ஐ.ம.சு.முவின் 5 உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைப்பு | தினகரன் வாரமஞ்சரி

ஐ.ம.சு.முவின் 5 உறுப்பினர்கள் விசாரணைக்கு அழைப்பு

பாராளுமன்ற சபை அமர்வின்போது இடம்பெற்ற மோதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துவரும் குற்றப்புலனாய்வுப் பிரிவு ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்களை இவ்வாரத்தில் விசாரணைக்காக அழைத்துள்ளது.

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களான ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணவீர, நிரோஷன் பிரேமரட்ன, விமல் வீரவன்ச, சனத் நிசாந்த ஆகிய ஐவருக்குமே புலனாய்வுப் பிரிவு அழைப்பு விடுத்துள்ளது.

இவர்களில் ஜோன்ஸ்ரன் பெர்னாண்டோ, பிரசன்ன ரணவீர, நிரோஷன் பிரேமரத்ன ஆகிய மூவர் மீதும் சபாதாயகரால் சபைக்கு வரவழைத்த பொலிஸார் மீது தாக்குதல் நடத்திய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. விமல் வீரவன்ச, சனத் நிசாந்த ஆகியோர் மீது பொலிஸாரின் கடமையைத் தடுக்கும் விதத்தில் செயற்பட்ட குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதாகப் பொலிஸ் உயரதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் மீதும் சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவர்கள் சார்பில் வாக்குமூலமளிப்பதற்காகவே குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

இதற்கு முன்னர் பல தடவைகள் இவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட போதிலும் இவர்கள் புலனாய்வுப் பிரிவுக்கு வருவதை தவிர்த்துவந்துள்ளனர்.

 

இம்முறையும் ஐவரும் வருகை தரத்தவறினால் தண்டனை கோவைச் சட்டத்தின் கீழ் அவர்களுக்கு எதிராக இறுதி அறிவிப்பு விடுக்கப்படுமெனவும் அதனையும் மீறும் பட்சத்தில் நீதிமன்றத்துக்கு பாரப்படுத்தி நீதிமன்ற ஆணையொன்றைப் பெற்றுக் கொள்ளப்படுமென அந்த உயர் பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

Comments