வெளிவாரி பயிர்ச் செய்கைக்கு செல்வதே சரியான தீர்வு | தினகரன் வாரமஞ்சரி

வெளிவாரி பயிர்ச் செய்கைக்கு செல்வதே சரியான தீர்வு

ஏறக்குறைய இரண்டு சகாப்தங்களைக் கொண்ட கூட்டு ஒப்பந்த முறைமை முதன் முறையாக சவாலை எதிர்நோக்கும் நிலை தமிழ் முற்போக்குக் கூட்டணியால் தோன்றியுள்ளது. த.மு. கூட்டணி 140 ரூபா சம்பள அதிகரிப்பு கோரியிருந்த நிலையில் 50 ரூபா சம்பள அதிகரிப்பு கிடைக்கப் பெற்றுள்ளமை ஒரு வகையில் திருப்பமாகவே தெரிகின்றது. அந்த அதிகரிப்பு ஒரு வருடத்துக்கு நடைமுறையில் இருக்கும். அதற்குள் பெருந்தோட்டத் துறையை மறுசீரமைக்க ஆவண செய்யப் போவதாக அரசு தரப்பு அறிவித்திருக்கிறது. அந்த மறுசீரமைப்பு தோட்டத் தொழிலாளர்களை சிறு தோட்ட உரிமையாளர்களாக மாற்றும் வகையில் அமையுமா? என்ற ஆசை மலையக மக்களுக்கு வரவே செய்கின்றது. ஏனெனில் சம்பளப் பிரச்சினைக்கு நிரந்தரமான தீர்வு காணப்படாமலே உள்ளது. தற்போது கிடைத்திருக்கும் 50 ரூபாவானது சிறு ஆறுதல் மட்டுமே.

இந்நிலையில் தற்போது 700 ரூபாவாகக் காணப்படும் அடிப்படைச் சம்பளத்தை 1000 ரூபாவாக ஆக்கிவிட்டால் பெருந்தோட்ட மக்களின் சம்பளப் பிரச்சினைக்கு போராட வேண்டி நேராது என்கிறார் பாராளுமன்ற உறுப்பினர் எம். திலகராஜ். இதே நேரம் தோட்ட மக்களின் வாழ்வாதாரத்தை நிலைபேறாக மாற்ற வேண்டுமானால் அவர்களுக்குத் தோட்டக் காணிகளைப் பிரித்துக் கொடுத்து சிறு தேயிலைத் தோட்ட உரிமையாளர்களாக ஆக்குவதே உன்னதவழி என்கிறார் அமைச்சர் பழனி திகாம்பரம்.

இரண்டும் நல்ல யோசனைகள்தான். இதைப் பாராளுமன்றத்திலும் அவர்கள் குறிப்பிட்டிருந்தார்கள். ஆனால் இரண்டு யோசனைகளுமே நினைத்த மாத்திரம் நடைமுறைக்கு வரக்கூடியவைதானா என்று யோசிக்க வேண்டியுள்ளது. முன்னைய யோசனைக்கு கம்பனி தரப்பு இணங்கும் என்று எதிர்பார்க்கவே முடியாது. அதற்கு அழுத்தம் கொடுத்து 1000 ரூபாவை அடிப்படைச் சம்பளம் ஆக்க அரசாங்கம் அதிரடியாக ஆணையிட துணியுமா என்பது கேள்விக்குறியே! தனியார் துறையைப் பலப்படுத்துவதன் மூலம் தேசிய பொருளாதாரத்தைக் கட்டி எழுப்பலாம் என்ற எண்ணக்கருவைக் கொண்டிருப்பவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க . எனவே அவரது அரசாங்கம் இவ்வாறானதொரு நிலைப்பாட்டை எடுக்குமென்று சொல்ல முடியாது.

கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் தொழிற்சங்கங்களும் முதலாளிமார் சம்மேளனமும் அதிலிருந்து விலகினால் மட்டுமே அந்த ஒப்பந்தம் குறித்து நீதிமன்ற தலையீடு சாத்தியம் என்ற நிலைப்பாடு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எனவே பெருந்தோட்ட மக்களுக்கு எந்தவொரு வகையிலும் சாதகமான தன்மைகளை விளைவிக்க திராணியற்ற இந்தக் கூட்டு ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டு வெளியேறுவதே சரியானதாக இருக்கும் என்ற கருத்தியல் மேலோங்கி வருகின்றது. இந்த நிலையில் கூட்டு ஒப்பந்தத்துக்கு மாற்றுத் திட்டம் ஒன்றை உருவாக்குவதே மலையக தலைமைகளின் பொறுப்பாக அமைய வேண்டும் என்பதே எதிர்பார்ப்பு.

இதே நேரம் பெருந்தோட்ட மக்களுக்கு காணிகளைப் பகிர்ந்தளிக்க வேண்டும் என்ற இசைவு தமிழ் முற்போக்குக் கூட்டணியிடமும் இ.தொ.கா.விடமும் காணப்படுகின்றது. இது தீர்வு ஒன்றை எட்டுவதற்கு சாதகமான பின்புலமே. 1000 ரூபா கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதே தமிழ் முற்போக்குக் கூட்டணி அது சாத்தியப்படாத சங்கதி என்று வெளிப்படையாகவே பேச ஆரம்பித்தது. இது குறித்ததான அவநம்பிக்கையை அக்கட்சி அவ்வப்போது வெளிப்படுத்தியே வந்துள்ளது. இ.தொ.கா. மட்டும் இறுதிக் கட்டம் வரை மல்லுக்கு நின்று மனமாற்றத்துக்கு உள்ளாகியிருப்பதாகவே தெரிகிறது.

ஆயிரம் ரூபா என்பது எட்டாக்கனி என்று அது கையைச் சுட்டுக்கொண்ட பின்னரே உணரவேண்டி நேர்ந்துள்ளது. ஏமாற்றம் அடைந்தது என்னவோ பெருந்தோட்ட மக்கள்தாம். இன்று (இது எழுதப்படும் வரை) 140 ரூபா ஊக்கு விப்புக் கொடுப்பனவாக பெற்றுத்தர வேண்டும் என்று பிரதமரை வலியுறுத்தும் முயற்சிகள் இடம்பெற்று வருகின்றன. பொதுவாகவே இம்முயற்சி வரவேற்பைப் பெற்றிருந்தாலும் கூட அது சம்பந்தமான மாறுபட்டக் கருத்துக்களும் வராமல் இல்லை. 140 ரூபா பெறும் நடவடிக்கையானது அது மீளவும் சம்பள விவகாரத்தை மலினப்படுத்துவதாகவே அமையும் என்கிறார் மக்கள் தொழிலாளர் சங்கப் பொதுச் செயலாளர் சட்டத்தரணி இ. தம்பையா.

ஆங்கிலேயர் காலத்தில் தோட்ட மக்களின் அனைத்துத் தேவையும் தோட்ட நிர்வாகங்களே வழங்கி வந்தன. குடியிருப்பு ஏற்பாடு, குடிநீர், மலசலகூடம், அரிசி மா பங்கீடு, சிறுகுழந்தைகள் பராமரிப்பு, உணவு வழங்கல், சலவை, சிகை அலங்காரம், குடியிருப்புகளை கூட்டி சுத்தமாகப் பேணல் என்று ஏறக்குறைய எல்லாத் தேவைகளையும் கம்பனிகள் கவனித்தன. இதனால் தொழிலாளர்கள் அலைச்சல் ஏதுமின்றித் தொழிலை மட்டுமே பெரிதாக மதித்தனர். இதன் காரணமாக கம்பனிகள் குறைந்த வேதனத்தை வழங்கிய போதும் அது பற்றாக்குறை என்ற பாதகத் தன்மையை உணரமுடியாமல் போனது. தவிர இது பெருந்தோட்டக் கட்டமைப்பு என்னும் இறுக்கமான பிடிக்குள் தோட்ட மக்களைப் பிணைத்து வைக்க பெரிதும் துணை போனது.

(மிகுதி அடுத்த வாரம்)

Comments