எதிர்பார்ப்புக்கு மாறாக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பட்ஜட் | தினகரன் வாரமஞ்சரி

எதிர்பார்ப்புக்கு மாறாக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் பட்ஜட்

கலாநிதி எம். கணேசமூர்த்தி, பொருளியல்துறை, கொழும்புப் பல்கலைக்கழகம்..
 
  • 'வெளிநின்ற கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 84%மாகவுள்ள நிலையில் 2018ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 3%மாகவுள்ள நிலையில் கையை வீசி செலவுகளை மேற்கொள்ள முடியாத ஒரு யதார்த்த நிலை உள்ளது'
  • 'சமுர்த்தித் திட்டம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் வாக்கு வங்கிக்காக இதனை விஸ்தரித்தால் இலங்கையில் அரசாங்கத்தில் தங்கிவாழும் கூட்டம் மேலும் அதிகரிக்குமே யொழிய வேறெதுவும் நடக்காது'

வரவு செலவுத்திட்டம் என்பது ஒரு அரசாங்கத்தின் பொருளாதாரக் கொள்கைத் திட்டமிடல்கள் தொடர்பான முக்கியமானதொரு ஆவணமாகும். எதிர்வரும் ஆண்டில் அரசாங்கம் மேற்கொள்ள உத்தேசித்துள்ள செலவீனங்கள், அச்செலவீடுகளை பூர்த்திசெய்ய அவசியமான வருவாய்களை திரட்டும் வழிவகைகள், வருவாய்களுக்கும் செலவீடுகளுக்கும் இடையில் இடைவெளி காணப்படுமாயின் அவ்விடைவெளியைப் பூர்த்திசெய்ய துண்டுவிழும் தொகையை நிதியீட்டம் செய்யும் வழிவகைகள் பற்றிய ஒரு கணிப்பீட்டு அறிக்கையாக மட்டுமன்றி எதிர்வரும் ஆண்டில் சமூக பொருளாதாரத் துறைகளில் அரசாங்கம் மேற்கொள்ள எத்தனிக்கும் குறுங்கால மற்றும் நடுத்தரகால கொள்கை மாற்றங்களும் வரவு _செலவுத் திட்டத்தில் உள்ளடக்கப்பட்டிருக்கும். எனவேதான் ஒவ்வொரு வரவு செலவுத்திட்டத்திற்கும் அரசாங்கத்தின் இயங்கிச் செல்லும் திட்டமாக (Rolling Plan) கருதப்படுகிறது.

பொருளியற் கோட்பாட்டு அடிப்படையில் மூன்று வகையான வரவு செலவுத் திட்டங்களை நாம் அடையாளம் காணலாம்.

1. மிகை நிலை வரவு செலவுத்திட்டம்

2. சமநிலை வரவு செலவுத்திட்டம்

3. குறைநிறை வரவு செலவுத்திட்டம்

இவற்றுள் வரவுகள் அதிகமாகவும் செலவுகள் குறைவாகவும் இருப்பது மிகை நிலை வரவு செலவுத்திட்டம் என்றும் இரண்டும் சமமாக இருப்பின் சமநிலை வரவு செலவுத்திட்டமெனவும் செலவுகள் வரவை விட அதிகமாக இருப்பின் குறை நிலை வரவு செலவுத்திட்டம் எனவும் கூறப்படும்.

இவற்றுள் பெரும்பாலான சந்தர்ப்பங்களில் குறைநிலை வரவு செலவுத்திட்டங்களே நாடுகளில் முன்வைக்கப்படுகின்றமையை காண்கின்றோம். சாதாரண குடும்பம் ஒன்றை எடுத்துக் கொண்டால் குடும்பத்தின் வரவுகளுக்கு அமைவாகவே செலவுகள் மேற்கொள்ளப்படும். ஆனால் ஒரு அரசாங்கத்தின் வரவு செலவுத்திட்டத்தில் செலவுகளே முதலில் இனங்காணப்பட்டு அச்செலவுகளை நிதிப்படுத்தும் மூலாதாரங்கள் அடையாளம் காணப்படுகின்றன.

