‘தொழிலாளர் பற்றாக்குறையே தோட்டங்கள் துப்புறவு செய்யப்படாமைக்கு காரணம்!’ | தினகரன் வாரமஞ்சரி

‘தொழிலாளர் பற்றாக்குறையே தோட்டங்கள் துப்புறவு செய்யப்படாமைக்கு காரணம்!’

உரையாடியவர்கள்: அருள் சத்தியநாதன், பி. வீரசிங்கம்

ரொஷான் ராஜதுரை ஆங்கிலத்தில் வெகு வேகமாகவும் புள்ளி விவரங்களுடனும் பேசக் கூடியவர். எதிராளியை மடக்கி தனது வலைக்குள் கொண்டுவரக்கூடியவர். இதனால்தான் முதலாளிமார் சம்மேளனத்தின் முக்கிய பதவிகளில் அவர் இல்லாவிட்டாலும் கூட சம்பள அல்லது பெருந்தோட்ட சங்கங்களுடனான முக்கிய பேச்சுவார்த்தைகளில் அவர் கலந்து கொள்கிறார் என்பதை அவருடன் உரையாடிக் கொண்டிருந்தபோது புரிந்து கொள்ள முடிந்தது. அவருடன் பேச்சுவார்த்தைகளில் ஈடுபடும் சங்கத் தரப்புக்கு இந்த அளவுக்கு விஷய ஞானம் இருக்குமா? என்ற சந்தேகமும் எழுந்தது.

வெளிவாரி முறை எல்லாம் சரிதான், ஆனால் தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகள் என்னாவது? வருமானம் மட்டும் போதுமா? என்று அவரிடம் கேட்டோம்.

“புளொக் முறையின் கீழ் இதுவரை தோட்டத் தொழிலாளர்கள் அனுபவித்து வந்த எல்லா வரப்பிரசாதங்களும் அப்படியேதான் இருக்கும். எந்த மாற்றமும் கிடையாது. வேலை செய்யும் முறையும் சம்பளம் தீர்மானிக்கப்படும் முறையும் தான் மாறப்போகிறது. பழைய முறையில் எட்டு மணித்தியால வேலை செய்ய வேண்டும். 18 கிலோ கொழுந்து எடுக்க வேண்டும். 18 நாள் வேலைக்கு வந்திருக்க வேண்டும். புதிய முறையில் இதெல்லாம் கிடையாது. இது உழைப்புக்கு ஏற்ற வருமானம் என்ற அடிப்படையைக் கொண்டது. ஒருவர் தனக்கான நிரையில் எவ்வளவு கொழுந்து வேண்டுமானாலும் பறிக்கலாம். மூன்று மணித்தியாலத்துக்குள் பறித்தாலும் சரி, ஏழு மணித்தியாலத்துக்குள் பறித்தாலும் சரி, எமக்குப் பிரச்சினை கிடையாது. பறிக்கப்படும் கொழுந்து நிறைக்கு ஏற்ற கொடுப்பனவு செய்யப்படும். மேலும் ஒருவர் விரும்பினால் 12 நாள் மாத்திரம் கொழுந்து பறிக்கலாம். 18 தினங்கள் வேலை செய்ய வேண்டிய கட்டாயம் கிடையாது. லீவு போட வேண்டிய கட்டாயம் இல்லை. ஒரு சிறு தோட்ட காணி உரிமையாளர் எவ்வளவு சுதந்திரத்துடன் தன் காணியில் பணிசெய்வாரோ அவ்வாறே இத் தொழிலாளர்களும் தமக்கான புளொக்கில் வேலை செய்யலாம். அவருக்கான வசதிகள், சலுகைகள் மற்றும் உரிமைகள் அப்படியேதான் இருக்கப்போகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் தோட்டத்தின் வருமானம் அதிகரிக்கும். தொழிலாளர்களின் வருமானமும் அதிகரிக்கும். வேலை கொள்வோர் - தொழிலாளர் மத்தியிலான பிணக்குகளும் குறையும், சுமுகமான உறவு நிலவும். நான் எந்தக் குறையையும் இந்த நடைமுறையில் காணவில்லை” என்று கூறினார் ரொஷான்.

“இன்று இலங்கையின் மொத்த தேயிலை உற்பத்தியில் 75 சதவீதமான உற்பத்தியை சிறு தோட்ட உரிமையாளர்களே பெற்றுத் தருகிறார்கள். இத்தோட்டங்கள் எண்பதுகளில் இயக்கத் தொடங்கின. ஏற்கனவே இறப்பர் செய்கை சிறு இறப்பர் தோட்ட உரிமையாளர்கள் வசம் போய் விட்டது. அது ஒரு குடிசை கைத்தொழிலாகி விட்டது. தேயிலை உற்பத்தியில் சிறு தோட்ட உரிமையாளர்கள் தயாரிக்கும் தாழ்நில தேயிலைக்கான வெளிநாட்டு சந்தை பிரகாசமானது. அத் தேயிலையின் விலையும் அதிகம். ரஷ்யர்கள் விரும்பிப் பருகுவது இந்தத் தேயிலையைத்தான். இந்த மாற்றங்கள் தவிர்க்க முடியாதவை.

