அரசியல் நலனுக்கான இந்திய-பாகிஸ்தான் போர்? | தினகரன் வாரமஞ்சரி

அரசியல் நலனுக்கான இந்திய-பாகிஸ்தான் போர்?

இந்திய - பாகிஸ்தான் போர் தணிந்த நிலையில் காணப்பட்டாலும் அதன் உள்ளாார்ந்த அர்த்தத்தில் போராகவே நிகழ்ந்து கொண்டே செல்கிறது. காஷ்மீர் போரின் மையமாக அமைந்துள்ளது. இரு நாடுகளது இலக்கும் வேறானதாக உள்ளது. அதனை சரி செய்வதற்கான புறச்சூழல் நிலவிய போதும் இந்தியா தொடர்ச்சியாக போரைப்பற்றி அதிகம் கரிசனை கொண்டு இயங்குகிறது. இக்கட்டுரையும் இரு தரப்பின் போக்குகளை அளவிடுவதுடன் சமகால சூழலில் அவற்றின் தந்திரோபாய நிலைகளை விளங்கிக் கொள்வதாக அமையவுள்ளது.

இந்தியாவைப் பொறுத்தவரை போரை எப்படியாவது நடாத்தி தீரவேண்டும் என்ற இலக்குடன் செயல்படுவதனை காணக்கூடியதாக உள்ளது. தற்போதய பிரதமர் மோடி அரசாங்கம் தேர்தலை இலக்காகக் கொண்டாலும் பாகிஸ்தானை பழிதீர்க்க விரும்புவதனை காணமுடிகிறது. அத்தகைய நோக்குடன் செயல்பட பாகிஸ்தானின் பயங்கரவாத அமைப்புக்களுக்கான ஆதரவே காரணமென இந்தியா கூறுகின்றது. அத்தகைய எண்ணம் இந்தியாவிடம் மிக நீண்டகாலமாக நிலவிய விடயம். உலகில் எந்த மாற்றம் நிகழ்ந்தாலும் இந்தியாவும் பாகிஸ்தானும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கான சூழல் இல்லாத தன்மையே இன்றும் காணப்படுகின்றது. இந்தியாவின் ஆட்சியும் அதிகாரமும் மட்டுமல்ல இந்திய மக்களும் அவ்வாறே தயார் செய்யப்பட்ட அரசியல் நடத்தையுடன் காணப்படுகின்றனர். இந்தியர்களின் அரசியல் நடத்தையில் ஊறிப்போன ஒரு விடயம் பாகிஸ்தான் எதிர்ப்பு வாதமாகும். அதனை சீக்கியரிடம் மட்டுமல்ல முழு இந்தியரிடமும் காணமுடிகின்றது.

கடந்த காலம் முழுவதும் நிகழ்ந்த யுத்தம் அனைத்தும் பாகிஸ்தான் எதிர்ப்பு வாதமாக சித்தரிக்கப்பட்டதில் மத எதிர்ப்புவாதமாகவே மேலோங்கியிருந்தது. இதனை முறியடிக்கும் அரசியல் நடத்தை மாற்றம் எதுவுமே கடந்த நூற்றாண்டு மட்டுமல்ல இந்த நூற்றாண்டிலும் நிகழவில்லை எனக் கூறலாம். இது பொதுவாகவே கீழைத் தேச அரசியல் கலாசாரத்தில் ஆழமான பதிவுகளை ஏற்றபடுத்திவிட்டது எனக்கூறமுடியும். அரசியல் பண்பாட்டை முன்னிறுத்த வேண்டிய அரசியல் தலைமைகளே அதனை தவறாகப்பயன்படத்துகின்ற போது குடிகளும் அவ்வாறே செயல்படுவார்கள் எனபது தவிர்க்க முடியாததொன்றாகும். இந்திய-, பாகிஸ்தான் மோதலுக்கு பின்னால் இந்திய பாகிஸ்தானிய ஆட்சியாளர்களே முக்கிய காரணமானவர்களாக உள்ளனர். அவர்களது தூண்டலும் அரசியல் ரீதியான உணர்வுகளுமே மக்களின் நடத்தைக்கான அடிப்டபடையாகும். அதனை சரிசெய்ய எந்த நடைமுறையையும் ஆட்சியாளர்கள் பின்பற்றவில்லை என்று கூறலாம். பொதுவாகவே இந்திய விமானப்படையின் தப்பிவந்த வீரரைவிட பாகிஸ்தானிய மக்களால் அடித்து கொல்லப்பட்ட இந்திய விமானப்படையினர் மீதான அரசியல் நடத்தையை அவர்களது உணர்வுகளை தெளிவாகக் காட்டுகின்றது. அதுமட்டுமன்றி தப்பிவந்த அபிநந்தன் மீதான தாக்குதல் எப்படியான பதிவினைத் தருகிறது என்பது கவனிக்கத்தக்கது. இதன் மனித உணர்வு எவ்வகைத் தாக்கத்தை தரவல்லது என்பது கவனிக்கத்தக்கது.