இவ்வாறு அதிசயமான ஒன்றான வரவு_செலவுத்திட்டத்தில் குறைநிலை வரவு செலவுத்திட்டங்கள் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளால் பின்பற்றப்படுவதற்கு கோட்பாட்டு ரீதியான காரணங்கள் உண்டு. உண்மையில் அபிவிருத்தியடைந்து வரும் நாட்டு அரசாங்கங்களில் வருவாய் மூலாதாரங்கள் வெகு சிலவே. அவற்றின் மூலம் திரட்டலாம் என எதிர்பார்க்கும் வருவாய் இலக்குகளைக்கூட அடையமுடியாத நிலை காணப்படுகிறது. இந்நிலையில் செலவுகளை குறைத்து வரவுகளுக்குள் கட்டுப்படுத்துவதை விடுத்து அதிகளவில் செலவுகளைச் செய்து அதனால் துண்டுவிழும் தொகையை ஈடுசெய்ய கடன்களைப் பெற்று அக்கடன்களை மீளச்செலுத்த முடியாமல் மீண்டும் மீண்டும் கடன்பெற்று கடன் பொறிக்குள் சிக்கிக் கொள்ளும் நிலைக்கு அரசாங்கங்கள் தள்ளப்படுவது ஏன் என ஸ்ரீமான் பொதுஜனம் புருவங்களை உயர்த்துவது நியாயமானதுதான்.

ஸ்ரீமான் பொதுஜனத்தைப் பொறுத்தமட்டில் சம்பளங்கள் கூட வேண்டும். விலைவாசி குறைய வேண்டும். கையில் நாலுகாசு தங்கவேண்டும். அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்தில் என்னத்தைக் கொடுக்கப்போகிறது என்பதே கவனத்திற்கு உரியது.

அவ்வாறு பிரபலமான விடயங்கள் வரவு செலவுத்திட்டத்தில் இல்லாதபோது, அவர்களைக் குஷிப்படுத்த யோசனைகள் முன்வைக்கப்படாதபோது வரவு செலவுத்திட்டத்தில் தங்களுக்கு எதுவுமே தரப்படவில்லை என்ற முடிவுக்கு வருவார்கள். பதவியில் உள்ள அரசாங்கத்தின் வாக்கு வங்கியை அது வெகுவாகப் பாதிக்கும். எனவேதான் அரசாங்கங்கள் தமது வருவாய்களை மீறி செலவீடுகளை மேற்கொள்ள நிர்ப்பந்திக்கப்படுகின்றன என்னும் நியாயப்பாடு முன்வைக்கப்படுகிறது. இதில் ஓரளவுக்கு உண்மை இருந்தாலும்கூட, அடிப்படையில் இதற்கு வேறு காரணமும் உண்டு.

ஒரு அரசாங்கம் ஒரு ரூபாவை செலவு செய்து அந்த ஒரு ரூபாவை வரி வருவாயாக பொதுமக்களிடமிருந்து திரட்டிக் கொள்ளுமாயின் ஒரு ரூபாவினால் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையும் என மிக எளிமையானதொரு பொருளாதாரக் கோட்பாடு உண்டு.

இதே தர்க்கத்தின்படி அரசாங்கம் 10 ரூபாவை செலவு செய்து ஒரு ரூபாவை வரி வருமானமாக திரட்டிக்கொண்டால் நாட்டின் பொருளாதாரம் பலமடங்கு வளர்ச்சியடைய வேண்டும். எனவே குறை நிலை வரவு செலவுத்திட்டத்தை கடைப்பிடிப்பதன் மூலம் நாட்டின் பொருளாதார வளர்ச்சியைத் துரிதப்படுத்த முயலலாம் என்னும் கருத்துகளும் உலக நாடுகள் மத்தியில் 1940கள் தொடக்கம் பிரபலமாகி வந்துள்ளது.