முன்னர் ஐந்து லட்சம் தொழிலாளர்கள் தோட்டங்களில் பணியாற்றி வந்தனர். இப்போது இந்த எண்ணிக்கை ஒன்றரை இலட்சமாக குறைந்துவிட்டது. இது மேலும் குறையலாம் ஏனெனில் கல்வி கற்றவர்களும், வேறு தொழில்களுக்கு பயிற்றப்பட்டவர்களும் பெருந்தோட்டத்தில் கொழுந்து எடுக்கவும் சில்லறை வேலை செய்யவும் முன்வரமாட்டார்கள். இந்த நிலையில் இந்தப் பழைய முறையை நாம் தொடர்ந்தும் பின்பற்றி வந்தால் பெருந்தோட்டத்துறை பாரிய பிரச்சினையை சந்திக்க வேண்டியிருக்கும். தொழிலை கூலி வேலை என்ற நிலையில் இருந்து மீட்டெடுத்து அதற்கு கௌரவம் அளிக்க வேண்டிய நேரம் வந்து விட்டதாகவே. கருதுகிறேன்.” என்று எம்மிடம் தெரிவித்தார் ரொஷான்.

தேயிலை தோட்டங்கள் காடு மண்டி வருவதாகவும் சிறுத்தைகள் நடமாடுவதாகவும் கூறப்படுகிறது. கம்பனி நிர்வாகத்தில் தோட்டங்கள் பராமரிக்கப்படுவதில்லை என்கிறார்கள். இதற்கு என்ன சொல்லவிரும்புகிறீர்கள்?

“அதுதான் சொன்னேனே, தோட்டங்களில் போதுமான தொழிலாளர்கள் இல்லை என்று, ஆண்தொழிலாளர்கள் வெளியே சென்று வேலை செய்கிறார்கள். தம்மை தொழிலாளர்களாக பெயர் பதிவு செய்யும் இளைஞர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எனவே போதிய மனித சக்தியைப் பயன்படுத்தி தோட்டங்களை துப்புறவு பண்ண முடியாத நிலை காணப்படுகிறது” என்று பதில் தந்தார் ரொஷான்.

அவ்வாறானால் புளொக் சிஸ்டத்தின் கீழ் இப் பிரச்சினைகளைத் தீர்க்கலாம் என்கிறீர்களா?

“ஆம். தோட்டக் காணிகள் நிரை அடிப்படையில் பிரித்து கொடுக்கப்படும்போது அத் தொழிலாளர்கள் தமது நிரையை துப்புறவாக வைத்துக் கொள்வார்கள். வெளிவேலைக்கு செல்பவர்கள் தத்தமது நிரைகளிலேயே வேலை செய்வார்கள். மேலதிக வேலைகளை செய்வதற்கு அவர்கள் வெளி ஆட்களை வேலைக்கு அமர்த்தவும் செய்யலாம். எனவே இந்த நிறை அடிப்படையிலான திட்டம் பல பிரச்சினைகளைத் தீர்க்கும்.”

நீங்கள் குறிப்பிடும் புளொக் சிஸ்டம் தொழிலாளர்களை சிறு முதலாளிகளாக்குமா?

“அப்படி நீங்கள் சொல்ல முடியும். இப்போது மலையக அதிகார சபை வந்து விட்டது. தோட்டக் கிராமங்கள் உருவாகப் போகின்றன. காணியுடன் கூடிய வீடுகள் அமைக்கப்படுகின்றன. ஏராளமான தோட்ட இளைஞர்கள் உயர் படிப்பு படித்து வருகிறார்கள். பல்வேறு தொழில்களில் ஈடுபட்டுள்ளனர். இந்த மாற்றங்களுடன் தற்போது தோட்டங்களில் அமுலில் உள்ள சம்பளத் திட்டத்தை ஒப்பிட்டுப் பாருங்கள். பொருந்திப் போகின்றமாதிரி இல்லை அல்லவா? நிறை அடிப்படையில் அதாவது வருமான அடிப்படையிலான சம்பளத்திட்ட முறையில் தொழிலாளர்கள் உழைப்புக்கு ஏற்ற வருமானம் பெறுவார்கள். மாதம் ஒரு லட்சம் வருமானம் பெறும் வாய்ப்பு இதில் உள்ளதால் புதிய சமூக மாற்றங்களுடன் இது பொருந்திப் போகிறது அல்லவா?”

