மத நல்லிணக்கத்தை உணர்த்தியிருக்கும் திருக்கேதீஸ்வர விவகாரம் | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

மத நல்லிணக்கத்தை உணர்த்தியிருக்கும் திருக்கேதீஸ்வர விவகாரம்

இலங்கையில் மிகவும் பிரசித்திபெற்ற வழிபாட்டுத் தலங்களாகவும் சர்வமதத்தவரும் வழிபடுகின்ற இடங்களாகவும் திருக்கேதீஸ்வரர் ஆலயமும் மடு மாதா தேவாலயமும் விளங்குகின்றன.

இந்த மாவட்டம் இந்து கிறிஸ்தவ மக்கள் ஒற்றுமையாக ஒரணியில் வாழுகின்ற ஒரு மாவட்டமாக காணப்படுகின்றது.

இங்கே மதங்களுக்கிடையே பிணக்குகளை ஏற்படுத்தி வன்முறைகளை உருவாக்குவதற்கு பலர் திரைமறைவில் செயற்பட்டு வருகின்றனர் என்று இருமதங்களைச் சார்ந்தவர்களும் கவலை தெரிவித்துள்ளனர்.

1990ம் ஆண்டுகளின் பிற்பகுதியில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக இலட்சக்கணக்கான மக்கள் இடம் பெயர்ந்து தஞ்சமடைந்து வாழ்ந்த தலமாக மடு மாதா தேவாலயம் காணப்பட்டது.

அக்காலப்பகுதியில் சாதி மத பாகுபாடின்றி ஒற்றுமையாகவே அந்த மக்கள் ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் வாழ்ந்தார்கள்.

அதேபோல மிகத்தொன்மை வாய்ந்த பாடல் பெற்ற தலங்களில் ஒன்றான திருக்கேதீஸ்வர ஆலயத்தைச்சூழ இந்து கிறிஸ்தவ மக்கள் பன்னெடுங்காலமாக ஒற்றுமையாகவே வாழந்து வருகின்றனர்.

இவ்வாறான ஒற்றுமையை சீர்குலைத்து அதன் மூலம் அரசியல் இலாபம் தேடுவதற்கு பல சக்திகள் தற்போது முயற்சிகளை முன்னெடுத்து வருவதாகவும் அண்மைய சம்பவம் உணர்த்துகின்றது.

கடந்த மூன்றாம்திகதி மகாசிவராத்திரி தினத்திற்கான முன்னாயத்த நடவடிக்கைகளை திருக்கேதீஸ்வரர் ஆலய நிர்வாகம் முன்னெடுத்து வந்த நிலையில் ஆலயத்தின் முன்பாக மாந்தைச் சந்தியில் அமைந்திருந்த வளைவு ஏற்கனவே அமைக்கப்பட்டவளைவு என்பதால் அது சேதமடைந்து காணப்பட்டதால் அந்த வளைவை அகற்றி அதற்குப்பதிலாக புதிய வளைவு ஒன்றை அமைக்கமுயன்ற போதே இரண்டு தரப்புக்களுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது.

அதாவது, ஒருதரப்பினர் வளைவினை அமைத்தபோது மற்ற தரப்பினர் அதனை பிடுங்கி எறிந்தனர்.

இதனால் அங்கு அமைதியின்மை ஏற்பட்டது, இந்த வளைவு தொடர்பில் நீதிமன்றத்தில் வழக்கு உள்ளதாக கத்தோலிக்க மக்கள் தெரிவித்த போதும் அவ்வாறான எந்த வழக்கும் இல்லையென்றும் இது ஏற்கனவே கட்டப்பட்ட வளைவு சேதமடைந்ததனால் அதனைப் புனரமைப்பதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்திருந்தது. அதேநேரம் வீதி வளைவை அமைப்பதற்கு வீதி அபிவிருத்தி அதிகார சபையின் அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்த கோவில் தரப்பு, நாங்கள் கிறிஸ்தவர்களை மதிக்கின்றோம்.

அவர்கள் எங்களது இரத்த உறவுகள். எங்களுக்கும் அவர்களுக்கும் எந்த முரண்பாடுகளும் இருக்கக்கூடாது. யுத்தத்தினால் பேரழிவைச் சந்தித்து மீண்டெழத் துடிக்கும் எங்கள் சமூகத்தில் மதக்கலவரம் ஒன்றை ஏற்படுத்த நாங்கள் ஒருபோதும் விரும்பமாட்டோம் என்று கூறியுள்ளது.

