ஒருபிரதேசத்தையே அழிப்பதா? | தினகரன் வாரமஞ்சரி

ஒருபிரதேசத்தையே அழிப்பதா?

ஒரு காலம் யுத்த நெருக்கடியில் சிக்கியிருந்த வன்னியில் இப்பொழுது பெரிய பிரச்சினையாக இருப்பது மணல் பெறுவதே. கடவுளைக் கண்டாலும் மணலைக் காண முடியாது என்று சொல்லுகின்ற அளவுக்கு மணலுக்கு அவ்வளவு கிராக்கி. கறுப்புச் சந்தையில் கூட மணலைப் பெற முடியாது. இவ்வளவுக்கும் வன்னியிலிருந்துதான் யாழ்ப்பாணத்துக்கே மணல் போகிறது. அதுவும் டிப்பர் டிப்பராகப் போய்க் கொண்டிருக்கிறது. தினமும் ஏறக்குறைய ஐநூறு டிப்பருக்குமேல் மணலோடு போகின்றன.

ஆனால், வன்னியில் உள்ளவர்கள் தங்களுக்குத் தேவையான மணலைப் பெற முடியாது. கேட்டால், மணலுக்கு அனுமதி இல்லை என்று கையை விரிக்கிறார்கள். விசாரித்தால், அளவுக்கதிகமாக மணல் எடுப்பதைத் தடுப்பதற்காகவே இந்தத் தடை என்று பதில் வருகிறது.

உண்மையில் மணலுக்கான அனுமதியை யார் கொடுப்பது என்பது இன்னும் இடியப்பச் சிக்கலையும் விடச் சிக்கலாக உள்ளது. மாவட்டச் செயலர்களுக்கே அதற்கான அனுமதி உண்டென்று பொதுவாகச் சொல்கிறார்கள். இல்லை, இல்லை, பிரதேச செயலருக்கே அதற்கான அதிகாரமுண்டு என்று வேறு சிலர் கூறுகின்றனர். கனியவளங்கள் திணைக்களம் கையசைக்காமல் மணலை ஏற்றவோ எடுத்துச் செல்லவோ முடியாது என்கின்றனர் இன்னொரு தரப்பினர்.

இப்படியே ஆளாளுக்கு ஒவ்வொரு தரப்பையும் பற்றிச் சொல்கிறார்களே தவிர, எந்தத் தரப்பினரிடமிருந்து மணலைப் பெறலாம் என்று யாரும் சரியாகச் சொல்லவில்லை. அதைப்பற்றி அவர்களுக்குச் சரியாகத் தெரியவில்லை. ஆனால், கடந்த காலங்களில் இந்த மாதிரி மணல் பிரச்சினை வந்தபோதெல்லாம் இந்தளவுக்கு நெருக்கடிகள் ஏற்படவில்லை. ஓரளவுக்கு நெருக்கடிக்குப் பேசித்தீர்வு காணப்பட்டது. இப்பொழுது அந்த நடைமுறையே இல்லை. மணல் இல்லை என்றால் தொழிலை விடுங்கள். கட்டுமானங்களை நிறுத்துங்கள் என்ற மாதிரித்தான் பேச்சுப்போகிறது. அரச கட்டுமாணங்களுக்கு மட்டும் மணலுக்கு அனுமதி உண்டென்கிறார்கள். அப்படியென்றால் சனங்கள் குடிசையைப் போட்டுக்கொண்டு குந்துவதா?

போரினால் முழுதாகவே அழிந்த பிரதேசம் வன்னி. முக்கியமாக கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள். ஆகவே இந்த மாவட்டங்களில் நிர்மாணப்பணிகள் கூடுதலாக இருக்கும். அதற்கேற்ற மூலப்பொருட்களும் தேவைப்படும். அந்த மூலப்பொருளில் ஒன்றே மணல். இந்த மணல் இரண்டு வகையானது. ஒன்று ஆற்று மணல். மற்றது பூச்சு மணல். இரண்டு மணலும் வன்னியிலுண்டு.

