மலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும் | தினகரன் வாரமஞ்சரி

மலையக அபிவிருத்தி அதிகார சபை; இயங்கும் களச் சூழல் ஏற்பட வேண்டும்

சுதந்திரம் பெற்ற காலத்திலிருந்துபொது மக்களின் நலன்களை முன்னிலைப்படுத்தி உள்ளூர் மட்டத்தில் உள்ளூர் அதிகாரம் பரவலாக்கம் செய்யப்பட்ட போதெல்லாம் இந்தியவம்சளி தமிழர்கள் ஒரு பொருட்டாகவே கருதப்படவில்லை.

சுதந்திரத்துக்கு முன்னர் இம் மக்கள் துன்ப துயரங்களை அனுபவித்திருந்தனர். இனவாத போக்குடையோர் மக்களை அபிவிருத்தி அடைய செய்யாது கவனமாக பார்த்துக் கொண்டனர். இருப்பினும் மலையக சமூகத்தின் எழுச்சி இனவாத சிந்தளையாளர்களின் கண்களை உறுத்தியிருந்தது. இச் சமூகம் மேல் எழும்பினால் அது பெரும்பான்மை இனத்துக்கு பாதகமாக அமைந்து விடும் என்று இனவாதிகள் கருதின. மலையக பெருந்தோட்ட மக்களை சகல அபிவிருத்தி துறைகளிலும் ஓரம் கட்டி வைக்க இவர்கள் துணிந்தனர்.

இவை இவ்வாறு இருக்க, பல தசாப்த காலமாக இம் மக்களை வழிநடத்தி வருகின்ற தலைவர்கள் எவ்வித தொலை நோக்கும் பார்வையுமின்றி பிற்போக்கு தனமாக செயற்பாடுகளை முன்னெடுத்து வந்ததனால் மேலும் இச் சமூகம் பின் நோக்கி செல்லும் வாய்ப்பே அதிகரித்தது.ஏனைய சமூகங்கள் தேசிய வளப்பகிர்வினை அனுபவித்து வருவதோடு அரச நிதி நேரடியாக கிராம, சமூக அபிவிருத்தி பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றது. பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்தி என்றால் தோட்ட நிர்வாகமும் ட்ரஸ்ட் நிறுவனமுமே முன்னிலைப்படுத்தப்படுகின்றது. பல்வேறு ஊழல்கள் நிறைந்த அபிவிருத்தி பணிகளே காணப்படுகின்றன. அரச நிதியை பெருந்தோட்ட மக்களின் அபிவிருத்திக்காக நேரடியாக பயன்படுத்தும் பொறிமுறை இல்லாதிருந்தது. ஒரு நாட்டின் பிரஜை என்ற வகையில் தேசிய வளங்களை பயன்படுத்தி அபிவிருத்தி அடைந்து கொள்ளும் உரிமை உண்டு. ஆனால் பெருந்தோட்ட சமூகத்தை வெறும் வாக்காளராக மட்டுமே கருதி வருவதனால் பிரஜைக்குறிய அந்தஸ்தும் உரிமையும் இல்லாத நிலையே காணப்படுகிறது.

இந்த துரதிஷ்டமான சந்தர்ப்பத்தில் அதிஷ்ட வசமாக தமிழ் முற்போக்கு கூட்டணித் தலைவர்கள் தொலைநோக்குடன் சிந்தித்ததனால் பெருந்தோட்ட சமூகத்தின் அபிவிருத்திக்கு தடையாக உள்ள காரணிகளை ஆராய்ந்து அவற்றினை தகர்த்தெறிந்து பெருந்தோட்ட மக்களின் நிலையை உயர்த்தியுள்ளனர். பெருந்தோட்ட அதிகார சபையை உருவாக்கியது, பிரதேச சபை சட்டங்களில் திருத்தம் செய்து பிரதேச சபைகளின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது, அத்துடன் பெருந்தோட்ட மக்கள் அரச சேவைகளை இலகுவான முறையில் பெற்றுக்கொள்வதற்கேற்ற வகையில் பிரதேச பணிமனைகளை அதிகரிப்பதற்கான முன்னெடுப்புக்களும் ஆரம்பித்திருப்பது என்பன குறிப்பிடத்தக்கது.

அண்மையில் பெருந்தோட்ட அதிகார சபையின் இயக்குனர் சபை நிறுவப்பட்டது. நியமிக்கப்பட்ட உறுப்பினர்கள் சமூகத்தை மேல் நிலைப்படுத்தும் பொறுப்புக்களை ஆற்றவேண்டிய கடமையைக் கொண்டுள்ளனர்.

