108 பெருந்தோட்ட பெண்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே | தினகரன் வாரமஞ்சரி

108 பெருந்தோட்ட பெண்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே

வது சர்வதேச மகளிர் தினத்தையும் ஏகத் தோடு எதிர்பார்த்த பெருந்தோட்ட தொழிற்துறை பெண்களுக்கு இம்முறையும் ஏமாற்றமே. 200 வருடங்களை கடந்த நிலையிலும் இன்று வரை பெருந்தோட்டத்துறையில் பெண்களின் பங்களிப்பே அதிகம் எனலாம். நாட்டின் பொருளாதாரத்தில் பெரும் பங்காற்றும் துறைகளில் பெருந்தோட்டத்துறை பிரதானமாகும். ஆனால் அரசோ அதில் தொழில் புரியும் பெரும்பாலான பெண்களை புறக்கணித்தே வந்துள்ளன.

இவ்வாண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திலும் பெருந்தோட்ட பெண்களுக்கு மிஞ்சியது ஏமாற்றமே. எது எவ்வாறிருப்பினும் அவர்களின் தொழில் புரியும் இடத்தில் ஏற்படுத்தி கொடுத்துள்ள அடிப்படை வசதிகள், உரிமை மறுப்பு என்பன இந் நூற்றாண்டின் அடையாளம் எனலாம். இவர்களுக்கு காலம் காலமாக தொழில் புரியும் இடத்தில் மலசலகூட வசதிகள் மறுக்கப்பட்ட விடயமாகவே இருந்து வருகின்றன. இதை சிலர் ஒரு பொருட்டாகவே கருதுவதில்லை. இதனால் அப் பெண்கள் அனுபவிக்கும் இன்னல்களை எழுத்தில் வடிக்க முடியாதவை.

நவீனத்தின் 21ஆம் நூற்றாண்டிலும் மலசலகூடம் இல்லாமல் 8 மணித்தியாலங்களுக்கு மேல் பல்லாயிரம் பெண்தொழிலாளர்கள் பெருந்தோட்டத்துறைக்குள் தொழில் புரிவது நமது நாட்டிலாகும்.

உழைக்கும் பெண்களின் பிரச்சினைகள் பாரிய அளவில் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. குறிப்பாக ஆசிய நாடுகளில் தொழிலாள வர்க்க பெண்களின் 'தொழில் பாதுகாப்பு'க்கு பல சவால்கள் எழுந்துள்ளன. உழைக்கும் வர்க்க பெண்களின் விடுதலையைப் பற்றி சிந்திப்பவர்கள் இன்று பல விடயங்களை ஆராய்ந்து செயற்பட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இலங்கையில் பெருந்தோட்ட துறையிலுள்ள பிரச்சினையை எடுத்து நோக்குவோமேயானால் உலகம் முழுவதிலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட 'தொழில் தளங்களில் மலசலகூடம் என்ற வசதி இன்றுவரை எமது பெருந்தோட்ட துறை பெண் தொழிலாளர்களுக்கு வழங்கப்படவில்லை.

இப் பெண் தொழிலாளர்கள் நூற்றாண்டு காலமாக இந்த அடிப்படை உரிமையை இழந்து, பல்வேறு அசௌகரியங்களுக்கும், ஆபத்துக்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றார்கள். இவ்வாறான அடிப்படை பிரச்சினைகளை தீர்ப்பதை விடுத்து மேலதிகாரிகள் மகளிர் தின நிகழ்வுகளில் கொழுந்து பறிக்கும் போட்டிகளை நடத்தி பரிசு பொருட்களை வழங்கி மகளிரை மகிழ்விக்கின்றார்களாம். இவற்றுக்கு செலவழிக்கும் பணத்தில் பெண்களுக்கான சுகாதார வசதிகளை செய்து கொடுக்கலாம். வீண் விநோத செயற்பாடுகளில் பெண்களை ஈடுபடுத்துவதால் மட்டும் இவர்களின் பிரச்சினைகள் தீரப் போவதில்லை. இவ்வாறான நிகழ்வுகளுக்கு பெண்கள் கலந்து கொள்வதை தவிர்க்கும் செயற்பாடுகள் வலுபெற வேண்டும். அதை விடுத்து எமது உரிமைகளுக்கு முன்னுரிமை அளிக்கும் தீர்மானங்களை நிறைவேற்ற அழுத்தம் கொடுக்கும் நாளாக மகளிர் தினத்தை பெருந்தோட்ட பெண்கள் மாற்றியமைக்க வேண்டும்.

2019 ஆம் ஆண்டு சர்வதேச மகளிர் தின செய்தியாக 'நாம் அனைவரும் ஒன்றிணைந்து, முதலாளித்துவ வர்க்க சிந்தனையின் வெளிப்பாடான இந்த முறைசாரா முறைமையை எதிர்த்து பெண்களின் அடிப்படை உரிமை மீறலுக்கெதிரான வன்முறையை ஒழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுவோம். இதன் மூலம் நாம் அடையும் வெற்றியினை 2020ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் திகதி சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தன்று நினைவு கூற கூடியதாக அமைய வேண்டும்.

Comments