கேலி, கிண்டலுக்கு மத்தியில் ஹோல்டரின் தலைமையில் மிளிரும் கரீபியன் அணி! | தினகரன் வாரமஞ்சரி

கேலி, கிண்டலுக்கு மத்தியில் ஹோல்டரின் தலைமையில் மிளிரும் கரீபியன் அணி!

90 களின் பின் பின்னடைவைச் சந்தித்த மேற்கிந்திய அணி அண்மையில் எல்லா அணிகளிடமும் பலத்த அடி வாங்கியது. அவ்வணியில் சிறந்த வீரர்கள் இருந்தாலும் நிர்வாக சபையுடன் ஏற்படும் சம்பளப் பிரச்சினையால் கடுமையாகப் பாதிக்கப்படட அவ்வணி சிறந்த வீரர்களை அணியில் இணைத்துக் கொள்வதில் பல சிரமங்களைச் சந்தித்து வந்தது. பிராவோ, பொலாட், அன்ரூ ரசல், சுனில் நரேன், கெயில், லுவிஸ், பிரேத்வெச் போன்ற அதிரடி வீரர்கள் இருந்தாலும் அணியில் இணைத்துக் கொள்வது சிக்கலாகவே இருந்தது.

இப்படிச் சிக்கலுக்குள்ளாகி சிதறிக் கிடந்த மேற்கிந்திய தீவுகள் அணியை 2014இன் பின் புதிய வீரர்களைக் கொண்டு கட்டியெழுப்பும் பணியில் அந்நாட்டுக் கிரிக்கெட் சபை முயற்சித்து வருகிறது. ஜேசன் ஹோல்டரின் தலைமையில் தொடர்ந்து டெஸ்ட் தோல்விகளைச் சந்தித்தாலும் ஒரே அணியை களமிறக்கியது. பல விமர்சனங்கள், கேலி கிண்டல்களுக்கு மத்தியில் அவ்வணி தற்போது சிறிது சிறிதாக முன்னேறி வருவதைக் காணக் கூடியதாகவிருக்கிறது. நடைபெற்றுக்கொண்டிருக்கும் இங்கிலாந்துடான தொடர் இதற்கு சான்று பகருகிறது.

மேற்கிந்திய அணி வீழ்ந்துவிட்ட அணிதான். ஆனால் ஒரு காலத்தில் ஏனைய அணிகளைச் சொல்லிச் சொல்லி அடித்த அணி அது. வீழ்ச்சியடைந்தோரை கேலி, கிண்டல் செய்யும் அநாகரிகமான ஒரு மேட்டுக்குடிப் போக்கு இங்கிலாந்து கலாசாரத்திலேயே ஊறிப்போன ஒன்று. இதைத்தான் காலனித்துவ, நிற வேற்றுமை, வெள்ளை இன மனோபாவம் என்று அநேகமானோர் வன்மையாகக் கண்டிக்கின்றனர்.

இங்கிலாந்து நிர்வாகம் மட்டுமல்ல வீரர்களும் பழைய ஆசியகண்ட அணிகளையெல்லாம் கடுமையாகக் கேலி செய்துள்ளனர். அவ்வணி 250 ஓட்டங்களுக்கு ஆட்டமிழந்தாலும் வேறு அணிகள் அதுவும் பொதுவாக ஆசியக்கண்ட அணிகள் துடுப்பெடுத்தாடும் போது விக்கெட் இழப்பின்றி 51 ஓட்டங்களை எடுத்தாலே மேட்டுக்குடி வர்ணனையாளர்கள் ‘பலோ ஓன்’ னை தவிர்த்தது என்று கிண்டலடிப்பார்கள். இத்தகைய கேலி மனோபாவமுள்ளவர்கள் இங்கிலாந்தினர். பிற்காலத்தில் சுனில் கவஸ்கார், அமர்நாத், சஹீர் அப்பாஸ், ஜாவிட் மியன்டாட். அரவிந்த டி. சில்வா போன்றோரை விழ்த்தமுடியாமல் திணறியதையும் காணலாம்.

இந்நிலையில்தான் கடந்த இரு தசாப்தங்களாக அடிமேல் அடி வாங்கிய மேற்கிந்தியத் தீவுகள் அணியின் தலைமைப் பொறுப்பை 2014ம் ஆண்டு 23 வயது ஜேசன் ஹோல்டர் பொறுப்பேற்றவுடன் வர்ணனையாளர்கள், இங்கிலாந்தின் பத்திரிகைகள் முன்னாள் வீரர்கள் என்று பலரும் கேலி மேல் கேலி செய்தனர். ஆனால் இதற்கு பதிலடிகொடுக்கும் வகையில் 2015ம் ஆண்டு இங்கிலாந்து நிர்ணயித்த 438 ஓட்ட வெற்றி இலக்கை நோக்கித் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்திய 7 விக்கெட் இழப்புக்கு 350 ஓட்டங்கள் எடுத்து போட்டியை சமநிலையில் முடித்துக்கொண்டது. அப்போது ஹோல்டர் தன் சதத்தின் மூலம் இங்கிலாந்தின் வெற்றியை முறியடித்தமை இங்கு நினைவுகூரத்தக்கது.

