எமது பிரதேசத்தின் மீதான அரசின் கவனம் | தினகரன் வாரமஞ்சரி

எமது பிரதேசத்தின் மீதான அரசின் கவனம்

மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் புஸ்பலிங்கம் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

கொக்கட்டிச்சோலைப் பிரதேசம் என்றால் எவருக்கும் தெரியாத ஒரு பிரதேசமல்ல, கடந்த யுத்த காலத்தில் பிரபலம் பெற்றிருந்த அப்பிரதேசம். தற்போது மெல்ல, மெல்ல அபிவிருத்திகளால் மீண்டெழுந்து வருகின்றது எனலாம். இந்நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மண்முனை தென்a மேற்கு (கொக்கட்டிச்சோலை) பிரதேச சபையை தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஏனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன் பொறுப்பேற்று தற்போது வரை செயற்பட்டு வருகின்றது. இந்நிலையில் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையின் தவிசாளர் சின்னத்துரை புஸ்பலிங்கம் தினகரன் வாரமஞ்சரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வி.

கேள்வி : தாங்கள் மண்முனை தென்மேற்கு பிரதேச சபையில் தவிசாளர் பதவியைப் பொறுப்பேற்று ஒரு வருடத்தை அண்மித்துள்ள இந்நிலையில் இக்காலப்பகுதிக்குள் மக்களுக்கு நீங்கள் செய்த சேவைகள் எவை?

பதில் : இப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு குறிப்பாக கடுக்காமுனை, வால்க்கட்டு, குழுவினமடு போன்ற இடங்களுக்கு உன்னிச்சையிலிருந்து வரும், சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின்கீழ் அதனை மக்களுக்குப் பெற்றுக் கொடுத்துள்ளோம். இதனைவிட ஏனைய இடங்களுக்கு வரட்சி காலத்தில் பவுசர் மூலம் குடிநீரை வழங்கி வருகின்றோம். மணற்பிட்டியிலிருந்து குழுவினமடு வரையிலான வீதி, மகிழடித்தீவு பண்டாரியவெளி வீதி உள்ளிட்ட பல வீதிகளையும் செப்பனிட்டு அபிவிருத்தி வேலைத்திட்டங்களை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி : தங்களுடைய தலைமையின் கீழான அரசியல் நிர்வாகம் இப்பிரதேச சபையைப் பொறுப்பேற்றும் இப்பிரதேசத்தில் இன்னும் வீதிகள் குண்டும் குழியுமாகத்தான் காணப்படுகின்றது. நாங்கள் எதிர்பார்த்த அபிவிருத்திகளை இந்த பிரதேச சபை செய்யவில்லை என இப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனரே இதன் உண்மைத்தன்மை என்ன?

பதில் : மக்கள் தெரிவிக்கும் அக்கருத்துக்களை நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம், கடந்த காலங்களிலிருந்த அரசாங்கங்களினால் கவனிப்பாரற்ற நிலையில்தான் எமது பிரதேசம் காணப்பட்டது. இருந்தாலும் தற்போதும்கூட அந்த நிலைதான் இருந்து வருகின்றது. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தற்போதைய அரசுக்கு ஆதரவழித்துள்ள நிலையிலும் அரசினால் எமது பிரதேசம் கவனிப்பாரற்ற நிலையில்தான் காணப்பட்டு வருகின்றமை வேதனையளிக்கின்றது.

இலங்கையில் வறுமையாக உள்ள பிரதேச சபைகளில் எமது பிரதேச சபை 3 வது இடத்தில் உள்ளது. இந்த நிலையிலும்கூட அரசினால் எமக்கு ஒதுக்கப்படுகின்ற நிதி ஒதுக்கீடுகள் மிகமிக அரிதாகவே காணப்படுகின்றது. அமைச்சுக்களினது நிதி ஒதுக்கீடுகளும் எமக்குக் கிடைக்கவில்லை.

கேள்வி : அரசாங்கத்திடமிருந்து நிதி கிடைக்கவில்லை என தெரிவிக்கின்றீர்கள் அரசுக்கு திட்ட முன்மொழிவுகள் ஏதும் அனுப்பியுள்ளீர்களா?