இந்தியாவைப் பொறுத்தவரை எப்படியாவது பாகிஸ்தானை கட்டுப்படுத்திவிடவேண்டுமென கணக்குசுப் போடுகிறது. இந்த சூழலில் பெரும் தாக்குதலை செய்வதன் மூலம் பாகிஸ்தானின் பலவீனமான இருப்பினை பயன்படுத்திவிடலாம் என்பதே இந்தியாவின் திட்டமிடலாகும். அதனால் மோடி அரசின் தேர்தல் இலக்கும் இலகுவானதாக அமைந்துவிடும் என்பதாகும். அது மட்டுமன்றி காஷ்மீரை முழுமையாக தீவிரவாத நடவடிக்கையிலிருந்து நீக்கிவிடலாம் எனக் கணக்குப் போட்டது. காஷ்மீர் தொடரான போர் பிரதேசமாக அமைந்திருப்பது இந்தியாவின் அரசியல் பொருளாதார இராணுவ இருப்புக்கு ஆபத்தாக உள்ளது. அத்துடன் பாகிஸ்தான் மட்டுமல்ல சீனாவின் பிரசன்னம் கொரகராம் உயர்பாதையூடாக காஷ்மீரை அண்டிய பகுதிகளில் சீன இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது. சீனாவின் எண்ணைத்தாங்கிகள் மற்றும் சரக்கு பரிமாற்றத்துக்கான பாதை முழுவதும் சீனாவின் கண்காணிப்பிலே உள்ளது. அதனை முறியடிக்க முடியாது இந்தியா திணறிவருகிறது. ஏறக்குறைய சீனாவின் படைகளின் பிடிக்குள் அகப்பட்ட பகுதியாவே காஷ்மீர் விளங்குகிறது. அதிலும் கொரகராம் உயர்பாதையிலிருந்து 10 கீ.மீ.இடைவெளியிலேயே இரு படைகளும் பிரசன்னமாகியுள்ளனர். சீனா தனது படைகளை தனது தொடரூந்தினை பாதுகாப்பதற்காக நிறுத்திவைத்துள்ளது. இதனை பாகிஸ்தானுடன் செய்து கொண்ட பொருளாதார உடன்பாட்டினால் சீனா ஏற்படுத்தியுள்ளது. அதனால் அதனை இலகுவில் வெல்ல முடியாத நிலைக்குள் இந்தியா விளங்குகிறது.போர் நடவடிக்கை அவசரமாக கைவிடப்பட்டது. பல தடவை சீனப்படைகளுடன் அருணாச்சலப் பிரதேசத்தில் இரு படைகளும் தள்ளுப்பட்டுக் கொண்டனவே அன்றி ஒரு போரை எதிர்கொள்ள முடியாத நிலை இந்தியாவுக்கு இருந்தது. இந்தியா திட்டமிட்டபடி போரை தொடங்குவதற்கான வாய்ப்பு அதிகமாகக் காணப்பட்டது. அதனை தவிர்த்து வந்த இந்தியா பாகிஸ்தானை சீண்டுவது அதன் பலவீனத்தை கருத்தில் கொண்டேயாகும். எந்தச் சந்தர்ப்பத்திலும் சீனாவுடன் ஒரு போரை முன்னெடுக்க இந்தியா தயராகாது. அதற்கு காரணம் சீனாவின் இராணுவ பலமேயாகும். ஆனால் பாகிஸ்தான் இந்தியாவை விட சிறிய தேசமாக அமைந்தாலும் இராணுவரீ தியில் வல்லமை மட்டுமல்ல சீனாவின் படைப்பலத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்ள தயாராகவே பாகிஸ்தான் உள்ளது. ஏற்கனவே பாகிஸ்தான் சீன உறவு மிகப்பலமான நிலையை எட்டியுள்ளது. இதனை நீடிக்க செய்ய போர் மேலும் வாய்ப்பினைக் கொடுக்கும் வல்லமை பொருந்தியது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை தனது பொருளாதார இருப்பினால் சற்று போரை தவிர்க்க விரும்புகிறது. ஆது மட்டுமன்றி சீனாவும் அத்தகைய வீறாப்பையே பல தடவை வெளிப்படுத்தியிருந்துது. அதனை ஏற்படுத்துவதன் மூலம் பாகிஸ்தானின் இருப்பு பாதுகாப்பாக அமைவதுடன் பாகிஸ்தானின் அரசியல் உறுதிமிக்கதாக மாற்றுவதற்கு உதவும் என கருகிறது. போர் உடனடியாக பாகிஸ்தானின் பொருளாதாரத்தையும் இராணுவத்தின் கையையும் ஓங்கச்செய்யும். அந்த வகையிலேயே பாகிஸ்தான் ஆட்சியாளர்கள் போரை தவிர்க்க விரும்புவதனைக் காணலாம். அத்துடன் பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்திய ஆட்சியை நிர்ணயிப்பவராக தாம் மாறுவதற்கு முயலுகின்றனர். காரணம் பாரதீய ஜனதாக்கட்சி அரசாங்கத்தின் காலப்பகுதி முழுவதும் பாகிஸ்தான் அதிக நெருக்கடியை எதிர்கொண்டது. கார்கில் யுத்தம் இருதரப்பையும் பாதித்தாலும் அதிகம் பாகிஸ்தானின் ஆட்சியிலும் பொருளாதாரத்திலும் அதிக பாதிப்பை ஏற்படுத்தியது. அதனால் பி.ஜே.பி இன் ஆட்சியை தவிர்க்க விரும்புகிறது. அடுத்த தேர்தலில் மோடி வென்றுவிடக் கூடாது என்ற வகையில் பாகிஸ்தான் செயல்படுகிறது. அபிநந்தன் விடுதலையிலும் அத்தகை சந்தேகம் தமிழக ஆய்வாளரிடம் அதிகம் உண்டு. அதற்கான வாய்ப்புக்கள் நிலவமுடியும் எனக் கருத இடமுண்டு. இரு விமானியில் ஒருவரைப்பற்றியே மோடி இம்ரான் கானுடன் உரையாடியதாக கூறப்படுகிறது. இதனால் அத்தகைய சந்தேகம் வலுத்துள்ளது. அவ்வாறே முன்பின் முரணான தகவல்கள் அதிகம் காணப்படுகிறது. மோடி பற்றிய தகவல்களில் உண்மையில்லாததாக அமையலாம் ஆனால் அது பற்றிய தகவல்கள் முதன்மைப்படுத்தப்படுகிறது.

