டயலொக் சம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டம் டிபெண்டர்ஸ் அணி மகுடம் சூடியது | தினகரன் வாரமஞ்சரி

டயலொக் சம்பியன்ஸ் லீக் உதைபந்தாட்டம் டிபெண்டர்ஸ் அணி மகுடம் சூடியது

கொழும்பு, சுகததாச அரங்கில் நடைபெற்ற சம்பியன் அணியை தீர்மானிக்கும் டயலொக் சம்பியன்ஸ் லீக் தொடரின் போட்டியில் புளூ ஸ்டார் அணியை 3- -1 என்ற கோல்கள் வித்தியாசத்தில் டிபெண்டர்ஸ் கால்பந்து கழகம் வெற்றி கொண்டு இம்முறை தொடரின் சம்பியனாக மகுடம் சூடியது.

2018 டயலொக் சம்பியன்ஸ் லீக்கின் சம்பியனாகும் எதிர்பார்ப்புடனேயே புதன்கிழமை (13) இரவு நடைபெற்ற போட்டியில் இந்த இரு அணிகளும் களமிறங்கின. கிண்ணத்தை கைப்பற்றுவதற்கு டிபெண்டர்ஸ் இந்த போட்டியில் வெற்றி பெறுவது கட்டாயமாக இருந்ததோடு புளூ ஸ்டார் அணிக்கு போட்டியை சமநிலை செய்தாலே போதுமாக இருந்தது.

போட்டி ஆரம்பித்தது தொடக்கம் டிபெண்டர்ஸ் வேகமான தாக்குதல் ஆட்டம் ஒன்றையே ஆட ஆரம்பித்தது. ஆரம்பக் கட்டத்தில் மொஹமட் இஸ்ஸடீனின் ஆட்டம் நேர்த்தியாக இருந்ததை காணமுடிந்தது.

அதன் பலனாக 2ஆவது நிமிடத்திலேயே ப்ரீ கிக் ஒன்றின் மூலம் கோல் கம்பத்திற்கு தொலைவில் இருந்து உதைத்த பந்தை கோலாக மாற்றிய மொஹமட் இஸ்ஸடீன் டிபெண்டர்ஸ் அணிக்கு முன்னிலை பெற்றுக்கொடுத்தார்.

போட்டி மீண்டும் ஆரம்பித்த விரைவிலேயே புளூ ஸ்டார் அணிக்கு சமநிலை செய்யும் வாய்ப்பு டிபெண்டர்ஸ் கோல் காப்பாளர் மொஹமட் லுத்பி மூலம் தடுக்கப்பட்டது. ஆரம்பத்திலேயே கோல் புகுத்தியபோதும் படை வீரர்கள் புளூ ஸ்டாரின் அச்சுறுத்தல் ஆட்டத்திற்கு முன்னர் சற்று தடுமாற்றம் கண்டதோடு அவர்களின் பின்கள வீரர்கள் நெருக்கடியை சந்தித்தனர்.

முதல் பாதி ஆட்டத்தின் நடுப்பகுதியில் டிபெண்டர்ஸ் வீரர் கமலேஸ்வரன் கஜன்தன் வழங்கிய பந்து தனது பக்கம் வந்தபோது மொஹமட் இஸ்ஸடீன் அதனை தலையால் முட்டி கோலாக மாற்ற செய்த முயற்சி தவறியது. இதன்போது அவருக்கு எதிரணி கோல்காப்பாளர் மன்ஜுல பெர்னாண்டோ உட்பட எந்த வீரரிடம் இருந்து சவால் வரவில்லை.

சிறந்த அணியாக ஆட்டத்தைத் தொடர்ந்த புளூ ஸ்டாரின் சிறப்பான பரிமாற்றம் மற்றும் நகர்வுகளை சமாளிக்க டிபெண்டர்ஸ் வீரர்கள் சற்று தடுமாற்றம் கண்டனர்.

