மன்மதராசன் | தினகரன் வாரமஞ்சரி

மன்மதராசன்

எட்டுக்கும் பத்தடிக்கும் இடைப்பட்ட லயத்துக்காம்பிரா. மழை காலத்தில் கூரை ஒழுகும். சுவர் இடிந்து விழுந்து விடுமோ என்ற பயம். லயத்தில் ஒரு வீட்டில் கரண்டு சோட்டாகி அதுவே பெருசாகி விட்டால் லயமே தீப்பிடிச்சி எரிந்து விடுமோ என்ற அச்சத்தில் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு வாழ்ந்ததெல்லாம் மாறி.... இப்ப ஒரு புதுமாற்றம். ஒரு நிம்மதி.

தனிவீடு, வீட்டுக்குள்ளேயே குடிநீர் வசதி... கேஸ் அடிப்பு, ரைஸ் குக்கர், எல்லா வசதியும் இந்த புதுவீட்டுக்குள்ள இருக்கு.’ என்று எண்ணிக் கொண்ட மாணிக்க வள்ளி, சுவர் ஓர கதிரையில் அமர்ந்து ஏதோ சிந்தனையில் இருந்த தன் கணவனான அழகர் சாமியை நோக்கி, “என்னாங்க பெரிய யோசனையோ...?” என்று கேட்டாள்.

“ஒண்ணு மில்ல.... இதுக்கு முன்ன நாம பரம்பரையா குடியிருந்த லயத்த நெனச்சிப் பார்த்தேன்” என்றவர், “இந்நேரம் லயமா இருந்திருந்தா... தொங்க வூட்டு தொரசாமி, மருந்துக்கார சீரங்கன், தப்பு மனேஜர்... மருதமுத்து, செதம்பரம் எல்லாம் கூடி எதப்பத்தியாவது பேசிக்கிட்டிருப்போம். தோட்டத்தில எந்த லயத்தில என்னா நடந்திருக்கோ... அந்த அந்த சேதியெல்லாம் அங்க வந்திடும். பழைய தபால்காரன் மாரிமுத்து டவுனுக்கு போனா பேப்பரோடத்தான் வருவான். அந்த பேப்பரை வாசித்து ஒலக நடப்பையெல்லாம் தெரிஞ்சுக்கலாம்.

பென்ஷன் எடுத்த பழையக் கட்டைகள் எல்லாஞ் சேர்ந்து மகாநாடு போடுறாங்க என்னு வையப்புரி பேத்திக் கூட கேலிப் பண்ணுவா... எந்த வூட்டுல இருந்தாவது சூட தேத்தண்ணீ வந்திடும்.

‘ந்தா ஒரு வாயிக்கு வெத்தலப் போட்டுக்கங்க’ எவளாவது... வெத்தல, பாக்கு, பொயல உள்ள தாம்பாளத்தட்ட வச்சிட்டுப்போவா... ஆனா.... அது எதுவும் இங்க இல்லையே...?

அனாதப்போல பேச்சுத் தொணைக்கு கூட யாருமில்லாம.... பொயிருச்சே. தனியா தீவில விட்ட மாதிரி இருக்கே. இதுல நீயும் ஏங்கூட இல்லன்னா எனக்கு பித்து பிடிச்சமாதிரிதான் இருக்கும்.’

விரக்தியடைந்தவர் போல சொன்னார் அழகர்சாமி.

அவர் சொன்னதைக் கேட்ட மாணிக்க வள்ளிக்கும்,

‘இங்க எல்லா வசதிங்க இருந்தாலும் அங்கமாதிரி மக்க ஒறவு இல்லத்தான். வெயில் அடிக்கிற நேரம் லயத்து வாசல்ல காலு ரெண்டையும் நீட்டிப் போட்டுக்கிட்டு ஒருத்தர் தலையை ஒருத்தர் பார்த்து மொருக்கு... மொருக்குன்னு ஈரு பேனக் குத்திக்கிட்டு... ஊரு கதையோட ஒறமற கதையெல்லாம் கதைச்சிக்கிட்டு... அவ அப்படி, இவ இப்படின்னு பொறாமை எல்லாம் அந்த லெச்சுமி, மாரியாய், தெய்வான, மரியா, செல்லம்மா... என்று எல்லாரும் சேர்ந்து இல்லாத பொல்லாத கதையெல்லாம் பேசிய அந்த காலம் திரும்பவும் வருமா? அந்த ஒற வெல்லாம் இங்க கிடைக்கவாப் போவுது? அது வெல்லாம் எத்தனையோ ஆண்டு ஒறவு. அதையெல்லாம் விட்டுட்டு இங்க வந்து சேர்ந்திட்டாம...’ என்பதை நினைக்க மனசு வலிக்கத்தான் செய்தது.

