இன்னும் ஓரிரு தினங்களில் ரூ. 50 கொடுப்பனவு | தினகரன் வாரமஞ்சரி

இன்னும் ஓரிரு தினங்களில் ரூ. 50 கொடுப்பனவு

அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்குவதாக வாக்குறுதியளித்த 50 ரூபா மேலதிக கொடுப்பனவு இன்னும் ஓரிரு தினங்களில் பெற்றுக் கொடுக்கப்படுமென அமைச்சர் பழனி திகாம்பரம் ​நேற்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதேவேளை, எதிர்க்கட்சியில் பெருந்தோட்டத்துறை மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் நிலை பற்றி அறிந்திராத பலர் சம்பளப் பிரச்சினை குறித்து பேசுவது கவலையளிப்பதாகவும்

அமைச்சர் இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் இந்த அரசாங்கத்திலேயே மலையகத்தில் பெருமளவு வீடுகள் நிர்மாணிக்கப்பட்டிருப்பதாகத் தெரிவித்த அமைச்சர் திகாம்பரம், நாமல் ராஜபக்ஷ எம்.பி விரும்பினால் அவரை மலையகத்துக்கு நேரில் அழைத்துச் சென்று காட்ட விரும்புவதாகவும் கூறினார்.

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தின் 02 ஆம் வாசிப்பு மீதான 04 ஆம் நாள் விவாதம் நேற்று சனிக்கிழமை நடைபெற்றது. இதன்போது உரையாற்றுகையிலேயே அமைச்சர் பழனி திகாம்பரம் இவ்வாறு தெரிவித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் உரையாற்றுகையில் தெரிவித்ததாவது-

நாமல் எம்.பி இந்த அரசாங்கம் வடக்கிலும் மலையகத்திலும் என்ன செய்தது? என பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார். இலங்கை வரலாற்றில் இந்த அரசாங்கமே மலையகத்தில் அதிக வீடுகளை அமைத்துக் கொடுத்திருப்பதனை நான் நாமல் எம்.பிக்கு கூற விரும்புகின்றேன். அவர் விரும்பினால் அவரை நேரில் அழைத்துச் சென்று காட்டவும் நான் தயாராக இருக்கின்றேன்.

வீடுகள் மட்டுமன்றித் தோட்டத் தொழிலாளர்களுக்குக் காணி உரிமையையும் இந்த அரசாங்கமே வழங்கியது.

பெருந்தோட்டம் பற்றி தெரியாதவர்களெல்லாம் இன்று சம்பள பிரச்சினை குறித்துப் பேசுவது கவலைக்குரிய விடயம். அரசாங்கத்தால் வழங்கப்படுவதாக வாக்குறுதியளிக்கப்பட்ட 50 ரூபா இன்னும் ஓரிரு தினங்களில் பெற்றுக் கொடுக்கப்படும்.

மலையகத்தில் 40 ஆயிரம் மலசலக்கூடம் அமைக்கும் திட்டத்தை நான் பெரிதும் வரவேற்கின்றேன். நுவரெலியா மற்றும் பதுளைக்கு வெளியில் வாழும் தோட்டத் தொழிலாளர்களுக்கும் அரசாங்கம் இதேபோன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

Comments