போதைப்பொருளுக்கு எதிரான போர்... | Page 2 | தினகரன் வாரமஞ்சரி

போதைப்பொருளுக்கு எதிரான போர்...

பெரும் காட்டுக்குள் புகுந்த மனிதன் நடந்து களைத்ததனால் ஏற்பட்ட தாகத்தை தீர்த்துக்கொள்ள அக்கம் பக்கம் பார்த்தபோது ஒரு பாரிய மரத்தில் இயற்கையாக ஏற்பட்டிருந்த குழியில் மழைநீர் தேங்கிக் கிடப்பதைக் கண்டு, அதை பருகியதாகவும் தாகத்தை தீர்த்ததற்கு மேலாக அந்நீர் வாய்வழியே உடலுக்குள் சென்ற மறுகணமே ஒருவித புத்துணர்ச்சியும் ஊக்கமும் ஏற்பட்டதாகவும் எதனால் அது ஏற்பட்டது என்பதை சிந்தித்து பார்த்தபோது பறவைகளும் ஏனைய விலங்குகளும் தமது உணவுக்காக கொண்டுவந்த பழவகைகள் நீண்ட காலமாக அந்த மரத்தில் தேங்கியிருந்த நீரில் கிடந்து பதப்பட்டதனாலேயே அந்த மாற்றம் ஏற்பட்டிருப்பதாக மனிதன் புரிந்து கொண்டதாகவும் பிற்காலத்தில் வைன் உள்ளிட்ட பல்வேறு மதுபான வகைகளை தயாரிப்பதற்கு மனிதன் இந்த முறையையே பின்பற்றியதாகவும் வரலாற்றுக் கதைகள் கூறுகின்றன.

எடுத்த எடுப்பில் பார்க்கும்போது இது ஒரு அப்பாவித்தனமான செயலாக தென்படுவதுடன், இதனால் எவருக்கும் தீங்கு ஏற்படுவதில்லை எனவும் எண்ணத் தோன்றுகின்றது. ஆயினும் இந்த அப்பாவித்தனத்திற்கு பதிலாக இன்றைய நவீன உலகில் பணம் சம்பாதிப்பதை இலக்காகக்கொண்டு வகை வகையான மதுபான வகைகள் உலகிற்கு அறிமுகப்படுத்தப்படுவதோடு மதுபானங்கள் தரும் போதை போதாதென நச்சுத்தன்மையை பல்வேறு பக்க விளைவுகளையும் கொண்ட போதைப்பொருட்களை தயாரித்து, அதன் மூலம் பெருமளவு பணத்தை சம்பாதிக்க போதைப்பொருள் வியாபாரிகள் முனைவது இன்று பல்வேறு சமூக விரோத செயல்களுக்கு அடித்தளம் அமைத்து கொடுக்க காரணமாக அமைந்திருகின்றது.

ஆராய்ச்சிகளுக்கமைய போதைப்பொருள் உபயோகத்தில் இருந்து வருகின்ற நாடுகளில் தினந்தோறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையானோர் போதைப்பொருளுக்கு புதிதாக அடிமையாகி வருகின்றமை தெரிய வந்திருக்கின்றது. மலேசியாவில் ஒரு நாளைக்கு சுமார் 70 பேர் அளவில் புதிதாக போதைப்பொருளுக்கு அடிமையாகி வருவதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. நமது நாட்டைப் பொறுத்த வரையில் சுமார் 250 இலட்ச மக்களில் 2 இலட்சம் பேர் போதைப்பொருளுக்கு அடிமையாகியிருப்பது தெரியவந்திருக்கின்றது. இது மிகவும் பாரதூரமான விடயமாகும். இதுவரை காலமும் வசதி படைத்த சமூகத்தில் ஒரு சில பெண்கள் அல்லது யுவதிகள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சம்பவங்களை ஆங்காங்கே காணக்கிடைத்த போதிலும் தற்போது சாதாரண பாடசாலை மாணவிகள் கூட இந்த போதைப்பொருளுக்கு அடிமையாகின்றனர். இளம் பருவத்தில் ஏற்படும் காதல் தோல்வி உள்ளிட்ட பல்வேறு கசப்பான சம்பவங்களும் மனத்தாக்கங்களுமே நமது நாட்டில் பெண் பிள்ளைகள் போதைப்பொருளின் பால் ஈர்க்கப்படுவதற்கு காரணமாக அமைந்திருக்கின்றன.

