தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் மிகப்பெரிய ஜனநாயக சக்தி | தினகரன் வாரமஞ்சரி

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் மிகப்பெரிய ஜனநாயக சக்தி

வணக்கம். இந்த வாரம் கடிதம் அனுப்பாதிருக்க யோசித்திருந்தேன். ஆனால் கருணாகரன் விட மாட்டார் போலிருக்கிறது. அவருடைய கருத்துக்கள் கடுமையாக மறுதலிக்கப்பட வேண்டியவை. வடக்கில் “மக்கள் போராட்டங்கள்” நடப்பதாகவும் அரசியல்வாதிகள் இடையில் புகுந்து அவற்றை பாழ்ப்படுத்துவதாகவும் ‘கருணா’ கூறுகிறார். இது மிகத் தவறான, விஷமமான கூற்றாகும். வடக்கில் நடக்கும் “காணமற்போனோர்” போராட்டம், கேப்பாபிலவு போராட்டம் உட்பட அனைத்து போராட்டங்களும் அரசியல் போராட்டங்களே. “பிரஜைகள் குழு” (Citizens committee) என்று அப்பாவித்தனமாக அழைக்கப்படும் ஒரு கூட்டம் தான் இப்போராட்டங்களை ஒழுங்கு செய்கிறது. இக் குழுவினர் புலம்பெயர் LTTE ஆதரவாளர்களுடன் தொடர்புடையவர்கள்.

போராட்டத்துக்கு தேவையான எல்லா விடயங்களும் (பணம் உட்பட) வெளிநாட்டிலிருந்து அனுப்பி வைக்கப்படுகிறது. மஹிந்த ஆட்சிக் காலத்தில் இக் குழுவின் உறுப்பினர்கள் அடிக்கடி கைது செய்யப்பட்டார்கள். தொலைபேசியில் மிரட்டப்பட்டார்கள். 2015க்கு பின் கிடைத்த சுதந்திரம் இப்போது நல்லாட்சிக்கு எதிராகவே பயன்படுத்தப்பட்டு வருகிறது. 500 நாட்கள், 600 நாட்கள் என்று போராட்டங்கள் தொடர்வதற்கும் ஜெனீவா அமர்வு நடைபெறும் மார்ச் மாதத்தில் அவை சூடு பிடிப்பதற்குமான காரணம் இது தான். இப் போராட்டத்தில் ஈடுபடுவோர் பிரஜைகள் குழு ஊடாக புலம்பெயர் LTTE இன் அரசியலை தான் முன்னெடுத்து வருகின்றனர்.

வடக்கில் உள்ள அரசியல் சக்திகளை குறிப்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை புறக்கணித்தே இப் போராட்டங்கள் முன்னெடுக்கபடுகின்றன. கூட்டமைப்பின் சில பிரமுகர்கள் தமது மாவட்டத்தில் தமது பங்களிப்பு இல்லாமல் போராட்டம் நடைபெறக்கூடாது என்று நினைத்திருக்கலாம். அதில் என்ன தவறு?

சமத்துவம் சமூக நீதிக்கான மக்கள் அமைப்பும், கூட்டமைப்பும் போட்டி போட்டது போன்ற ஒரு தோற்றத்தை ‘கருணா’ உருவாக்குகிறார். அவ் அமைப்புடன் போட்டி போட வேண்டிய தேவை கூட்டமைப்புக்கு இல்லை. அவ் அமைப்பு ஒரு “தனி மனித கட்சியாகும். “one man Party” முருகேசு சந்திரகுமாரை எடுத்து விட்டால் அக்கட்சியில் யாரும் பெரிதாக இல்லை. அண்மைக்காலமாக ‘கருணா’ சந்திரகுமாருக்கு கொடிபிடித்து வருகிறார். இந்த வேடதாரியின் கயமைத்தனம் சந்திரகுமாருக்கு தெரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்.

“மக்கள் இக்கட்சிகளை நிராகரிக்க வேண்டும்” என்று ‘கருணா’ கூறுகிறார். அப்படியானால் மீண்டும் மஹிந்த குழுவினரை தெரிவு செய்ய வேண்டும் என்று கூறுகிறாரா? அல்லது பிரஜைகள் குழு வித்தியாதரன் போன்றோருடன் சேர்ந்து பாயும் புலி சின்னத்தில் புது கட்சி ஏதாவது களமிறங்க போகின்றதா? இதை ‘கருணா’ தெளிவுபடுத்த வேண்டும்.

தமிழ் மக்களுக்கான மிகச் சரியான ஜனநாயகத் தேர்வு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால் ஜனநாயக அரசியல் களத்தில் ஆரோக்கியமான போட்டி நிச்சயம் இருக்கும். இதை முருகேசு சந்திரகுமார், சிவசக்தி ஆனந்தன் ஏன் கஜேந்திரகுமார் – கஜேந்திரன் குழுவினர் கூட வழங்க முடியும். மக்கள் தெரிவு இறுதியானதாக இருக்கும்.

இங்கு பிரச்சினை என்னவென்றால் கஜேந்திரகுமார் – கஜேந்திரன் குழுவினர் பற்றி ‘கருணா’ கள்ள மௌனம் சாதிக்கிறார். முதல்வராக இருந்தபோது சி.வி.வி.யை தாக்கிய அவர் கொஞ்ச காலமாக முன்னாள் முதல்வரை சீண்டுவதில்லை.