பதில் : நாம் உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ஊடாகவும், மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுடாகவும், அரசுக்கு வீதி அபிவிருத்தி உள்ளிட்ட சில திட்டங்களை அனுப்பி வைத்துள்ளோம். இதனைவிட கிழக்கு மாகாண ஆளுனருக்கும், வீதி அபிவிருத்தி, இளைஞர் யுவதிகளின் வேலைவாய்ப்பு, தெருவிளக்குகளைப் பொருத்துதல் உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து முன்வைத்துள்ளோம்.

கேள்வி : இப்பிரதேசத்தில் இன்னும் காட்டு யானைகளின் அட்டகாசங்களும், தொல்லைகளும், நிலவி வருகின்றன இதனைத் தடுப்பதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில் : காட்டு யானைகளின் தொல்லைகள் அதிகரித்துத்தான் உள்ளது. கடந்த மாதமும் எமது பிரதேசத்தில் ஒருவர் இவ்வாறு காட்டு யானை தாக்கி உயிரிழந்துள்ளார். எமது பிரதேசத்தின் இந்நிலைமை தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர், உதவி அரசாங்க அதிபர், வன இலாகா, உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அனைவருக்கும் எடுத்துரைத்துள்ளோம் யானை வேலி அமைப்பதற்கு நிதி வசதிகள் போதாது எனவும், இவ்வருடம் 6 கிலோமீற்றர் தூரம் யானைவேலி அமைக்கப்படும் என எமக்கு மாவட்ட அபிவிருத்திக்குழுக் கூட்டத்தில் எமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இன்னும் இந்தப் பிரச்சினைக்குரிய தீர்வு எட்டப்படவில்லை. இது ஒரு புறமிருக்க நாங்கள் சில தனி நபர்களின் ஒத்துழைப்புடன் யானைகளை விரட்டுவதற்குரிய குதிரைகளைக் கொள்வனவு செய்ய இருக்கின்றோம்.

கேள்வி : இப்பிரதேசத்தின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்துவதற்கு நீங்கள் என்ன நடவடிக்கை எடுத்துள்ளீர்கள்?

பதில் : எமது பிரதேச சபையின் முதலாவது கூட்டத்திலே இப்பிரதேசத்திலே கல்விக்குத்தான் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்ற தீர்மானத்திற்கமைவாக, பாடசாலைகளில் உள்ள விளையாட்டு மைதானங்களை புனரமைப்பு செய்துள்ளோம், இப்பிரதேசத்திலிருந்து கல்வி கற்கும் மாற்றுத்திறனாளிகளாகிய மாணவர்களுக்கு போக்குவரத்திற்கு முச்சக்கர வண்டி ஒன்றை வழங்கியுள்ளோம். மாற்றுத்திறனான சிறுவர்களுக்கு ஆரம்ப பாடசாலை ஒன்றை முதலைக்குடாவிலே ஆரம்பிக்கவுள்ளோம். எங்களால் முடிந்தளவு கல்விக்காக எமது சேவைகளைச் செய்து வருகின்றோம்.

கேள்வி : தமிழ் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்தவராக நீங்கள் இருந்தாலும், எனைய கட்சிகளின் ஒத்துழைப்புடன்தான் தங்களால் ஆட்சியமைக்க முடிந்தது. இந்நிலையில் ஏனைய கட்சிகளின் உறுப்பினர்கள் உங்களால் முன்னெடுக்கப்படும் அபிவிருத்திச் செயற்பாடுகளுக்கு எவ்வாறு முக்கியத்துவம் வழங்குகின்றார்கள்?

பதில் : இது மிகவும் முக்கியமாகக் குறிப்பிடப்பட வேண்டிய விடயமாகும் நாங்கள் 04.04.2017 அன்று மண்முனை தென்மேற்கு பிரதேச சபையைப் பொறுப்பேற்றோம்.

அப்போது கட்சி ரீதியாகத்தான் இச்சபைக்குள் வந்தோம், பின்னர் இப்பிரதேச சபையில் அங்கம் வகிக்கும் சகல கட்சிகளைச் சேர்ந்த உறுப்பினர்களும், ஒரு கட்சியாக, ஒரு இயக்கமாக எந்தவித வேறுபாடுகளுமின்றி எதுவித பாகுபாடுகளுமின்றி ஒருமித்து செயற்பட்டு, எமது செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதோடு, தீர்மானங்களையும் நிறைவேற்றி வருகின்றோம். நாம் கட்சி வேறுபாடுகளைக் களைந்து பிரதேச அபிவிருத்தியை நோக்காகக் கொண்டுதான் செயற்பட்டு வருகின்றோம்.