அவள் கணவனை நோக்கி,

“எல்லாத்தையும் விட்டுட்டுத்தான் வந்துட்டோமே இப்ப அதையெல்லாம் பத்திக் கவலப்பட்டு என்னா பிரயோசனம்?

லயத்து வாழ்க்க முடிஞ்சிருச்சி, இப்ப இது புதுசா இருக்கு, புதுவீடு, மகன் மருமகள்... பேரப்பிள்ளைங்க. டி.வி டெக்கு... சொந்தப் பந்தத்தோட பேச செல்போனு, இதுகளோட இன்னும் கொஞ்ச காலத்துக்கு காலந்தள்ள வேண்டியதுதான், அப்புறம் நான் முந்தி, நீ முந்தின்னு நாலுபேரு தலமேல போய் சேர்ந்திட வேண்டியது தான். நீங்க முந்தினா நான் பாடமாத்தி வரைக்கும் வருவீங்க. அதோடசரி...” என்ற மாணிக்க வள்ளியின் கண்கள் கலங்கின. அவளை ஏறிட்டுப் பார்த்த அழகர்சாமி,

“ஏய்.... என்னாப்புள்ள அதை நெனச்சி இப்ப கலங்குற? பேசாம அத விட்டுத்தள்ளு” என்றார். மனைவியின் மனசை மாற்றும் எண்ணத்தில் “ந்தாப் பாரு புள்ள நான் கொஞ்சம் நம்ம பழைய லயத்து வரைக்கும் நடந்திட்டு வரவா?” என்று தாயிடம் மகன் கேட்பது போலக் கேட்டார்.

கண்களை துடைத்துக் கொண்ட மாணிக்கவள்ளி...

“ஒடம்புக்கு ஏலாது தானே. அதோட காலை வெயில்... பேசாம இருங்க” என்றாள்.

“இல்ல புள்ள, அங்கப் போயி காமன் பொட்டலப் பார்த்திட்டு, அப்படியே தாமன எப்ப நடப்போறாங்க. ஏற்பாடெல்லாம் எப்படி நடக்கிறதுன்னு கேட்டுட்டு வரணும் போல தோணுது.”

“இப்ப அங்கப்போனா இது சம்பந்தப்பட்டவுங்க யாரு இருப்பா...?

“ஏன் காமங்கூத்து மாஸ்டர் நல்ல தம்பியைக் கண்டு எல்லாந் தெரிஞ்சிக்கலாந்தானே. அவனோட அப்பன் தங்கவேலு உசிரோடு இருந்த வரைக்கும் தோட்டத்தில காமன் கூத்த செறப்பா நடத்திக் கிட்டிருந்தாரு. மனுஷன் தவறிப் போனதுக்கப்புறம் அவரோட மகன் நல்லதம்பி. காமன் கூத்த பொறுப்பேத்து நடத்திக்கிட்டிருக்கான் என்று சொல்லிக் கொண்டே தான் அமர்ந்திருக்கும் கதிரையை விட்டெழுந்தவர் கதிரைக்குப் பக்கத்தில் சுவரில் சாய்த்து வைத்திருக்கும் குடையையும் எடுத்துக் கொண்டார்.

காமன் பொட்டலையும் லயத்திலிருக்கும் மற்றவர்களையும் பார்த்து விட்டு வரவேண்டும் என்ற துடிப்பு அந்த கிழவனுக்கு.

அவரை ஏற இறங்கப் பார்த்த மாணிக்கவள்ளி...

‘இந்த மனுஷன் அந்தக் காலத்தில எவ்வளவு வாட்டம் சாட்டமா... வாளிப முறுக்கேறி எப்படி இருந்தார்’ என்று மனதிற்குள் எண்ணிக் கொண்டு...

