நாட்டிலுள்ள அநேக பள்ளிவாசல்கள் சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவதாகவே முறைப்பாடுகள் குவிகின்றன | தினகரன் வாரமஞ்சரி

நாட்டிலுள்ள அநேக பள்ளிவாசல்கள் சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவதாகவே முறைப்பாடுகள் குவிகின்றன

  • வக்பு நியாயச்சபை தலைவரும், ஓய்வுபெற்ற நீதிபதியுமான கலாநிதி யூ.எல். அப்துல் மஜீத்
  • பள்ளிவாசல் நிருவாக விடயத்தில் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ள  வேண்டியதன் அவசியத்தை மறந்த  நிலை கவலை தரக்கூடியது

பள்ளிவாசல்கள், அரபுக்கல்லூரிகள், மத்ரஸாக்களுக்காக நமது முன்னைய வள்ளல்கள், தனவந்தவர்கள் எழுதிவைத்து விட்டுச் சென்ற சொத்துக்கள் இன்றைய எமது சமூகத்தில் ஒழுங்காக நிருவகிக்கப்படுகின்றதா என்ற கேள்விக்கு எவராலும் சாதகமான பதிலைத்தர முடியாத நிலையே காணப்படுவதாகவும் சில பள்ளிவாசல்களின் நிருவாகங்களும், அரபு கலாபீடத்தைப் பரிபாலிக்கும் பொறுப்புக்கொடுக்கப்பட்ட சிலரும் முறைகேடான போக்கில் செயற்படுவதாக நிறையவே முறைப்பாடுகள் தெரிவிக்கப்படுவதாகவும் வக்பு நியாயச்சபை (Wakfs Tribunal) தலைவரும், ஓய்வு பெற்ற மேல் நீதிமன்ற நீதிபதியுமான யூ.எல்.அப்துல் மஜீத் பெரும் கவலையுடன் தெரிவிக்கின்றார். முஸ்லிம் சமூகம் அல்லாஹ்வை பயந்து நடந்து கொள்ள வேண்டியதன் கட்டாயத்தை அவர் வலியுறுத்துகிறார். தினகரன் வாரமஞ்சரிக்கு அளித்த நேர்காணலின்போதே இதனை அவர் குறிப்பிட்டார்.

அவரது நேர்காணல் விபரம் வருமாறு:

கேள்வி : முஸ்லிம் சமூகத்துக்கு மிகவும் அவசியமான பாரியதொரு பொறுப்பு உங்களிடம் தரப்பட்டுள்ளது. நீதித்துறையில் நீண்ட கால அனுபவத்தைக் கொண்ட உங்களிடமிருந்து இந்த வக்பு நியாயச்சபையின் மூலம் முஸ்லிம் சமூகம் நிறையவே எதிர்பார்க்கின்றது. இந்த நிலையில் வக்பு நியாயச் சபை மூலம் எத்தகைய பணிகளை முன்னெடுத்து வருகிறீர்கள்?

பதில் : இந்த இடத்தில் நான் மிக முக்கியமானதொரு விடயத்தைக் குறிப்பிடவேண்டியுள்ளது. வக்பு சபை என்பது வேறு வக்புநியாயச்சபை என்பது வேறு இரண்டும் தனித்தனியானவையாகும். வக்பு சபை பள்ளிவாசல்களின் நிருவாகங்கள் தொடர்பில் செயற்பட்டுவருவதாகும். நியாயச்சபை என்பது வக்பு சபையில் தீர்வுகாண முடியாத விடயங்கள் தொடர்பில் விசாரிப்பதற்கு விண்ணப்பிக்கப்பட்டால் அவற்றுக்குத் தீர்வுகாணும் நீதி விசாரணைகளை எடுக்கக் கூடிய இடமாகும். அத்துடன் முஸ்லிம் தர்ம நம்பிக்கைச் சொத்துக்கள் விடயத்தில் இந்த நியாயச்சபை முழு அளவிலான பங்களிப்புச் செய்ய வேண்டியுள்ளது.

எமது நாட்டில் முஸ்லிம்களுக்கான தர்ம நம்பிக்கை சொத்துக்கள் சுமார் 44 காணப்படுகின்றன. இவற்றுள் மகரகம கபூரியா அரபுக் கல்லூரியின் பெயரில் பொறுப்புச் சாட்டப்பட கொழும்பு கிராண்ட் பாஸில் அமைந்திருந்த சுலைமான் மருத்துவமனை மிக முக்கியமானது. மறைந்த பெருவள்ளல் என்.டி.எச். அப்துல் கபூர் இந்தச் சொத்தை கபூரியாவின் நலன்களைப் பேண வழங்கியிருந்தார். அதனை நிருவகிக்க 10 பேர் கொண்ட குழுவையும் நியமித்தார். அண்மைக்காலத்தில் இந்த மருத்துவமனை உடைக்கப்பட்டிருப்பதோடு அந்தக் காணியும் கைமாறப்பட்டிருப்பதாக கூறப்படுகின்றது. இது சமூகத்துக்கு கவலைதரக் கூடிய விடயமாகும்.