கேள்வி : தற்போது கல்நடைகள் இறந்து வருவதாக பண்ணையாளர்கள் கவலை தெரிவிக்கின்றார்கள், இந்த விடயத்தில் தங்களுடைய பிரதேச சபை எவ்வாறு பண்ணையாளர்களுக்கு சேவை செய்கின்றது.

பதில்: கால்நடைகள் நோயினால் இறந்து வருகின்றன, மேய்ச்சல் தரைகள் ஒதுக்கப்பட வேண்டும் என கடந்த சனிக்கிழமை நடைபெற்ற சிறுபோக நெற்செய்கைக் கூட்டத்தின்போது மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரினால் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

இப்பிரதேசத்தில் 3000க்கும் மேற்பட்ட கால்நடைப் பண்ணையாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளார்கள். இவர்களில் 500 க்கும் உட்பட்ட பண்ணையாளர்கள்தான் தம்முடன் தொடர்பிலிருக்கின்றார்கள், கால்நடைகளுக்கு சுகயீனம் வருகின்றபோது தமது வைத்திய அலுவலகத்திற்கு வந்து மருந்துகளைப் பெறுவது குறைவு எனவும், இதன்போது இப்பிரதேச கால்நடை வைத்திய அதிகாரி தெரிவித்திருந்தார்.

எம்மைப் பொறுத்தவரையில் கால்நடைகளை உரிமையாளர்கள் கட்டி வைத்து பராமரிக்க வேண்டும், அவ்வாறு பராமரிக்க முடியாதவர்கள் மேய்ச்சல் தரைக்கு கால்நடைகளைக் கொண்டு செல்ல வேண்டும் எனவும் நாங்கள் வலியுறுத்தியுள்ளோம். இப்பிரதேசத்தில் கட்டாக்காலி மாடுகளால் மக்களுக்கு சிரமம் ஏற்படுவதனால் எதிர்காலத்தில் கட்டாக்காலி மாடுகளைப் பிடிப்பதற்கு நாம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளோம்.

கேள்வி : யுத்தத்தினால் கட்டியெழுப்புவதற்கு கைகொடுக்க வேண்டிய பொறுப்பு புலம்பெயர் மக்களுக்கும் உள்ளது. இந்நிலையில் புலம்பெயர் மக்களிடத்தில் எதனை எதிர்பார்க்கின்றீர்கள்?

பதில் : யுத்தத்தினால் பாதிப்புற்ற எமது பிரதேசத்தில் தற்போதைய காலகட்டத்தில் பல தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டியுள்ளது. 600 இற்கு மேற்பட்ட போராளிகள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளார்கள், அவர்களுக்கு உதவ வேண்டும் என நாமும் எமது சபையில் தீர்மானித்துள்ளோம்.

இந்நிலையில் புலம்பெயர்ந்து வாழும் மக்களும் எமது பிரதேசத்தில் தாமாகவே முன்வந்து இவ்வாறு பாதிப்புற்றவர்களுக்கு உதவி வருகின்றார்கள், இந்நிலையில் இவ்வாறான சேவையை திறம்பட மேற்கொள்வதற்கும், ஒரே உதவிகள் ஒரு குறிப்பிட்ட சிலரை மாத்திரம் சென்றடையாமலிருப்பதற்கும்,

புலம் பெயர்ந்து வாழும் மக்கள் எமது பிரதேச சபையினூடாக இவ்வாறான வாழ்வாதார உதவிகளை மேற்கொள்ள முன்வரவேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கோரிக்கை முன் வைக்கின்றேன்.

எமது பிரதேசம் சர்வதேச ரீதியாக பிரபல்யம் பெற்ற இப்பிரதேசத்தை அரசாங்கமும் ஏனோ தானோ என்ற பார்வையில்தான் பார்த்துக் கொண்டிருக்கின்றது.

 

 

Comments