அன்றைய தினம் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் கத்தோலிக்க அமைப்புக்கள் அரசியல்வாதிகள், அமைச்சு சார்ந்தவர்கள் எனப்பலரும் தமது கண்டனங்களை தெரிவித்திருந்தனர்.

எல்லா மதங்களையும் மதத் தலைவர்களையும் அன்பு செய்யவேண்டும் மதிக்கவேண்டும் என்றுதான் கத்தோலிக்க அவை எமக்குப்போதிக்கின்றது.

இந்த நிலையில், ‘இச்செயலை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது. தமிழர்களாகிய நாம் மதவேறுபாடுகளின்றி சகோதரத்துவத்தில் வளரவேண்டியது மிகவும் முக்கியம்.

இப்படியான வேண்டத்தகாத நிகழ்வுகள் எதிர்காலத்தில் நடைபெறாதிருக்கவும் நடைபெற்ற செயலுக்கு பிராயச்சித்தம் செய்யவேண்டும்.ஜேசு கிறிஸ்து தன் வாழ்வாலும் போதனையாலும் நாம் பெற்றுக்கொண்ட அன்பு செலுத்துதல், மன்னித்தல், விட்டுக்கொடுப்பு, தியாகம், புரிந்துணர்வு சகோதரத்துவம், சகவாழ்வு ஆகியன எமது கத்தோலிக்க மதத்தின் அடையாளங்களை நாம் இழந்து விடாமல் பாதுகாபபோம். இப்படியான நிகழ்வுகளால் எமது கத்தோலிக்க மதத்தின் பரிசுத்த தனங்களுக்கான ஏற்படும் கழங்கங்களுக்காக நாம் வனம் வருந்தி பிராயச்சித்தம் செய்யவேண்டும்’ என்று யாழ் மறை மாவட்ட குரு முதல்வர் வெளியிட்டிருந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு மன்னார் மறைமாவட்ட மற்றும் அமைச்சர் மனோகணேசன் ஆகியோரும் தமது கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.

இச் பிரச்சினை மதம் சார்ந்த ஒரு விடயமாகவே பார்க்கப்படுகின்றது. அந்த சம்பவத்தின் பின்னணி பற்றியோ அதில் புதைந்திருக்கின்ற விடயங்களை பற்றியோ ஆராயாது தங்களை ஒரு வன்முறையாளர்களாகவே சித்தரித்துக் காட்டியிருக்கின்றார்கள் என்று இப்பிரதேச மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

எது எவ்வாறிருப்பினும் இந்தப் பிரதேசங்களில் மக்கள் ஒற்றுமையாகவும் மத வேறுபாடுகளைக் களைந்து வாழ்வதற்கு உரிய வழிவகைகள் ஏற்படுத்தப்படவேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் அனைத்து மக்களும் ஒற்றுமையாக வாழ்கின்ற சூழல் உருவாக்கப்படவேண்டும் என்பதில் எல்லோருமே அக்கறை கொண்டு செயற்படவேண்டும்.

இந்த அடிப்படையில் தற்போது சம்பவம் தொடர்பிலும் ஒருமித்த ஒற்றுமையை கட்டியெழுப்புவதற்காகவும் சர்வ மதத் தலைவர்களிடையே சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன.

மன்னார் திருக்கேதீஸ்வரம் மாந்தைச் சந்தியில் அமைந்துள்ள வளைவு தொடர்பாக அண்மையில் தீவிரமடைந்த பிரச்சினையைச் சுமுகமாகத் தீர்த்துவைக்கும் முயற்சியில் தற்போது மன்னார் சர்வமதப் பேரவை ஈடுபட்டுள்ளது.

கடந்த செவ்வாய்க்கிழமை மாலை மன்னார் சர்வ மதப் பேரவையின் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளாரின் தலைமையில் மன்னார் சிறிய குருமடத்தில் இடம் பெற்ற சர்வமதப் பேரவையின் கூட்டத்தில் இது தொடர்பாக விரிவாக ஆராயப்பட்டது.