இங்கே எழும் கேள்வி என்னவெனில் அவ்வாறு வருவாயை விட செலவுகள் அதிகரிக்கும்போது துண்டு விழும் தொகையை எவ்வாறு ஈடுசெய்வது என்பதாகும். கடன்களைப் பெறுவதன் மூலம் தற்காலிகமாக அதனை ஈடுசெய்யலாம். பொருளாதாரம் பலமடங்கு வளர்ச்சியடையும்போது பெற்ற கடன்களை மீள அடைத்துவிடலாம். எனவே கடன் சுமை என்பது தற்காலிகமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

துரித பொருளாதார வளர்ச்சியை எதிர்பார்த்த இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகள் தொடர்ச்சியாகவே குறைநிலை வரவு செலவுத்திட்டங்களை அமுல்படுத்தி வந்துள்ள போதிலும் எதிர்பார்த்த துரித பொருளாதார வளர்ச்சியோ விரிவாக்கமோ எந்த ஒரு நாட்டிலும் ஏற்பட்டதாகத் தெரியவில்லை. மாறாக ஒவ்வொரு நாட்டிலும் துண்டுவிழும் தொகைகள் அதிகரித்துச் சென்றதோடு பெற்ற கடனை மீளச்செலுத்த முடியாத நிலையில் மீண்டும் மீண்டும் கடன் பெற்று கடன் நெருக்கடிக்குள் சிக்கித் தவிக்கின்ற நிலைக்கு தள்ளப்பட்டன.

இந்த வகையிலே இலங்கை சுதந்திரம் பெற்ற காலந்தொட்டு குறைநிலை வரவு செலவுத்திட்டங்களையே தொடர்ச்சியாக அமுல்படுத்தி வந்துள்ளது.

மக்களைக் கவரும் பிரபல அரசியல் கருவிகளில் ஒன்றாக வரவு செலவுத்திட்டத்தை தொடர்ச்சியாக பதவிக்கு வந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி வந்துள்ளன. இன்றைய சூழலில் மிகப்பெரிய கடன் சூழலுக்குள் சிக்கிச் சுழலும் நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளமைக்கும் இப்பிரபல அரசியல் கொள்கைகளும் ஒரு காரணமாக இருந்துள்ளன.

1980களில் இருந்து சர்வதேச நாணய நிதி மற்றும் உலக வங்கி என்பன தொடர்ச்சியாகவே துண்டுவிழும் தொகையை குறைக்குமாறு அதிகப்படியான அழுத்தங்களைப் பிரயோகித்து வந்துள்ளன.

இன்றும்கூட துண்டுவிழும் தொகையை குறைக்கவே அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருகின்றன. இதனைச் செய்ய இரண்டு வழிகள் உண்டு.

1. செலவுகளைக் கட்டுப்படுத்தல்

2. அரச வருவாய்களை அதிகரித்தல்

சமீபகாலம் வரையில் செலவுகளை கட்டுப்படுத்தும் அணுகுமுறைகளையே கடைப்பிடித்து வந்தபோதிலும் 2015ம் ஆண்டிலிருந்து அரச வருவாய்களை அதிகரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது.

இத்தகையதொரு புறச்சூழலில் இலங்கையின் வெளிநிற்கும் கடன்கள் மிகப்பெரிய பிரச்சினையாக உள்ளது. குறிப்பாக இவ்வருடம் மாத்திரம் 5.9 பில்லியன் டொலர்களை மீளச் செலுத்த வேண்டியுள்ளது. அதில் ஜனவரி மாதம் ஒரு பில்லியன் ஏலவே செலுத்தப்பட்டு விட்டது. மார்ச் மாத இறுதியில் 2.6 பில்லியன் டொலர்களை மீளச்செலுத்த வேண்டியுள்ளது.