சந்திரகுமார் கிளிநொச்சியில் கூட்டமைப்பிற்கு போட்டியாக வந்த பின் அவரை தூக்கிப்பிடித்து நடனமாடுகிறார். முன்னர் சந்திரகுமாரை பற்றியும் கள்ளமெளனம் சாதித்துவந்தார்.

அரசியல் களத்தை பக்கச் சார்பில்லாமல் ஆய்ந்து கருத்து கூறுவதே ஒரு பத்தியாளனின் பணி ஆகும். “கருணா” அதை என்றும் செய்ததில்லை. அவரது எழுத்து அருவருப்பூட்டுகின்ற குழப்பத்தை ஏற்படுத்துகின்ற சமூகத்துக்கு எதிரான (Anti social) எழுத்தாகும்.

“காணாமற்போனோர்” தொடர்பில் நடக்கும் போராட்டம் புனிதமானது போன்றும் அரசியற் கட்சிகள் அதில் புகுந்து அதை குழப்பி விட்டது போலவுமான ஒரு தோற்றம் ஏற்படுத்தப்படுகிறது.

“காணாமற்போனோர்” பற்றிய போராட்டம் முற்றிலும் சந்தர்ப்பவாத, கயமைத்தனமான ஒன்றாகும். அதை அரசியல் கட்சிகள் பொறுப்பேற்றது வரவேற்கத்தக்க விடயமாகும். ஏனெனில் இப்போராட்டத்தில் ஈடுபடுவோர் அரசியல் பிரமுகர்களை புறக்கணிக்கும் அல்லது, ஏசி சாபமிடும் கீழ்த்தரமான செயல்களை செய்து வந்தனர். இப்பொழுது அவர்கள் போராட்டம் “அரசியலானது’ என்றால் அவர்கள் நல்ல ஒரு பாடத்தை கற்றிருக்கிறார்கள் என்று கூற முடியும். அதாவது புலம்பெயர் LTTE இன் அரசியலை இலங்கையில் இனியும் முன்னெடுக்க முடியாது என்பதே அதுவாகும்.

கேப்பாபிலவு, வெடுக்குநாறி போன்றவற்றிலும் இவ்வாறான நிலை உண்டு அரசியல்வாதிகள் தம்மை வந்து பார்ப்பதில்லை என கேப்பாபிலவில் புலம்பல்கள் கேட்கும். அண்மையில் வடக்கின் புதிய ஆளுநரைக் கூட இவர்களில் சிலர் கண்டிக்கிறார்கள். அப்படி ஆளுநர் என்ன செய்து விட்டார்? கேப்பாபிலவு பிரச்சினையைத் தீர்க்க அவர் முயற்சி செய்கிறார்.

இவர்கள் கண்டிக்கிறார்கள். பிரச்சினை தீராமல் இருந்தால் தான் வெளிநாட்டு மூலங்களிலிருந்து பணம் தொடர்ந்து கிடைக்கும் NGOக்கள் தொடர்ந்து மக்கள் பணி செய்வதாகக் கூறிக்கொண்டு அரசியல் செய்யமுடியும். வெடுக்குநாறிமலை ஏறுவதற்கு மிகவும் சிரமமான ஒருபாறைப் பகுதியாகும். அதன் மேல் பகுதியில் கல்லும் சூலமும் வைத்த வழிபாட்டிடம் உள்ளது. அதை தொல்பொருள் திணைக்களம் முக்கியமான பிரதேசமாக அறிவித்ததில் ஒரு தவறும் இல்லை. தொல்பொருள் திணைக்களம் என்றால் அவர்கள் எல்லா பிரதேசங்களையும் பெளத்த வலயமாக்கி விடுவார்கள் என்ற தவறான கருத்து பலர் மத்தியில் காணப்படுகிறது.

துரதிர்ஷ்டவசமாக அத்திணைக்களத்தில் தமிழர்கள் யாரும் குறிப்பிட்ட பெரிய பதவிகளில் இல்லை. இதனால் இவ்விடயம் அரசியலாக்கப்பட்டிருக்கிறது. மக்கள் மத்தியில் இது பற்றிய தெளிவூட்டல்கள் அவசியமாகும்.

‘கருணா’வின் இலக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தாக்குவதாகும். இன்னொன்று அவர் மஹிந்தவுக்கு சார்பானவர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று கூறுவது அல்லது ஜனநாயக சக்திகளை கொச்சைப்படுத்துவது பாசிச வாதத்திற்கும் பெரும்பான்மை வாத இனவாதத்திற்கும் (Majoritarian Racism) கொடி பிடிப்பதாகும். ‘கருணா’ அடிக்கடி அரசியல்கட்சிகளை, கட்சி அரசியலை தனது பத்தியில் கொச்சைப்படுத்தி வருகிறார். இது மிகவும் கண்டனத்துக்குரியது. ‘கருணா’ முன்னர் பாசிசவாதியாக இருந்தவர். இப்பொழுது பெரும்பான்மைவாதிகளின் காலடியில் இருக்கிறார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களின் மிகப்பெரிய ஜனநாயக சக்தியாகும். அச் சக்தியை புறக்கணிக்கும்படி கோருவதற்கான எந்த தார்மீக உரிமையும் ‘கருணா’வுக்கு இல்லை. இவரைப்போன்ற அரசியல் வெற்றுவேட்டு பச்சோந்திகளை முறியடிக்க வேண்டிய பாரிய பொறுப்பு மக்களுக்கும் ஜனநாயகத்தை நம்பும் எல்லா அரசியல்வாதிகளுக்கும் உண்டு.

Comments