வடக்கு அபிவிருத்தி மக்களுக்கு நேரடி பலன் தருவதாக அமைய வேண்டும்! | தினகரன் வாரமஞ்சரி

வடக்கு அபிவிருத்தி மக்களுக்கு நேரடி பலன் தருவதாக அமைய வேண்டும்!

கலாநிதி
எம். கணேசமூர்த்தி,  
பொருளியல்துறை,  
கொழும்புப் பல்கலைக்கழகம்.
 

அண்மையில் வடபகுதிக்கு விஜயங்களை மேற்கொண்ட பிரதமர் அங்குள்ள மக்கள் மத்தியில் தெரிவித்த கருத்துக்கள் அவர்களை குஷிப்படுத்தியிருக்கும் என்பது போன்ற செய்திகளை ஊடகங்கள் வாயிலாக அறியமுடிந்தது. அரசியல்வாதிகள் தேர்தல் கட்டியங்கூறும் காலங்களில் மக்களின் நரம்புகளை முறுக்கேற்றும் வகையிலும் இரத்தம் சூடாகும் வகையிலும் கருத்துக்களை வெளிப்படுத்துவது வாடிக்கையாக நடைபெறும் விடயம்தான்.

ஆனால் யுத்தம் இடம்பெற்று ஏறக்குறைய ஒரு தசாப்தம் நெருங்கும் நிலையில் வடக்கு தென்னிலங்கையின் கொல்லைப்புறமல்ல. அரசாங்கத்தின் அபிவிருத்தித் திட்டங்கள் அங்கு செல்லவேண்டும். அதற்கு முன்னுரிமை வழங்கவேண்டும் அங்குள்ள மக்களும் அவர்களின் பிரதிநிதிகளும் நல்லாதரவு வழங்க வேண்டும் என்று பிரதமர் கேட்டிருக்கிறார். உண்மையில் சிறுபான்மை மக்கள் செறிந்து வாழும் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் புறக்கணிக்கப்படாமல் அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் அங்கும் முறையாக இடம் பெற்றிருப்பின் அவர்களது நியாயமான வாழ்வியல் உரிமைகள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பின் மூன்று தசாப்தகால நிரந்தர அழிவுகளை ஏற்படுத்திய யுத்தம் இந்நாட்டில் ஏற்பட்டிருக்காது.

சிறுபான்மை இனங்களை தமது சகபாடிகளாக நோக்காது தமக்கு கீழ் ஏவல் செய்யும் கூட்டமாக நோக்க முனைந்ததன் பிரதிபலனை நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது. இந்த முப்பது வருடகால யுத்தத்திற்காக அரசாங்கம் செலவழித்த பணம், யுத்தப் பிரதேசங்களில் கொண்டு சென்று கொட்டிய குண்டுகளுக்காகவும் சுட்டுத்தீர்த்த தோட்டக்களுக்காக செலவழிக்க நிதியின் ஒரு பகுதியை அப்பிரதேசங்களின் மக்களுக்காக செலவழித்திருப்பின் யுத்தத்திற்கான தேவை ஏற்பட்டிருக்காது. மாற்றாந்தாயின் மனப்பாங்கும் ஆழ ஊறிப்போன இனத்துவேச உணர்வுகளும் சேர்ந்து யுத்தத்திற்காக எவ்வளவையும் செலவழிக்கலாம் என்ற மனப்பாங்காக ஏற்படுத்தி இருக்கலாம். ஆனால் அவர்களை கட்டுப்பாட்டில் காலுக்குக் கீழ் கைப்பொம்மையாக வைத்திருக்க வேண்டும் என்ற மனப்பாங்கு அதிகாரமிக்க தரப்பினரிடம் கோலோச்சியமையே புண்ணாகிப் புரையோடிப் போன இனப்பிரச்சினை வெறித்தனமன ஒரு யுத்தமாக வெளிப்படக் காரணமானது.

யுத்தம் முடிவுற்ற பின்னரும் கடந்த பத்து வருடங்களில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் இதய சுத்தியுடன் சிறுபான்மை இனங்களை அரவணைத்துச் செயற்படும் வண்ணம் மேற்கொள்ளப்பட்டனவா என்று கருதுமிடத்து வெறும் கண்துடைப்பாகவே பல காரியங்களும் ஆற்றப்பட்டுள்ளன என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

திட்டமிட்ட குடியேற்றங்கள், மக்களில்லா இடங்களில் வணக்கத் தலங்கள், காணி கையகப்படுத்தல்கள் போன்றன வடகிழக்கில் வாழும் மக்களால் அடிக்கடி வெறுப்புக்கு உள்ளாகி அவர்களால் உலகுக்கு உரத்துச் சொல்லப்பட்ட சம்பவங்களாக அமைந்தன. காணாமல் ஆக்கப்பட்டோர் விவகாரம் இன்னும் முடிவின்றித் தொடரும் தொடர்கதையாகவுள்ளது.

