கதாநாயகியைத் தேடி தென்புலோலியூர் சென்ற கதை | தினகரன் வாரமஞ்சரி

கதாநாயகியைத் தேடி தென்புலோலியூர் சென்ற கதை

சாப்பிட்டு முடிந்த பின்னர் மனதுக்குள் நான் வகுத்திருநத திட்டப்படி மேக்கப் மேன் செல்வராஜாவைப் பார்த்து “அண்ணே! காலையில அஞ்சு மணிக்கு சந்திரகலாவுக்கும் டீனுக்கும் மேக்கப் போடுங்க.” என்றேன்.

பின்னர் நான் ரகுநாதனை நோக்கி “அண்ணே! ஆறு மணிக்கு சூட்டிங்கக்கு யுனிட்டோட வெளியே இறங்குறீங்க. அந்த டூயட்ட படமாக்குறீங்க. மத்த மத்த வேலைகள நீங்களே பார்த்து செய்றீங்க” சமையல்காரரைப் பார்த்து எல்லாரையும் நாலரை மணிக்கு எழுப்புறீங்க. அஞ்சு மணிக்கு தேத்தண்ணி கொடுக்கிறீங்க. காலை சாப்பாடு எட்டு மணிக்கு தயாராகி லோகேஷனுக்கு போகணும். நான் இப்ப தூங்கப் போறேன்” என்று அடி எடுத்து வைத்தேன்.

“ஜுனைதீன்! கொஞ்சம் நில்லுங்க!” என்று என்னை இடை நிறுத்திய தனரத்னம் அவரது கைகளை உயர்த்தி தட்டி என்னைப் பாராட்டினார்.

அதைத் தொடர்ந்து அங்கு குழுமி இருந்த அவ்வளவு பேரும் எழுந்து நின்று கரகோஷம் எழுப்பினர்.

(அன்று ஒலித்த அந்த இதய சுத்தியான அவர்களின் அந்த பாராட்டே என்னை எங்கள் தேசிய சினமாவில் இவ்வளவு உயர்த்தி விட்டதாக இன்றும் நான் நன்றியுடன் நினைக்கிறேன்.)

ரூமுக்கு நான் வந்த போது சுப்புலட்சுமி காசிநாதன் பினனால் வந்து “டேய் தம்பி! என்னைக் கொஞ்சம் சீக்கிரமா கொழும்புக்கு அனுப்பி வைடா” என்றார்.

பிரசவம் நடந்து பன்னிரண்டு நாட்களில் சூட்டிங்க்குக்கு கைக் குழந்தையோடும் கணவரோடும் வந்தவர் அவர்.

நடிகர் விஸ்வநாதராஜாவின் சின்னம்மாவும் கண்டியில் மிகப் பிரபலமான நாடக நடிகையுமான கண்டிச் சந்திராவும் சுப்புலட்சுமி காசிநாதன் பின்னால் வந்தார். கண்டிச் சந்திரா, சுப்புலட்சுமி காசிநாதனுக்கு பெரும் உதவியாக இருந்தார்.

மனதுக்குள் கணக்கு போட்டுப் பார்த்து “அக்கா! நீங்க இன்னும் மூன்று நாள்ல கொழும்பு போகலாம் அக்கா!” என்றேன்.

“அதுக்குள்ள சூட்டிங் முடிஞ்சிடுமாடா!” கண்களை அகல விரித்து வியப்புடன், கேட்டார், சுப்புலட்சுமி காசிநாதன்.

“உங்களோட சூட்டிங்க நான் சீக்கிரமா முடிக்க வழி பண்ணுறேன் அக்கா! இதே இப்பவே யார் கிட்டேயும் சொல்லிப் போடதீங்கோ” என்றேன்.

“கோடி புண்ணியம்டா!” என அளவில்லாத மகிழ்ச்சியுடன் என்னைக் கைக் கூப்பி வணங்கி விட்டு நித்திரைக்குச் சென்றார். ஆனைக்கோட்டை செல்லையா, நாளை பிற்பகல் இரண்டு மணிக்கு என்னை பத்மநாதன் வீட்டில் சந்திப்பதாகச் சொல்லி விடை பெற்றார்.

இரவு நான் சொன்ன விதமே எல்லாம் சிறப்பாக நடந்தேறின.

படப்பிடிப்புக்கு வெளியேறும் முன் ஜவாஹர் இரண்டு மூன்று தடவைகள் என்னிடம் வந்து ஸ்கிரிப்டை எழுதும் படி அன்பாகவும் கெஞ்சலாகவும் கண்ணியமாகவும் வினயமாகவும் கேட்டுக் கொண்டார்.

