லேடி மோடி DADDY அ.தி.மு.கவின் முதுகில் கூன் விழுந்த கதை | தினகரன் வாரமஞ்சரி

லேடி மோடி DADDY அ.தி.மு.கவின் முதுகில் கூன் விழுந்த கதை

இந்திய பாராளுமன்றத் தேர்தல் எதிர்வரும் மே மாதம் நடத்தப்பட வேண்டும். உலகின் மிகப் பெரிய ஜனநாயக பாராளுமன்றத் தேர்தல்களில் இந்தியத் தேர்தலும் ஒன்று என்ற வகையில் இது உலக அளவில் முக்கியத்துவம் வாய்ந்தது. எனினும் இந்திய தேர்தல் ஆணையம் அதற்கான திகதியை இன்னும் அறிவிக்கவில்லை. ஆனால் அறிவிப்பு வந்ததும் களத்தில் இறங்குவதற்குத் தயாராக கட்சிகள் தம்மை தயார் நிலையில் வைத்துள்ளன. இந்தியாவெங்கும் மாநிலக் கட்சிகள் தமக்குள்ளும் அல்லது தேசிய கட்சிகளுடனும் கூட்டணி வைத்துக் கொள்வதில் முனைப்பாக உள்ளன. இந்த அரசியல் சூழலானது, இனிமேல் தனித் தேசிய கட்சி தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் காலம் அஸ்தமித்து விட்டது என்பதையே எடுத்துக் காட்டுகிறது. எனினும் கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போது மோடி அலை வீசியதையும் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சிக்கு வந்ததையும் இங்கே நாம் மறந்துவிடக் கூடாது.

ஆனால் இம்முறை மோடி அலை வீசும் வாய்ப்பு இல்லை. பா.ஜ.க. தனிப் பெரும் சக்தியாக தேசிய அளவில் உருவெடுப்பதற்கான சூழலும் இல்லை. அதே சமயம் காங்கிரஸும் ஒரு ராகுல் அலையையோ அல்லது பிரியங்கா அலையையோ உருவாக்குவதற்கான ஆதாரங்களைக் கொண்டிருக்கவில்லை. இந்திய மக்கள், போதுமடா இந்த பா.ஜ.க அரசாங்கம் என்ற மனநிலையில் காங்கிரஸுக்கு அள்ளி வாக்களிக்கும் ஒரு மனநிலையில் இருப்பதாக இன்றைய சூழல்களை வைத்து முடிவு செய்துவிட முடியாது. ஆனால் ஏப்ரல் மாதமளவில் காட்சிகள் மாறலாம். காங்கிரஸுக்கு அல்லது பா.ஜ.க.வுக்கு வாய்ப்பான ஒரு அரசியல் சூழல் இந்தியாவுக்கு வெளியில் இருந்து அல்லது இந்தியாவுக்குள்ளிருந்தும் உருவாக்கப்பட முடியும். அது படுகொலையாகவோ அல்லது இந்தியாவின் மீதான தாக்குதலாகவோ கூட இருக்கலாம்.

காஷ்மிர் புல்வாமா தாக்குதல் சம்பவத்தை இத்தகைய இந்திய தேர்தல் அரசியலில் ஒரு அதிர்வலைத் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய சம்பவமாக நாம் எடுத்துக் கொள்ளமுடியும். இந்தியர்கள் மிகுந்த தேசபக்தி கொண்டவர்கள் என்பது தெரிந்த விஷயம். பாகிஸ்தானும் சீனாவும் எல்லை நாடுகளாக இருப்பதாலும், ஒரு கொடிய மதக் கலவரத்தின் பின்னர் பாகிஸ்தான் இந்தியாவில் இருந்து பிரிந்து சென்றதாலும், மொகலாய அரசர்கள் வட இந்தியாவை சுமார் 500 ஆண்டுகளாக ஆட்சி செய்து வந்திருந்ததாலும்,

