கவர்ச்சியும் கவர்ந்திழுக்கும் ஆளுமையும்! | தினகரன் வாரமஞ்சரி

கவர்ச்சியும் கவர்ந்திழுக்கும் ஆளுமையும்!

இந்த நாட்களில் அபிநந்தன் மீசையும் அபிநந்தன் சேலையும் நாகரிகமாகியிருக்கிறது. பெரும்பாலும் அபிநந்தன் யார் என்றே தெரிந்திராத மக்களுக்குக்கூட அவரின் பெயரில் ஓர் ஈர்ப்பு; ஆகர்ஷிப்பு; ஆதர்சம் ஏற்பட்டிருக்கிறது!

ஏன்?

அவர் செய்த துணிச்சல் மிகுந்த செயல். தமது நாட்டிற்குள் நுழைந்த எதிரி விமானங்களைத் துரத்திச் சென்று தாக்குதல் நடத்தினார் என்றும் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்துகையில், மிகத் துணிச்சலுடன் பதில் சொன்னார் என்றும் வெளியான தகவல்கள் அவரின் பெயரை இந்தியாவின் மூலை முடுக்கிற்கு மாத்திரமன்றி உலக அளவிற்குக் கொண்டு சென்றன. ஆனால், அவரைப் பொறுத்தவரை அஃது ஒரு தோல்விகண்ட முயற்சி. எதிரியிடம் பிடிபட்டுக்ெகாண்டதை எந்த வீரனும் மகிழ்ச்சியாகக் கொள்ளமாட்டான். ஆனால், இந்தியா கொண்டாடுகிறது; இந்திய மக்கள் அபிநந்தனைக் கொண்டாடுகிறார்கள்.

அவர் கருப்பா, சிவப்பா என்று தெரியாத நிலையில்கூட அபிநந்தனுக்குப் பாராட்டுகள்!

கொழும்பு வெள்ளவத்தையில் தமிழ் இளைஞர்கள் அபிநந்தன் மீசை வைத்துக்ெகாண்டிருக்கிறார்கள். இந்தியாவில் எல்லா மொழியினரும் அபி மீசைக்கு மாறியிருக்கிறார்கள். இந்த சூட்சுமத்தைத் தெரிந்துகொண்ட ஜவுளிக்கடை வர்த்தகர்களும் அபிநந்தன் சேலையை வடிவமைத்து விற்பனையில் வெற்றி கண்டிருக்கிறார்கள்.

திடீரெனத் தோன்றுகின்ற இவ்வாறான கவர்ச்சியெல்லாம் நீடித்து நிலைக்குமா? என்றால், இல்லை. நடிகர்கள் மீதான போலிக் கவர்ச்சியும் அப்பிடித்தான். ஒரு சிலர் வேண்டுமானால், காலா காலத்திற்குத் தங்களுக்குப் பிடித்தமானவர்களை விட்டுக்ெகாடுக்காமல் நினைவில் நிறைத்து வைத்திருப்பார்கள்.

ஒருவரைக் கவர்வதற்கும் ஈர்ப்பதற்கும் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். முக வசீகரம், பேச்சாற்றல், மொழி ஆளுமை, நம்பிக்ைக, வாக்குத் தவறாமை, நேர்கொண்ட பார்வை, வசீகரிக்கும் குரல் வளம் எனப் பல்வேறு காரணங்களால் ஒருவர் மீது மற்றவருக்குக் கவர்ச்சி ஏற்படலாம். கண்டதும் காதல் கொண்டதே கோலம் என்று நொந்துபோகிறவர்கள் வேறு ரகம்.

மக்களை கவர்ந்து ஆகர்ஷிக்கும் அரசியல் தலைவர்கள் பலர் இருக்கிறார்கள். பலர் மறைந்துபோயிருந்தாலும், மக்கள் மனத்தில் இன்னும் நீக்கமற நிலைத்திருக்கிறார்கள். மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, இந்திராகாந்தி, வல்லபாய் பட்டேல், அம்பேத்கார், ஈவேரா பெரியார், அறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், நெல்சன் மண்டேலா, கார்ள் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், ஆபிரகாம் லிங்கன், ஜோசப் ஸ்டாலின், வின்சன்ற் சர்ச்சில், ஜே.ஆர்., தந்தை எஸ்.ஜே.வி.செல்வநாயகம், மாஓசேதுங், சேகுவேரா, பிடல் கஸ்ட்ரோ, நிக்கலஸ் சாவேஸ் எனப் பல தலைவர்களைச் சொல்லலாம். இங்குப் பெயர் குறிப்பிடப்படாத இன்னும் எத்தனையோ தலைவர்கள் இந்த Charismatic Leadership வரையறைக்குள் வருகிறார்கள்.