என்னையும் சமையல்காரரையும் தவிர படபிடிப்புக் குழுவைச் சேர்ந்த மற்ற அளைவரும் பாடல் காட்சியைப் படமாக்க கசரீனா கடற்கரையை நோக்கிச் சென்றது.

இரவைக்கு சந்திரகலாவின் இன்னோர் சோகப் பாடல் காட்சியை நாங்கள் தங்கி இருக்கும் வீட்டினுள்ளயே படமாக்கலாம் என்ற முடிவுடன் திரைக்கதை, வசனத்தை கொப்பியில் எழத ஆரம்பித்தேன்.

சினமாவைச் சார்ந்த பலர் திரைக் கதை வசனம் எழுதவென நவரட்ணம் போல் ஹோட்டல்களையும் அமைதியான இடங்வளையும் குளிர்ப் பிரதேசங்ளையும் நாடிப் போவார்கள. முப்பதத்தைந்து கதை, திரைக்கதை, வசனங்களை குடும்ப பிக்கப் பிடுங்களின்றி மனைவியின் பேராதரவுடன் இரைச்சலகள், இடையூறுகளுக்கு மத்தியிலேயே நான் எழுதி வெற்றிக் கண்டுள்ளேன்.

முற்பகல் பதினொரு மணியளவில் பத்மநாதன் வீட்டுக்குச் செல்ல தயாராகி நின்றேன்.

பகல் பன்னிரண்டு மணியளவில் கார் வந்தது.

பத்தநாதன் வீட்டுக்குள் சென்றதும் என் கண்ணில் பட்டது அவருடைய வீட்டின் விசாலமான அழகிய கூடமே..

சிறிது நேரம் உறவாடிய பின்னர் பத்மநாதனிடம் “ஐயா! இரவைக்கு ஒரு பாடல் காட்சி படமாக்கணும். அதற்கு இந்த வீட்டுக் கூடம் வசதியா இருக்கு. அனுமதி தருவீங்களா?” எனக் கேட்டேன்.

“எதையாவது பண்ணிக்கோ! எனக்கு தொந்தரவு இல்லாம.” என அனுமதி தந்தார். எனவே தங்கி இருக்கும் வீட்டில் பாடலை படமாக்க இருந்த என் முடிவை மாற்றி அதை பத்மநாதன் ஐயா வீட்டிலேயே படமாக்குவது என முடிவு செய்தேன்.

விருந்தோம்பல் முடிந்தது

சொன்னது போல் ஆனைக்கோட்டை செல்லையா வந்தார். அவருடன் கதாநாயகியைத் தேடி வீரமணி ஐயர் சொன்ன இடத்தை நோக்கி பஸ்ஸில் புறப்பட்டோம்.

பண்டிதர் கணபதிப்பிள்ளை வீட்டைக் கண்டு பிடித்தோம்.

சொல்லும் அளவுக்கு அதிகமான வீடுகள் அக்கம் பக்கத்தில் இருக்கவில்லை. எனவே பண்டிதர் வீட்டைக் கேட்கலாம் என நினைத்தால் அது பூட்டிக் கிடந்தது.

அதற்கு நேராக இருந்த எதிர் வீட்டைக் கேட்போம் என படலைக்கு அருகில் சென்று படலைக்கிடையால் உள்ளே எட்டிப்பார்த்த பின்னர் “அண்ணே! அண்ணே!!” என செல்லையா படலையைத் தட்டினார்.

வீட்டின் உள்ளே இருந்து வெளியே வந்த ஒரு மனிதர் கடுமையாக குரலில் “என்ன? என்ன? உங்களுக்கு என்னடா வேணும்?” என முற்றத்தில் வந்து நின்றவாறே கேட்டார்.

செல்லையா தணிந்த குரலில் “இல்லண்ணே! இந்த ரேலங்கி செல்லையான்னு..” என்றார்.

“யாருடா அது?” என்றார், இன்னும் கடுமையான குரலில்!

“அது தான் அண்ணே அந்த திருவிழாவுக்கு எல்லாம் ஆடுமே..” என்று செல்லையா வார்த்தையை முடிக்க வில்லை...

“சின்ன மேளக்காரியையெல்லாம் தேடி இங்க ஏன்டா வர்றீங்க?” என்ற வீட்டுக்காரர் ஏவி விட்ட நாட்டு நாய் போல் முன்னால் பாய்ந்து வந்து, படலையிலிருந்து ஒரு தடியை உருவி எடுத்தார்.