இது தொடர்பில் என்னால் மேலதிகமாக எதுவும் கூற முடியாதுள்ளது. ஏனெனில் இந்த விவகாரம் இன்று நீதிமன்றத்தில் இருக்கின்றது. வழக்குத்தீர்ப்பு வரும்வரை எதனையும் கூறமுடியாதுள்ளது. அதனால் அதுபற்றி எதனையும் இப்போதைக்கு என்னால் கூறமுடியாது.

அடுத்த விடயங்கள் பற்றிப் பேசுவதனால் மாவன்லை, புத்தளம், பதுளை போன்ற இடங்களிலும் கொழும்பு ஹமீத் அல் ஹூஸைனியிலும், யாழ்ப்பாணம் சுலைமானியா வீதி, கொம்பனித்தெரு வள்ளலால் (இந்தியாவைச் சேர்ந்தவர்) இப்படி பல தர்மநிதிச் சொத்துக்கள் காணப்படுகின்றன. எதை எடுத்துக் கொண்டாலும் அவை நீதியாக நடந்து கொள்கின்றனவா என்ற கேள்வியே எழுகின்றது. இவை குறித்து முஸ்லிம் சமூகம் சிந்தித்துப்பார்க்க வேண்டிய கடப்பாட்டைக் கொண்டிருக்கின்றது.

கேள்வி – பள்ளிவாசல்கள் நிருவகம் தொடர்பில் நிறையவே சிக்கல்கள் காணப்படுகின்றன இதனை எவ்வாறு நோக்குகின்றீர்கள்?

பதில் – முஸ்லிம் விவகாரத்திணைக்களம் நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள், தக்கியாக்களை பதிவு செய்யும் பணியை முன்னெடுக்கின்றது. அண்மையில் பதியப்படாத பள்ளிவாசல்கள் தக்கியாக்களை உடன் பதியுமாறு கோரப்பட்டுள்ளது. இது வேற்கத்தக்க விடயமாகும். பதியப்படாத வழிபாட்டுத்தளங்கள் சட்ட ரீதியான பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடலாம்.

அடுத்தது ஒரு பள்ளிவாசலுக்கு ஊர் ஜமாஅத்தின் ஒத்துழைப்புடன் தெரிவு செய்யப்படும் நிருவாகம் மூன்று வருடங்களுக்கு பதவியில் இருக்கமுடியும். மூன்று வருடங்களின் பின்னர், ஜமா அத்தின் அனுமதியுடன் புதிய நிருவாகம் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும். ஆனால் ஊர் மக்கள் விரும்பினால் பழைய நிருவாகத்தை தேர்வு செய்து கொள்ளவும் முடியும்.

அண்மைக்காலமாக பள்ளிவாசல் நிருவாகங்கள் தொடர்பில் கேள்விப்படுபவை விசனிக்கத்தக்கதாகவே உள்ளன. நாட்டிலுள்ள பெரும்பாலான பள்ளிவாசல்களில் நிருவாகக்கட்டமைப்புகள் சர்வாதிகாரப்போக்கில் செயற்படுவதாக நிறையவே முறைப்பாடுகள் குவிந்தவண்ணம் உள்ளன. பள்ளிவாசல்கள் அல்லாஹ்வின் இல்லங்கள் என்பதை மறந்து இந்த நிருவாகங்கள் செயற்படுவதாகவே பார்க்கமுடிகிறது.

பள்ளிவாசல் நிருவாகம் தொடர்பில் முஸ்லிம் விவகாரத்திணைக்களத்தின் வக்பு சபை கடுமையான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும். வக்பு சபை கொழும்பிலிருந்து கொண்டு இயங்கினால் மட்டும் போதாது. பள்ளிவாசல் நிருவாக சபைத் தேர்வின்போது வக்பு சபை அதிகாரிகள் அந்த இடத்தில் பிரசன்னமாகி நியாயமான முறையிலும், நேர்மையானவர்களும், தீன் தாதிகளும் தெரிவாவதை ஊர்ஜிதப்படுத்த வேண்டும். பள்ளிவாசல் நிருவாகத்தில் அரசியல் நுழைவதற்கு எந்தவிதத்திலும் இடமளிக்கப்படக் கூடாது. சாய்ந்த மருது பள்ளிவாசல் நிருவாக விடயத்தில் அரசியல் நுழைந்திருப்பதை அவதானிக்க முடிகிறது. வக்புசபை இது விடயத்தில் எடுத்த முடிவு நியாயமற்றது என்பதே எனது நிலைப்பாடாகும். நீதிவிசாரணையொன்றை மேற்கொள்ளாமல் வக்பு சபைத்தலைவர் எடுத்த தீர்மானம் அநீதியானது என்பதை வலியுறுத்திக் கூறுவேன்.

கேள்வி – முஸ்லிம் தனியார் சட்ட விவகாரம் காலம் கடந்து இழுத்தடிக்கப்பட்டுக் கொண்டே போகின்றதே இது குறித்த உங்கள் நிலைப்பாடு என்ன?