சுதந்திர இந்தியாவின் ஒருமைப்பாடும் அதன் எல்லைகளும் காப்பாற்றப்பட வேண்டும் என்று இந்தியர்கள் ஒட்டுமொத்தமாகக் கருதுகின்றனர். அடுத்ததாக இஸ்லாமியர் அல்லாத வட இந்தியர்கள் இன, மத ரீதியான ஒரு தேசபக்தியை வெளிப்படுத்துகின்றனர். பாரதிய ஜனதா கட்சி, மத சார்பற்ற இந்தியா என்ற அரசியலமைப்பு கட்டமைப்புக்கு அப்பால் இந்த இந்து தேசபக்தி என்ற தொட்டிலில் வளர்ந்த குழந்தை என்பதால்தான் மோடியால் அசுர பலத்துடன் ஆட்சியைப் பிடிக்க முடிந்தது என்பதையும் நாம் மனதில் கொள்ளவேண்டும்.

எனவே அங்கே இரண்டுவகையான தேச பக்தி நிலவுகிறது. முதலாவது இந்திய நாடு என்ற எல்லைகளுக்கு உட்பட்ட ஒரு தேச பக்தி, இரண்டாவது இஸ்லாமிய எதிர்ப்பை மூலதனமாகக் கொண்ட ஒரு மதவாத தேசபக்தி.

புல்வாமா தாக்குதல் நடைபெற்றதும் காங்கிரஸ் கலங்கிப்போனது. இது இந்தியாவின் ‘இந்து தேசிய வாத தேசபக்தியை’ கிளப்பிவிடுமானால் மீண்டுமொரு மோடி அலைக்கான வாய்ப்பு உருவாகி விடலாம் என்பது காங்கிரசை அச்சம் கொள்ள வைத்தது. இந்தியா பதிலடியாக வான் தாக்குதலை நடத்தியபோது ராகுல் காந்தி மோடியைப் பாராட்டாமல் இந்திய இராணுவத்தையும் விமானப்படையையும் பாராட்டியதை இங்கு கவனிக்க வேண்டும்.

ஆனால், மோடி அலை, பா.ஜ.க எதிர்பார்த்ததுபோல உருவாகவில்லை. உண்மையைச் சொன்னால், அத் தாக்குதலால் அதிர்ந்துபோன இந்திய மக்கள் இந்திய அரசின் பின்னால் அணிதிரண்டது உண்மையானாலும், மோடி அரசு அதைச் சரியாகக் கையாளாததினால் அத் தாக்குதலுக்கான அரசியல் அறுவடையை பா.ஜ..கவினால் மேற்கொள்ள முடியாமற்போனது. மேலும் இத்தகைய தாக்குதல்கள் காஷ்மீரில் நடைபெறுவது ஒன்றும் புதிய விஷயம் அல்ல. அத்தோடு இந்திய பாகிஸ்தான் எல்லையில் மோதல்கள் நடைபெறுவது வழமை. எனவே புல்வாமா தாக்குதலை மோடி அரசு அனாவசியமாக பெரிதுபடுத்தி பதில் தாக்குதல் நிகழ்த்தியதெல்லாம் தேர்தல் எதிர்பார்ப்புகளோடுதான் என்று பலர் கருத்து தெரிவித்தனர். எதிர்த்தாக்குதல் நடத்தியதில் 350 தீவிரவாதிகள் மரணம் என்பதும் நிரூபிக்கப்பட முடியாத எண்ணிக்கையாகி விட்டதால் அதுவும் இந்திய அரசுக்கு எதிராகவே திரும்பியது. மூன்றாவது, பாகிஸ்தான் விமானமொன்றை சுட்டு வீழ்த்தியதாக வெளியான செய்தி. இச் செய்திக்கான ஆதாரம் காட்டப்படாததால், இதுவும் சந்தேகப் பார்வையை ஏற்படுத்தியது. மொத்தத்தில் பா.ஜ.க இவ் விடயத்தில் வகுத்த திட்டங்கள் அல்லது எதிர்பார்ப்புகள் புஸ்வாணமாகிப் போயின. புல்வாமா தாக்குதலே ஒரு திட்டம் தானா என்று கேள்வி எழுப்பும் அளவுக்கு புஸ்வாணமாகிப் போனது.