“ரோட்டுப் போட்டுக் கொடுத்திட்டோம், யாழ்தேவியை அனுப்பிட்டோம், மாகாண சபையை இயக்கிவிட்டோம் மக்கள் அமைதியாக சந்தோசமாக வாழ்கிறார்கள். இன்னும் என்ன வேண்டும்?” என்னும் சாரப்பட கருத்துக்கள் கடந்த காலங்களில் முன்வைக்கப்பட்டன. இப்போது வடக்குக்கு “மேலதிக மெகா புரஜெக்டுகள்” தேவை என அரசாங்கம் கூறுகிறது.

‘இந்தியாவுக்கு மன்னாரிலிருந்தும், காங்கேசன் துறையிலிருந்தும் கப்பல் விடப்போகிறோம். பலாலியை பன்னாட்டு விமானங்கள் வந்திறங்கும் நிலையமாக கட்டியெழுப்பப் போகிறோம்’ என்ற வாக்குறுதிகள் வழங்கப்பட்டுள்ளன. வடக்கிலிருந்து மேற்குலகிலும் மத்திய கிழக்கிலும் புலம் பெயர்ந்து வாழும் இலங்கையர்கள் “எனியென்னடாப்பா யாழ்ப்பாணத்திலேயே போய் இறங்கலாம் கட்டுநாயக்கவிலிருந்து யாழ்ப்பாணம் போய் வாற காசு மிஞ்சும்” என குதூகலிக்கலாம். ‘பக்கத்தில் இருக்கிற இந்தியாவுக்கு கப்பலில போட்டு வரலாம்’ என உள்ளூர்வாசிகள் சந்தோசப்படலாம்.

ஆனால் ஊருக்கொரு துறைமுகங்கள் மாவட்டத்திற்கு ஒரு விமான நிலையம் அமைக்க வெளிக்கிட்டதன் விளைவுகளை “மாகம்புற” துறைமுகமும் “மத்தள” விமான நிலையமும் வெள்ளை யானைகளாக தம்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கின்றன.

“வடக்கிலே ஏலவே இருக்கிறவற்றைத்தான் மேம்படுத்தப்போகிறோம்.” என்கிற வாதம் எடுபடலாம். ஆனால் அங்கு வாழும் மக்களுக்கு இந்த இரண்டும் தான் முன்னுரிமைத் தெரிவுகளா? அவர்களது வாழ்வாதாரத்தை கட்டியெழுப்ப வேலை வாய்ப்புகளை மேம்படுத்த அவர்களது அறிவு மற்றும் திறமைகளை வளர்த்து சொந்தக் காலில் தலை நிமிர்ந்து வாழவைக்க இந்த மெகா திட்டங்கள் எந்தளவில் பங்களிப்புச் செய்யும்?

இவ்விரு திட்டங்களுமே இந்தியாவுக்கு சாதகமாகவே அமையக் கூடும். பலாலியிலிருந்து 100 நொட்ஸ் சுற்றுவட்டத்திற்குள்ளாகவே மதுரை மற்றும் திருச்சிராப்பள்ளி விமான நிலையங்கள் அமைந்துள்ளன. தென்னிந்திய துறைமுகங்கள் வடமாகாணத்திற்கு மிக அருகில் அமைந்துள்ளன.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்துக்கு ஏற்றி இறக்கல் மற்றும் போக்குவரத்து தூரத்தை விட தென்னிந்தியா விலகியிருந்து இலகுவில் பொருள்களை யாழ்ப்பாணத்தில் ஏற்றியிறக்கி விடலாம்.

வேறு வகையில் சொன்னால் கொழும்பிலிருந்து பொருட்கள் வாங்குவதை விட தென்னிந்தியாவிலிருந்து இறக்குமதி செய்வது மலிவாகி விடலாம்.