நீர்மூழ்கி பற்றிய செய்தியிலும் அத்தகைய முரண்படான தகவல்கள் நிலவுகிறது. இந்தியா மறுத்த செய்தியை பாகிஸ்தான் உறுதிப்படுத்துகிறது. இந்தியாவுக்கு போர் தேவை என்ற தளத்தில் வைத்துப்பார்த்தால் அது பாகிஸ்தான் கூறுவது சரியானதாகவே அமையும். அதனை தவிர்த்துவிட்டு பார்த்தாலும் இந்தியாவின் போர் உத்திகள் அனைத்துமே அவ்வாறே கடந்த காலத்தில் அமைந்திருந்துது.

கிழக்குப் பாகிஸ்தான் பிரிவினையின் போது வெளிப்படை யுத்தத்தை பிரகடனப்படுத்திய இந்திரா காந்தி அதனை உலக அளவில் நிகழ்த்திக்காட்டினார். ஆனால் தற்போது அத்தகைய நியை இந்தியா எடுக்க தயங்குகிறது. குறைந்த பட்சம் வாஜ்பாய் அரசாங்கம் போன்று கூட மோடி அரசாங்கம் செயல்பட தயங்குகிறது. ஆனால் இரு தரப்பும் வெளிப்படை யுத்தத்தை விட்டு இரகசிய யுத்தத்தை மேற்கொள்ள விரும்புகின்றனர். அதில் இந்தியாவே அதிக கரிசனை கொண்டு செயல்படுகிறது. இந்தியா முழு நீள யுத்தத்தை நடாத்துவதை விட எல்லைப்படுத்தப்பட்ட யுத்தமென்றை நிகழ்த்தி அதனூடாக அதிக அரசியல் இலாபத்தை எட்டலாமென் கருதுகிறது.

எனவே, இரு தரப்பிலும் இந்தியாவுக்கு இந்திய மக்களது அரசியல் நடத்தையை கையாள ஒரு மட்டுப்படுத்தப்பட்ட போர் தேவைப்படுகிறது. அதனை நோக்கியே ஆகாயத்திலும் கடலிலும் தரையிலும் ஆரம்ப கட்ட நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. அதற்கு இடம்வழங்காது பாகிஸ்தானும் செயல்பட்டு வருகிறது.

பாகிஸ்தானைப் பொறுத்தவரை இந்த போர் தவிர்ப்பானது முழுமையாக இந்திய ஆட்சிமாற்றத்தை ஏற்படத்துவதாகும்.அதனுடன் தனது பொருளாதார இருப்பை தக்கவைப்தும் அதன்மூலம் பாகிஸ்தான் இராணுவத்தை கையாளுவதுமாகும். அத்தகைய பரந்த இலக்குடன் இந்த போரை பாகிஸ்தான் பயன்படுத்த விளைகிறது. இந்தியாவைப் அபொறுத்தவரை பாகிஸ்தான் மீதான அழுத்தமும் அதன் பொருளாதார நெருக்கடியும் ஒரு போர் மூலம் நிகழ்த்தி காட்டி தமது அரசியல் பலத்தை சரிப்படுத்திக் கொள்வதாகும்.

Comments