இந்நிலையில் டிபெண்டர்ஸ் மத்திய கள வீரர் அசிகுர் ரஹ்மான் எதிரணி தற்காப்பு அரணை நோக்கி பந்தை கடத்திச் சென்று மன்ஜுல பெர்னாண்டோவை மீறி வேகமாக அதனை வலைக்குள் செலுத்தி டிபெண்டர்ஸ் கால்பந்து கழகத்தை இரட்டை கோல்களால் முன்னிலை பெறச் செய்தார்.

முதல்பாதி ஆட்டத்தின் கடைசி நிமிடத்தில் வைத்து புளூ ஸ்டார் வீரர் பி.சி. சம்பத் பரிமாற்றிய பந்தை கோலுக்கு அண்மையில் இருந்த ஈ.பி. ஷன்ன பந்தை தலையால் முட்டி கோலாக மற்றியதன் மூலம் புளூ ஸ்டார் அணிக்கு நம்பிக்கை கொடுத்தார்.

டிபெண்டர்ஸ் கோல் எல்லைக்கு பெரும் அச்சுறுத்தல் விடுக்கும் வகையில் புளூ ஸ்டார் இரண்டாவது பாதி ஆட்டத்தை ஆரம்பித்தது. முதல் தருணத்திலேயே பெனால்டி எல்லைக்குள் இருந்த மொஹமட் நஜ்மானுக்கு இடது பக்கம் இருந்து வழங்கப்பட்ட பந்தை அவர் சரியாக இலக்கிற்கு உதைக்கத் தவறினார்.

இரண்டாவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் டிபெண்டர்ஸ் அணியின் ஆட்ட வேகம் குறைந்திருந்தது. பின்கள வீரர்களின் கடுமையான ஆட்டத்தால் போட்டி சில நிமிடங்கள் நிறுத்தப்பட்டது. காயம் காரணமாக எரங்க பிரியசான்தவுக்கு பதில் வீரராக கசுன் பிரதீப் களமிறங்கினார். போட்டியின் ஒரு மணி நேரத்தை எட்டும்போது கூட புளூ ஸ்டார் தனது தாக்குதல் ஆட்டத்தை முன்னெடுத்த நிலையில் டிபெண்டர்ஸ் வீரர்கள் தவறான முடிவுகளால் எதிரணிக்கு நெருக்கடி கொடுக்க தவறினர்.

நீண்ட தூரத்தில் இருந்து எறியும் புளூ ஸ்டாரின் ஆட்டத் தந்திரம் அதிகம் சாதகமானதாக இருந்ததோடு, மறுமுனையில் மொஹமட் லுத்பி கோல் முயற்சிகளை தடுப்பதில் தீவிரமாக இருந்தார்.

ப்ரீ கிக் ஒன்றை பயன்படுத்தி ஈ.பி. ஷன்ன செங்குத்தாக உதைத்த பந்து கோல் எல்லையை நெருங்கிச் சென்றபோது புளூ ஸ்டார் வீரர்களின் உற்சாகம் அதிகரித்ததோடு தாக்குதல் ஆட்டத்திற்கு பின்கள வீரர்கள் பதில் கொடுக்க முயற்சித்தனர்.

போட்டியில் 10 நிமிடங்கள் எஞ்சியிருந்தபோது அசிகுர் ரஹ்மான் வேகமாக பந்தை கடத்திச் சென்று டிபெண்டர்ஸ் அணிக்காக தனது இரண்டாவது கோலை பதிவு செய்தார்.

எஞ்சிய நிமிடங்களில் தனது அனைத்து அனுபவத்தையும் பயன்படுத்தி போட்டியை தக்கவைத்துக் கொண்ட டிபெண்டர்ஸ் 3- - 1 என்ற கோல்கள் கணக்கில் போட்டியை வென்று, மொத்தம் 34 புள்ளிகளுடன் டயலொக் சம்பியன்ஸ் லீக் பட்டத்தை வென்றது.

Comments