நாட்டின் கடன் தரப்படுத்தல் மதிப்பீடுகள் கடந்த ஒக்டோபர் மாத அரசியல் நெருக்கடிகள் காரணமாக பலவீனப்பட்டுப் போயுள்ள நிலையில் ஆபத்பாந்தவனும் அநாத ரட்சகனுமாகிய சர்வதேச நாணய நிதியத்துடனான கலந்துரையாடல்கள் வெற்றியளித்து இலங்கைக்கான விரிவாக்கப்பட்ட கடனுதவிகளை மீள வழங்குவதாக ஏற்றுக்கொண்டுள்ளது.

இந்நிலையில்தான் கடந்த வாரம் வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது. இந்த வருடம் தேர்தல்கள் கட்டியங்கூறும் வருடம். எனவே வாக்காளர்களைக் குஷிப்படுத்த வேண்டிய தேவையுண்டு. எனவே மேலும் கடன்பட்டாவது அரசாங்கம் இலவசங்களை அள்ளி வீசும் என்று பலராலும் எதிர்பார்க்கப்பட்டது. அரசாங்கத்திற்கு அவ்வாறான ஒரு நோக்கம் இருந்திருப்பினும் கூட "சட்டியிலே" ஒன்றும் இல்லாதபோது "அகப்பையிலே" அள்ளி வீசமுடியாத நிலையை அவதானிக்க முடிகிறது.

வெளிநின்ற கடன்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 84%மாகவுள்ள நிலையில் 2018ம் ஆண்டின் பொருளாதார வளர்ச்சி வெறும் 3%மாகவுள்ள நிலையில் கையை வீசி செலவுகளை மேற்கொள்ள முடியாத ஒரு யதார்த்த நிலை உள்ளது.

எவ்வாறாயினும் பிரபல அரசியலுக்கான மக்களைக் குஷிப்படுத்தும் சில முன்மொழிவுகளும் இம்முறைப் பாதீட்டில் உள்ளது. அரச ஊழியர்களுக்கான 2500 ரூபா சம்பள அதிகரிப்பு அதில் பிரதானமானது. இதற்கென பெருந்தொகைப் பணம் செலவிடப்படவுள்ளது. இது தனியார்துறை வேதன அதிகரிப்புக்கும் இட்டுச்செல்லும் உற்பத்திச் செலவுகள் அதிகரிப்பதனால் பொருட்கள் சேவைகளின் விலைகள் அதிகரித்து பணவீக்கம் அதிகரிக்க காரணமாக அமையும்.

புதிதாக திருமணமானவர்களுக்கு வீட்டுக்கடன் வசதி இளம் வாக்காளர்களைக் கவரக்கூடும். ஆறு லட்சம் புதிய சமுர்த்தி பயனாளிக் குடும்பங்களை திட்டத்தில் உள்வாங்க முன்வைத்துள்ள யோசனைகள் அரசியல் ரீதியில் பலன் தரலாம். இலங்கையில் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்வோர் சதவீதம் சுமார் 5%மாக இருக்கலாம் என தரவுகள் கூறுகின்றன. ஏற்கனவே இலங்கையில் சுமார் மூன்றில் ஒரு பங்கினர் சமுர்த்திப் பயனாளிகளாக உள்ளதாக இன்னும் ஓர் புள்ளிவிபரம் கூறுகிறது.