அதன் பின் இங்கிலாந்து சென்ற மேற்கிந்திய அணி ஷேய் ஹோப், பிராத்வெய்ட் ஆகியோரின் சதங்கள் மூலம் இங்கிலாந்து அணியை வெற்றிகொண்டது.

அநேகமாக வீழ்ந்தோரை நியூசிலாந்து, அவுஸ்திரேலிய அணிகள் ஒரு சில சந்தர்ப்பங்களில் கேலி செய்தாலும் அநேகமான சந்தர்ப்பங்களில் ஊக்குவிக்கும் ஆனால் இங்கிலாந்து வீழ்ந்தோரை மேலும் நசுக்கும்.

2015ம் ஆண்டு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த மேற்கிந்திய அணியை இங்கிலாந்து கிரிக்கெட் சபைத் தலைவர் கொலிங் கிரொவ் மிகச் சாதாரண அணி, எளிமையான அணி என வர்ணித்ததுடன் இங்கிலாந்து வீரர்களின் ஓய்வறையிலும் இக்கருத்துக்களை அறிவித்தலாக சுவரில் தொங்கவிட்டிருந்தார். தற்போது இங்கிலாந்து அணி மேற்கிந்தியத்தீவுகளுக்குச் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இது குறித்து முன்னாள் இங்கிலாந்து வீரர் ஜெப் போய்கொட் பத்திரிகைகளில் கருத்துத் தெரிவிக்கையில்: ‘இங்கிலாந்து- மேற்கிந்திய கிரிக்கெட் தொடரைக் காணச் செல்லும் ரசிகர்களுக்கு அங்கு அருமையான கடற்கரைக் காற்று, இசைக் குழுக்களின் இனிமையான இசை, பல வகையான மதுபானங்கள் என்று விடுமுறைக் களியாட்டங்கள் எல்லாம் வேண்டுமோ அவையெல்லாம் அங்கு கிடைக்கும். ஆனால் முக்கியமாக கிரிக்கெட்டை எதிர்பார்த்துச் செல்லுபவர்களுக்கு அது மட்டும் இங்கு கிடைக்காது” என்று மட்டமான கருத்துக்களைக் கூறி கேலி செய்திருந்தார்.

இதே போல் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பும் எட்ஸ்பாஸ்டனில் நடைபெற்ற போட்டியில் ஹோல்டரின் தலைமையிலான மேற்கிந்தியதீவை படுதோல்வியடையச் செய்தது. இங்கிலாந்து அணி அப்போது இதே போய்கொட்தான் மேற்கிந்திய அணியை மிக மோசமான அணி என்று கேலி, கிண்டல்களுடன் விமர்சித்திருந்தார். ஆனால் அடுத்து நடைபெற்ற ஹெடிங்லே போட்டியில் மேற்கிந்தியா வென்று போய்கொட்டின் முகத்தில் கரிபூசியது.

மைதானத்துக்கு மத்தியில் வீரர்கள் மோதுவது சகஜம். ஆனால் நிர்வாக மட்டத்தில் ஒரு அணியை மட்டம் தட்டுவது இங்கிலாந்தில் அதிகம். இன்னொரு அணியை அவமானப்படுத்துவது அவர்கள் அணிக்கு உத்வேகமூட்டும் செயலாக இங்கிலாந்து கருதுகிறது. இந்நிலையில் இம்முறை மேற்கிந்தியத்தீவுகளுக்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து அணி பாபடோஸில் நடைபெற்ற முதல் போட்டியில் வாங்கிக் கட்டிக்கொண்டது.

முதல் இன்னிங்ஸில் ஹோல்டர் உட்பட அவ்வணியின் வேகப்பந்து வீச்சின் முன் 77 ஓட்டங்களுக்கு சுருண்ட அவ்வணி, 120 ஆறு விக்கெட் என்ற நிலையிலிருந்த மேற்கிந்திய தீவுகள் அணியை 8வது வீரராக வந்த தலைவர் ஹோல்டர் இரட்டை சதமடித்து மீட்டியுள்ளதோடு பந்து வீச்சிலும் திறமை காட்டி இங்கிலாந்து அணியை 381 ஓட்டங்களால் பாரிய தோல்வியடையச் செய்துள்ளார். ஓட்டங்கள் அடிப்படையில் மேற்கிந்தியா பெற்ற 3வது பெரிய வெற்றி இதுவாகும்.

அண்டிகுவாவில் நடைபெற்ற 2வது போட்டியிலும் மேற்கிந்தியத் தீவுகள் 10 விக்கெட்டுகளால் வெற்றி பெற்று தொடரைக் கைப்பற்றியுள்ளது. இப்போட்டியிலும் தலைவர் ஹோல்டர் பந்து வீச்சிலும் துடுப்பாட்டத்திலும் பிரகாசித்தார்.

பலம்வாய்ந்த துடுப்பாட்ட வரிசையைக் கொண்ட இங்கிலாந்து அணி இரு இன்னிங்ஸிலும் 186, 132 ஓட்டங்களையே பெற்றது. கேலிக்கும் கிண்டலுக்கு முள்ளான ஹோல்டரின் சகலதுறை திறமையினாலேயே நீண்ட இடைவெளிக்குப் பின் பலம்வாய்ந்த ஒரு அணிக்கு எதிராக 2--1 என்ற ரீதியில் தொடர் வெற்றியைப் பெற்றுள்ளது மேற்கிந்திய தீவுகள் அணி.

Comments