மேலும் கீழும் புரியாமல் நான் சட்டென அருகில் நின்ற செல்லையாவைப் பார்த்தேன்.

சுமார் பத்து பன்னிரண்டு யார் தூரத்தில் செல்லையா ஓடிக் கொண்டிருந்தார். வீட்டுக்காரர் உருவிய தடியை ஓங்கியபடியே என்னை நெருங்கிக் வந்துக் கொண்டிருந்தார். செல்லையா ஓடும் திசையில் நானும் உயிர் பயத்தால் பறந்தேன்.

சில செக்கன்களுக்குப் பிறகு நான் ஓடியவாறே திரும்பிப் பார்த்தேன். வீட்டுக்காரரைக் காணவில்லை. ஆனால், செல்லையா எனக்கு பின்னால் ஓடி வந்துக் கொண்டிருந்தார்.

இரவு வீரமணி ஐயர் ரேலங்கி செல்லையாவை நாம் தங்கி இருந்த வீட்டுக்கு அழைத்து வந்திருந்தார்.

ரேலங்கியை வீரமணி ஐயர் பரத நாட்டியம் ஆட வைத்துக் காட்டினார். ரேலங்கியை நடிக்க வைத்து பார்த்தேன். ஓரளவு திருப்தியாக இருந்தது. ரேலங்கியை விட வீரமணி ஐயர் பரதத்தில் தேர்ச்சி பெற்றவராக இருந்தார்.

அன்று இரவு பத்மநாதன் வீட்டில் திட்டமிட்ட படி படப்பிடிப்பு நடந்தது. 36 மணி நேரத்தில் ஜவாஹர் சொன்ன புத்திமதிப்படி என் தலையில் தேங்கி இருந்த, முன்னர் எழதிய திரைக்கதை, வசனத்தை வடித்து, கொப்பியில் பதிந்து, படப்பிடிப்புக் குழு அனைவர் முன்னிலையிலும் “உங்களால் தான் இந்த படம் முடிவடைகிறது” என புகழ்ந்து ஜவாஹர் கையில், கொப்பியைக் கொடுத்தேன்.

மிகவும் நன்றியுடன் அதை வாங்கிக் கொண்ட ஜவாஹர் என்னை ஆரத் தழுவி முத்தமிட்டார். படப்பிடிப்புக் குழுவிடமிருந்து மீண்டும் எனக்கொரு கைத் தட்டலை ஜவாஹர் வாங்கித் தந்தார்.

அது மட்டுமல்ல. இதன் மூலம் ஓரளவு மனிதத் தன்மையையும் எனக்கு ஜவாஹர் கற்றுத் தந்தார் என்றே நான் இன்றும் நினைக்கிறேன் “நான் வாழ்ந்தேன் என்பதில் எனக்கு பெருமை இல்லை. ஜவாஹர் போன்ற நல்ல மனிதர்கள் காலத்தில் நான் வாழ்ந்தேன் என்பதில் தான் நான் இன்று பெருமையடைகிறேன்.

இரவு பகலாக சகலரினதும் கடும் ஒத்துழைப்புடன் படப்பிடிப்பு தொடர்ந்து நடந்தது. குறிப்பிட்ட நாளில் சுப்புலட்சுமி காசிநாதன் கொழும்பு திரும்பினார்.

தயாரிப்பாளரின் ஊராகிய ஹட்டன் மாணிக்கப் பிள்ளையார் கோவிலிலும் கதிர்காமத்திலும் எடுக்க வேண்டிய நான்கு காட்சிகள் மட்டுமே எஞ்சி நிற்க, எட்டு நாட்களில் படத்தின் ஏனைய படப்பிடிப்புகளையும் முடித்து ரகுநாதனிடம் ஒப்படைத்து என் சுமைகளை இறக்கி வைத்த பின்னர் ‘நெஞ்சுக்கு நீதி’ திரைப்படத்தை ஆரம்பிக்கும் நினைவோடு நான் தனியாக கொழும்பு திரும்பினேன்.

இலங்கையில் தயாரிக்கப்பட்ட 16வது தமிழ் தேசிய திரைப்படமாகிய “தெய்வம் தந்த வீடு” 14. 07. 1978 இல் 14 திேயட்டர்களில் திரையிடப்பட்டது.

இதுதான் உலகி​ேலயே முதலாவது ‘சினமா ஸ்கோப்’ (அகன்ற திரை) கருப்பு வெள்ளை, தமிழ்த் திரைப் படம் தயாரான வரலாறு.

Comments