இந்நிலையில் புதிதாக ஆறு லட்சம் குடும்பங்களை இதில் இணைத்துக்கொள்வது எந்தளவுக்கு நியாயப்படுத்தக்கூடியது என்பது தெரியவில்லை. ஆயினும் ஏலவே சமுர்த்திப் பயனாளிகள் அத்திட்டத்தின் மூலம் நீண்டகால ரீதியில் தாக்குப் பிடிக்கக்கூடிய வாழ்வாதாரம் ஒன்றை உருவாக்கிக் கொண்டுள்ளனரா? பயனாளிகளாக தகுதியானவர்கள் தான் தெரிவு செய்யப்பட்டார்களா? நீண்டகாலம் நடைமுறையில் உள்ள இத்திட்டத்தின் இலக்குகள் எய்தப்பட்டனவா என்ற நுணுக்கமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வெளிப்படையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். ஏலவே சமுர்த்தித் திட்டம் பற்றிய பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வரும் நிலையில் வாக்கு வங்கிக்காக இதனை விஸ்தரித்தால் இலங்கையில் அரசாங்கத்தில் தங்கிவாழும் கூட்டம் மேலும் அதிகரிக்குமேயொழிய வேறெதுவும் நடக்காது.

உயர்தரப் பரீட்சைகளில் அதீத சித்திபெறும் மாணவர்கள் சிலரை உலகின் முதன்மைப் பல்கலைக்கழகங்களுக்கு அனுப்பும் முயற்சி புதிய வாக்காளர்களை கவர உதவலாம். ஆனால் இம்முயற்சி தேவையற்ற ஒன்றாகும். வெளிநாட்டு செலாவணியை சேமிக்க வேண்டியுள்ள புறச்சூழலில் இம்முன்மொழிவு பிரயோசனமற்றது. ஏனெனில் இவ்வாறு பிரகாசிக்கும் மாணவர்கள் வெளிநாடு சென்று பயில வேண்டுமாயின் அதற்கென புலமைப் பரிசில்களை வழங்கும் பல்வேறு நிறுவனங்களும் ஏலவே உண்டு.

மலசலகூட வசதிகளை அதிகரிக்கும் திட்டம் மக்கள் பிரிவினர் சிலரிடையே வரவேற்பைப் பெறக்கூடும். இந்தியப் பிரதமர் மோடியின் தூய்மைப்படுத்தல் செயற்திட்டத்தில் மலசலகூடங்களை அமைப்பது முதன்மையாக உள்ளது. அப்படியொரு திட்டத்திற்கான எந்தத் தேவையும் இப்போதைக்கு இல்லை. இதைவிட தகிக்கும் பிரச்சினைகள் மக்களுக்கு இருக்கிறது. எனவே வரவு செலவுத்திட்டத்தில் முதன்மைப்படுத்தப்பட வேண்டிய ஒரு விடயமா இது என்ற கேள்வி எழுகிறது.

மறுபுறம் இம்முறை வரவு செலவுத்திட்டத்தில் பொருளாதார வளர்ச்சிக்கு ஏதுவாகக்கூடிய சில திட்டங்களும் காணப்படுகின்றன. "என்டபிரைஸ் ஸ்ரீலங்கா" ஒரு சிறந்த திட்டமாகும். ஆயினும் அது நடைமுறைப்படுத்தப்படும் விதம் பற்றி எவ்வகையிலும் திருப்திப்பட முடியாதுள்ளது. இளம் தொழில் முனைவோரை உருவாக்கும் முயற்சியாக அமைந்துள்ள போதிலும் அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள ஆளணியினருக்கு குறித்த திட்டங்கள் பற்றிய தொழில்சார் நிபுணத்துவமோ அறிவோ கிடையாது. ஒரு தொழிலுக்கு உரிய முன்மொழிவு முன்வைக்கப்படும்போது அதனை மதிப்பீடு செய்வதற்குரிய புலமையும் அறிவும் குறித்த ஆளணியினருக்கு இல்லை. மறுபுறம் வங்கி அதிகாரிகள் மத்தியிலும் இவர்களுக்கு கடன் வழங்க விருப்பமும் இல்லை.

கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்ட இத்திட்டம் பற்றிய முன்னேற்ற அறிக்கைகள் பயனாளிகளாக விண்ணப்பித்தோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராய வேண்டியது அவசியம். அத்துடன் கடன் பெற்றோர் பற்றிய முன்னேற்றமும் தொடர்ந்து கண்காணிக்கப்பட வேண்டும். சரியாக முன்னெடுக்கப்படும் பட்சத்தில் இத்திட்டம் பொருளாதாரத்தில் குறிப்பாக கிராமப்பகுதிகளில் பாரிய மாற்றங்களைக் கொண்டுவரக்கூடிய ஆற்றல் உள்ளது. சந்தைப்படுத்தல் வசதிகளை மேம்படுத்தல், சந்தைத் தகவல்களை வழங்குதல் போன்றவற்றின் ஊடாக இத்திட்டத்தை மேலும்வலுப்படுத்தலாம்.

2019 வரவு செலவுத்திட்டத்தில் பெண்களை தொழிற்பயிற்சியில் உள்வாங்கப்படுவதை அதிகரிப்பதற்கான முன்மொழிவுகள் சிறந்ததொரு விடயமாகும். வேலை செய்யக்கூடிய நிலையில் உள்ள பெண்களில் சற்றேறக்குறைய மூன்றிலொரு பகுதியினரே வேலைப்படையில் உள்ளனர். ஏனையோர் வேலை செய்ய விரும்புவதில்லை. போக்குவரத்துப் பிரச்சினை, பாதுகாப்பின்மை, குழந்தைப் பராமரிப்பு, தொழிலிடச் சிக்கல்கள் போன்ற இன்னோரன்ன காரணிகள் வேலை செய்வதைத் தடுக்கின்றன. இவற்றை தீர்ப்பதன் மூலம் பெண்கள் தொழிற்படையில் சேர்வதை ஊக்குவிக்கும் முன்மொழிவுகள் மிகவும் வரவேற்கத்தக்க ஒரு விடயமாகும்.

இலங்கையில் முக்கிய அந்நியச் செலாவணி உழைப்புகளை மேற்கொள்ளும் தேயிலை உற்பத்தி, ஆடைத்தயாரிப்பு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு போன்ற துறைகளில் பெண்களே அதிகளவில் ஈடுபட்டு வருகின்றமையும் ஈண்டு குறிப்பிடத்தக்கது.

கல்வித்துறை சார்ந்த "எனது எதிர்காலம்" என்ற முன்மொழிவு கல்விப் பொதுத்தராதர உயர்தர வகுப்பில் சித்திபெற்று ஆனால் பல்கலைக்கழக நுழைவு பெறாத மாணவர்களை இலக்குப்படுத்தியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் அவர்கள் தரம்வாய்ந்த மூன்றாம் நிலைக் கல்வியைப் பெறக்கூடிய வாய்ப்பை உருவாக்குவதால் பயிற்றப்பட்ட கல்விகற்ற ஒரு ஊழியப்படையை உருவாக்க உதவும்.

2019ம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தில் பாடசாலை உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கும் முன்மொழிவுகள் காணப்படுகின்றன. குறிப்பாக வெளிப்புறங்களில் உள்ள பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகள் மிகவும் மோசமாக உள்ள நிலையில் அவற்றை மேம்படுத்துவது கல்வி சமமாக வழங்கப்படுவதை உறுதி செய்ய அவசியமாகிறது. ஆசிரியர்களின் பயிற்சி மற்றும் இடமாற்ற நடைமுறைகள் குறித்தும் அதிக கவனஞ் செலுத்தப்பட வேண்டியது அவசியம்.

ஓய்வூதியம் பெறுவோர் மத்தியில் நிலவும் ஏற்றத்தாழ்வுகளைக் களையும் முன்மொழிவுகளும் இம்முறை உள்ளடக்கப்பட்டுள்ளன. இது ஒரு நல்ல முயற்சியாயினும் வயது முதிர்ந்தோர் குடித்தொகை அதிகரித்துச் செல்லும் நிலையில் அரசாங்கத்தின் செலவுகளை அதிகரிக்கச் செய்வதாகவே அமையும். ஓய்வுபெறும் நடைமுறையில் குறித்த கலந்துரையாடல்கள் தேவைப்படுகின்றன. ஓய்வுபெறும் வயதெல்லையை அதிகரிப்பது இப்பிரச்சினைக்கு மற்றுமொரு தீர்வாக அமையக்கூடும்.