“ஆமா இந்த வெயில நீங்க அங்கப்போயி அந்த கூத்து மாஸ்டர் நல்ல தம்பிக் கிட்ட எப்ப காமன் நடப்போறீங்க. எப்படி நடத்தப் போறீங்கன்னு கேட்டுட்டு நீங்க என்னா செய்யப் போறீங்க? இப்ப ஒங்களால ரதி, மன்மதன் வேசந்தான் கட்ட முடியுமா?" என்று

லேசாக சிரித்தப்படியே கேட்டாள்.

அவள் முகத்தில் சிரிப்பை கண்டதும்... அழகர்சாமியும் வாய்விட்டு சிரித்துவிட்டு,

“ஏய் என்னை நீ என்னான்னு நெனச்ச....? காமங்கூத்துல நான் கட்டாத வேசமில்ல. மன்மதனா, ரதிதேவியாய், சிவபெருமானாய்... தூதுவனாக, வீரபுத்திரனாக இயமனாக இப்படி ஒவ்வொரு வருஷமும் ஒவ்வொரு வேசங்கட்டி ஆடியவன்தான் நான்...” என்றவர்,

“ஏன் நான் மன்மதன் வேசங்கட்டி ஆடியது ஒனக்குத் தெரியாதாக்கும்?” என்று கேட்க...

“ஐய... அதப் பத்திதான் எனக்கு நல்லவேத் தெரியுமே..., அந்த மன்மதன் வேஷம், அந்தபாட்டு அந்த ஆட்டம்.... அதையெல்லாம் மறக்கமுடியுமா? அதையெல்லாம் பார்த்தாலத்தானே இந்த சிறுக்கி மயங்கிப் பொயிட்டா....”

பேரன் பேத்தி எடுத்த இந்த வயசுலேயும் ஒரு வெட்கத்தோடு சொன்னாள் மாணிக்கவள்ளி.

“ஏன் நீ மட்டும் என்னவாம் அரியதரம் பூசி பொய் அழகு படுத்தாம உண்மையிலேயே நதிதேவி மாதிரிதானே இருந்த. அம்பெடுத்து என்ன அடிக்காம கண்ணடிச்சே ஓம் வலையில மாட்டவச்சிட்டியே...” வயது முதிர்ந்தப் போதும் ஒரு இளைஞனைப் போல சொல்லும் கணவனை ஓரக் கண்ணால் பார்த்தவள்,

“இப்ப எதுக்கு அந்த முடிஞ்சுப் போன கதையெல்லாம்.” என்று சொல்லிக் கொண்டே,

முன்நெற்றியில் கொத்தாய் கிடக்கும் நாரை முடியை ஒரு கையால் ஒதுக்கிவிட்டாள்.

“வயசுப் போனாலும் எளமக்காலத்தில செஞ்ச சேட்டையெல்லாம் மனசை விட்டுப் போகலையே.... இருபத்தி நாலு வயசில நான் மன் மதன் வேசங்கட்டி ஆடிய தாலத்தான் இருபது வயசு ரதியா இருந்த ஒன்ன கணக்குப் பண்ண முடிஞ்சிச்சி” என்ற கணவனின் வாயைப் பொத்தியவள்...

“போதும் சாமி இனிம பேசாதீங்க” என்றாள். அவளின் கையை விலக்கிய அழகர் சாமி...

“அப்படி என்னா சொன்னே... உண்மையைத்தானே சொன்னே...” என்றவர்.

இந்த முறை யார் யாரு மன்மதன்.. ரதி வேசங்கட்டப் போறானுங்களோ?” என்றார்.

“யாரு மன்மதன் வேசங் கட்டினாலும் ஒங்க மாதிரி யாருக்கும் அந்த வேசம் பொருந்தாது” – என்று சொல்லி விட்டு சிரித்தாள். அவளின் வெற்றிலைக் காவிப் படிந்த உதடும் பற்களும் அழகாக இருப்பது போலவே அழகர் சாமிக்கு தோன்றியது.