கம்பனிகள் பொறுப்பேற்ற பின்னர் மீள் நடுகை போன்றே தோட்ட அபிவிருத்தி பணிகள் மந்தமடைந்து விட்டதாக ஒரு குற்றச் சாட்டு உள்ளதல்லவா?

“19 சதவீதமான தோட்டக் காணிகளில் தேயிலை மீள் நடுகை செய்யப்பட்டுள்ளது. 50 சதவீதமான புதிய தேயிலைக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இவை புதிய நடுகைகள். இறப்பர் தோட்டங்களை எடுத்துக் கொண்டால் நூறுசதவீதம் மீள்நடுகை செய்யப்பட்டுள்ளது. புளொக் முறையின் கீழ் புதிய கன்று நடுகை, மீள் நடுகை எல்லாம் இன்னும் வேகமாக நடைபெறும்!”

நீங்கள் குறிப்பிடும் புளொக் சிஸ்டம் இப்போது நடைமுறையில் உள்ளதா?

“ஆமாம். மொத்தமாகச் சொன்னால் முப்பது சதவீதமான நிறை சிஸ்டம் தோட்டங்களில் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ளது. உண்மையைச் சொன்னால் 1980களில் நான் தோட்ட முகாமையாளராக இருந்தபோதே பரீட்சார்த்தமாக அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் தொழிற்சங்கங்களுக்கு இது பிடிக்கவில்லை. நிறுத்தி விட்டார்கள்.”

நீங்கள் குறிப்பிடும் வருமானத்துக்கு ஏற்ற உழைப்பு என்பது தொழிலாளர்களுக்கு புரியாத விஷயமாகத்தானே இருந்து வருகிறது...

“அதை ஊடகங்களான நீங்கள்தான் செய்ய வேண்டும். அவர்களிடம் எடுத்துச் சொல்லுங்கள், நாம் இப்படி எட்டு மணி நேர வேலை 18 கிலோ கொழுந்து என்று போய்க் கொண்டிருக்க முடியாது என்பதை! அதிக வருமானம், தொழில் கௌரவம், ஏற்கனவே அனுபவித்துவரும் உரிமைகள், சலுகைகள் அப்படியே தொடர்தல் என்பனவற்றை அவர்கள் அப்படியே அனுபவித்து வருவார்கள். தோட்டங்களில் இருந்துவரும் நிறை சிஸ்டத்தினால் தொழிலாளர்கள் நன்மை அடைந்து வருவதை ஏனைய தொழிலாளர்கள் பார்த்துத்தான் வருகிறார்கள். தொழிற்சங்கங்களுக்கு இதில் என்ன பிரச்சினை என்பது புரியவில்லை. தொழிலாளர்களைப் பொறுத்தவரை இந்த மாற்றம் தவிர்க்கமுடியாது என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.”

நீங்கள் சொல்வதெல்லாம் சரி. அதற்காக ஒரு சம்பளப் பேச்சு வார்த்தையின் பின்னர் இருபது ரூபாவையா அதிகரித்து கொடுப்பார்கள்?

புன்முறுவலுடன் ராஜதுரை, “வேறென்ன செய்யலாம்? பழைய சம்பள முறையில் இவ்வளவு தான் செய்ய முடியும். நாங்கள் உழைப்புக்கு ஏற்ற ஊதியம் என்ற புதிய கோட்பாட்டை முன்வைக்கின்றோம். இதன்படி கடுமையாக உழைப்பவர் அதிக வருமானம் பெறுவார்” என்றார்.

இன்னொரு சம்பள பேச்சுவார்த்தை இரண்டாண்டுகளின் பின்னர் வரும். அதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

“நாம் இந்த முறையில் இருந்தே விடுபட வேண்டும் என்று விரும்புகிறோம்.”

நீங்கள் மலையக அதிகார சபை பணிப்பாளர்களில் ஒருவராக நியமனம் பெற்றிருக்கிறீர்கள். அது பற்றி...

“ஆமாம் வீடமைப்பது நல்ல விஷயம்தானே! யார் தான் சொந்த வீடு வேண்டாம் என்பார்கள்? காணி அரசுக்கு சொந்தம். நாங்கள் குத்தகைக்கு எடுத்துத்தான் தோட்ட நிர்வாகம் செய்கிறோம். வீடுகளை அமைத்து காணி உறுதி அளிப்பது அரசாங்கத்தின் வேலை. இந்த அதிகார சபையின் தலைவர் சந்திரா ஷாப்டர் பொருத்தமானவர் என்றே கருதுகிறேன். அவர் ஒரு நிதி நிபுணர். இன்சூரன்ஸ் மேன். பொருத்தமானவரைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பது என் கருத்து” என்று கூறி எம்முடனான நேர்காணலை நிறைவு செய்தார் ரொஷான் ராஜதுரை.

Comments