புங்குடுதீவில் மிகப்பெரிய வரவேற்புக் கோபுரம் | தினகரன் வாரமஞ்சரி

புங்குடுதீவில் மிகப்பெரிய வரவேற்புக் கோபுரம்

யாழ் மாவட்டத்தில் பல கிராமங்களுக்கு வரவேற்புக் கோபுரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் அண்மையில் புங்குடுதீவிலும் பிரமாண்டமான வரவேற்புக் கோபுரமொன்று திறந்து வைக்கப்பட்டது.

புங்குடுதீவு கிராமத்தைச் சேர்ந்த மஞ்சுளா கிருபானந்தனின் ஞாபகார்த்தமாக அவரது கணவர் முத்துக்குமார் கிருபானந்தன் இந்த வரவேற்புக் கோபுரத்தை அமைத்துக் கொடுத்துள்ளார்.

புங்குடுதீவுக்கு வரும் மக்களை கண்ணகி அம்மன் கோவிலுக்கு வரவழைக்கும் வகையில் புங்குடுதீவு குறிச்சிக்கட்டுப் பகுதியில் இக்கட்டடம் அமைக்கப்பட்டுள்ளது.

47 அடி உயரமும் 95 அடி நீளமும் 27 அடி அகலமும் கொண்ட இந்தக் கோபுரம் புங்குடுதீவு பிரதான வீதியின் குறுக்காக அமைக்கப்பட்டுள்ளது திராவிடர் கட்டடக்கலை பண்பாட்டை அடிப்படையாக கொண்டு நிர்மாணிக்கப்பட்ட இந்த வரவேற்புக் கோபுரம் யாழ் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பிரமாண்டமான கட்டடமாக காட்சியளிக்கிறது. ‘தெருமூடி மடம்’ என்ற தமிழரின் புராதன வரவேற்புக் கோபுர அமைப்பை அடிப்படையாக கொண்டு தற்காலத்துக்கு ஏற்ற முறையில் கட்டடம் அமைக்கப்பட்டிருக்கிறது.

இந்தக் கட்டடத்தில் வலது, இடது பக்கங்களிலும் இரண்டு மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன. 100 பேர் இருந்து இளைப்பாறிச் செல்லக்கூடியதாக அவை அமைக்கப்பட்டுள்ளன. வெளி ஊர்களிலிருந்து வரும் உல்லாசப் பிரயாணிகள் முக்கியமாக சிங்கள மக்கள் இவ்விடத்தில் தங்கி இளைப்பாறிச் செல்லத்தக்க முறையில் அந்த மண்டபங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பொன்னிறக் கலசங்களைக் கொண்ட மேற்தளத்தில் ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அம்மன், கண்ணகை அம்மன், பத்திரகாளி அம்மன் ஆகியோரின் கருங்கற் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன.

கட்டடம் மகாபலிபுரத்தை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது. பண்டைய அரசக்காலத்து கட்டடங்களுக்கு பூசப்படும் சிவப்புப் பழுப்பு நிறத்திலான பூச்சு கட்டடங்களுக்கு பூசப்பட்டுள்ளது.

கட்டடக்கலை நிபுணர் ஹரிஹரன் தாமோதரம்பிள்ளை இந்த கட்டடத்தை அழகுற வடிவமைத்துள்ளார்.

ஆலயங்களை நிர்மாணிப்பதில் பல வருட அனுபவம் கொண்ட வவுனியா சோமங்குளத்தைச் சேர்ந்த ஸ்தபதி கனகலிங்கம் வினோசிறி தனது குழுவினருடன் கட்டியுள்ளார்.

பல்வேறு கட்டடக்கலை நுட்பங்களையும் தழிழரின் பாரம்பரிய கலை அம்சங்களையும் உள்ளடக்கியதாக அமைந்துள்ள இந்தக் கட்டடத்தை அமைக்க இரண்டு வருடங்கள் சென்றதாக கூறும் அவர், இலங்கையிலேயே இதுவே இத்தகைய வடிவத்தில் அமைந்த பிரமாண்டமான வரவேற்புக் கோபுரம் என்றும் குறிப்பிட்டார்.

யாழ் நகரிலிருந்து நயினாதீவு நாகபூஷணி அம்மன் கோவில் அல்லது நாக விகாரைக்கு யாத்திரை செல்லும் அடியார்கள் இக்கோபுரத்தினூடாக சென்றால் புங்குடுதீவு இராஜ ராஜேஸ்வரி அம்மன் கோவிலையும் தரிசித்து விட்டுச் செல்லலாம்.

புங்குடுதீவு கண்ணகை அம்மன் ஆலய பிரதம குரு மதுசூதனக் குருக்கள் திறப்பு விழா பூசைகளை ஆரம்பித்து வைத்தார்.

ஆலயத்தின் அறங்காவலர் சபையை சேர்ந்த செல்லையா யுகேந்திரன், செல்லையா ரவீந்திரன் ஆகியோருடன் வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ. இளங்கோவன் ஆகியோர் நாடாவை வெட்டி வரவேற்புக் கோபுரத்தை திறந்து வைத்தனர்.

மஞ்சுளா கிருபானந்தன் புகைப்படத்துடன் கூடிய நினைவுப்படிவத்தை முத்துக் குமார் கிருபானந்தனின் குடும்பத்தினர் திறந்து வைத்தனர். மங்கள வாத்தியங்கள் முழங்க நடைபெற்ற இக்கோபுரத் திறப்பு விழாவில் நூற்றுக்கணக்கான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 

Comments