“இப்ப எனக்கு அப்படி வேசங்கட்டி ஆடவோ பாடவோ முடியாது. ஒடம்புல தெம்பில்ல. கால்களிலும் வலிமையில்ல. மொகமும் ஒடுங்காகி பாதி தலையில மயிரும் பொயிட்டு பாதி பல்லும் விழுந்திருச்சி” என்றவர்.

“பகல் சாப்பாட்டுக்கு மகனும் மருமகளும் வர்றதுக்குள்ள நான் திரும்பி வந்திடுவேன். பேரப்பிள்ளைகளுக்கும் பிடிச்சதை செய்துவை” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து தான் நீண்ட காலமாக வாழ்ந்திருந்த காமன் லயத்தை நோக்கி நடந்தார்.

*

ஆலமரத்து லயத்தை தாண்டி காமன் பொட்டவை அடைந்தார். அழகர்சாமி அவர் முன்பிருந்த லயத்திற்கும் கோயில் லயத்திற்கும் இடைப்பட்ட இடத்தின் மத்தியில் தான் காமன் பொட்டல் இருந்தது. காமன் பொட்டல் சாணமிட்டு மெழுகி சுத்தமாக இருந்தாலும் இன்னும் காமன் நடாமல் இருந்தது.

“மாமோ... ஏது இந்தப் பக்கம், ரொம்ப நாளாவராம இருந்திட்டீங்களே...” என்ற தப்புக்கார சேனையப்பன்...

“ஓ... மாசி பொறக்கப் போவுதில்ல, மாசி மூணாம் பொறைக்கி காமன் நடப் போறாங்கத் தானே.... அதை கேட்டுட்டு போக வந்தீங்களோ?” குறி பார்த்து சொல்லுவது போல சொன்னான். காமன் பொட்டலுக்குப் பக்கத்தில் நின்ற அவன்.

“ஆமா சேனா...” என்ற அழகர் சாமி,..

“நல்ல தம்பி மாஸ்டர் இருக்கானா” என்று கேட்டார்.

“ஆமா மாமே.... அப்படியே முன்னுக்குப் போங்க. தொங்க காம்ரா, தொரசாமி வூட்டு வாசல்லத்தான் மாஸ்டரும் மருந்துக்கார சீரங்கப்பனும் நின்று பேசிக்கிட்டிருக்காங்க. நான் இப்ப ஒரு சோலியா டவுன் வரைக்கும் போவணும். ஏம் மவன் ரங்க நாதன்... வந்து ரெண்டு நாலாகிறிச்சி. காலையில ஸ்கூல் வரைக்கும் போறேன்னு போனவன்.... வூட்டுக்கு சாமன் எடுத்து வச்சிருக்கேன் நீயும் வான்னு போன்ல கூப்பிடுறான்- அதுனாலத்தான் அவசரமா போறேன். நீங்க பேசிக்கிட்டு இருங்க. நான் போனதும் வந்திடுறேன்” என்று சொல்லிவிட்டு சென்றான்.

‘சேனப்பனோட மகன் ரெங்கநாதனை எப்பவோ பார்த்தது... பய... வெளிநாட்டு வேலைக்குப் போறேன்னு சொல்லிட்டுப் போனான்... இப்ப திரும்பி வந்திருக்கான் போல...’ எண்ணிக் கொண்டே லயத்தின் முகப்பு பக்கம் போனார்.

இவரை கண்டதும் நல்ல தம்பி முன்னால் ஓடி வந்து,” வாங்கய்யா... வாங்க வாங்க...” என்று வரவேற்று அழைத்துச் சொன்னான்.

“வாப்பா அழகரு... போன மாசமெல்லாம் நீ இந்த லயத்துப் பக்கம் வல்லையே? சொக மெல்லாம் எப்படி?” என்று மருந்துக்கார சீரங்கன்... அழகர்சாமியின் தோளில் கைப்போட்டு குசலம் விசாரித்தார்.

“நீ எப்படியும் மாசத்துக்கு ஒரு தரமாவது இங்க வந்துட்டுப் போ. நீ வராம எங்களுக்கு பொழுதே போகல்ல” என்றார் சிதம்பரம்.

