ராமண்ணே | தினகரன் வாரமஞ்சரி

ராமண்ணே

“அண்ண இந்த பகுதியில மூன்டு கிணத்தில மட்டுந்தான் தண்ணி கிடக்குது. தொடர்ந்து இப்பிடி வெயில் அடிச்சுதென்டா உந்தக் கிணங்களில உள்ள தண்ணி எல்லாம் வத்திப்போடும். தண்ணிக்கு என்ன செய்யப்போறியள்?”

“மழை பேய வேணுமென்டு கடவுளக் கும்பிட வேண்டியதுதான். வேற என்ன செய்யச் சொல்லுறனீ”

“விவசாயத்துக்கு தண்ணி போதாது என்டு சொல்லிக்கொண்டிருக்கினம். இப்பிடிப் போச்சுதென்டா குடிக்கவும் தண்ணி கிடைக்காது.”

‘ இங்க பார்சின்னராசு உலகத்தில இருக்கிற மொத்த சனத்தொகையில மூன்டில ஒரு பகுதி அதாவது 2 பில்லியன் பேருக்கு வருஷத்தில ஒரு மாசமாவது உந்த தண்ணிப் பிரச்சின இருக்குது. அதே மாதிரி அரை பில்லியன் ஆக்களுக்கு வருசம் முழுவதும் உந்தப் பிரச்சினை இருக்குது.”

“ஏனண்ண இப்பிடி தண்ணி இல்லாமப்போகுது?”

“இந்த உலகத்தில உள்ள மொத்த தண்ணியில குறைஞ்ச ஒரு அளவுதான் மக்களின்ட பாவனைக்கு கிடக்குது. சரியா சொன்னமென்டா மொத்த தண்ணியில 0.014 சதவீதந்தான் எங்களுக்கு இருக்குது. 97 சத வீதம் உப்புத் தண்ணியா கடலில கிடக்குது. 3 சத வீத தண்ணி எடுக்க முடியாத இடத்தில கிடக்குது.”

“கொஞ்சம் பொறுங்கோ. 97, 3 அங்கயே 100 சரியாப் போட்டுதே. பிறகு வாற மிகுதி ரொம்ப குறைவாக் கிடக்குதென்ன.”

“அதுக்கென்னப்பா செய்யுறது. அந்தக் கொஞ்சம்தான் மனுஷருக்கு மீதியாக்கிடக்குது.”

“உது எல்லோருக்கும் போதுமே?”

“போதாதுதான் ஆனா ஒன்டும் செய்யேலாது. இன்னும் 10 வருஷத்தில உலகத்தில இருக்கிற 40 சத வீத மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைக்காது. உலகத்தில அதிகரிச்சுக்கொண்டு போகிற சனத்தொகை, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கைத்தரம், மாறி வருகிற பாவனைப் பழக்கம், விவசாய விஸ்தரிப்பு போன்றவையால தான் நீர்த் தேவை அதிகரிக்குது. அதே நேரத்தில கால நிலை மாற்றங்களால வருகிற வரட்சி இல்லயென்டா வெள்ளம், காடளிப்பு, மாசடைதல், பசுமை வாயு, தண்ணீர் வீண் விரயம் ஆகியவற்றால போதுமான தண்ணீர் கிடைக்காமப் போகுது. உதாலதான் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகுது.”

“உலகத்திலஉள்ள அத்தனை சனமும் குளிக்க, உடுப்புத்தோய்க்க,சமைக்க , பாத்திரம் கழுவ, பூ மரம், காய்கறி மரங்களுக்கு தண்ணீர் ஊற்ற வெளிக்கிட்டினம் என்டா உள்ள தண்ணீர் போதுமே?”

“பணக்காரின்ட வீட்ட கார் கழுவ்வும் நாய்களை குளிப்பாட்டவும் தண்ணீர் தேவையப்பா. போற போக்கைப் பார்த்தா ஆத்தைப் பிரிக்கிறது, அணை கட்டுறது போன்ற விசயங்களில நாடுகள் மட்டுமில்ல ஒரே நாட்டில உள்ள மாநிலங்களுக்குள்ளயும் கொழுவல் வருகுது.”

“ஏன் பக்கத்துர் பக்கத்து வீடுகளும் குழாயடியிலயும்தண்ணிக்குத்தான சண்டை பிடிப்பினம்.”

“உலகத்தின்ட மொத்த சனத்தொகை இப்போதைக்கு ஏழு பில்லியன். இவையின்ட பாவனைக்கு ஆறுகள் வாவிகள் நிலத்தடி நீர் என்டு கிடைக்கிறது 14 ஆயிரம் கன கிலோ மீட்டர் தான். ஆனா 5 ஆயிரம் கன கிலோ மீட்டர் தண்ணீர் இருந்தா ஏழு பில்லியன் பேரின்ட தேவையளுக்கும் போதும். ஆனா பிரச்சினை என்னவெண்டா சில இடங்களில தண்ணீர் அதிகமாக் கிடக்குது. சில இடங்களில போதாமப்போகுது.”

“அடடே உதுதான் பிரச்சினையென்ன?”

“அபிவிருத்தியடைஞ்ச நாடுகளில விவசாயம், பண்ணைகள், கைத் தொழில்கள் எல்லாம் பெரிய அளவில நடக்குது. உதுக்கு நிறைய தண்ணீர் தேவைப்படுகுது.அபிவிருத்தி அடைஞ்சி வருகிற நாடுகளை விட 10 மடங்கு தண்ணீரை அபிவிருத்தியடைஞ்ச நாடுகளில பாவிக்கினம். உதாலதான் உந்த வித்தியாசம். இன்னொன்டு சின்னராசு நிலத்தடி நீர் இப்ப பல இடங்களில உப்புத் தண்ணியா மாறிக் கொண்டு வருகுது.”

“எங்கட ஊரிலயும் அப்பிடித்தான நடக்குது. கந்தையாவின்ட கிணத்து தண்ணி முந்தி நல்லாக் கிடந்தது. இப்ப உப்பாக் கிடக்குது.”

“இலங்கையில 16 பெரிய ஆறுகளும் 80 க்கு மேற்பட்ட சின்ன ஆறுகளும் கால்வாய்களும் கிடக்குது. ஆனாலும் வருஷா வருஷம் வரட்சி வந்துகொண்டுதான் கிடக்குது. என்டபடியா நீரை சேமிக்கிறது எப்படி என்டதை எங்கட ஆக்கள் கொஞ்சம் கருத்தில எடுக்கவேணும்.”

“உரத்துச் சொல்லுங்கோ எல்லோரின்ட காதிலயும் விழட்டும்.”

“எங்கட நாட்டில இருக்கிற ஒவ்வொருவரும் ஒரு நாளைக்கி 10 லீட்டர் தண்ணீரை மீதப்படுத்தினம் என்டா ஒரு நாளைக்கி 210,000,000 லீட்டர் தண்ணீரை சேமிக்க ஏலும். குளிக்கிற நேரத்தில பைப்ப திறந்து வச்சிக்கொண்டு சோப் போடுறவை இருக்கினம். பைப்ப திறந்து வச்சிக்கொண்டே கோப்பையள கழுவுற பொம்பிளயளும் இருக்கினம். உவையள் கொஞ்சம் யோசிச்சினம் என்டா 10 லீட்டர் தண்ணீரை சேமிக்கிறது ஒன்டும் கஷ்டமில்ல கண்டியோ.”

“கழுவுறவை கொஞ்சம் கவனமா இருந்தவையென்டா 10 லீட்டர்சேமிக்கிறது ஒன்டும் கஷ்டமான விஷயமில்ல.”

Comments