இது, பா.ஜ.க.வையும் காங்கிரசையும் ஒரு சமநிலைக்கு கொண்டுவந்து தேர்தல் போட்டா போட்டியை சம நிலை நோக்கித் திருப்பி விட்டிருக்கிறது. இதை ஒரு ஆரோக்கியமான நிலை என்றும் சொல்லலாம். இதுவரையில் காங்கிரசுக்கோ அல்லது பா.ஜ.கவுக்கோ வாக்குகளை அள்ளித்தரும் எந்தவொரு அலையும் கிடையாது என்றாலும் இந்தி பேசும் வட மாநிலங்களில் ‘இஸ்லாமிய’ பயங்கரவாதிகள், பாகிஸ்தான் எதிர்ப்பு மனநிலை என்பனவற்றை ஊதிப்பெரிதாக்கி அவற்றை வாக்கு வங்கிகளாக மாற்றும் வேலையை பா.ஜ.க.வினால் செய்ய முடியும். ஆனால் அத்தகைய ஒரு வாய்ப்பு காங்கிரசிடம் இல்லை. எனினும் ரபெல் விமான கொள்வளவு ஊழல், நீரவ் மோடி, விஜய் மல்லையா ஆகிய ஊழல் மோசடிக்காரர்களுக்கும் பா.ஜ.க.வுக்கும் உள்ள தொடர்புகள், அம்பானி போன்ற பெருங்கோடீஸ்வரர்களுக்கும் மோடி அரசுக்கும் இடையே காணப்படும் தொடர்புகள், பண மதிப்பிழக்கத்தால் பாதிக்கப்பட்ட நடுத்தர மற்றும் சிறு வர்த்தகர்கள், மோடியின் போலி வாக்குறுதிகள், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு மதவாதத்தின் எழுச்சி, இந்துத்துவ கொள்கைகளினால் சாதிவாதத்தின் எழுச்சி, பிற மதங்களுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்புகள், புலால் (மாட்டிறைச்சி) உண்ணாமையை பலவந்தமாக திணித்தல், மத அரசியலை புகுத்திவருதல் என்பன காங்கிரசுக்கு வாய்ப்பானதாக இருந்தாலும் வட நாட்டு சூழல்களில் இவை எவ்வளவுதூரம் மதவாத அரசியலை எதிர்கொண்டு நிற்கும் என்பதை ஊகிப்பது கடினமாக உள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் மோடி அரசை எதிர்க்க இவை கூராயுதங்களாக காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் ஆதரவு கூட்டணிக் கட்சிகளினால் பயன்படுத்த முடியும்.

இது இப்படி இருக்க, கடந்த பாராளுமன்றத் தேர்தலில் எந்தக் கூட்டணியையும் வைத்துக்கொள்ளாமல் தன்னந் தனியே 38 ஆசனங்களை வெற்றி பெற்று காட்டினார் ஜெயலலிதா. அவர் உயிருடன் இருக்கும் வரை பா.ஜ.க.வின் எந்தவொரு பாய்ச்சலுக்கும் இடம் தரவும் இல்லை. வளைந்து கொடுக்கவும் இல்லை.

அவரது மறைவின் பின்னர் அ.தி.மு.க.வில் ஏற்பட்ட பல்வேறு குழப்பங்கள், பிளவுகளுக்கு பின்னால் மோடி அரசு இருந்தது என்பது வெளிப்படையான உண்மை. எடப்பாடி அணி, ஓ. பன்னீர் செல்வம் அணி, தினகரன் அணி எனப் பிரித்து வைத்தும் பின்னர் எடப்பாடி – பன்னீர் இருவரையும் இணைத்தும் தமிழக அரசியலை தன் கையில் எடுத்துக் கொண்ட மோடி அரசு, அ.தி.மு.க.வின் ஒட்டுமொத்த விருப்பு இன்றியே அதனுடன் கூட்டணியையும் வைத்துக் கொண்டிருக்கிறது. ஜெயலலிதா கடந்த தேர்தலில் எழுப்பிய, மோடியா இந்த லேடியா என்ற கோஷம் அ.தி.மு.க.வினரிடம் வைரலாகி எழுச்சிக் கோஷமானது. இப்போது ஜெயலலிதாவின் அமைச்சர்களில் ஒருவராக இருந்த ராஜேந்திரபாலாஜி, மோடிதான் எங்கள் டெடி (Daddy) என்று புதியதொரு வெட்கக்கேடான கோஷத்தை எழுப்பி இருக்கிறார்! இது, அ.தி.மு.க.வின் தேர்தல் பிரசாரத்துக்கு உதவப்போவதில்லை என்பதோடு அ.தி.மு.க தொண்டர்களை எழுச்சி பெறச் செய்யவும் போவதில்லை! அ.தி.மு.க. அப்படியே பா.ஜ.க.விடம் மண்டியிட்டு விட்டது என்று தானே இக்கோஷம் பொருள் கொள்ளச் சொல்கிறது!