ஒரு காலத்தில் சட்டவிரோத கள்ளச்சாராயமே நமது நாட்டின் ஒரு பாரிய சமூக பிரச்சினையாக இருந்து வந்தது. ஆயினும் இன்று அந்த நிலை மாறி கொக்கேயின் முதல் கஞ்சா வரையிலான பல வகையான போதைப்பொருட்களை சமூகத்தில் சுலபமாக பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை ஏற்பட்டிருப்பதுடன் அதனால் நாளுக்கு நாள் நாட்டில் மாணவர்கள் உள்ளிட்ட இளம் சமுதாயம் போதைப்பொருட்களினால் நாசமாக்கப்பட்டு வருகின்றது.

போதைப்பொருள் கடத்தலிலும் வியாபாரத்திலும் ஈடுபட்டு வருவோரினாலேயே நாள்தோறும் போதைப்பொருட்களுக்கு அடிமையாவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றனதனால் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டவர்கள் கடுமையான தண்டனைகளுக்கு உள்ளாக்கப்பட வேண்டும் என்ற கருத்தும் அவ்வாறு அவர்களை தண்டிப்பதன் மூலமே போதைப்பொருள் வியாபிப்பதை தவிர்க்க முடியும் என்ற கருத்தும் சமூகத்தில் மேலோங்கியிருக்கின்றது. மறுபுறத்தில் போதைப்பொருளுடன் தொடர்புபட்டவர்களை தண்டிப்பது என்பது மனித உரிமைகளை மீறும் செயலாகும் எனவும் அந்த வகையில் போதைப்பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டவர்களுக்கு மரண தண்டனை விதிப்பது நாகரீக உலகத்தினால் ஏற்றுக்கொள்ள முடியாத மிலேச்சத்தனமான செயலாகும் என்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இதனால் போதைப்பொருட்களுடன் சம்பந்தப்பட்டவர்களை உயரிய தண்டனைக்கு ஆளாக்கும் அதேநேரம், அவர்களும் நாட்டின் ஏனைய பிரஜைகளைப் போலவே சம உரிமை பெற்று வாழ வேண்டியவர்கள் என்பதால் அதனை ஏற்று போதைப்பொருள் குற்றவாளிகளுக்கு எதிராக மரண தண்டனையை செயற்படுத்துவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்ற கருத்தும் ஆங்காங்கே பரவியிருக்கின்றது.

ஆயினும் போதைப்பொருட்களினால் சமூகத்திற்கு ஏற்படும் தீய விளைவுகள் தொடர்பில் தற்போது நாட்டு மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்பட்டுவரும் பாரிய விழிப்புணர்வு செயற்பாடுகளினால் போதைப்பொருளுடன் தொடர்புபட்டிருப்பவர்களை பற்றி பாதுகாப்பு துறையினருக்கு பொதுமக்களிடமிருந்து இரகசிய தகவல்கள் பெருமளவில் கிடைக்க ஆரம்பித்திருக்கின்றன. போதைப்பொருள் தொடர்பில் பொதுமக்களுக்கு கிடைக்கப்பெறும் அத்தகைய தகவல்களை எந்தவித ஐயப்பாடுமின்றி இலவசமாகவே 1984 என்ற விசேட இலக்கத்துடன் தொடர்புகொண்டு வழங்குவதற்கான வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருப்பதுடன், தகவல்கள் பற்றிய இரகசியங்களை மிக உயர்ந்த அளவில் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.