இந்த அதிகார சபைக்கு இருக்கின்ற இரண்டு முக்கிய குறிக்கோள்களை சரியாக நிறைவேற்ற வேண்டும்.

01. பெருந்தோட்ட சமூகத்தினை சமூக. பொருளாதார கலாச்சார உட்கட்டமைப்பு அபிவிருத்தி மூலம் அரச கட்டமைப்புக்குள் சேர்ப்பதை உறுதிப்படுத்துதல்.

02. தேசிய அபிவிருத்தி செயல் முறைக்கு பங்களிப்பதற்காக சமூக ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலுப்படுத்தல்.

குறிக்கோள்கள் இரண்டையும் உற்று நோக்கும்போது அபிவிருத்தி இலக்கு குழுவாக பெருந்தோட்ட மக்கள் தொழிலாளர்கள், பெண்கள், சிறுவர்கள். மூத்தோர், இளைஞர்கள் உள்ளடக்கப்படுவர்.

இச்சமூகத்துக்காக புதிய குடியிருப்புக்களுடன் கிராமங்களை உருவாக்குதல், குடிநீர் வசதிகளை ஏற்படுத்தல், தேசிய சுகாதார கொள்கையை பெருந்தோட்ட பகுதியில் அமுல் நடத்தல், தொழிலாளர்களின் பாதுகாப்பு, தொழில் கெளரவம் போன்றவற்றை உருவாக்குதல், பெண்கள், சிறுவர்கள் அபிவிருத்தியில் கவனம் செலுத்துதல், இளைஞர்களுக்கான புதிய தொழில் முயற்சியை அடையாளம் கண்டு அவர்களுக்கான பயிற்சியை நடாத்தி திறன் விருத்திகளை உருவாக்குதல். மூத்தோர்களுக்கான பாதுகாப்பு பொறிமுறைகளை உருவாக்குவதுடன் அவர்களின் அனுபவங்களை பயனுரும் வகையில் வகைப்படுத்தல்.

சூழல் பாதுகாப்பு போன்றவற்றில் அதிக கரிசனை கொள்வதுடன் பல்வகை வீடமைப்புத் திட்டங்களை உருவாக்கி அவற்றிற்கான உறுதிப்பத்திரங்களை வழங்குவதுடன் பெருந்தோட்ட சமூகம் நிலவுடமை சமூகமாக உருவாக்குவதும் பெருந்தோட்ட அதிகார சபையின் பெரும் பொறுப்பாகும். தேசிய நீரோட்டத்தில் பெருந்தோட்ட மக்களை இணைத்துக் கொள்வதுடன் பிரஜைக்குரிய அந்தஸ்தினை வழங்குவதுடன் கெளரவம், நன்மதிப்பு போன்ற அம்சங்கள் நிறைந்த சமூகமாக உருவாக்குவதுடன் ஆற்றல்மிக்க சமூக சக்தியை உருவாக்குவதிலும் இந்த அதிகாரசபை கவனம் செலுத்த வேண்டும்.

பெருந்தோட்ட அதிகார சபை நிறுவப்பட்டு தற்போது ஆரம்ப நிலையில் உள்ளது. இவற்றின் செயற்பாடுகள், குறிக்கோள்கள் போன்றவற்றை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல வேண்டும். இதற்கான பிரச்சார நடவடிக்கைகளை தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புக்கள், கல்வியலாளர்கள் போன்றோ முன்னெடுக்க வேண்டும். பெருந்தோட்ட சமூகத்தை வழிநடத்திய தலைவர்கள், கட்சி, தொழிற்சங்க ரீதியாக பிரிந்திருப்பதனால் சமூகம் சார்ந்த பொது முன்னெடுப்புகளுக்கு பாதகமான விளைவுகளே ஏற்பட்டு வந்துள்ளன.

பெருந்தோட்ட அபிவிருத்தி அதிகார சபை ஒட்டுமொத்தமான பெருந்தோட்ட சமூக அபிவிருத்திக்கு ஏதுவான பொறிமுறையாகும். எவ்வித பேதமின்றி அனைத்து மக்களும் ஏற்றுக் கொண்டு பொருத்தமான களமட்ட சூழலை ஏற்படுத்துவதே எமது தலையாய பொறுப்பாகும்.

 

Comments