அடுத்ததாக, விஜய்காந்தின் தே.மு.தி.க.வுக்கு தி.மு.க.கதவவடைப்பு செய்ததையடுத்து அ.தி.மு.க.வுடன் தேர்தல் கூட்டு வைத்துக் கொள்ளும் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்தது. அந்தப் பேச்சுவார்த்தையில் ஏழு இடங்களை தே.மு.தி..க கோரவும், அ.தி.மு.க. அதற்கு மறுப்பு தெரிவித்தது. தற்போது அப்பேச்சுவார்த்தை முறிந்து, தே.மு.தி.க தனியாகப் போட்டியிட்டு மண் கௌவப் போகும் நிலையே காணப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை தே.மு.தி.க. பொருளாளர் பிரேமலதாவும் அவருடைய தம்பி சுதிஷும் கலந்து கொண்ட ஊடகவியலாளர் மாநாட்டில் பிரேமலதாவுக்கு ஏற்பட்டிருக்கும் ஏமாற்றமும், வெறுப்பும் கோபமாக மாறி ஊடகவியலாளர்களை ஒருமையில் அழைக்கவும் செய்ததைப் பார்த்தோம். தே.மு.தி.க.வின் எதிர்காலத்தை இப் பாராளுமன்றத் தேர்தல் தீர்மானித்துவிடலாம்.

இங்கே காங்கிரஸ் – தி.மு.க. கூட்டணி வலுவாக இருப்பதாகவே தெரிகிறது. தொகுதிப் பங்கீடு தொடர்பாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் அனைத்தும் குழப்பமின்றி முடிவுற்றன. குழப்படி செய்யக்கூடியவரான வை.கோ.வும் தனக்கு திருப்தியாக இருப்பதாகக் கூறியதில் இருந்தே, ஸ்டாலின் லாவகமாக கூட்டணிப் பேச்சுவார்த்தைகளை கையாண்டிருப்பதை புரிந்துகொள்ளலாம். ம.தி.மு.க.வுக்கு ஒரு பாராளுமன்றத் தொகுதியும் ஒரு மாநிலங்களவை வாய்ப்பும் கொடுக்கப்பட்டுள்ளது. டில்லிக்கு தி.மு.க.கூட்டணியின் நியமன அங்கத்தவராகச் செல்லப்போகிறவர்களில் வை.கோவும் ஒருவர் என்பது உறுதியாகி இருக்கிறது. தமிழக சட்டசபை அங்கத்தவராக இருப்பதைவிட டில்லி பாராளுமன்ற அல்லது மாநிலங்களவை உறுப்பிரனாக இருப்பதே தனக்கு பிடித்தமானது என்று ஒருமுறை வை.கோ.வே கூறியிருந்தார்.

இம்முறை விடுதலை சிறுத்தைகளுக்கு இரண்டு இடங்கள் கிடைத்துள்ளன. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக் என்பனவற்றுக்கு தலா ஒரு ஆசனம் வழங்கப்பட்டுள்ளது. காங்கிரஸுக்கு பத்து இடங்கள். தி.மு.க. 20 இடங்களை எடுத்துக் கொண்டுள்ளது.

தி.மு.க. 25 இடங்களைப் பெறும் என்பது பொதுவான எதிர்பார்ப்பாக இருக்க, நாடும் நமதே நாற்பதும் நமதே என்கிறார். பா.ஜ.க.வின் தமிழிசை சௌந்தரராஜன்!

Comments