அதன்படி பிரச்சினையில் உள்ள இரண்டு தரப்பினரையும் தனித்தனியாக முதலில் சந்திப்பதென்றும் பின்னர் அனைத்துத் தரப்பினரையும் ஒரு தளத்திற்குக் கொண்டு வந்து பேச்சுவார்த்தையில் ஈடுபடுத்துவதெனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதன் அடிப்படையில் முதல் கட்டமாக சர்வமதப் பேரவையின் உறுப்பினர்களுக்கும் கத்தோலிக்க தரப்பினருக்குமான முதல் கட்டச் சந்திப்பு கடந்த புதன்கிழமை (06.03.2019) மாலை 4.30 மணிக்கு மன்னார் சர்வமதப் பேரவையின் தலைவர் தலைமையில் மாந்தை புனித லூர்து அன்னை ஆலயத்தில் இடம் பெற்றது.

இந்தச் சந்திப்பின்போது ஏற்கனவே சர்வமதக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக கத்தோலிக்க தரப்பினருடனான முதல் கட்டப் பேச்சுவார்த்தையின் போது சர்வமதப் பேரவையில் உள்ள இந்து சமய உறுப்பினர்கள் கலந்து கொள்ளவில்லை.

கத்தோலிக்க தரப்பினரின் நிலைப்பாடு, நியாயம், வாதம் போன்றவற்றை அறிந்து கொள்ளும் நோக்கத்தோடு இந்தச் சந்திப்பு இடம் பெற்றது.

முறுகல் நிலை ஏற்பட்ட அந்தக் குறிப்பிட்ட இரண்டு நாட்களில் உண்மையில் என்ன நடந்தது என்பதை கத்தோலிக்க தரப்பினர் விளக்கமாக எடுத்துரைத்தார்கள்.

குறிப்பிட்ட பிரச்சினைக்கு முன்பும் பின்பும் நடைபெற்ற விடயங்கள் எதையும் கணக்கில் எடுக்காமல் தனியாக ஒருசில புகைப்படங்களையும் வீடியோ காட்சிகளையும் மட்டும் வைத்துக்கொண்டு கத்தோலிக்க தரப்பினரைக் குற்றவாளிகளாக ஊடகங்கள் சித்தரித்தமை தொடர்பாக தமது கவலையையும் ஆதங்கத்தையும் வெளிப்படுத்தினார்கள்.

சர்வமதத் தலைவர்கள் சார்பில் தலைவர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார், இணைத்தலைவர் மௌலவி எஸ். அஸீம், இணைத்தலைவர் சங். விமலதர்ம தேரர், பாஸ்டர் எஸ். பத்திநாதன், சட்டத்தரணி ஜனாப் எம். எம். சபுறுதீன், சட்டத்தரணி அர்ஜூன் அருமைநாயகம், பொருளாளர் எஸ். எவ். செசாரியஸ், ஜனாப். எம். ஐ. ஏ. றசாக் மற்றும் சில உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

கத்தோலிக்க தரப்பினருடனான சந்திப்பைத் தொடர்ந்து மிக விரைவில் இந்து சமயத் தரப்பினரையும் சர்வமதப் பேரவையினர் சந்திக்க உள்ளனர்.

தேசிய ரீதியில் மட்டுமல்ல, சர்வதேச ரீதியிலும் சமூக வலைத்தளங்கள் மற்றும் ஊடகங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டுள்ள இந்தப் பிரச்சினைக்கு சுமுகமான ஒரு தீர்வைக் காண்பதில் மன்னார் சர்வமதப் பேரவை அர்ப்பணிப்போடு செயற்படும் எனவும், எவ்வித சவால்கள் வந்தாலும் மன்னார் மாவட்டத்தில் சமயங்கள், இனங்கள் மத்தியில் உண்மையான பரஸ்பர புரிந்துணர்வையும், சமாதானத்தையும், சகவாழ்வையும், மத நல்லிணக்கத்தையும் ஏற்படுத்துவதில் மன்னார் சர்வமதப் பேரவை தொடர்ந்து பாடுபட்டு உழைக்கும் எனவும் மன்னார் சர்வமதப் பேரவைத் தலைவர் தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இவ்வாறான வன்முறைகளோ இன முரண்பாடுகளோ ஏற்படாது ஒற்றுமையாக வாழ்வதற்கு அரசியல் தலைமைகளும் மதத்தை வழிகாட்டுகின்ற மதபோதகர்களும் மதத்தைப் போதிக்கின்றவர்களும் செயற்படவேண்டும் என்பதே இன்றைய தேவையாகும்.

Comments