“நான் என்னா வர மாட்டேனா சொல்லுறேன். என்ன செய்ய அடிக்கடி நோய் வந்து தடுக்குதே. அப்படியே வருவோமின்னு துடிச்சாலும்... மாணிக்க வள்ளி என்ன விடாதே! ஒடம்புக்கு ஏலாம எங்கேயும் போவா தீங்கன்னு தடுத்துடும்” என்றவர்.

“நாங்க இருந்த வூட்ட கொஞ்சம் எட்டிப் பார்த்திட்டு வந்திடுறேன்” என்றார்.

“அந்த வூட்டுல இப்ப யாரும் இல்லப்பா. அங்கு குடிவந்த ராகவனும் அவன் சம்சாரமுன் தோட்டத்து வேலையை விட்டுட்டு கொழும்புக்கு பங்களா வேலைக்குப் பொயிட்டாங்க. ஒருவேளை. காமன் கூத்துக்காவது வருவாங்க” என்றார் சிதம்பரம்.

“வாவே உள்ளப்போயி ஒக்காந்து பேசுவோம்” என்றார் சீரங்கன்.

“வேணா நாம வெலியில இருந்து பேசிதானே பழக்கம்” என்று அழகர் சாமி.

சொல்லிக் கொண்டிருக்கும் போதே,

ஒரு பிளாஸ்டிக் நாற்காலியை கொண்டு வந்து வைத்த சீரங்கனின் மருமகள், அழகர்சாமியை பார்த்து

“ஒக்கார்ந்து பேசுங்கப்பா” என்றாள்.

குடையை ஊண்டியப்படி கதிரையில் அமர்ந்தவர்... நல்ல தம்பியைப் பார்த்து,

“என்னாப்பா... காமன் ஊண்டுற வேலை எல்லாம் நடக்குதா?” என்று கேட்டார்.

“அந்த வேலையெல்லாம் ஒழுங்கா நடக்குது. ஆனா.... மன்மதன் வேசத்துக்குத்தான் சரியான ஆள் கிடைக்கல்ல” என்றான் நல்லதம்பி.

“என்னாப்பா... இந்த தோட்டத்தில மன்மதன் வேசங்கட்ட யாரும் கெடைக்கலையா?”

“ஆமாங்கையா”

“ஏன் போன வருஷம் ஆடின பிரபு?”

“அவனுக்கு மாஸ்டர் வேல கெடைச்சிருச்சி. ஒரு ஸ்கூல் மாஸ்டரா உத்தியோகம் பார்த்துக் கிட்டு கூத்தாடுனா கௌரவமில்லையாம்.”

“அப்ப தங்கராசு மகன் சிவகேசு?”

“அவன் இப்ப தபால் கந்தோர்ல பியன் வேல. காமன் கூத்தாட அவனுக்கு விருப்பமே இல்லையாம்... யாருப் பார்த்தா கேலிப் பண்ணுவாங்கலாம்.”

“முத்துராமன் சரியா வருவானா?”

“அவன் பேங் வேலைக்கு போகப் போறான், மதிப்பான வேலைக்குப் போறவனுக்கு இந்த கூத்தாட்டமெல்லாம் ஒத்துவராதாம். இந்த நாகரிக காலத்தில அது வெல்லாம் எதுக்கின்னு கேட்குறான்” ஒரு விசனத்தோடு சொன்னான் நல்லதம்பி.

“என்னாடா காமன்கூத்து இவனுங்கெல்லாம் பழிக்கிறானுங்களா? காக்கப்பட வேண்டிய கலையை கௌரவத்துக்காக காத்துல பறக்க விட்டா எப்படி? விசனப்பட்ட அழகர்சாமி,

“அப்ப... ரதிதேவிக்கு யாரு?” எனக்கேட்டார்.

“அதுக்கு ஏம் பேரன் ரெடியா இருக்கான்” என்றான் அங்கு வந்து சேர்ந்து வையபுரி.

“ரதிதேவிக்கு ஆள்சரி. இப்ப மன்மதனுக்கு தான் ஆள் தேவப்படுது?”

“எதுத்த லயத்து ராசம்மா மகன் எப்படி?”

“அவன் சரின்னு தான் சொன்னான். ஆனா அவனோட கடைசி தங்கச்சி வயசுக்கு நேத்து வந்துட்டாளே. தீட்டுபட்டவன் கூத்தாட வர முடியுமா?”