பதில் – 2009ல் நியமிக்கப்பட்ட குழு 2019 ஆகியும் தீர்வுகாணமுடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. எனது பார்வையில் அது இயற்கை மரணமெய்தும் நிலைக்கே வந்துள்ளது. ஆரம்பகாலத்தில் மர்ஹூம் ஏ.எம்.எம். சஹாப்தீன் நல்ல ஆரோக்கியமான அறிக்கையொன்றை கையளித்திருந்தார். அதற்கு என்ன நடந்தது என்பதை புரிந்து கொள்ளமுடியாதுள்ளது. அன்று 2009ல் அமைச்சர் மிலிந்தமொரகொட 16 பேர் கொண்ட குழுவை நியமித்தார். அந்தக் குழு இன்று இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. இந்த விடயத்தில் உலமாக்களுக்கு பாரிய பொறுப்பு இருக்கின்றது. ஆனால் அதே உலமாக்கள் கூட பிரிந்துநின்று ஆளுக்காள் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பதைத்தான் பார்க்க முடிகிறது. இது குறித்து என்னால் வேறெதனையும் கூறமுடியாது. பொறுத்திருத்துதான் பார்க்க வேண்டியுள்ளது.

கேள்வி – இன்றைய தருணத்தில் மிக முக்கியமானதொரு விடயம் தொடர்பான கேள்வியொன்றை உங்களிடம் தொடுக்க விரும்புகின்றேன் இன்று உலகை ஆட்டிப்படைத்துக் கொண்டிருக்கும் போதைப்பொருள் எமது நாட்டையும் தலைகீழாக புரட்டியுள்ளது. இதில் முஸ்லிம் சமூகமும் தொடர்புபட்டிருப்பதாகவே பேசப்படுகின்றது. இது பற்றி சமூகத்தின் ஒரு தலைவர் என்ற அடிப்படையில் என்ன கூறவிரும்புகிறீர்கள்?

பதில் – இலங்கையில் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகள் மிகவும் தீவிரம் பெற்றிருக்கின்றன. நாளுக்கு நாள் பெரும் தொகை ஹெரோயினுடன் பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர். குறிப்பாக, முஸ்லிம் சமூகத்தை சேர்ந்த பலரும் இவ்வாறு போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டு வருகின்றமை அவதானிக்கப்படுகின்றது.

ஹெரோயினுடன் கை செய்யப்பட்டவர்களும் முஸ்லிம்களும் இருக்கின்றமையானது. முஸ்லிம் சமூகம் மிகவும் அக்கறையுடன் சமூகத்தின் இளைஞர்களை நெறிப்படுத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகின்றது.

சமீபத்தில் வெளிவந்த சில தகவல்களின்படி, சில பள்ளிவாசல்களின் நம்பிக்கைப் பொறுப்பாளர்களும் கூட போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதுமிகவும் அபாயகரமான நிலையாகும். இவர்களை பள்ளிவாசல் பொறுப்புக்களிலிருந்து நீக்குவதற்கான நடவடிக்கைகளை ஊர் மக்கள் மேற்கொள்ள வேண்டும். இளைஞர்கள் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்கான மிகப் பிரதான காரணங்களாக அமைவது, கல்வி அறிவின்மை, சிறந்த தொழிலொன்றை பெற்றுக்கொள்ள முடியாமை, போதைப்பொருள் வியாபாரத்தின் மூலம் கூடிய வருமானத்தைப் பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கின்றமை போன்றனவாகும். எனவே, இந்த மூலக் காரணிகளை சரி செய்வதன் மூலமே நிரந்தரமாக போதைப்பொருளை விட்டும் இளைஞர்களை மீட்டெடுக்க முடியும். இது குறித்து முஸ்லிம் சமூகம் மிகத் தீவிரமாக சிந்தித்து, செயற்பட வேண்டியிருக்கின்றது.

பாடசாலையிலிருந்து இடை விலகும் மாணவர்களின் தொகை அதிகரிப்பதனால், அவர்கள் முறையான தொழில்களைப் பெற்று, சமூகத்தில் கௌரவமாக வாழும் நிலை இல்லாமல் போகின்றது.

எனவே, அவசரமாக பணம் சம்பாதிக்க வேண்டுமென்ற எண்ணம், அவர்களை போதைப்பொருள் வியாபாரம் உள்ளிட்ட சட்டவிரோத செயல்களின்பால் தள்ளிவிடுகின்றது. பாடசாலையிலிருந்து இடை விலகுவதுதான் இளைஞர்கள் வழி தவறுவதற்கான பிரதான காரணியாக அமைந்து விடுகின்றன. இன்னுமொரு புறம் போதைப் பொருள் பயன்படுத்துவதற்கு பழகுகின்ற இளைஞர்கள், தற்போது பாடசாலைப் பருவத்திலேயே அதற்கு பழகுகின்ற நிலை காணப்படுகின்றது. எனவே, பாடசாலை மாணவர்களை மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கும் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் இருக்கின்றது. எனவே, முழுமையான செயற்றிட்டமொன்றை உருவாக்கி, நடைமுறைப்படுத்துவதன் மூலமே சமூகத்திலிருந்து போதைப்பொருள் பயன்பாட்டையும் வியாபாரத்தையும் ஒழிக்க முடியும்.

Comments