்த தேயிலை மலைகளில் கால்நடைகள் மேய்ச்சலுக்கு விடுவதை தடுக்கும் நடவடிக்கைகளில் அக்கறை காட்டப்படுவதாகத் தெரியவில்லை.

குறைந்தபட்சம் கால்நடைகளின் உரிமையாளர்களை அழைத்து அவர்களிடம் எடுத்துச் சொல்லி நிர்வாகம் எச்சரிப்பதாகவும் தெரியவில்லை. இதனால் தேயிலை மலைகளில் மேய்ச்சலில் ஈடுபடும் கால்நடைகள் தேயிலை மரங்களின் கிளைகளை முறித்துச் செல்வதால் வெய்யில் காலங்களில் தேயிலைச் செடிகள் பட்டுப்போகின்றன.

இவ்வாறான நிலையில் தேயிலை கொழுந்துகளை மாடு அசைபோட்டு விடுவதால் கொழுந்து தடடுப்பாடும் ஏற்பட்டு உரிய கிலோ கொழுந்தை பறிக்க முடியாமல் போய்விடுவதாக தொழிலாளர்கள் கவலை தெரிவிக்கிறார்கள்.

மேலும் கால்நடைகளின் ஊடாக அட்டைகள், உண்ணிகளும் தேயிலை மலைகளில் பரவுவதாகவும் செல்லப்படுகிறது. இதனால் தொழிலாளர்கள் அட்டைக்கடிகளுக்கும், விஷ பூச்சிகளின் கடிகளுக்கும் ஆளாவதுடன் கால்நடைகளின் மேய்ந்து உண்ணும் புற்கள் மிக விரைவாக வளர்ந்து விடுவதால் தேயிலையும் விரைவில் காடாகிவிடுகிறது.

இவ்வாறான காடுகளுக்குள் சிறுத்தைகள், பன்றிகள் வந்து பதுங்க வசதி ஏற்படுகின்றது என சுட்டிக்காட்டும் தொழிலாளர்கள் தோட்ட நிர்வாகங்கள் கால்நடை மேய்ச்சலுக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் எனவும் தொழிற்சங்கங்கள் ஊடாக தோட்ட நிர்வாகங்களின் கவனத்திற்கு கொண்டுசெல்ல வேண்டுமெனவும் கூறுகின்றனர்.

Comments