போதையிலிருந்து விடுபட்ட ஒரு நாட்டை உருவாக்க வேண்டுமாயின் போதைப்பொருளினால் சமூகத்திற்கும் எதிர்கால சந்ததியினருக்கும் ஒட்டுமொத்த நாட்டிற்கும் ஏற்படும் தீமைகள் பற்றி நாட்டு மக்கள் மத்தியில் பாரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவது கட்டாயத் தேவையாகும். இதனை உணர்ந்த ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் சித்திரை மாதம் 03ஆம் திகதி முழு நாட்டையும் உள்வாங்கும் வகையில் “சித்திரை சத்தியப் பிரமாணம்” எனும் வேலைத்திட்டத்தை அறிமுகப்படுத்தி வைப்பதற்கான ஆலோசனைகளை வழங்கியிருக்கின்றார். அதற்கமைய அன்றைய தினத்தில் குறிப்பிட்ட ஒரு நேரத்தில் பாடசாலைகள், அரச அலுவலகங்கள், பாராளுமன்றம் உள்ளிட்ட சகல அரச நிறுவனங்களிலும் போதை ஒழிப்பு பற்றிய சத்தியப் பிரமாணத்தை செய்வதற்கு திட்டமிடப்பட்டிருக்கின்றது. ஒரு தேசிய நிகழ்வு என்ற வகையில் இதன் ஆரம்ப நிகழ்வை கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நடத்த திட்டமிட்டிருப்பதுடன், நாட்டின் அரச துறையினர் மாத்திரமன்றி சகல தனியார் துறையினரும் இச்சத்தியப் பிரமாண நிகழ்வில் பங்குபற்ற வேண்டும் என்பதே ஜனாதிபதி அவர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது.

அத்தோடு 17 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளஞ்சமுதாயத்தினரை உள்வாங்கும் வகையில் கண்ணியமான பிள்ளைகள் எனும் தலைப்பில் முப்படைகள், பொலிஸார், விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சு, பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து அன்றைய தினம் போதைப்பொருள் ஒழிப்பு பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட இருக்கின்றன.

தற்போது பெரும்பாலும் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்த, சுலபமாக இனங்காண முடியாத வகையில் பல்வேறு போதைப்பொருட்கள் விநியோகிக்கப்பட்டு வருவதுடன், பென்சில்கள், அழிறப்பர்கள், டொபி வகைகள் என பல்வேறு வடிவங்களில் இப்போதைப்பொருட்கள் எளிதில் மாணவர்களை சென்றடையும் வகையில் பகிர்ந்தளிக்கப்பட்டு வருவதுடன், போதைப்பொருள் வியாபாரத்திற்கு பாடசாலை மாணவர்களையும் பெற்றோர்களையும் உள்வாங்குவதன் மூலம் சந்தேகம் ஏற்படாத வகையில் மாணவர்களிடம் போதைப்பொருட்களை கொண்டு செல்வதற்கான செயற்பாடுகள் போதைப்பொருள் வியாபாரிகளினால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றமையும் சில சந்தர்ப்பங்களில் பாடசாலை ஆசிரியர்களும் இத்தீய செயற்பாடுகளுடன் இணைத்துக் கொள்ளப்பட்டிருக்கின்றமையும் அண்மைக்காலமாக பொலிஸாரினால் வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டிருக்கின்றது. எதிர்கால சந்ததியினை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க வேண்டியது நம் அனைவரினதும் கடமை என்பதனாலேயே போதைப்பொருள் ஒழிப்பு திட்டத்திற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன மிகுந்த முக்கியத்துவமளித்து செயற்பட்டு வருகின்றார்.

சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் போதைப்பொருட்களை கண்டறியத்தக்க அதிநவீன தொழிநுட்ப உபகரணங்களை உபயோகப்படுத்தி போதைப்பொருள் வியாபாரத்தை மட்டுப்படுத்திவரும் பின்னணியில் நமது நாட்டில் அத்தகைய எந்தவொரு நவீன போதைப்பொருட்களை இனங்காணும் உபகரணங்களும் அற்ற நிலையில் பொலிஸாரினதும் சுங்க அதிகாரிகளினதும் அதீத கரிசனையினாலும் அர்ப்பணிப்பினாலுமே கடந்த சில மாதங்களாக பெரும் தொகையிலான போதைப்பொருட்களை தொடர்ச்சியாக கைப்பற்றக்கூடிய நிலைமை உருவாகியிருக்கின்றது. தகுந்த அதிநவீன தொழிநுட்ப உபகரணங்களின்றி போதைப்பொருள் ஒழிப்பு செயற்திட்டத்தை காத்திரமான முறையில் முன்னெடுக்க முடியாது என்பதால் போதைப்பொருட்களை இனங்காணும் உலகில் மிகச் சிறந்த தொழிநுட்ப உபகரணங்களை கொண்டிருக்கும் இஸ்ரேல் நாட்டிலிருந்து அவற்றை கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன.

நாட்டு மக்களை நோயாளிகளாக்கி வறுமைக் கோட்டை நோக்கி தள்ளுவதில் முக்கிய பங்கினை வகிக்கும் சிகரெட், மதுபானம், போதைப்பொருள் ஆகியவற்றிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் எமது நாட்டின் அரச தலைவர் ஒருவர் முழுமூச்சுடன் செயற்பட்டு வருவது இதுவே முதற்தடவையாகும். இதனால் ஜனாதிபதி அவர்கள் இந்த சவால்மிக்க பணியினை முன்னெடுத்து அதன் வெற்றியினை நாட்டுக்கும் மக்களுக்கும் பெற்றுக்கொடுப்பதற்கு நாட்டு மக்களின் நேர்மையான ஒத்துழைப்பே தற்போது ஜனாதிபதி அவர்களின் ‘போதையிலிருந்து விடுபட்ட நாடு’ என்ற இலக்கை எட்ட கட்டாயத் தேவையாக இருக்கின்றது.

இருப்பினும் போதைப்பொருட்களுடன் தொடர்புபட்ட நெத்தலிகளையும் சூடை மீன்களையும் வலை போட்டு பிடிக்கையில் இலங்கையின் போதைப்பொருள் வியாபாரத்தின் சூத்திரதாரிகளான போதைப்பொருள் வியாபாரத்தின் திமிங்கிலங்களாக இருப்பவர்களுக்கு எந்த தண்டனையும் கிடைப்பதாக இல்லையே என்ற மனத்தாக்கம் பொதுமக்களுக்கு இருக்கவே செய்கின்றது. ஆயினும் போதைப்பொருள் வியாபாரத்தில் சம்பந்தப்பட்டிருக்கும் சிறிய நெத்தலி முதல் பெரிய திமிங்கிலம் வரைக்கும் நமது நாடு போதைப்பொருளுக்கு கைகொடுக்கும் கடலாக இருக்கும் வரையில் சாத்தியப்படும். ஆகையால் பொதுமக்கள் எனும் நீரிலிருந்து இப்போதைப்பொருள் என்ற மீன்களை தனிமைப்படுத்தும் போது நெத்தலி முதல் திமிங்கிலம் வரையிலான இந்த போதைப்பொருள் வியாபாரிகளுக்கு நிலைத்திருக்க முடியாதென்பதே உண்மையாகும்.

அந்த இலக்கையடைய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன எடுக்கும் தீர்மானங்களுக்கு நாட்டு மக்களும் போதைப்பொருள் தடுப்பு பொலிஸ் பிரிவும் சுங்க அதிகாரிகளும் உலக நாடுகளும் எப்படியான ஒத்துழைப்பை வழங்கப் போகின்றனர் என்பதிலேயே எமது நாட்டை போதையிலிருந்து விடுபட்ட நாடாக மாற்றும் பணி வெற்றியடைவது தங்கியிருக்கின்றது.

 

Comments