போக்குவரத்து வசதிகளை மேம்படுத்த போக்குவரத்துச் சேவைக்கு புதிய பேரூந்துகளை உள்வாங்கும் திட்டமும் ஒரு சிறந்த முயற்சியாகும். அரசுதுறை போக்குவரத்து வசதிகளை மேம்படுத்தி ஒழுக்கமான ஒரு பேரூந்து சேவையை வழங்க முடியுமாயின் கொழும்பு போன்ற நகரங்களில் வாகன நெரிசல்களைக் கணிசமான அளவு குறைக்க முடியும். எரிபொருள் செலவுகளையும் மீதப்படுத்தலாம். அத்துடன் சுற்றாடல் பாதிப்பையும் குறைக்கலாம்.

2019 ஆண்டுக்காக அரசாங்கம் முன்மொழிந்துள்ள வரவு செலவுத் திட்டம் தேர்தலுக்கான இலவசங்களை அள்ளிவீசும் ஒன்றாக அமையும் என்ற எதிர்பார்ப்புக்கு மாறாக பொருளாதாரத்தை வலுப்படுத்தும் திட்டங்களையும் உள்வாங்கியுள்ளமை சிறந்ததொரு விடயமாக குறிப்பிட வேண்டும்.

அரசாங்கம் வருவாயை திரட்ட ஆளாய்ப்பறக்கிறது என்பது நன்றாகப் புரிகிறது. ஏலவே உயர்ந்த மட்டத்தில் உள்ள மதுபான வரி சிகரட் மீதான வரிகள் மேலும் உயர்த்தப்பட்டுள்ளன. அத்துடன் எட்டமுடியாத உயரத்தில் உள்ள வாகனங்களின் விலைகள் விதிக்கப்பட்டுள்ள தீர்வைகள் காரணமாக வாகனக் கனவு காணும் சாதாரண ஒரு ஏழைக் குடிமகனின் கனவுகளை சிதைத்து எட்டாத தூரத்திற்கு கொண்டு சென்றுவிட்டன.

வரிகளை அதிகரிப்பதன் மூலம் அரசாங்கம் வருவாயை அதிகரிக்கலாம் என்று நம்புமாயின் அதன் வருவாய் இலக்குகளை ஒருபோதும் அடையமுடியாது.

வரிகளை குறைக்கும் அதேவேளை பொருளாதாரத்தில் உற்பத்தி வருமானம் செலவீடு மேற்கொள்ளும் நடவடிக்கைகளையும் விரிவாக்கம் செய்வதன் மூலமும் அதிக வருவாயை திரட்ட முயற்சிக்க வேண்டும்.

மாறாக ஏலவே அதிகமாக உள்ள வரிகளை மேலும் அதிகரித்து பிழிந்தெடுக்க முயற்சித்தால் ஒருபோதும் பொருளாதார நடவடிக்கைகளின் வரிவாக்கமோ அரசாங்கம் எதிர்பார்க்கும் வருமான அதிகரிப்போ ஏற்படுவது சாத்தியமில்லை.

ஆயினும் இந்த வரவு செலவுத்திட்டத்திலும் வரி அதிகரிப்பூடாகவே அரசாங்கம் வருவாய் திரட்ட முயற்சிப்பது தெளிவாகத் தெரிகிறது.

எனவே எதிர்பார்த்த வருவாய் இலக்குகளை இலங்கை அரசாங்கம் அடைவது மிகக் கஷ்டமாகவே இருக்கும்.

Comments