யுத்தத்திற்கு முன்னர் சட்டவிரோதமாக அத்தகைய வர்த்தகம் சிற்றளவில் இடம்பெற்றது. மறுபுறம் மக்களின் போக்குவரத்தை கருதுவோமாயின் எந்த ஒரு இந்தியக் குடிமகனும் மேற்படி துறைமுகங்கள் ஊடாகவோ பலாலி வானூர்தித் தளத்தின் ஊடாகவோ முன்னரை விட இலகுவாக இலங்கைக்கு வந்து போகலாம். பயணச் செலவு குறையும் வருகை தரும்போது மூன்றுமாத சுற்றுலா வீசா தந்து இலங்கை அவர்களை வரவேற்கும். ஆனால் இலங்கையர்கள் அங்கு செல்ல வேண்டுமாயின் வங்கிக் கூற்றுக்கள், கைவிரல் அடையாளங்கள் முகத்தின் இலத்திரனியல் புகைப்படம் போன்ற இன்னோரன்ன கெடுபிடிகளை கடந்தே அங்கு செல்லவேண்டியிருக்கிறது. ஆக கொழும்புக்கு வந்து விமானம் ஏறும் செலவுகளும் நேரவிரயங்களும் மட்டுமே குறையக் கூடும்.

எனவே இவ்விரு திட்டங்களும் இந்தியாவுக்கே சாதகமாக அமையும் என்பது வெளிப்படை இப்போதைக்கு மக்கள் மத்தியில் பலாலித்துறைமுக அபிவிருத்தியும், மன்னார், காங்கேசன்துறை துறைமுக அபிவிருத்தியும் மகிழ்ச்சியை வரவழைப்பதாக அமைந்தாலும் அவற்றின் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு எதிர்பார்க்கப்படும் நன்மைகள் கிடைக்க மிக அரிதான வாய்ப்புக்களே உள்ளன. சுற்றுலா அபிவிருத்தி என்ற நியாயப்பாடு முன்வைக்கப்பட்டாலும் அதன் மூலம் அடையக்கூடிய நன்மைகளும் நிச்சயமற்றவையே.

இப்போதைய சூழலில் இதுபோன்ற திட்டங்கள் மிக நுணுக்கமாக செலவு நன்மை ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மக்களுக்கு நீண்டகால ரீதியில் பயன்தரும் திட்டங்களுக்கே முன்னுரிமை தரப்பட வேண்டும். காங்கேசன்துறை சீமெந்து, பரந்தன் இரசாயனம் போன்றவற்றை மீள எழுப்ப முடியுமா என்று பார்க்கவேண்டும். அரச அனுசரணையுடன் வடபுலத்தில் அமைக்கப்படக்கூடிய கைத்தொழிற்சாலைகள் பற்றி ஆய்வுகள் மேற்கொள்ளப்பட வேண்டும். பழங்கள் பதனிடல், டின் மீன் கடலுணவுப் பொருள் பதனிடல் போன்ற விவசாயக் கைத்தொழில்கள் உருவாக்கப்படுவது அவசியம். இந்தியாவின் பெரிய கைத்தொழில் நிறுவனங்களில் ஓரிரண்டு தமது தொழிற்சாலைகளை வடபுலத்தில் அமைக்கச் செய்வதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம். அதற்குரிய பேச்சுவார்த்தைகள் அரசு தரப்பு உயர்மட்டத்தில் மேற்கொள்ளப்படவேண்டும். உதாரணமாக இந்தியாவின் முச்சக்கரவண்டிகளும் மோட்டார் சைக்கிள்களுமே இலங்கை பூராகவும் ஓடுகின்றன. அவற்றிற்கான உதிரிப்பாகங்கள் ஏதாவது இலங்கையில் உற்பத்தி செய்யப்படுகிறதா? அக்கம்பனிகள் இலங்கையை வெறுமனே ஒரு சந்தையாக மட்டுமே பயன்படுத்தி வருகின்றன. உரிய முறையில் அணுகுவதன்மூலம் அவ்வாகனங்களில் உதிரிப்பாகங்கள் இங்கு உற்பத்தி செய்தால் அவற்றை மேலும் சந்தைப்படுத்த முடியும் என்ற அணுகுமுறையில் பேச்சுவார்த்தைகள் நடத்தப்படவேண்டும்.

மறுபுறம் வடபுலத்தில் அறிவியல் ரீதியான முதலீடுகளும் தொழில்சார் பயிற்சிகள் மீதான முதலீடுகளும் பலமடங்கு அதிகரிக்கப்படவேண்டும். அப்பகுதியில் உள்ள பல்கலைக்கழகங்கள் தொழிற்பயிற்சி நிலையங்கள் நவீனமயப்படுத்தப்பட வேண்டும். ஆளணியினர் பயிற்றப்பட வேண்டும். குறிப்பாக உளவளத்துணை ஆலோசனைச் சேவைகள் மேம்படுத்தப்படவேண்டிய அவசியம் உள்ளது. வடபுலத்திலே வாழும் மக்கள் வாழ்வியல் மேம்பாட்டிற்காக அரசாங்கம் ஏதாவது செய்யவிரும்புமானால் இவை குறித்து ஆலோசிப்பது நல்லது.

 

Comments