என்றாலும், நாகரிக மோகத்தினால் தற்காலிகமாக ஏற்படுகின்ற கவர்ச்சியினால் ஏற்படும் வசீகரிப்புக்கு மக்கள் ஆளாகுவதும், பின்னர் மாற்றமடைவதும் விலக்கவொண்ணா விதியாகவே இருந்து வருகிறது. இஃது ஒரு வகையில் ஆக்கபூர்வ செயற்பாட்டுக்கும் (Positive Attitude) வழிவகுக்கும்.

விசேடமாக, மனிதன் இன்று நாட்டின் அடிப்படையில் மாத்திரமன்றி, அந்த நாட்டுக்குள் இருக்கின்ற பிரதேசம், தான் சார்ந்த இனம், அந்த இனத்தின் மொழி, கலை, கலாசாரம், கோத்திரம் எனப் பல்வேறு வகையான பிரிவினைக்குள் சிக்கித் தவித்துக் ெகாண்டிருக்கின்றான்.

அபிநந்தன் விடயத்தில் ஒட்டுமொத்த இந்தியாவும் ஓரணியில் நின்று அவரைப் பாராட்டியது; பாராட்டுகிறது. ராஜஸ்தான் பெற்றோர் தமக்குப் பிறந்த குழந்தைக்கு அபிநந்தன் என்று பெயர் சூட்டிப் பெருமை கொள்கிறார்கள். ஆனால், அபிநந்தனின் தாய்நிலத்து மக்கள், அவர் என்ன சாதிக்காரராக இருப்பார் என்று ஆராய்ந்திருக்கிறார்கள். பொதுவாக உலகம் கிராமமாகச் சுருங்கி வரும்போது இந்தக் கேள்விகளுக்ெகல்லாம் இடமிருக்காது என்றே தோன்றுகிறது.

அபிநந்தனின் முகமறியாத தமிழ் இளைஞர்கள் இலங்கையில் அவரின் மீசையை வைத்துக்ெகாள்வதை மகிழ்ச்சியாகக் கருதுகிறார்கள் என்றால், எஃது அவர்களை அவ்வாறு ஒன்றுபடச் செய்தது? அதேநேரம், அவர்கள் தம் அருகில் இருக்கும் அயலானை ஒதுக்கி வைத்துக்ெகாண்டிருப்பார்கள். இங்குத்தான் பிரச்சினை.

"யாதும் ஊரே யாவரும் கேளிர்

தீதும் நன்றும் பிறர் தர வாரா" என்ற கனியன் பூங்குன்றனாரின் வாக்கியத்தைச் சொல்லிக்ெகாண்டும் எழுதிக் ெகாண்டும் அபிநந்தன் எந்த இனத்தவராக இருப்பார்? என்று தேடுவது எந்த விதத்தில் நியாயம்? என்று கேட்கிறார் நண்பர். அதேநேரம், அபிநந்தன் தமிழராய் இருப்பதும், இந்திய பாதுகாப்பு அமைச்சர் திருமதி நிர்மலா சீத்தாராமன் தமிழ் நாட்டைச் சேர்ந்தவராய் இருப்பதும் பெருமை என்று சொல்லிக்ெகாண்டாலும், அதில் அப்படி ஒரு பெருமையும் கிடையாது. அவர்கள் தமிழர்கள் என்பதைவிட இந்தியாவின் மனிதர்கள் என்பதில்தான் பெருமை இருக்கிறது.

உலகில் மனித இனம் எல்லாம் ஒன்றுதான் என்கிறார் வேதாத்திரி மகரிஷி. எனவே, வசீகரிக்கிறார் என்று ஒருவரைப் பாராட்டிப் புகழ்வதை விடுத்து எல்லா மனிதர்களையும் சமமாய் மதித்துச் செயலாற்றும் சிந்தனைப் போக்கினை வளர்த்துக்ெகாள்வோம்!

Comments