வன்னியில்தான் கூடுதலான ஆறுகள் உள்ளன. அந்த ஆறுகளிலிருந்து தேவையான மணலைப் பெற முடியும். இதற்குரிய அனுமதியை கனிய வளங்கள் திணைக்களம் வழங்கினால் சரி. கூடவே வனப்பாதுகாப்புத் திணைக்களமும் அனுமதிக்க வேண்டும். ஆறுகள் அத்தனையும் காடுகளில் உள்ளதால் வனப்பாதுகாப்புத் திணைக்களத்தின் அனுமதி தேவை.

கனிய வளங்கள் திணைக்களத்தினர் மணலை எடுக்கக்கூடிய அளவு மற்றும் இடங்களை அடையாளப்படுத்தி, அதற்கான கண்காணிப்போடு அனுமதியை வழங்க வேணும். வழங்கப்படும் அனுமதி துஷ்பிரயோகம் செய்வதற்கு இடமளிக்கப்படலாகாது. இதுவே கவனிக்க வேண்டிய ஒழுங்கு. இதற்குப் பொறுப்பு காவல்துறை. அதாவது வழங்கப்படும் அனுமதிக்கு ஏற்றவாறு, அனுமதிக்கப்பட்ட இடத்தில், குறிப்பிடப்பட்டுள்ள அளவில், குறிப்பிட்ட கால எல்லையில், குறித்த வழியில் மணல் எடுத்துச் செல்லப்படுகிறதா என்பதைக் கண்காணிக்கும் பொறுப்புப் பொலிசுக்குரியது.

ஆனால், குறிப்பிட்ட இடங்களிலிருந்து தாராளமாக மணல் எடுக்கப்படுகிறது. அளவுக்கு மிஞ்சி. போதாக்குறைக்கு ஆறுகளையே அகழ்ந்தும் எடுக்கிறார்கள். ஆனால் அவ்வளவு மணலும் வெளியேதான் போகிறது. வெளி மாவட்டங்களில் மணலின் விலை உச்சம் என்பதால், நேரடியாக அங்கே செல்கிறது. வன்னியில் கூடுதல் விலைக்கு விற்க முடியாது என்பதால் தட்டுப்பாடு. ஆகவே இதுவொரு செயற்கைத் தட்டுப்பாடாகும். உள்நோக்கங்களுடன் திட்டமிடப்பட்ட ஏற்பாடு.

இதனால் கறுப்புச் சந்தையில் மணல் விற்கப்படும் நிலை ஏற்பட்டது. இந்தக் கறுப்புச் சந்தையை யாரும் ஊக்குவிக்கவே தேவையில்லை. அது தன்பாட்டுக்கு வளரும். தேவையான பொருள் ஒன்றுக்கு தட்டுப்பாடு என்றால் அதை எப்பாடுபட்டாவது வாங்கத்தான் செய்வார்கள். அந்த மாதிரி மணலையும் எந்த வழியிலாவது பெற வேண்டும் என்ற நெருக்கடி ஏற்படும்போது கறுப்புச் சந்தையையே நாட வேண்டியுள்ளது.

கறுப்புச் சந்தையில் ஒரு போதும் நியாய விலையோ ஒழுங்கு விதியோ இருப்பதில்லை. அங்கே பொருளை வைத்திருப்பவர்கள் நிர்ணயிப்பதே விலை. இந்தக் கறுப்புச் சந்தை வியாபாரத்தில் மணல் தரகர்கள், மணலை ஏற்றி வரும் வண்டிக்காரர்கள், காவல்துறை, கனிய வளங்கள் திணைக்களம் தவிர, இடையில் நிற்கும் ஏராளமானவர்கள் என ஒவ்வொரு தரப்பினருக்கும் பணம் கொடுக்க வேணும். இதனால் மணலின் விலை உச்சத்தில் உள்ளது.

இதைத் தவிர வேறு வழியில்லையா என்றால், அந்த வழியை உருவாக்கிக் கொடுக்க வேண்டியது உயர் அதிகாரிகளும் பிரதேசத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஒருங்கிணைப்புக் குழுக்களின் தலைவர்களுமே! ஆனால் அவர்கள் இதையிட்டுக் கவலைப்படுவதாகவோ அக்கறைப்படுவதாகவோ இல்லை. மணலுக்குத் தட்டுப்பாடு, கறுப்புச் சந்தையில் உச்சவிலை என்றெல்லாம் செய்திகள் வந்த பிறகும் கூட எல்லோரும் மௌனமாகவே இருக்கின்றனர். இது நிலைமையை மேலும் மோசமாக்கியுள்ளது. இதற்கு மேல் தாங்கள் யாரிடம் முறையிடுவது? யார் இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைப்பது என்று தெரியவில்லை.