“ஆமா அதெல்லாம் முடியாது தான். அந்த ரங்கமணியை கேட்டுப் பார்த்தீங்களா?”

“எப்படி கேட்க முடியும்...? அவனோட சம்சாரம் இப்ப முழுகாம இருக்கா..., தலைச்சம்புள்ள அவனால வரமுடியாது?

“அப்ப வேற யாரை தான் மதனுக்கு போடுறது?” ஒவ்வாருத்தரும் யோசிக்க ஆரம்பித்தனர்.

“இந்தாப்பா எல்லாரும் கொஞ்சம் ஒதுங்கி இருங்க. வேன் வருது” என்று வையப்புரி சொல்ல.. சிறிது தூரத்தில் ஓசையெழுப்பியபடி ஒருவேன் கொங்கிரீட் வாசல் வழியாக போய் தப்பு சேனப்பன் வீட்டுக்கு முன்னால் நின்றது.

“சேனப் பன் வீட்டுக்கு சாமன் கொண்டு வந்திருக்காங்க” என்ற நல்ல தம்பி...

“சேனப்பனோட மகன் ரங்க நாத் சவூதியில நல்ல உத்தியோகத்தில இருக்கான். ரெண்டு மாசம் லீவுல வந்திருப்பன். இங்க ஒரு டீச்சரைதான் அவனுக்கு பெண் பார்த்திருக்கிறார் சேனப்பன். பங்குனி மாசம் நிச்சய தாப்பூலம் முடிஞ்சப் பிறகுதான் ரங்க நாத் திரும்பவும் சவூதிப் போவான்.” என்றான்.

“நல்லவேல, நல்ல சம்பளம்... கௌரவமான பதவி என்றார் வையாபுரி.

சிறிது நேரத்திற்குப் பிறகு வேன்சாமான் தளை இறக்கிப் போட்டுவிட்டு வந்த வழியே திரும்பியது.

“மன்மதராசனுக்கு யாரைப் போடுவது?” அவர்கள் மீண்டும் யோசித்தார்கள். நேரம் போனது.

“என்னா... எல்லாரும் நல்ல சுகமா?” கேட்டப்படி அந்த இடத்திற்கு வந்தான் ரங்கநாதன்.

“ஆமாப்பா நீ எப்படி? வெளிநாட்டு வேல எப்படி?” அழகர்சாமி கேட்டார்...

“தாத்தா... ஒங்க புண்ணியத்தில ஒண்ணும் குறைவில்ல” என்ற, ரங்கநாதன்,

“என்னா... எல்லாம் கூடி என்னா பேசுறீங்க நானும் தெரிஞ்சுக்கலாமா?” என்றான்.

“தாராலமா...” என்ற நல்ல தம்பி,

“காமன்கூத்து நடத்தணும், ஆனா மன்மதன் யாரும் கிடைக்கல்ல. தோட்டத்தில பலரும் கூத்தில் நடிக்க பின் வாங்குறாங்க. ஒரு மாதிரி கொஞ்சப் பேரு நடிக்க முன் வந்திட்டாங்க. ஆனா மன்மதன்?”

கேள்விக் குறியைப் போட்டான்.

“அப்படினா எனக்கு அந்த வேசத்தக் கொடுங்களே.... நான் சின்ன வயசில இருந்து நல்லதம்பி அண்ணன் கிட்ட ஆட்டமெல்லாம் பழகி இருக்கிகேனே...” ரங்கசாமி இப்படி சொன்னதும் அவனை அப்படியே அருகில் போய் அணைத்துக் கொண்டார் அழகர்சாமி.

“தம்பி உண்மைக்கித்தான் தான் சொல்லுறியா?”

“ஆமா தாத்தா... தப்படி சேனப்பனோட மகன் இந்த ரங்கநாதன்... காமன்கூத்தில் வேசங்கட்டுவதை பெருமையா பெரிய கௌரமமா நினைக்கிறேன்” என்றான்.

“அடேயப்பா நமக்கு மன்மதராசன் கிடைச்சிட்டாரு!” சத்தமாக எதுத்த லயத்துக்கும் கேட்கும்படி குரல் எழுப்பினார் அழகர்சாமி.

Comments