என்னுடைய நண்பர் ஒருவர், வீடொன்றைத் திருத்தி அமைத்துக் கொண்டிருக்கிறார். அந்த வீட்டைப் படையினர் அவரிடம் மீளக் கையளித்ததே கடந்த ஆண்டுதான். வீட்டைக் கொடுக்கும்போது அதற்குக் கதவுகள், ஜன்னல்கள் என்று எதுவுமே மிஞ்சியிருக்கவில்லை. மின்னிணைப்புகள், நீரிணைப்புகள் எல்லாம் பிடுங்கிச் செல்லப்பட்டிருந்தன. இந்த நிலையில் கோறையாக்கப்பட்ட வெறும் கட்டிடத்தை – சுவர்களை வைத்துக்கொண்டு வீட்டைக் கட்டியெழுப்புவதற்கு முயன்று கொண்டிருக்கிறார். ஆனால் அதற்கு மணல் இல்லை.

சீமெந்து, கல், இரும்புக்கம்பி, மின்னிணைப்புக்கான பொருட்கள், நீரிணைப்புக்கான உபகரணங்கள் எல்லாவற்றையும் பெறலாம். அவையெல்லாம் வெளியிலிருந்து வருகின்றன. அவை வெளியிலிருந்து வருவதால் அவற்றை இலகுவில் பெற முடிகிறது. மணலும் மரமும் அப்படியல்ல. அவை வன்னியில் பெற வேண்டியவை என்பதால் அவற்றைப் பெறுவதில் சிரமங்கள். தடைகள். நெருக்கடிகள்.

அதாவது வெளிநாட்டுப் பொருட்களை இலகுவில் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூர்ச் சரக்கை கண்ணால் காணவே முடியாது. இந்த நிலைமையானது பாதிக்கப்பட்ட சனங்களை மேலும் பாதிப்படைய வைப்பதாகும். ஆகவே இதற்கு உடனடி நடவடிக்கை தேவை. இதைச் சரி செய்வதற்கு 13 ஆவது திருத்தமோ சமஸ்டியோ அவசியமில்லை. சாதாரணமாகவே இந்த விவகாரம் தீர்த்து வைக்கப்படக்கூடியது.

முதலில் வன்னியில் மேற்கொள்ளப்படுகின்ற கட்டுமானங்களைக் குறித்த மதிப்பீடுகள் செய்யப்பட வேண்டும். அது அவசியமானது. ஒவ்வொரு கட்டுமாணப்பணிகளையும் உள்ளூராட்சி மன்றுகளின் அனுமதியுடன்தான் செய்ய முடியும் என்பதால் இந்த மதிப்பீடுகளை அவற்றின் வழியாகச் செய்யலாம். அப்படி மதிப்பீடு செய்யப்படும்போது எவ்வளவு மணல் மாதமொன்றுக்குச் சராசரியாகத் தேவை என்பது தெரியவரும். அதற்குப் பிறகு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடி மணலை எடுப்பதைப்பற்றியும் வினியோகம் செய்வதைப்பற்றியும் யோசிக்கலாம்.

ஆனால், இதைச் செயற்படுத்துவது யார்? அதாவது பூனைக்கு மணி கட்டுவது யார்? சிலர் இந்த விடயத்தை வடக்கின் புதிய ஆளுநர் சுரேன் ராகவனிடம் இதைப்பற்றிப் பேசிப் பார்க்கலாம் என்கிறார்கள். அப்படிப் பேசினால் ஆளுநர் கள விஜயம் செய்து நிலைமைகளை ஆராய்ந்து, உரிய நடவடிக்கைகளை எடுத்துத்தீர்வைத்தரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஆனால் இது கூட இன்னும் தீர்மானமில்லை. இதை ஆளுநரிடம் எடுத்துச் செல்வது யார் என்பது இன்னொரு பிரச்சினை. அப்படியென்றால் உள்ளூரில் இவற்றைப் பற்றிப் பேசுவதற்கான ஆட்களோ அமைப்புகளோ இல்லையா? என்று நீங்கள் கேட்கலாம். மணல் தட்டுப்பாட்டினைப்பற்றி அவ்வப்போது ஊடகங்களில் செய்திகள் வருகின்றன. மணல் இல்லாத காரணத்தினல் மேசன் வேலை செய்வோருக்குத் தொழில் குறைகிறது. மேசனுக்கு மட்டுமல்ல, தச்சுவேலை செய்வோர், மின்னிணைப்போர், நீரிணைப்போர் என ஒரு தொடராகப் பலருக்கும் வேலை இல்லாமல் போகிறது.

ஆகவே இது ஒரு சிறிய பிரச்சினையோ தனிப்பிரச்சினையோ அல்ல. பலருடைய வாழ்க்கையோடு சம்பந்தப்பட்ட விவகாரம். எனவே இது ஒரு சமூகப் பிரச்சினையே.

இந்தப் பிரச்சினை கடந்த பத்து ஆண்டுகளுக்கு மேலாக நீடிக்கிறது. சில சந்தர்ப்பங்களைத் தவிர, ஏனைய சந்தர்ப்பங்களில் எல்லாம் மண் விலை மலையேறுகிறது. ஆகவே, இதற்கு நிரந்தரத் தீர்வொன்று அவசியம். வருகின்றவர்கள் அவ்வப்போது ஏற்படுகின்ற நெருக்கடியைத் தணித்து வைப்பவர்களாக இருக்கின்றனரே தவிர, நிரந்தரத்தீர்வைத் தரக்கூடியவர்களாக இல்லை. பொருத்தமான பொறிமுறை ஒன்றை உருவாக்குவோராகவும் தெரியவில்லை.

எனவே இதற்கு ஒரு நிரந்தரத்தீர்வு – நிரந்தர ஏற்பாடு அவசியம். ஒரு காலம் மண்ணுக்காக – மண் விடுதலைக்காகப் போராடியவர்கள் இன்று ஒரு ட்ரக்ரர் மண்ணுக்காக அலைய வேண்டியுள்ளது என்று ஒரு நண்பர் கவலையோடு சொன்னது நினைவில் வருகிறது. அவர் சொன்னதொன்றும் சாதாரணமான விசயமல்ல. வலிநிறைந்த உண்மை.

இந்த உண்மைக்கு மதிப்பளிப்பது யார்? புதிய வாசல்களைத் திறப்பது எப்படி? இந்தப் பத்தியை நிறைவு செய்யும்போது ஒரு தகவல் கிடைத்தது. கிளிநொச்சி மாவட்டத்தில் மணல் விநியோகத்துக்கான ஏற்பாடுகளை மாவட்டச் செயலகம் மேற்கொள்ளத் திட்டமிட்டிருப்பதாக. அதன்படி ஒரு தொகுதி மணல் பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்திலிருந்து அகழப்படும் என.

பச்சிலைப்பள்ளிப் பிரதேசத்தில் ஆறுகள் கிடையாது. ஆகவே ஆற்று மணல் இல்லை. அங்கே உள்ளது நிலத்தடி மணல். அதாவது வெள்ளை மணல். அது பூச்சுக்குப் பயன்படுவது. அல்லிப்பளை, புலோப்பளை, கிளாலி, மாசார், முகாவில், இயக்கச்சி, கோவில்வயல் போன்ற இடங்களில் இந்த மணல் உண்டு. ஆனால், இங்கிருந்து ஒரு கிலோ மணலைக் கூட எடுக்க முடியாது. காரணம், பச்சிலைப்பள்ளிப் பிரதேசமானது கடல் மட்டத்திலிருந்து மூன்று நான்கு அடி உயரம் மட்டுமே உள்ள இடமாகும். அங்கே மணலை அகழ்ந்தால் கடல் நீர் உட்புகக் கூடிய அபாயம் உண்டு. இந்த நிலையில் நான்கு கிலோ மீற்றர் மட்டுமே அகலமுடைய பிரதேசத்தில் பொறுப்பற்று விளையாட முடியாது.

மணல் தட்டுப்பாடு என்பதற்காக ஒரு பிரதேசத்தை அழிப்பது பெருந்தவறு.

ஆகவே பொருத்தமான நடவடிக்கைகளை எடுப்பது பொறுப்பானவர்களின் கடமையாகும். அதையே சனங்கள் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

Comments